ஏறத்தாழ தமிழ்பதிவு எழுதுற பதிவர்கள்ல 90% பேர் ஏற்கனவே எழுதிட்ட இந்த தமிழ் சினிமா தொடர் விளையாட்டுல என்னையும் அழைத்த பரிசல், நர்சிம் மற்றும் துக்ளக் மஹேஷ் மூணு பேருக்கும் நன்றி.
முடிஞ்ச வரைக்கும் எல்லா கேள்விக்குமான பதிலையும் ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) குடுக்க முயற்சி பண்றேன்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
என் சின்ன வயதில் நாங்கள் சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஹவுசிங் போர்டில் இருந்த போது அருகிலுருந்த பச்சியம்மாள் தியேட்டருக்கு சென்றது மங்கலாக நினைவில் இருக்கிறது. பெயருடன் நினைவில் நிற்கும் படம் என்றால் 20 வருடங்களுக்கு முன் பாப்பிரெட்டிபட்டியில் ஜெயஷ்ரீ திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
என் மகனை வைத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முற்றிலும் முடியாத காரணம், அதனால் ஆசை இருந்தாலும் அதிகமாக தியேட்டரில் படம் பார்ப்பதில்லை. டிரைவ் இன் தியேட்டரை அரங்கு என்று சொல்லமுடியுமா என்று தெரியாது. சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் பார்த்த சந்தோஷ் சுப்பரமணியம். என் தங்கமணியின் நண்பி குடும்பத்துடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். காருக்கு முன்னால் பெரிய பெட்ஷீட்டை விரித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு நாங்களும் அவனுடனே படுத்துக்கொண்டு ஜாலியாக பார்த்த படம். படமும் பிடித்திருந்தது. ஒரு திருப்தியான ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியுடன் திரும்பினோம். அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம்.. இதுகுறித்து ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய என்பதற்கு மிகவும் பிடித்த என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் பல படங்களை சொல்ல முடியும், பாட்ஷா, உள்ளத்தை அள்ளித்தா, கேப்டன் பிரபாகரன், Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சமீபத்தில் தசாவதாரம் படத்தின் சில காட்சிகள். நிச்சயமாக ஹாலிவுட் அளவிற்கு சொல்ல முடியாதெனினும், கண்டிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது மிக அதிகம்தான். முக்கியமாக மருத்துவமனை காட்சி, அத்தனை கமல்கள் ஒரே நேரத்தில் காட்டப்படுவதில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் மட்டும் 27 லேயர் இருந்ததாக சொன்னார்.
அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி..
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் நம்ம சினிமா பத்தின வாசிப்பு. கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..
7.தமிழ்ச்சினிமா இசை?
என் ப்ரொஃபைலில் சொல்லியிருப்பேன், "ராசா இசைன்னா சோறு தண்ணி கூட வேண்டாம்" அப்படின்னு. இளையராஜாவின் இசையை ரொம்ப பிடிக்கும்னாலும் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் நல்லா இருந்தா ரசிப்பேன். மிக மிக பிடித்த குரல், ஆண்களில் எஸ் பி பி, பெண்களில் சுசிலா & சித்ரா. என்னோட டாப் 5:
1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி
2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி
3. உதய கீதம் பாடுவேன் : உதயகீதம் : இளையராஜா : எஸ் பி பி
4. காதல் வந்தால் சொல்லியனுப்பு : இயற்கை : வித்யாசாகர் : திப்பு
5. காதல் ரோஜாவே : ரோஜா : ஏ ஆர் ரஹ்மான் : எஸ் பி பி
(அட அஞ்சுமே ஆண் குரல் சோலோ பாடல்கள்)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
சின்ன வயதிலிருந்தே ஆங்கில படங்கள் பார்ப்பதுண்டு, ஜாக்கிசானை பிடிக்கும். ஹாலிவுட் படங்களில் நல்ல ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அரிதாக மற்றவகை ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதுண்டு. அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.
ஹைதராபாத்தில் 3 வருடம் இருந்ததால் கொஞ்சம் தெலுங்கு படங்களும் பார்த்ததுண்டு. ரசித்து பார்த்தது "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்". வசூல்ராஜாவை விட பலமடங்கு நன்றாக இருந்ததாக எண்ணம்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இப்போதைக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து இந்த கேள்விக்கான பதில் "ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த நினைப்பே வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சென்னையில் இருக்கும் நமக்கு பீச், தீம் பார்க் என்று பல பல பொழுது போக்குகள். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் நடுத்தர, ஏழை மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. அதனால் அது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது.
*****
எனக்கு தெரிஞ்ச எல்லா பதிவர்களும் இந்த தொடர்ல ஏற்கனவே எழுதிட்டதால நான் யாரையும் கூப்பிட முடியல. தொடர் விளையாட்டுல லேட்டா பதிவு போட்டா இதுதான் பிரச்சினை. அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))
Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts
Monday, October 20, 2008
Subscribe to:
Posts (Atom)