Monday, March 16, 2015

எனக்குள் ஒருவன் : தவறவிடக்கூடாத தமிழ் படம்

முன் குறிப்பு 1: நீங்கள் இன்னும் எனக்குள் ஒருவன் பார்க்கவில்லை என்றால் தியேட்டருக்கு போய் பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம்

மு.கு.2: இதன் ஒரிஜினலான கன்னட படம் "லூசியா"வை நான் பார்க்கவில்லை. என் பார்வை முழுக்க தமிழின் எனக்குள் ஒருவனைப் பற்றி மட்டுமே.

*****

கிறிஸ்டோஃபர் நோலன் உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய "இன்செப்ஷன்" படத்தில் ஒரு காட்சி வரும். கனவுக்குள் கனவு என நான்கு நிலைகளுக்கு செல்வதற்கு தகுந்த சரியான மயக்கமருந்து ஃபார்முலா தேடி ஒருவரிடம் செல்வார்கள். அவர் தன் மருந்தின் வீரியத்தை காட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கே சுமார் 20 பேர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை அடித்தால் கூட எழமாட்டார்கள்.

அந்த கெமிஸ்ட் "இவர்கள் எல்லாரும் தினம் இங்கே வருவார்கள். காலை எழுந்து சென்றுவிட்டு, மீண்டும் சீக்கிரமாக இங்கே திரும்பி விடுவார்கள்" என்பான்

லியானார்டோ அவரிடம் "திரும்ப தூங்க இங்கே வருவார்களா?" எனக்கேட்க‌

அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில் "இல்லை, அவர்கள் இங்கே வருவது திரும்ப விழித்தெழ"

அதாவது, அந்த மனிதர்களைப் பொறுத்தவரை  இந்த புற உலகம் வேறு வழியில்லாமல் இருக்கும் இடம். அந்த கனவுலகம்தான் அவர்களைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கை, அதைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

"எனக்குள் ஒருவன்" படத்தின் அடிப்படை கதையின் ஒருவரி அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில்தான்

****

ஒரு தியேட்டரில் டிக்கெட்டில் டார்ச் அடித்து சீட் நெம்பர் பார்த்து சரியான சீட்டில் உக்காரவைக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் விக்கி என்ற கருப்பு சித்தார்த்திற்கு கிடைக்கும் அற்புத மாத்திரை லூசியா.

மருந்து கம்பெனி நடத்தி வரும் ஜான் விஜய் "இதை போட்டுகிட்டா உனக்கு கனவு வரும், அதுல நீ வாழ நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம்" என்று சொல்லி கொடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க, கனவில் ஒரு பெரிய சினிமா ஸ்டாராக விக்னேஷ் என்ற வெள்ளை சித்தார்த். 

அதன்பின் கனவிலும் நிஜத்திலும் என்று பேரலலாக போகும் இரட்டை கதை, இரண்டிலும் ஒரே ஆட்கள் வேறு வேறு பாத்திரங்களாக என்று கடைசி வரை திரைக்கதையில் அதகளம்.

படத்தின் மேக்கிங் அற்புதம். அதிலும் கனவு கருப்பு வெள்ளையிலும் நிஜம் வண்ணத்திலும், அதற்கான காரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

கதையின் மிகப்பெரிய பலமே க்ளைமாக்ஸ் காட்சிகள். படம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை.  

இதற்கு மேல் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

"ஐ டோன்ட் சீ டமில் மூவிஸ்" என்று சொல்பவர்களும் பார்க்கவேண்டிய படம் இது. 

************

ஸ்பாயிலர் அலெர்ட்: படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

படம் பார்த்தவர்களுக்கு, படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமிப்பாக‌ இருந்திருக்கும். 

சில வருசங்களுக்கு முன்னால் அமெரிக்க வாழ் பதிவர் நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கதை வசனம் எழுதி நண்பர் கணேஷ் சந்திரா & அவர் நண்பர்கள் நடித்த ஒரு குறும்படம் "நிமித்தக்காரன்". சுமார் கால்மணிநேரம் ஓடும் இந்த குறும்படமும் கனவுகளைப் பற்றியே பேசுகிறது.

வசனம் அதிகம் இருந்தாலும் பொறுமையாக பார்த்தால், க்ளைமாக்ஸில் ஒரு வாவ் மொமென்ட் உண்டு, முக்கியமாக இதை எனக்குள் ஒருவனுடன் ரிலேட் செய்ய முடியும்.

பி.கு: எனக்குள் ஒருவனின் கன்னட ஒரிஜினலான லூசியா ரிலீஸ் ஆனது ஃபிப்ரவரி 2013. இந்த நிமித்தக்காரன் ரிலீஸ் ஆனது ஏப்ரல் 2011. அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பே..