Monday, November 3, 2008

துணுக்ஸ்

சென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார். அதன்பின் நடந்த உரையாடல்..

தங்கமணி: என்னங்க?

நான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா?

தங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க?

நான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.

தங்கமணி: என்ன? நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா?

நான் (ச‌ரியாக‌ அவ‌ர் சொன்ன‌தை காதில் வாங்காம‌ல்): த‌லைப்பு "பேய் பிடித்த‌வ‌ன்" அப்ப‌டின்னு வெக்க‌லாம்னு இருக்கேன்.

"டிட‌ங்க்..." (ஹி..ஹி.. அவ‌ங்க‌ கையில‌ இருந்த‌ க‌ர‌ண்டி ஹால்ல‌ லேண்ட் ஆன‌ ச‌த்த‌ம் அது)

*******

பலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.

என் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவ‌ன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட‌ செல்ல முடிவதில்லை.

ஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.

முதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே? நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா? என்ற கவலைகள் வேறு அவருக்கு.

இரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் "என்னங்க.. உங்களுக்கு தெரியுமா? இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.

இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..

*******

என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

விடுவார்களா நம் ஆட்கள்!! அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.

அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.

அந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே! ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா!! என்று மனதிற்குள்ளேயே புலம்பல்.

தம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"

*********

இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.

அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே!!! படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.

அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.

வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள்!! அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.