Monday, February 22, 2010

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்

கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.

முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..


அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.

விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..

***

சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?

***

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.