Wednesday, March 31, 2010

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

மதிப்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,

சென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விச‌ய‌மும் த‌மிழ் வ‌லையுல‌க‌ எதிர்கால‌த்திற்கு ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட‌வில்லை. புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் / வருபவர்கள் "இவ்வ‌ள‌வு அர‌சிய‌லா இங்கே?" என்று நினைத்து வில‌க‌க்கூடிய‌ அள‌வுக்கு பிர‌ச்சினைக‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதிர்வினையாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌தில‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. பிர‌ச்சினைக்குக் கார‌ண‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் க‌றுப்பும் வெள்ளையுமாக‌ ப‌திவிட‌வும் முன்வ‌ர‌வில்லை.

த‌ற்போதைய‌ பிர‌ச்சினைக‌ள் குறித்த‌ என் பார்வையே இந்த‌ ப‌திவு. அதே நேர‌ம் விவ‌ர‌ம் அறிந்த‌ ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மன‌திலும் இதே எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் இருக்கும் என்ப‌தையும் அறிந்தே இருப்ப‌தால் இந்த‌ ப‌திவு எழுதுவ‌து அவ‌சிய‌மாகிற‌து.

பின்புலம்:
வலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், "கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.

சமீபத்திய கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் "என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையினர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

இது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

தற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.

சில கேள்விகளும், என் கருத்துகளும்:
இப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.

1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி. இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன?
2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன?
3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்?
4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை? அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடியவில்லை?

இந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எப்படி?

1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் "சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும்.

2. திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.

3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.

இந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

உண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார்? நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.

ஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் "இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?

ஆதார‌ங்க‌ள்:
சரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

அக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா?

நான் ஏன் இதை எழுதுகிறேன்?
அமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.

பைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அத‌ற்கு உதார‌ண‌ம்.

அடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ம‌ற்ற‌ இளைய‌, புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்த‌ப்ப‌டுவார்க‌ள் என்று எழுந்த‌ ப‌ய‌ம்.

பெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.

எழுதுவதற்கான தகுதி:
இவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்பார்களேயானால், "தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.

கடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்பதிவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.