Thursday, October 30, 2008

பேய் பிடித்தவன் (சிறுகதை)

எனக்கு அவனை பாத்தாலே பயமா இருக்கு. மந்திரவாதியாம், எதிர்ல சடைய விரிச்சி போட்டுகிட்டு நெத்தி நெறய விபூதியோட நடுவுல அம்மாம் பெரிய குங்கும பொட்டு.. அவன் அடிக்கிற உடுக்கை சத்தம் வேற காது டமாரமே கிழிஞ்சிடும் போல இருக்கு..

எனக்கு பேய் புடிச்சி இருக்காம். ஏன்டா.. பேய் உங்கள மாதிரி படிக்காதவனுங்களாதானடா புடிக்கும். நான் படிச்சவன்டா. எங்க ஊர்லயே மொத மொதலா காலேஜ் போய் எம்.எஸ்.சி பயோ டெக் படிச்சவன்டா நானு. என்னை எந்த பேய்டா புடிக்கப்போவுது? யார்றா இப்படி ஒரு புரளிய கெளப்புனது!!

இந்த இடமே ஒரு மாதிரி பயமாத்தான் இருக்கு. என் கைய வேற ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு இழுத்து புடிச்சிட்டு இருக்கானுங்க. அவனுங்கள பாத்தா இந்த‌ ம‌ந்திர‌வாதியோட‌ சிஷ்ய‌னுங்க‌ மாதிரி ரெண்டு பேர் இருக்கானுங்க‌. ம‌ந்திர‌வாதிக்கு கொஞ்ச‌மும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ மாதிரி ரெண்டு பேர், அதுல‌ ஒருத்த‌ன் என்னை விட‌ வய‌சு க‌ம்மியா இருந்தான்.

ம‌ந்திர‌வாதி கேக்குற‌ எந்த‌ கேள்விக்கும் ப‌தில் சொல்ல‌க்கூடாது. இவ‌ன் ஏற்க‌ன‌வே என‌க்கு பேய் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருக்கான். நான் பேசுனா அத‌ வெச்சி எதுனா த‌ப்பா புரிஞ்சிகிட்டாலும் புரிஞ்சிக்குவான்.

போன‌ வார‌ம் இப்ப‌டித்தான். டவுனுக்கு போனப்ப ப‌ண்ணையாரோட‌ பொண்ணை பாத்து பேசிட்டு இருந்தேன். சின்ன‌ வ‌ய‌சில‌ இருந்தே என்கூட‌ ப‌டிச்ச‌ பொண்ணு அது. சிரிச்ச‌ முக‌மா அழ‌கா இருக்கும். எங்க‌ பாத்தாலும் பேசிட்டுதான் போகும். எதோ க‌ம்ப்யூட்ட‌ர் சென்ட‌ருக்கு வ‌ந்த‌தாம். அவ‌ங்க‌ அப்பா தீவிர‌மா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துட்டு ப‌க்க‌த்து க‌டையில‌ போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம்.

நாதாரிப்பயலுவ, எவனோ இத பாத்துட்டு தப்பா நெனச்சிட்டு பண்ணையார்கிட்டபோய் எதோ சொல்லிட்டான் போல. அந்த ஆளுக்காவது அறிவு வேணாம். ஒண்ணும் விசாரிக்காம கரும்பு காட்டுக்குள்ளாற போட்டு என்னை அடி அடின்னு அடிச்சிட்டானுங்க. மரண அடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னிக்குதான் அனுபவிச்சேன். ஊரை விட்டு ஓடிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

இன்னிக்கு என்னடான்னா இவன் எனக்கு பேய் புடிச்சிருக்குன்றான். பேய்ன்னு ஒண்ணு இல்லடா, அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது. எங்க அப்பா அம்மா வேற எங்கன்னு தெரியல. எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரியலயே!!

அவன் கையில சாட்டையை எடுக்கிறான். அடப்பாவி! அந்த சாட்டையால என்னை அடிக்கப்போறீயா? போனவாரம் வாங்குன அடியே இன்னும் வலிக்குற மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா? உடுக்கை சத்தம், சாம்பிராணி புகை, இவன் சொல்ற மந்திரம் இதுக்கு மேல சாட்டை அடியா? இது ஆகறதில்ல. முடிஞ்சவரைக்கும் திமிறி தப்பிக்கணும்.

கைய முறுக்கி, ஒரு கைய விடுவிச்சி, இன்னொரு கைய புடிச்சி இழுத்து, புடிச்சிட்டு இருந்தவனுங்கள விடுவிச்சிட்டு, பக்கத்துல இருந்த டேபிள் மேல காலை வெச்சி ஒரே ஜம்ப். நம்பவே முடியல. நானா இப்படி மேட்ரிக்ஸ் படம் மாதிரி ஜம்ப் பண்ணுறேன். மேல சீலிங் பேன்ல உக்காந்துட்டேன். கீழ பாத்தா யாரோ ஒரு சின்ன பையன எல்லாரும் புடிச்சிட்டு இருக்காங்க. அந்த மந்திரவாதி அந்த பையனை போட்டு அடிச்சிருப்பான் போல. அவனுக்கு விபூதி வெச்சிவிட்டு "இனிமே பிரச்சினை இல்லை" அப்படின்னு சொல்றான்.

என்னவோ! பைத்தியக்காரனுங்க. இனிமே இங்க இருக்கக்கூடாது. வேற எங்கியாவது போக வேண்டியதுதான். எங்க போறது? ஹலோ! உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா?

Tuesday, October 21, 2008

என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்

இது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..

இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..

****

எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.

நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.

போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ‌ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.

ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.

சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.

அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).

அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..

"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."

அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.

"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..

எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.

மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.

திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.

அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"

பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..

*****

மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!

Monday, October 20, 2008

போடுறா.. சினிமா தொடர் பதிவை...

ஏறத்தாழ தமிழ்பதிவு எழுதுற பதிவர்கள்ல 90% பேர் ஏற்கனவே எழுதிட்ட இந்த தமிழ் சினிமா தொடர் விளையாட்டுல என்னையும் அழைத்த பரிசல், நர்சிம் மற்றும் துக்ளக் மஹேஷ் மூணு பேருக்கும் நன்றி.

முடிஞ்ச வரைக்கும் எல்லா கேள்விக்குமான பதிலையும் ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்றேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
என் சின்ன வயதில் நாங்கள் சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஹவுசிங் போர்டில் இருந்த போது அருகிலுருந்த பச்சியம்மாள் தியேட்டருக்கு சென்றது மங்கலாக நினைவில் இருக்கிறது. பெயருடன் நினைவில் நிற்கும் படம் என்றால் 20 வருடங்களுக்கு முன் பாப்பிரெட்டிபட்டியில் ஜெயஷ்ரீ திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
என் மகனை வைத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முற்றிலும் முடியாத காரணம், அதனால் ஆசை இருந்தாலும் அதிகமாக தியேட்டரில் படம் பார்ப்பதில்லை. டிரைவ் இன் தியேட்டரை அரங்கு என்று சொல்லமுடியுமா என்று தெரியாது. சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் பார்த்த சந்தோஷ் சுப்பரமணியம். என் தங்கமணியின் நண்பி குடும்பத்துடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். காருக்கு முன்னால் பெரிய பெட்ஷீட்டை விரித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு நாங்களும் அவனுடனே படுத்துக்கொண்டு ஜாலியாக பார்த்த படம். படமும் பிடித்திருந்தது. ஒரு திருப்தியான ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியுடன் திரும்பினோம். அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம்.. இதுகுறித்து ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய என்பதற்கு மிகவும் பிடித்த என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் பல படங்களை சொல்ல முடியும், பாட்ஷா, உள்ளத்தை அள்ளித்தா, கேப்டன் பிரபாகரன், Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சமீபத்தில் தசாவதாரம் படத்தின் சில காட்சிகள். நிச்சயமாக ஹாலிவுட் அளவிற்கு சொல்ல முடியாதெனினும், கண்டிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது மிக அதிகம்தான். முக்கியமாக மருத்துவமனை காட்சி, அத்தனை கமல்கள் ஒரே நேரத்தில் காட்டப்படுவதில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் மட்டும் 27 லேயர் இருந்ததாக சொன்னார்.

அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் நம்ம சினிமா பத்தின வாசிப்பு. கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..

7.தமிழ்ச்சினிமா இசை?
என் ப்ரொஃபைலில் சொல்லியிருப்பேன், "ராசா இசைன்னா சோறு தண்ணி கூட வேண்டாம்" அப்படின்னு. இளையராஜாவின் இசையை ரொம்ப பிடிக்கும்னாலும் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் நல்லா இருந்தா ரசிப்பேன். மிக மிக பிடித்த குரல், ஆண்களில் எஸ் பி பி, பெண்களில் சுசிலா & சித்ரா. என்னோட டாப் 5:

1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி
2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி
3. உதய கீதம் பாடுவேன் : உதயகீதம் : இளையராஜா : எஸ் பி பி
4. காதல் வந்தால் சொல்லியனுப்பு : இயற்கை : வித்யாசாகர் : திப்பு
5. காதல் ரோஜாவே : ரோஜா : ஏ ஆர் ரஹ்மான் : எஸ் பி பி

(அட அஞ்சுமே ஆண் குரல் சோலோ பாடல்கள்)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
சின்ன வயதிலிருந்தே ஆங்கில படங்கள் பார்ப்பதுண்டு, ஜாக்கிசானை பிடிக்கும். ஹாலிவுட் படங்களில் நல்ல ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அரிதாக மற்றவகை ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதுண்டு. அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.

ஹைதராபாத்தில் 3 வருடம் இருந்ததால் கொஞ்சம் தெலுங்கு படங்களும் பார்த்ததுண்டு. ரசித்து பார்த்தது "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்". வசூல்ராஜாவை விட பலமடங்கு நன்றாக இருந்ததாக எண்ணம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இப்போதைக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து இந்த கேள்விக்கான பதில் "ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த நினைப்பே வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சென்னையில் இருக்கும் நமக்கு பீச், தீம் பார்க் என்று பல பல பொழுது போக்குகள். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் நடுத்தர, ஏழை மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. அதனால் அது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது.

*****

எனக்கு தெரிஞ்ச எல்லா பதிவர்களும் இந்த தொடர்ல ஏற்கனவே எழுதிட்டதால நான் யாரையும் கூப்பிட முடியல. தொடர் விளையாட்டுல லேட்டா பதிவு போட்டா இதுதான் பிரச்சினை. அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))

Monday, October 13, 2008

சுழல் கதைகள் (5 இன் 1)

டிஸ்கி: இந்த பதிவுல மொத்தம் 5 சின்னக்கதைகள் இருக்கு. ஒவ்வொரு கதையும் தனித்தனி. அதனால போர் அடிச்சா அப்படியே மீதியை விட்டுட்டு பின்னூட்டம் போட போயிடலாம். ஒவ்வொரு கதையோட முடிவும் அடுத்த கதையோட ஆரம்பம் அப்படின்ற மாதிரி எழுதியிருக்கேன். நல்லாயிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.

***

இதயத்திற்குள் நுழைந்த துப்பாக்கி குண்டை கைகளால் அழுந்தியபடி சரிந்த சரவணபாண்டியன் நம்ப முடியாமல் எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.

"என்னடா பாக்குற? பி.ஏ.கிட்ட மினிஸ்டரு பணம் குடுத்துவிட்டதா சொன்னாரு, ஆனா இவன் சுட்டுட்டானேன்னா!! ஹா..ஹா..ஹா.. எதிர்க்கட்சியில இருந்து இங்க வந்து நீ சேந்ததே ஏதாவது ஆதாயம் கிடைக்குமுன்னுதான். அதே மாதிரி உன்னால என்ன ஆதாயம் கிடைக்குமுன்னு எங்க மினிஸ்டரும் யோசிக்க மாட்டாரா? நீ இங்க வந்து சேந்தது இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரியும், இப்ப உன்னை கொன்னது எதிர்கட்சிக்காரன்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. அது எங்களுக்கு வரப்போற தேர்தல்ல உதவப்போகுது. வரட்டா?"

என்றவாறே கிளம்பி சென்றவனை பார்த்தவாறே கண்களை மூடினார் சரவணபாண்டியன்.

அமைச்சருக்காக அரைமணி நேரம் காத்திருந்து அவர் வந்தவுடன் நடந்ததை விளக்கி பணம் வாங்கிக் கொண்டு கிளம்பும்போது கதவு தட்டப்பட்டது. திற‌ந்த அமைச்சர் இன்ஸ்பெக்டரை பார்த்து அதிர்ந்தார்.

"ஆளுங்கட்சி பணம் கொடுத்து ஆளுங்களை இழுக்குறத நிரூபிக்கறதுக்காக எதிர்கட்சிக்காரங்க ஏற்பாடு பண்ணின ஸ்டிங் ஆபரேசன்தான் சரவணபாண்டியன் உங்க கட்சிக்கு வந்து சேர்ந்தது. நீங்க பணம் குடுக்குறத படம் புடிக்க உங்களுக்கே தெரியாம வெச்சிருந்த வீடியோ கேமிரால உங்க பி.ஏ. சுட்டதும், பேசுனதும் தெளிவா பதிவாயிடுச்சி. சி.எம் உங்களை அமைச்சர் போஸ்ட்ல இருந்தும், கட்சியில இருந்தும் நீக்கிட்டாரு. போலாமா சார்?"

என்றவாறே கை விலங்கை காட்டியவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் முன்னாள் அமைச்சர்.

******

கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட அவனை பயத்துடன் பார்த்தனர் கோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும். அவன் பீட்டர் சக்திவேல். தென்னிந்தியாவின் மிகக் கொடூரமான தீவிரவாதி. 2003ல் முத்துநகர் எக்ஸ்பிரஸிலும், 2004ல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், 2005ல் சென்னை வடபழனி பேருந்திலும் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே. அதன் சூத்திரதாரி.

கடந்த மாதம் அரிசிக் கடத்தலை தடுக்க நடந்த இரவு நேர சோதனையில் காவல்துறையே நம்பமுடியாத வகையில் மாட்டியவன். எதற்காக அவன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தான் என்பது புரியாமல் காவல்துறை பெருந்தலைகள் இல்லாத முடியை பிய்த்துக்கொண்டிருப்பது அறிந்ததே.

இதோ ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை வந்துவிட்டு சென்னை திரும்பும் காவல் வாகனத்தில் 5 காவலர்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.

'இன்னிக்கு மதுரையில அழகர் ஆத்துல இறங்கப்போறாரு. அந்த இடத்துல வெக்கிறதுக்காக நான் பாம் செஞ்சு குடுத்துட்டு வர்றப்பதான் என்னை புடிச்சிட்டீங்க. இதோ நான் மதுரையில இருந்து கிள‌ம்பிட்டேன். இன்னும் 2 ம‌ணி நேர‌த்துல‌ வெடிக்க‌ப்போகுது. போங்க‌டா போக்க‌த்த‌வ‌னுங்க‌ளா'

என்று நினைத்துக் கொண்டிருந்த‌ அதே வேளையில், அவ‌ன் போலீஸில் சிக்கிய‌தும், போலீஸுக்கு பயந்த அவன் கூட்டாளி வெடிகுண்டை ஒரு பப்ளிக் டாய்லெட்டில் வீசிவிட்டு சென்றதும், அடுத்த பத்து நிமிடத்தில் உணவகத்தில் நிற்கும்போது டாய்லெட் செல்லும் அவன் வெடித்து சிதறப்போவதும் தெரியாம‌ல் ச‌ந்தோச‌ப்ப‌டும் அவ‌னை நினைத்து அழ‌க‌ர் சிரித்துக் கொண்டிருந்தார்.

****

"ஐயா.. எதுக்குயா சிரிக்கிறீங்க?"

"என்னா சோலை.. வறட்சி நிவாரணம் பணம் முழுசும் உனக்கே குடுத்துட்டா அப்புறம் எங்களுக்கு நிவாரணம் யாரு குடுக்குறது? ஒனக்கு ஏக்கருக்கு ரெண்டாயிரம்னு மொத்தம் பத்தாயிரம் சாங்ஷன் ஆகியிருக்கு, வெளியில போயி முருகன் இருப்பான், அவன்கிட்ட ஆயிரம் ரூபா குடுத்துட்டு வா, ஒனக்கு நான் டோக்கன் குடுக்குறேன்"

வெளியில் வந்த சோலை "படுபாவிங்க, 6 மாசமா மழையே இல்லாம கடவுள்தான் கழுத்தறுக்குறாருன்னா, கவர்மென்டு குடுக்குற வறட்சி நிவாரணத்தைக் குடுக்குறதுக்கு இவனுங்களும் கழுத்தறுக்கிறானுங்க" என்று நினைத்தவாறே, கடன் வாங்கி வந்திருந்த ஆயிரம் ரூபாயை ஆபிசர் சொல்லியவனிடம் கொடுத்து, பின் டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தான்.

'இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும். ஆண்டவனே! எவ்ளோ நல்லா விவசாயம் நடந்துட்டு இருந்த கிராமம். மழை சரியா பேஞ்சு முப்போகமும் வெளஞ்சி கிராமமே பச்சப் பசேல்னு இருக்குமே! கொஞ்சம் கொஞ்சமா மழை கொறஞ்சி இந்த வருசம் சுத்தமா இல்லாம போச்சே.. ஏன் எங்கள இப்படி சோதிக்கிற' என்று புலம்பியவாறே வறண்டு கிடந்த ஏரிக்குள் நுழைந்தான்.

லேசாக வானம் கறுக்க ஆரம்பித்திருந்தது, அவன் அணிந்திருந்த அழுக்கான மெல்லிய சட்டையைத் தாண்டி லேசான குளிர் தெரிய ஆரம்பித்தது. த‌லையைத் தூக்கி வான‌த்தைப் பார்த்த‌வ‌ன் ஆண்ட‌வ‌னை வேண்ட‌ ஆர‌ம்பித்தான்..

'ஆண்ட‌வா! இன்னும் ரெண்டு கிலோமீட்ட‌ர் ஊருக்கு போக‌ணும். இந்த பணத்தை நம்பிதான்யா எங்க எதிர்காலமே இருக்கு. ஏரியைத் தாண்டி வூட்டுக்கு போற‌ வ‌ரைக்கும் ம‌ழை வ‌ராம‌ நீதாம்பா காப்பாத்துணும்'

****

"என்னாது நான் உன்ன காப்பாதுறதா? நான் என்னைய‌ காப்பாத்திக்கவே போராடிட்டு இருக்கேன்" என்றான் மாணிக்கம்.

"அதில்ல மச்சான்.. உனக்குதான் தெரியுமே நான் அந்த சீட்டு கம்பெனியில வேலைக்கு சேந்தது. எங்க குப்பத்துல என்னைய எல்லாருக்கும் நல்லா தெரியும்ன்றதால எல்லார்கிட்டயும் பேசி சீட்டு சேத்து விட்டேன். எனக்கும் கமிஷன் கிடைச்சிது. அந்த நாதாரி இப்படி ஒரே நைட்ல எல்லா பணத்தையும் எடுத்துட்டு ஓடுவான்னு எனக்கென்னா தெரியும்?"

"சரி.. சரி.. அழுவாத.. அதுக்குதான் நான் மொதல்லயே சொன்னேன். இப்பல்லாம் ஏமாத்துறவனுங்க டைரக்டா செய்யுறதில்ல, இப்படி அந்த ஏரியாவுல நல்ல பேர் இருக்குறவனா பாத்து புடிச்சு போடுறானுங்க.. நீயும் அதுக்கு பலிகடா ஆயிட்ட"

"ஆமா மச்சான்"

"சரி.. ஒண்ணு பண்ணு.. சாப்டுட்டு போய் நம்ம போட்டாண்ட நில்லு, கபாலி வருவான், இன்னிக்கு அவன் மட்டும்தான் கடலுக்கு போறான். நீயும் அவன் கூட போயிட்டு வா. தரையில இருக்குறது ஒனக்கு இப்ப சேஃப் இல்ல"

ஒரு மணிநேரம் கழித்து கபாலி வந்தான். அவனிடம் விவரம் எதுவும் சொல்லாமல் ஒரு சிறிய பிரச்சினை என்று மட்டும் சொல்லி, அவனுடன் படகில் கிளம்பினான்.

கபாலியும், மச்சானும்தான் சேர்ந்து இந்த படகை வாங்கினார்கள். கபாலி ரொம்ப நல்லவன். 15 வருசமாக இருவரும் சேர்ந்து தொழில் செய்தாலும் இதுவரை தகராறு எதுவும் வந்ததில்லை. ஆனால் அவன் ஒரு வாயாடி.. பேசிக்கொண்டே வந்தான். 2 மணிநேரத்திற்கு பிறகு மெதுவாக கபாலி கேட்டான்..

"ஏன் முத்து.. நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் புதுசா சீட்டு கம்பெனி ஆரம்பிச்சிருக்காரு.. நல்ல மனுசந்தான்.. நானே சேத்து உடறேன்.. நீ வேணா ஒரு அம்பதாயிரம் ரூபா சீட்டு போடேன்"

****

"என்னது? இன்னொரு சீட்டு போடுறதா? என்னடா விளையாடுறியா?" என்று மெதுவான குரலில் கேட்டான் கிருஷ். அவர்கள் இருந்தது நகரின் பிரபலமான காஸினோவின் ப்ளாக் ஜாக் டேபிளில்..

"விளையாண்டுட்டுதானேடா இருக்கோம்" சிரித்தான் சித்தார்த்.

"ஏற்கனவே 18 இருக்கு, இன்னும் கார்டு கேக்குற, ரெண்டு, மூணு இல்லை ஏஸ் வரலைன்னா நீ தோத்துடுவ"

"பரவாயில்ல, டிரை பண்ணுவோம், லைஃப்ல ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாதுடா. அதுவும் இது என்னா சுண்டைக்கா, ரெண்டாயிரம் டாலர்தான, போயிட்டு போவுது"

அடுத்த சீட்டு 2 வந்தது. சித்தார்த் ஜெயித்தான். அவன், அமெரிக்க ராணுவத்திற்கு தளவாடம் சப்ளை செய்யும் மிக முக்கியமான நிறுவனத்தின் ஆர் & டி பிரிவின் மிக மிக முக்கியமான நபர். மறுநாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நடக்க இருக்கும் ரகசிய டெமோவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரிலாக்ஸேஷனுக்காக காஸினோ வந்திருந்தனர்.

"என்னமோ போடா.. உன்னை பாராட்டுறதா திட்டுறதான்னு தெரியல. ஒரு விசயம், எல்லா நேரத்திலயும் அதிர்ஷ்டம் கை குடுக்காது. பாத்து நடந்துக்க"

"கம்முனு இருடா.. சும்மா பாட்டி மாதிரி புத்தி சொல்லிட்டு" சிரித்துக் கொண்டே காரை கிளப்பினான்.

மறுநாள், புதிதாக வடிவமைக்கப்பட்ட குறைந்த எடையுடைய ஆனால் அதி நவீன துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாவையும் தடுக்கக்கூடிய கவச உடை டொமோ. கடந்த ஒரு மாதமாக எல்லா விதமாக டெஸ்டிங்கும் செய்து அறிக்கை அளித்திருந்த அவனது டீமிற்கு நன்றி சொல்லிவிட்டு டெமோ பீஸுடன் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் சித்.

"ஹாய் சித்.. ஏன் இந்த டெமோவை வெளியில வெச்சிக்கக் கூடாது. ஏன்னா ரியல் டைம் டெமோவா இருக்கணும்னு பார்க்குறோம்"

"ஷ்யூர்.. வாங்க போகலாம்" வெளியே வந்தான். மே மாத வெயில் 98 டிகிரியில் கொளுத்திக்கொண்டிருந்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

"இப்போ நானே இதை போட்டுக்கிறேன்."

"ஏன் வேற யாராவது..."

"அப்படி பண்ணினா, இந்த ப்ராடக்ட் மேல எனக்கே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்" ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தான் சித்.

"நீங்க என் உடம்பை குறி பாத்து சுடுங்க ஜாக்.."

"நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சித்" என்று கூறியவாறே குறி பார்த்து சுட்டான் ஜாக்.

அவன் டிரிக்கரை அழுத்திய வினாடி, சித்தார்த்திற்கு முதல் நாள் டெஸ்ட் ரிப்போர்டில் படித்த ஃபெய்லியர் கேஸஸ் லிஸ்ட் நினைவுக்கு வந்தது.

'வெப்பநிலை 95 டிகிரிக்கு அதிகமாகவும் ஈரப்பதம் 30%க்கு அதிகமாகவும் செல்லும்போது கவச உடையில் உள்ள ஃபைபர் நெகிழ்ந்து துப்பாக்கி குண்டை தடுக்கும் சக்தியை இழக்கிறது. 116க்கு 1 முறை இந்த நிகழ்வு காணப்பட்டது'

வெப்பநிலை கிட்டதட்ட 100 இருக்கும். தன் வேர்வையில் ஏற்கனவே உடை முழுதும் நனைந்துள்ளது. அதிர்ந்து போய் பார்த்தான். துப்பாக்கி குண்டு அவன் நெஞ்சுக்கு நேராக வந்துகொண்டிருந்தது.

(இப்போ முதல் கதையை படிக்க ஆரம்பிங்க)

Thursday, October 2, 2008

சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு

சென்னை, அக். 1:
சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு நடக்க இருப்பதாக சென்னை பதிவர் சங்க தற்காலிக பொறுப்பாளர் அதிஷா தெரிவித்துள்ளார். இதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்று சென்னை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பதிவர் சங்க பொறுப்பாளர் அதிஷா, சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பதிவர்கள் சந்தித்து மொக்கை போடாமல் இருப்பதாக கடற்கரை சாலையில் கால்கடுக்க நின்றிருக்கும் காந்தியடிகள் கவலைப்பட்டுள்ளதாகவும், இதை முன்னிட்டு வரும் அக்டோபர் நான்காம் தேதி மாலை மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து கொண்டு தமிழ் வளர்த்து வரும் அண்ணன் பொட்"டீ"க்கடை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை லக்கிலுக் தலைமையிலான பதிவர் படை இறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாடு டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிவர்களிடையே அரசியல் மிகுந்து இருப்பதாகவும் ஆனால் அந்த அரசியலால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்பதால் எந்த டிவியும் கண்டுகொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சென்னையில் இருக்கும் அனைத்து தமிழ் பதிவர்களும் அலைகடலென திரண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மாநாடு முடிந்தபின் டமாரு கொமாருவுடன் காண்டு கஜேந்திரனை சந்திக்க செல்வதாக முடிவு செய்திருப்பதாகக் கூறினார். இந்த செய்தியை அவர் சொன்னதற்கு காரணம் தாமிரா மற்றும் வால்பையனை வரவழைக்கவே என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் பதிவர் முரளிகண்ணன் முழுவீச்சில் ஈடுபட்டிருப்பதால் பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

திருமணத்திற்கு பிறகு பதிவு எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட தல பாலபாரதிக்கு மாநாட்டில் கறுப்புக் கொடி காட்ட வெண்பூ உள்ளிட்ட பதிவர்கள் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்திகளை அடியோடு மறுத்த அவர் இது போன்ற செய்திகளுக்கு வெளிநாட்டு சதியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேல் தகவல்கள்:

நாள்: அக்டோபர் 4, 2008 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 6 மணி

இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம்

கலந்து கொள்பவர்கள்: சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும்

எதிர்ப்பார்க்கப்படுபவர்கள்: புதிய பதிவர்கள் மற்றும் இதுவரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்கள்

சிறப்பு அழைப்பாளர்: பொட்"டீ"க்கடை

மேலதிக விபரங்களுக்கு..
அதிஷா மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com
அதிஷா அலைபேசி எண் - 9941611993

சந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:
அதிஷா : சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008
முரளிகண்ணன் : அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு