Monday, December 26, 2011

ஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்

படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி: பெரிய விமான நிறுவனங்களில் விமானம் ஓட்டும் ஒரு பைலட்டின் ஆரம்ப சம்பளம் எவ்வளவு?

சென்ற வாரம் பொழுது போகாமல் ரீடரில் படிக்காமல் வைத்திருந்த பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது வினவின் பக்கங்களில் ஒரு பதிவின் தலைப்பே ஈர்த்தது. மைக்கேல் மூரின் “Capitalism - A Love Story" என்ற ஆவணப்படத்தைப் பற்றி பதிவு அது. ஏற்கனவே மைக்கேல் மூரின் ”ஃபாரன்ஹீட் 9/11” படம் பார்த்திருந்ததால் மைக்கேல் மூர் மீதிருந்த மரியாதையால் அந்த படத்தை டவுன்லோடி பார்க்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு முறை நம் அரசியல்வாதிகளை திட்டும் போதும் “அமெரிக்க அரசியல்வாதிங்கள பாருங்க, எவ்ளோ தொலைநோக்குப் பார்வை அவங்களுக்கு. எத்தனை போர்கள் எதுக்கு பண்ணுறானுங்க, அவங்க நாடு நல்லா இருக்கணும்னுதானே, அமெரிக்கர்கள் குடுத்து வெச்சவங்க” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசின் துணையுடன் மற்ற நாடுகளை சீரழிக்கின்றன, அதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களும் மோசடிகளும் அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் அத்தனையும் தன் நாட்டு மக்களின் நலனுக்காக செய்யப்படுவது என்று நம்மை தேற்றிக் கொள்ளும்முன் பார்க்க வேண்டிய படம் “முதலாளித்துவம் - ஒரு காதல் கதை” என்ற மைக்கேல் மூரின் ஆவணப்படம்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி அமெரிக்க நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீடும் தன் சொந்த நாட்டு மக்களை சூறையாடுகின்றன, 99 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து 1 சதவீத உயர்தட்டு மக்களை காப்பாற்ற என்ன என்ன செய்கின்றன என்பதை ஆதாரங்களுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக விளக்கிக் கொண்டே போகிறார்.

அதில் ஒன்றுதான் மேலே சொன்ன பைலட் சம்பளம். அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் எந்த சாஃப்ட்வேர் ஆளும் குறைந்தது வருடத்திற்கு 40,000 டாலர்கள் சம்பளம் பெற முடியும். ஓரளவு திறமை இருந்தால் 60லிருந்து 70ம் தனியாக கன்சல்டண்ட்களாக மாறினால் 100 ஆயிரம் டாலர்களையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்களின் சம்ப்ளம் 15,000 டாலர்களில் மட்டுமே ஆரம்பிக்கிறது. 20,000 என்பது சராசரி. அதாவது மாதம் 1,500 டாலர் அளவிற்கு.

வேலையாட்களுக்கு குறைந்த சம்பளம் தருவதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமல்லாமல், தனியார் சிறைச்சாலை பலன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து சின்ன தவறு செய்யும் சிறுவர் சிறுமிகளையும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, ஒவ்வொரு நிறுவனமும் தன் வேலையாட்களின் மீது அவர்களின் குடும்பங்களுக்கேத் தெரியாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து அவர்களின் சாவிலும் பணம் பண்ணுவது, வீட்டுக்கடன் வட்டி கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினரையே அந்த வீட்டை குறைந்த காசுக்கு சுத்தம் பண்ணித் தர சொல்வது, அமெரிக்க அதிபரைச் சுற்றி பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாடாளுமன்றத்தில் எப்படியாவது நிறைவேற்றப்படுவது என்று உச்சபட்ச கொடுமைகளை காட்டும்போது, நம்ம ஊரே பரவாயில்லடா என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவின் இன்னொரு முகம் தெரிய அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இது

*********

இந்த வாரம் நான் பார்த்த இன்னொரு படம் மேற்சொன்னதிற்கு முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் திரைப்படம். டாம் க்ரூஸின் பல படங்களைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முந்தைய மூன்று Mission Impossible படங்களும் திருப்தியான ஆக்சன் மசாலாவாக இருந்ததாலும் இதன் நான்காம் பாகத்தை தவறவிட வேண்டாம் என்று கடந்த சனிக்கிழமை சென்றிருந்தேன்.

டிஜிட்டல் ப்ரொஜெக்சன், டிடிஎஸ், டால்பி என்று சவுண்ட் எஃபக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சினிமா தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சம் என்று IMAX தியேட்டர்களை சொல்லலாம். சுமார் 80 அடி உயரம் மற்றும் அகலத்துடன் மிகப்பெரிய ஏறத்தாழ சதுரமான திரை, 12 ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பீக்கர்கள் என்று படம் பார்ப்பதை முற்றிலும் புதிய அனுபவமாக மாற்றவல்லவை இந்த தியேட்டர்கள்.

அதனால் இந்த முறை படத்தை IMAXல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன். படத்தின் முக்கிய காட்சிகளான துபாயில் நடக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் IMAX கேமிராவிலேயே எடுக்கப்பட்டதால் படம் கலக்கலாக இருந்தது. படத்தின் மற்ற பகுதிகள் 70 எம் எம் ல் எடுக்கப்பட்டதால் மேலும் கீழும் இடம் விட்டு பாதி திரை அளவுக்கே தெரியும் காட்சிகள், ஸ்பெஷல் கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரும்போது முழுத்திரையிலும் விரியும்போது விசிலடிக்கத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெங்களூர் சன் நெட்வொர்க் வளாகத்தில் எடுத்திருப்பதும், பெங்களூர் மந்த்ரி மால் வளாகம் முன் சில காட்சிகளும் வருவது நம் சினிமா மார்க்கெட்டிற்கு ஹாலிவுட் தர ஆரம்பித்திற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

மசாலாப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம், உங்கள் ஊரில் IMAX இருந்தால் நிச்சயம் IMAXல் பார்க்கப்படவேண்டிய படம்.

Friday, October 21, 2011

துணுக்ஸ் - 2011/10/21

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர். என் பதிவை எடுத்துப் பார்த்தால் ஏப்ரலுக்குப் பிறகு ஏறத்தாழ ஆறுமாத காலம் எந்த பதிவும் இல்லை.

ஆனால் இந்த காலகட்டத்தில் பஸ்ஸில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போன்றே பலரை பஸ்ஸில் பார்க்க முடிகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் பதிவைப் போன்று நீண்டகால சேமிப்பாக (படைப்பு, தகவல், மொக்கை எல்லாவற்றையும்) பஸ்ஸை கொள்ள முடியாது. மிகச்சிறந்த உதாரணம் குசும்பன். பஸ் வந்ததும் அவரது நகைச்சுவை உணர்வு எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை, ஆனால் அதை எல்லாம் மீண்டும் பஸ்ஸில் படித்துப் பார்த்து ரசிக்க முடியுமா என்ன?

கார்க்கி, பரிசல்காரன் போன்றவர்கள் ட்விட்டரில் இணைந்து மொக்கை போட்டதும் இதே போன்றே. ரைட்டர் பேயோன் போன்று ட்விட்டர் மூலம் புகழ் பெற்று ட்விட் தொகுக்கப் பெறும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். முடிந்த வரை இனிமேல் பதிவிலும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற பதிவர்களும் பதிவுகளை எழுதினால் மகிழ்வேன்.

*******

”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா? நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.

நான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிறது. நம் ஆட்களே பரவாயில்லை எனும்படி இந்த ஊர் ஆட்களின் நடத்தை இருக்கிறது. தெருவில், சாலையில், நடைபாதையில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் எந்த நெருடலும் இல்லாமல் எச்சில் துப்புகிறார்கள். பக்கத்தில் எவனாவது இருக்கிறானா இல்லையா என்ற கவலை இன்றி சிகரெட்டை புகைக்கிறார்கள். கொஞ்சம் விலை கம்மியான அபார்ட்மெண்ட்களுக்குச் சென்றால் வித்தியாசமான சிகரெட் நெடி மூக்கை அரிக்கிறது, சாலை ஓர கற்களுக்கு பீர்பாட்டில் அபிஷேகம் எல்லாம் சாதாரணம்.

எல்லாவற்றையும் விட மோசமான விசயம் பிச்சைக்காரர்கள். சாலையில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் “டூ யூ ஹேவ் அ டாலர்?” என்று கேட்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது, இத்தனைக்கும் அவனோ / அவளோ ஓரளவு நாகரிகமாக உடை உடுத்திக்கொண்டு, செல்ஃபோன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை ஒருவன் கேட்டது காதில் விழாதது போல நான் நகர்ந்து போக அவன் கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்ட ஆரம்பித்துவிட்டான். நம்மை தாக்கக்கூட தயங்கமாட்டான்கள் என்பதால் இப்போதெல்லாம் ஒரு டாலர் நோட்டு சட்டைப்பையில் இல்லாமல் வெளியில் வருவதில்லை.

நான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங்கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது

அமெரிக்கா சார்.. அமெரிக்கா...

******

டென்னஸி மாகாணத்தின் தலைநகரான நாஸ்வில் நகரம் “ம்யூசிக் சிட்டி” என்றழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் திரும்பிய பக்கமெல்லாம் இசை, இசை, இசை.. கண்ட்ரி ம்யூசிக் என்று இவர்கள் அழைக்கும் இவர்களின் நாட்டுப்புற இசை இங்கே பிரபலம். இசைக்கான பெரிய ம்யூசியம், இசை மகான்கள் குறித்த குறிப்புகளுடன் “வாக் ஆஃப் ஃபேம்”, ஆங்காங்கே தெருவில் சின்ன சின்ன ஸ்பீக்கர்களை வைத்து எஃப் எம்மில் இசை ஒலிபரப்பு என்று அருமையான உணர்வைக் கொடுக்கிறார்கள்.

ஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா?” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் பாடலைக் கேட்டதும் அவர் சொன்னது சரி என்று உணர்ந்தாலும் அவர் சொன்ன காரணம் தவறென்று தோன்றியது. பின்ன என்னங்க? இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன? :)

Thursday, October 20, 2011

நண்பன் (சிறுகதை)

"ம‌ச்சான், ஒரு குட் நியூஸ்டா" என்ற‌ குமாரின் குர‌லில் வ‌ழ‌க்க‌த்துக்கு மாறான‌ ஒரு உற்சாக‌ம் தெரிந்த‌து.

"என்ன‌டா.. ரொம்ப‌ ச‌ந்தோச‌மா இருக்குற‌ மாதிரி இருக்கு"

"இல்ல‌ ம‌கேஷ்... ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா" என்ற‌வ‌னின் குர‌லில் லேசான‌ வெட்க‌ம்.

"என்ன‌து.. ல‌வ் ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட்டியா?"

"டேய்.. நான் சொன்ன‌து வேற‌.. மேட்ட‌ருக்கு ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா"

"தெளிவா சொல்லுடா, ஒண்ணும் புரிய‌லை"

"நீதான் திட்டுவியே, நான் நெட்ல‌ எப்ப‌ பாத்தாலும் சேட்ல‌ இருக்குறேன்னு, இப்ப‌ அதுமூல‌மா ஒரு கான்டாக்ட் கிடைச்சிருக்குடா.. இன்னிக்கு அவ‌ங்க‌ வீட்டுக்கு போறேன்"

"ச‌ரி"

"என்ன‌ ச‌ரி.. நான் சொல்ற‌து இன்ன‌மும் புரிய‌லையா.. ஒரு பொண்ணோட‌ கான்டாக்ட் கிடைச்சிருக்கு.. சேட்ல‌ இருந்து அப்ப‌டியே டெவ‌ல‌ப் ஆகி போன் எல்லாம் ப‌ண்ணி பேசி, இன்னிக்கு ம‌த்தியான‌ம் நான் அவ‌ வீட்டுக்கு போக‌ப்போறேன்டா.. எல்லாம் மேற்ப‌டி விச‌ய‌த்துக்குதான்"

"அட‌ப்பாவி.. உன‌க்குள்ள‌ இவ்ளோ பெரிய‌ திற‌மையா.. க‌ல‌க்கு" என்ற‌ ம‌கேஷின் குர‌லில் ச‌ந்தோச‌மா வ‌ருத்த‌மா என்று தெரியாத‌ ஒரு க‌ல‌வையான‌ உண‌ர்வு.

"ச‌ரி.. இந்த‌ விச‌ய‌ம் உன‌க்கு ம‌ட்டும்தான் சொல்லியிருக்கேன், பாத்து வேற‌ எவ‌னுக்கும் ப‌ர‌ப்பி விட்டுடாத‌"

"ச்சீ.. சொல்ல‌ மாட்டேன்.. ஆமா பொண்ணு எப்ப‌டி, மேட்ட‌ர் ம‌ட்டுமா, இல்ல‌ ல‌வ், க‌ல்யாண‌ம் எல்லாமுமா"

"ஹி..ஹி.. க‌ல்யாண‌மா.. அவ‌ ஏற்க‌ன‌வே க‌ல்யாண‌ம் ஆன‌வ‌டா"

"அட‌ப்பாவி, அப்புற‌ம் அவ‌ புருச‌ன் ச‌ந்தேக‌ப்ப‌ட‌ மாட்டானாடா?"

"அவ‌னுக்கு அவ‌ன் ஆபிஸை க‌ட்டிட்டு அழ‌வே நேர‌ம் ப‌த்த‌லை. ம‌னுச‌ன் ஊர் ஊரா சுத்துற‌ வேலை வேற‌ போல‌, இவ‌ளை அவ‌ன் ச‌ரியா க‌வ‌னிச்சிகிட்டா அவ‌ ஏன் என்னை கூப்பிட‌ப்போறா"

"ம்ம்ம்ம்.. ந‌ட‌க்க‌ட்டும் நட‌க்க‌ட்டும். அப்புற‌ம் ட்ரீட் எப்ப‌"

"இன்னிக்கு ம‌த்தியான‌ம் போயிட்டு வ‌ர்றேன், ராத்திரியே நாம‌ மீட் ப‌ண்ண‌லாமாடா?"

"நீ வேற‌டா.. ஆபிஸ்ல‌ வேலை கொல்லுறானுங்க‌.. போன‌ வார‌மே அம்மாவுக்கு உட‌ம்பு ச‌ரியில்லைன்னு மூணு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போன‌துல‌ வேலை சேந்து போச்சிடா, வ‌ர்ற‌ ச‌னிக்கிழ‌மை கூட‌ வேலை செய்ய‌ணும். என் பொண்டாட்டி தாளிச்சி எடுக்குறா.. ச்சே.. விடு ரெண்டு வார‌ம் க‌ழிச்சி பாக்க‌லாம்டா"

"ஓகே.. நீ வேலைய‌ பாரு ம‌கேஷ்.. உன்னை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நான் சாய‌ங்கால‌ம் கூப்பிடுறேன்.."

குமாரின் லைனை க‌ட் செய்துவிட்டு ஒரு சின்ன‌ புன்ன‌கையுட‌ன், மீண்டும் க‌ம்ப்யூட்ட‌ரில் இருந்த‌ அன்றைய‌ பென்டிங் வேலைக‌ளை பார்க்க‌ ஆர‌ம்பித்த ம‌கேஷ் இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் க‌ழித்து ஃபோனை எடுத்து "ஹ‌னி" என்று இருந்த‌ பெய‌ரை செல‌க்ட் செய்து ப‌ச்சை ப‌ட்ட‌னை அழுத்தினான். ம‌றுமுனையில் "தூது வ‌ருமா தூது வ‌ருமா" என்ற‌ பாட‌லுட‌ன் ரிங் போய் எடுத்த‌வுட‌ன்

"ஹேய் ஹ‌னி"

"ஹேய் என்ன‌ப்பா, வேலை நேர‌த்துல‌ என் ஞாப‌க‌ம் எல்லாம் கூட‌ வ‌ருதா உன‌க்கு" என்றாள் அவ‌ன் த‌ர்ம‌ப‌த்தினி..

"ஒண்ணுமில்ல‌டா, த‌லை கொஞ்ச‌ம் வ‌லிக்குது, இன்னிக்கு ஹாஃப் டே லீவு போட்டுட்டு வீட்டுக்கு வ‌ர்றேன், இன்னும் அரைம‌ணி நேர‌த்துல‌ வீட்டுல‌ இருப்பேன்" என்றான்.

********

Tuesday, October 18, 2011

தேவன் (அதீதம் சிறுகதை 1)

நண்பர்களே,

அதீதம் இதழில் வெளிவந்த என் சிறுகதைகளை என் பதிவில் தொகுக்கும் முயற்சியாக ஒவ்வொன்றாக என் பதிவில் வெளியிடுகிறேன்.

இந்த பதிவில் அதீதம் முதல் இதழில் (ஜனவரி 15 - 31, 2011) வெளிவந்த “தேவன்” சிறுகதை.

நன்றி

********

தேவன் - வெண்பூ வெங்கட்
-------------------------

"உம்பேர் என்ன‌?" உடுத்திக்கொண்டிருந்த‌வளிட‌ம் கேட்டேன்.

"விம‌லா" என்ற‌வ‌ளின் பெய‌ர் வேறு என்ன‌வோ என்று அவ‌ளின் புன்ன‌கை சொன்ன‌து.

"எவ்ளோ?" கேட்டேன், க‌ன‌த்த‌ ப‌ர்ஸை கையில் எடுத்த‌வாறே..

"முத்து சார் சொல்லியிருப்பாரே, ரெண்டாயிர‌ம் ரூபா" என்றாள் செய‌ற்கை சிரிப்புட‌ன்.

ப‌ண‌த்தை எடுத்து நீட்டினேன், ஐநூறு ரூபாய் நோட்டுக‌ள் ப‌த்தாவ‌து இருக்கும் என்று அறிந்த‌வ‌ள், ஆச்ச‌ர்ய‌மும் ஆயாச‌முமாய் என்னைப் பார்த்தாள்.

"இன்னொரு த‌ட‌வை வேணுமா?" என்றாள்."இல்லை, நீ கிள‌ம்பு.." என்றேன், அவ‌ள் க‌ண்க‌ளைப் பார்த்த‌வாறு. முக‌ம் நிறைந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் அவள் கிள‌ம்பிச் சென்ற‌வுட‌ன், எழுந்து சென்று க‌த‌வை தாளிட்டுவிட்டு வ‌ந்து ப‌டுக்கையில் சாய்ந்தேன். 'உன்னை ப‌ழிவாங்கிட்டேன்டி' என்று ச‌த்த‌மாய் க‌த்த‌வேண்டும் போல் இருந்த‌து எனக்கு. இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு முன் அவ‌ள் வாங்கி வ‌ந்திருந்த‌ பிரியாணி பாதி சாப்பிட‌ப்ப‌டாம‌ல் டேபிள் மேல் இருந்த‌து. சாப்பிட‌த் தோன்றாம‌லும், தூக்கி எறிய‌த் தோன்றாம‌லும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'எப்ப‌டி சாவ‌து?' இதுதான் என் முன்னால் இருந்த‌ மிக‌ப்பெரிய‌ கேள்வி.


தூக்குப் போட‌லாம், விஷ‌ம் சாப்பிட‌லாம் இது இர‌ண்டும்தான் பெரிய‌ அள‌வில் முய‌ற்சிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வேற‌ எதாவ‌து வித்தியாச‌மாய்? என் உட‌ல்கூட‌ அவ‌ள் கையில் கிடைக்க‌க்கூடாது. ர‌யில் முன் பாய‌லாமா? வேறு என்ன செய்ய‌லாம், ரூமிற்கு உள்ளேயா, இல்ல‌ வெளியே ப‌ல‌ர் பார்க்க‌ செய்வ‌தா? என்ன‌ கொடுமை இது? ஏன் இவ்வ‌ள‌வு குழ‌ப்பம்.!

"ம‌ரண‌தேவா! என்ன‌ சொல்ற‌ நீ.?" என்று க‌த்தினேன்.

க‌ண்ணை மூட‌ எத்த‌னிக்கும்போது, க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.

திற‌ந்தேன். ஒரு சிறுவ‌ன், ப‌த்து வ‌ய‌து இருக்க‌லாம், முக‌ம் கொள்ளா சிரிப்புட‌ன் நின்றிருந்தான்.

"யார் வேணும்?" என்றேன்

"நீங்க‌தான்"

"ரூம் மாறி வ‌ந்திருப்ப‌, யார் நீ?"

"நான்தான் ம‌ர‌ண‌தேவ‌ன், கூப்பிட்டீங்க‌ளே?" என்றான்.

"ச்சீ.. ப்போ, வெளையாடாத‌" என்று க‌த‌வை சாத்திவிட்டு வ‌ந்து க‌ட்டிலில் சாய்ந்தேன். கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌த்தான் க‌த்திவிட்டேன் போல‌. வெளியில் இருக்கும் அந்த‌ பைய‌னுக்கு கேட்டிருக்கிற‌து. நாளை காவ‌ல்துறையிட‌மும், ஊட‌க‌ங்க‌ளிட‌மும் "அவ‌ர் அப்ப‌டி ச‌த்த‌ம் போட்ட‌வே என‌க்கு மைல்டா ட‌வுட் ஆச்சி சார்" என்று அவ‌ன் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியை ம‌ன‌திற்குள் ஓட்டிப் பார்த்து புன்ன‌கைத்துக் கொண்டேன்.

மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. அவ‌னேதான். எழ‌க்கூட‌ தோன்றாம‌ல் அப்ப‌டியே சாய்ந்து ப‌டுத்த‌வாறே க‌ண்க‌ளை மூடிக்கொண்டு அந்த‌ ச‌த்த‌த்தை உதாசீன‌ப்ப‌டுத்த‌ முய‌ன்றேன். க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் அதிக‌மாகிக் கொண்டே போன‌து, க‌த‌வு உடைந்து விடுவ‌தைப் போன்று அதிர‌ ஆர‌ம்பித்த‌து.

சென்று க‌த‌வை திற‌ந்தேன். அதே சிறுவ‌ன், அதே சிரிப்புட‌ன். கொஞ்ச‌ம் கூட‌ அந்த‌ சிறுவ‌னின் செய்கை என‌க்கு எரிச்ச‌ல் ஊட்டாத‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்த‌து. அந்த‌ க‌ட்ட‌ங்க‌ளை எல்லாம் தாண்டி விட்டேனோ?

"லூசாடா நீ, ஏன் க‌த‌வை ஒடைக்கிற‌?" என்று மெதுவான‌ குர‌லில் கேட்டேன்.

"நீங்க‌தானே என்னை கூப்பிட்டிங்க‌, இப்ப‌ வ‌ந்திருக்கேன், க‌த‌வை மூடிகிட்டா எப்ப‌டி?" என்றான்.

குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சுற்றுப்புற‌த்தில் ஏதோ வித்தியாச‌மாக‌ தோன்ற‌ சுற்றிப் பார்த்தேன். அறை இருந்த‌ விடுதியின் ஐந்தாவ‌து மாடியில் ந‌ட‌ந்து (அ) நின்று கொண்டிருந்த‌ யாரும் என் அறையைப் பார்த்துக் கொண்டிருக்க‌வில்லை. அவ‌ன் க‌த‌வைத் த‌ட்டிய‌ ச‌த்த‌த்திற்கு இந்நேர‌ம் விடுதி உரிமையாள‌ரே வ‌ந்திருக்க‌ வேண்டும். ஆனால் யாரும் க‌வ‌னிக்க‌வில்லையே.. ஏன்?

"அவ‌ங்க‌ளுக்கு எல்லாம் நான் தெரிய‌ மாட்டேன், நான் பேசுற‌தும், க‌த‌வு த‌ட்டுற‌தும் உங்க‌ளுக்கு ம‌ட்டும்தான் கேக்கும். ஏன்னா நீங்க‌தானே என்னைக் கூப்பிட்டிங்க‌" என்றான் என் ம‌ன‌தைப் ப‌டித்த‌வ‌னாக‌.

அதிர்ச்சியில் ப‌டாரென்று க‌தவை மூடி தாழிட்டு அந்த‌ க‌த‌வின் மீதே சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என் இத‌ய‌ம் அடித்துக் கொள்ளும் ச‌த்த‌ம் என‌க்கே கேட்ட‌து. ஒரே விநாடியில் மீண்டும் விய‌ர்த்து வியர்வை என் வெற்றுட‌ம்பில் பாம்பாய் ஊறிய‌து. சுவாச‌ம் பெருமூச்சாய் இய‌ங்கிக் கொண்டிருந்த‌து.

என்ன‌ ந‌ட‌க்கிற‌து இங்கே? அவ‌ன் சொல்வ‌து உண்மையா, இல்லை என்னை குழ‌ப்ப‌ யாரோ திட்ட‌மிட்டு வேலை செய்கிறார்க‌ளா? ஏன் என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கிற‌து? கேள்விக‌ள், கேள்விக‌ள், கேள்விக‌ள்..

மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இம்முறை ச‌த்த‌ம் அறையின் உள்ளிருந்து கேட்ட‌து. ப‌ய‌த்துட‌ன் திரும்பினேன். குளிய‌ல‌றைக் க‌த‌வில் இருந்து ச‌த்த‌ம் வ‌ந்த‌து. ந‌க‌ர‌ ம‌றுத்த‌ கால்களை மிக‌ பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு ஒவ்வொரு அடியாக‌ எடுத்து வைத்து ந‌டுங்கும் க‌ர‌ங்க‌ளால் குளிய‌ல‌றையைத் திற‌ந்தேன். அவ‌னேதான் நின்றிருந்தான்.

"எப்ப‌டி சாகுற‌துன்னு குழ‌ப்பமா, வா, நான் உன்னை க‌ட்டி புடிச்சிக்குறேன், நீ செத்துடுவ‌" என்று கைக‌ளை நீட்டினான்.

அடுத்த‌ வினாடி, என் மூளை ச‌ட‌ ச‌ட‌வென‌ க‌ட்ட‌ளைக‌ள் பிற‌ப்பிக்க‌ திரும்பி அறைக்க‌த‌வுக்கு ஓடினேன். தாழ்ப்பாளை நீக்கி க‌த‌வைத் திற‌ந்து வெளியே பாய்ந்த‌வ‌ன், அப்படியே உறைந்து நின்றேன். அறைக்கு எதிரில் தூணில் சாய்ந்தவாறே அவ‌ன்தான்.

ஓட‌ ஆர‌ம்பித்தேன். அதோ எதிரில் அறைக‌ளுக்கு முன்னால் இருந்த‌ மாடி வ‌ராண்டா திரும்பும் இட‌த்தில் அவ‌ன். ச‌ட்டென்று முடிவெடுத்து இட‌துபுற‌ம் திரும்பி ப‌டிக்க‌ட்டுக‌ளை நோக்கி தாவினேன். கீழ் செல்லும் ப‌டிக்க‌ட்டில் அவ‌ன் நின்று கைக‌ளை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். மேலேறும் ப‌டிக‌ளில் ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஆறாவ‌து மாடி தாண்டி ஏழாவ‌து மாடிக்கு செல்லும் ப‌டிக‌ளில், ப‌டிக்க‌ட்டுக‌ள் 180 டிகிரி திரும்பும் இட‌த்தில் அவ‌ன்.

இம்முறை அவ‌ன் ஓர‌மாக‌ நின்றிருக்க‌ கிடைத்த‌ ச‌ந்தில் புகுந்து மேலே ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஏழு மாடிக‌ளைத் தாண்டி மேலே மொட்டை மாடிக்கு வ‌ந்தேன். இத‌ற்கு மேலும் அறைக‌ளைக் க‌ட்டுகிறார்க‌ள் போலும். செங்க‌ற்க‌ள், ச‌ர‌ளை, ம‌ண‌ல், க‌ம்பிக‌ள் என்று மாடி முழுதும் இறைந்து கிட‌ந்த‌ன‌. என் உட‌லில் விய‌ர்வை ஆறாய் ஊற்றிக் கொண்டிருந்த‌து. என் தாடையில் இருந்து நான்கைந்து சொட்டுக‌ள் கீழே ம‌ண‌லில் விழுந்த‌ன‌. பின்னால் தொண்டையை க‌னைக்கும் குர‌ல் கேட்ட‌து.

திரும்பிப் பார்க்க‌ திராணிய‌ற்று ஓட‌ ஆர‌ம்பித்தேன். எங்கே செல்வ‌து, எதாவ‌து வ‌ழி கிடைக்காதா என்று இட‌மும் வ‌ல‌மும் தேடிய‌வாறு ஓடிக்கொண்டிருந்தேன். காலில் எதுவோ த‌ட்ட‌, த‌டுமாறி விழுந்த‌வ‌ன் சுதாரிப்ப‌த‌ற்குள் வ‌ந்த‌ வேக‌த்தில் தேய்த்துக் கொண்டு மாடியின் விளிம்பிற்கு வெளியே உருண்டேன்.

எழுப‌த்தைந்து அடிக்கு கீழே சாலையில் நின்றுகொண்டிருந்த‌ ப‌ச்சை நிற‌ நீள‌மான காரின் மைய‌ப்ப‌குதியை குறிவைத்து புவிஈர்ப்பு என்னை இழுத்துக் கொண்டிருந்த‌து. சிரிக்க‌ ஆர‌ம்பித்தேன் "டேய், உன்கிட்ட‌ இருந்து த‌ப்பிச்சிட்டேன்டா" என்று சொல்ல‌ நினைத்தேன். தூர‌ம் குறைய‌ குறைய‌ முக‌த்தில் அடித்த‌ காற்றின் வேக‌த்தால் க‌ண்க‌ளில் நீர் நிறைய‌ ஆர‌ம்பித்த‌து. அந்த‌ நிலையிலும் அந்த‌ காரின் மேல் எதுவோ இருப்ப‌துபோல் தோன்ற‌ உற்றுப் பார்த்தேன். அவன்தான்.. முக‌ம் நிறைய‌ புன்ன‌கையுட‌ன் கைக‌ளை விரித்துக் கொண்டு மேல்நோக்கி பார்த்த‌வாறு என்னை ஆர‌த்த‌ழுவ‌ காத்திருந்தான்.

****

நன்றி: அதீதம் இதழ்

Thursday, April 7, 2011

இது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌ :(

இந்த‌ ப‌திவின் த‌லைப்பு நிச்ச‌ய‌மாய் உங்க‌ளை க‌வ‌ர்ந்து இழுப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டுமே வைக்க‌ப்ப‌ட்ட‌ தலைப்பு அல்ல‌. அதே போல் இந்த‌ முக‌மூடிக‌ள் பெய‌ர்க‌ளில் எழுதுவ‌து நான் அல்ல‌ என்று அறிவிக்க‌ எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவும் அல்ல‌ இது.

சில‌ நாட்க‌ளாக‌ ஏன் சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ ப‌திவுல‌கில் மறைக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு விச‌ய‌ம் குறித்து பேச‌ ம‌ட்டுமே இந்த‌ ப‌திவு.

இதை வேறொரு முக‌மூடி அணிந்து அனானி பெய‌ரில் எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு என்றும் இருந்த‌தில்லை. என்னை ந‌ன்க‌றிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், ச‌ரியென்றால் உட‌ன‌டியாக‌ வெளிப்ப‌டையாக‌ பாராட்ட‌வும், த‌வ‌றென்றால் முக‌த்திற்கு நேராக‌ சொல்ல‌வும் கூடிய‌ ஆண்மை என‌க்கு உண்டு. அத‌னாலாயே இந்த‌ ப‌திவை என் ப‌திவிலேயே எழுதுகிறேன்.

மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நான் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்து இந்த‌ ப‌திவுல‌கில் என் அலைவ‌ரிசையுட‌ன் ஒத்துப்போன‌ சில‌ருட‌ன் நான் நெருக்க‌மாக‌ ப‌ழக‌ ஆர‌ம்பித்தேன். ப‌ரிச‌ல், அப்துல்லா, கார்க்கி, கேபிள், ஆதி (அப்போது தாமிரா) போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இய‌ல்பாக‌வே நெருங்க முடிந்த‌து. இந்த‌ குழுவுட‌ன் எந்த‌ பிர‌ச்சினைக‌ள் குறித்தும் வெளிப்ப‌டையாக‌ பேசிக் கொள்ள‌, உத‌விக‌ள் கேட்டுப் பெற‌ முடிந்த‌து.

அந்த‌ சூழ்நிலையில் எங்க‌ளுக்கு அறிமுக‌ம் ஆன‌வ‌ர்தான் அந்த‌ குறிப்பிட்ட‌ ப‌திவ‌ர். "எதாச்சும் செய்ய‌ணும் பாஸ்" என்று இற‌ங்கிய‌வ‌ர் என்னுட‌ன் நெருக்க‌மாக‌ ப‌ழ‌க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ரின் ட‌வுன் டூ எர்த் ம‌ன‌ப்பான்மை பிடிந்திருந்த‌து. அவ‌ரின் பின்புல‌ம் குறித்து தெரிய‌வ‌ந்த‌போது "அட‌ இவ‌ரெல்லாம் ந‌ம்ம‌ கூட‌ எல்லாம் எப்ப‌டி ப‌ழ‌குறாரே?" என்று ஆச்ச‌ர்ய‌ம் அடைந்தேன்.

ஐ ஐ எம் அக‌ம‌தாபாத்தில் எம் பி ஏ.. ஒரு பெரிய‌ அமெரிக்க‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட்..

இர‌ண்டுமே என் க‌ன‌வு என‌லாம். ஒரு சாதார‌ண‌ குடும்ப‌த்தில் பிற‌ந்து டிப்ள‌மோ ப‌டித்து சிறிய‌ வேலைக்கு போய் மேல்ப‌டிப்பையே க‌ர‌ஸ்ஸில் செய்த‌ என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ஐ ஐ எம் என்ப‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ க‌ன‌வு என்ப‌து உங்க‌ளுக்கு புரியும். இப்போதும் எதாவ‌து ஒரு சிறிய‌ இடைவெளி (+ ப‌ண‌ம் ) கிடைத்தால் அங்கே எக்சிக்யூடிவ் ப்ரோக்ராம் ப‌டிக்க‌ வேண்டும் என்ப‌து என் ஆசை. அதேபோல் ஒரு எம் என் சியில் வைஸ் பிர‌சிட‌ன்ட் என்ப‌தும் என் கேரிய‌ர் க‌ன‌வு.
இர‌ண்டையும் ஒருங்கே சாதித்த‌ ஒருவ‌ரை நான் அண்ணாந்து பார்த்து பிர‌மித்த‌தில் விய‌ப்பேதும் இல்லை.

பீரிய‌ட்...

அவ‌ரைப் பார்த்து பிர‌மித்த‌ இன்னொரு விச‌ய‌ம் அவ‌ர‌து உத‌வி செய்யும் ம‌ன‌ம்.

1. சென்னையைச் சேர்ந்த‌ ப‌திவ‌ர் மிக‌ அதிக‌ ப‌ண‌த்தேவையில் இருந்த‌ போது அவ‌ருக்காக‌ இவ‌ர் சில‌ ல‌ட்ச‌ங்க‌ளில் கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார் (அத‌ற்கு நானும் ஒரு சிறு அள‌வு ப‌ண‌ம் கொடுத்திருக்கிறேன்). அந்த‌ ப‌திவ‌ர் பிர‌ச்சினையில் இருந்து மீண்டு வ‌ர‌ இவ‌ர‌து ப‌ண‌ உத‌வி முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌தாக‌ இவ‌ரே என்னிட‌ம் சொல்லியிருக்கிறார்

2. ஒரு வெளிநாட்டு ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ ப‌ண‌ம் திர‌ட்டிய‌தில் இவ‌ர‌து ப‌ங்கு முக்கிய‌மான‌து. மிக‌ப்பெரிய‌ ப‌ண‌த்தை ஆளுக்கு கொஞ்ச‌ம் என்று கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுக்க‌லாம் என்ற‌ ஐடியா நிறைய‌ பேரை ப‌ங்கெடுக்க‌ வைத்த‌து க‌ண்கூடு. இவ‌ரே சில‌ரிட‌ம் ப‌ண‌ம் திர‌ட்டி அனுப்பிய‌தும் தெரிந்த‌தே.

3. ம‌ற்றொரு சென்னை ப‌திவ‌ரின் குழ‌ந்தை உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ போது, இவ‌ர் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்துவிட்டு வ‌ந்த‌தாக‌ என்னிட‌ம் சொல்லியிருக்கிறார். என்னால் நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாத‌ உத‌வி இது.

4. ஒரு சென்னை ப‌திவ‌ரின் த‌ந்தையார் இற‌ந்த‌ போதும், இதே போல் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார்.

பீரிய‌ட்...

சென்ற‌ வ‌ருட‌ம் ஒரு பெண்ப‌திவருட‌ன் அவ‌ருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌க்க‌ச‌ப்பு நிக‌ழ்வுக‌ள் ப‌திவுல‌கில் யாரும் ம‌றுக்க‌வோ ம‌றைக்க‌வோ முடியாத‌ விச‌ய‌ம். அந்த‌ நிக‌ழ்வில் நிச்ச‌ய‌ம் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ நாங்க‌ள் அவ‌ர் பின் நின்றிருக்கிறோம். அவ‌ருக்கு ஆத‌ரவாக‌ எங்கும் நான் பேச‌வில்லை என்ப‌தைப் போல‌வே அவ‌ரை எதிர்த்தும் எங்கும் பேசிய‌தில்லை.

அவ‌ர் மீது என‌க்கிருந்த‌ பிர‌மிப்பு + ம‌ரியாதையே அத‌ற்கு கார‌ண‌ம்

*****************

க‌ட‌ந்த‌ செப்ட‌ம்ப‌ரில் ஒருநாள் அவ‌ர் என்னிட‌ம் வ‌ந்தார். "எங்க‌ கார் க‌ம்பெனியே ஒரு கார் ரென்ட‌ல் க‌ம்பெனி ஆர‌ம்பிக்குது. நான் அங்க‌யே பெரிய‌ வேலையில‌ இருக்குற‌தால‌ என்னால‌ ஈஸியா ஃப்ரான்ச்சைஸ் வாங்க‌ முடிஞ்ச‌து. நீங்க‌ளும் கொஞ்ச‌ம் இன்வெஸ்ட் ப‌ண்ணுங்க‌" என்றார். இவ‌ர் மீதிருந்த‌ ந‌ம்பிக்கையில் என் ம‌னைவியின் பெய‌ரிலிருந்த‌ சில‌ முத‌லீடுக‌ளை எடுத்து இவ‌ரிட‌ம் கொடுத்தேன்.

அதற்கான‌ அக்ரீமென்ட் கொடுத்தார். ப‌டித்துக்கூட‌ பார்க்காம‌ல் கையெழுத்திட்டு அனுப்பினேன். பின்ன‌ர் அத‌ன் காப்பி மெயிலில் வ‌ந்த‌போதுதான் விப‌ரீத‌ம் புரிந்த‌து. அந்த‌ அக்ரீமென்ட் முழுக்க‌ முழுக்க‌ அவ‌ர‌து க‌ம்பெனிக்கு சாத‌கமாக‌வே என் த‌ர‌ப்பில் மிக‌ மிக‌ ப‌ல‌வீன‌மாக‌ இருந்த‌து. அதிர்ச்சியில் கேட்ட‌வுட‌ன் "அது வென்டாருங்க‌ளுக்கான‌து, உங்க‌ளுக்கு த‌ப்பா அனுப்பிட்டேன்" என்று ம‌றுப‌டியும் வேறொரு அக்ரீமென்ட்டை கொடுத்தார். அதை ப‌டித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட்டு அனுப்பினேன்.

அத‌ன் பின்ன‌ர்தான் என‌க்கு ச‌னி ஆர‌ம்பித்த‌து. ஒவ்வொரு மாத‌மும் என‌க்கு ஸ்டேட்மென்ட்டும் ப‌ண‌மும் முத‌ல் இர‌ண்டு வார‌ங்க‌ளில் வ‌ரும் என்று கூறிய‌வ‌ர், இழுத்த‌டிக்க‌ ஆர‌ம்பித்தார். ஒவ்வொரு மாத‌மும் முந்தைய‌ மாத‌ ஸ்டேட்மென்ட் வ‌ருவ‌தே க‌டைசி வார‌த்தில்தான் என்றான‌து.

இத‌ற்கிடையில் அவ‌ரைப் ப‌ற்றின‌ ம‌ற்ற‌ உண்மைக‌ள் தெரிய‌ வ‌ந்த‌ன‌. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய‌து

1. அவ‌ர் ஐ ஐ எம் ல் ப‌டித்த‌வ‌ர் அல்ல‌. த‌மிழ்நாட்டில் எதோ ஒரு அஆஇஈ க‌ல்லூரியில் எதோ ஒரு டிகிரி ப‌டித்த‌வ‌ர்(இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)
2. அவ‌ர் சொன்ன‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட் அல்ல‌. எதோ ஒரு கார் வாட‌கை நிறுவ‌ன‌த்தில் மேலாள‌ர் ம‌ட்டுமே (இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)
3. ப‌திவ‌ர் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ இவ‌ரால் திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பண‌ம் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ அனுப்ப‌ப்ப‌ட‌வே இல்லை
4. ப‌திவ‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ சூழ‌லில் அவ‌ர்க‌ளிட‌ம் டெபிட் கார்டு கொடுத்த‌தாக‌ இவ‌ர் சொன்ன‌து பொய். இவ‌ர் மேலோட்ட‌மாக‌ கேட்க‌ அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று ம‌றுத்திருக்கிறார்க‌ள்.

அவ‌ர் எங்கு ப‌டித்தால் என்ன‌, எங்கு வேலை செய்தால் உன‌க்கென்ன‌ என்று எதிர்கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ ப‌த்தி. அவ‌ர் யார் என்ன‌ என்று எதைப்ப‌ற்றியும் என‌க்கு க‌வ‌லை இல்லை. எங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திலேயே மிக‌ உய‌ர்ந்த‌ பொறுப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள், வெற்றிக்கான‌ வாச‌லைத் தேடி போராடிக் கொண்டிருக்கிற‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். ஆனால் ந‌ட்பின் அடிப்ப‌டை ந‌ம்பிக்கை. அது பொய் சொல்வ‌தால் வ‌ர‌ப்போவ‌தில்லை. இந்த‌ ப‌திவு அவ‌ரை அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ அல்ல‌, அவ‌ர் சொன்ன‌ பொய்க‌ளால் அம்ம‌ண‌ப்ப‌ட்டு நிற்கும் அவ‌ர் மீதான‌ என் ந‌ட்பிற்கு ஒரு கோவ‌ண‌ம் க‌ட்டும் முய‌ற்சி அவ்வ‌ள‌வே.

ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ செல‌விற்காக‌ திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌ம் குறித்து ஏற்க‌ன‌வே ஜோச‌ப் விள‌க்கி விட்டார். அவ‌ர் அந்த‌ ப‌ண‌த்தை அனுப்பிய‌த‌ற்குக் கார‌ண‌மே உண்மைக‌ள் சுடும் என்ற‌ அனானி அவ‌ருக்கு அனுப்பிய‌ மெயில்தான். யார் அந்த‌ உண்மைக‌ள் சுடும் என்று தெரிய‌வில்லை, ஆனால் அந்த‌ அனானி "ப‌ண‌ம் ஏன் அனுப்பாம‌ வெச்சிட்டு இருக்கீங்க‌" என்ற‌ ரீதியில் அவ‌ருக்கு மெயில் அனுப்பிய‌தும்தான் இவ‌ர் அதை அனுப்ப‌ முய‌ற்சி எடுத்தார் என்ப‌தே உண்மை.

இந்த‌ பிர‌ச்சினை ஓடிக்கொண்டிருந்த‌போது, என‌க்கு இவ‌ரைப் ப‌ற்றிய‌ உண்மைக‌ள் தெரியாது. நான் இவ‌ரிட‌ம் "நீங்க‌தான் ஏற்க‌ன‌வே ஸ்டேட்மென்ட் ப‌ண‌ம் எல்லாம் அனுப்பிட்டீங்க‌ளே?" என்று கேட்க‌ "இல்ல‌ ஜோச‌ப்தான் ப‌ண‌ம் என்கிட்ட‌யே இருக்க‌ட்டும், அப்புற‌ம் அனுப்புங்க‌ன்னு சொன்னாரு" என்றார். ஆனால் பின்னால் பிர‌ச்சினை பெரிதாகி ஜோச‌ப் விள‌க்க‌ம் கொடுத்த‌து இவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌த‌ற்கு எதிராக‌ இருந்த‌துதான் இவ‌ர்மீது என‌க்கு விழுந்த‌ முக்கிய‌ ச‌ந்தேக‌ப்புள்ளி.

இது குறித்து பேசிக் கொண்டிருந்த‌ போது ஒரு முறை "என்னோட‌ ப்ளாக் பேரை வெச்சி என்னோட‌ உண்மையான‌ பேரு ந‌ர‌சிம்ம‌ன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க‌, என் பேர் அதில்லை, வேற‌" என்றார். அதிர்ந்தேன். மூன்று வ‌ருட‌ம் நெருங்கிய‌ ந‌ட்புட‌ன் இருக்கும் ஒருவ‌னிட‌ம், பிர‌ச்சினைக‌ளின் போது த‌ன் பின் நிற்கும் ஒருவ‌னிட‌ம், ம‌ற்ற‌வ‌ருக்கு உத‌வ‌ ப‌ண‌ம் வாங்கும் ஒருவ‌னிட‌ம், த‌ன் புதிய‌ பிசின‌ஸில் முத‌லீடு செய்யும் அள‌வுக்கு ந‌ம்பிக்கை இருக்கும் ஒருவ‌னிட‌ம் எப்ப‌டி த‌ன் பெய‌ரைக்கூட‌ சொல்லாம‌ல் ம‌றைக்க‌ முடியும்? எந்த‌ அள‌வு அழுத்த‌ம் வேண்டும்?

**********

இது எல்லாம் தெரிந்த‌ பின், நான் அவ‌ரிட‌ம் பிசின‌ஸில் இருந்து வெளிவ‌ந்துவிடுவ‌தாக‌ சொல்ல‌, ஒப்புக் கொண்டார். நிச்சய‌ம் என்னைப் பொறுத்த‌வ‌ரை அது ஒரு ந‌ல்ல‌ முத‌லீடே, மிக‌ச் சிற‌ந்த‌ ரிட‌ன்ஸ் கொடுத்த‌து. ஆனால் என்னை ந‌ம்பி த‌ன் பெய‌ரைக் கூட‌ சொல்லாத‌, த‌ன் பெய‌ரை பெரிதாக்கிக் காட்ட வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் ஒருவ‌ரால் என‌க்கு கோடி ரூபாய் வ‌ருமென்றாலும் என‌க்கு அது தேவை இல்லை.

ஒரு வார‌ம் டைம் கேட்டு, இப்போது மூன்று வார‌ங்க‌ள் க‌ழித்து என‌க்கு ப‌ண‌ம் கிடைத்துவிட்ட‌து. இனி இவ‌ர் தொட‌ர்பான‌ ம‌ன‌ உளைச்ச‌ல் குறையுமென்றாலும், ந‌ண்ப‌ர்க‌ளை தேர்வு செய்வ‌தில் நான் ம‌ற்றொரு முறை தோற்று விட்ட‌தின் வ‌லி நான் சாகும் வ‌ரை இருக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை.

**********

இந்த‌ ப‌திவு வெளிவ‌ந்த‌தும் என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் என்ன‌ சொல்வார் என்ப‌தும் என‌க்கு தெரியும். அவ‌ரிட‌ம் அதைக் கேட்ப‌வ‌ர்க‌ள் என‌க்கு தொலைபேச‌வும், அட்ச‌ர‌ம் பிச‌காம‌ல் வ‌ரிக்கு வ‌ரி அவ‌ர் என்ன‌ சொன்னார் என்ப‌தை நான் சொல்கிறேன். என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் சொல்ல‌ப்போகும் பொய்க‌ள் குறித்து என‌க்கு கிஞ்சிந்தும் க‌வ‌லை இல்லை.

இத‌ற்கெல்லாம் அவ‌ர் சொல்ல‌க்கூடிய‌ எந்த‌ விள‌க்க‌மும் என‌க்குத் தேவை இல்லை. இங்கே நான் சொன்ன‌வை அவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌ பொய்க‌ளில் ஒரு சிறு துளி அள‌வே. இன்னும் நான் எழுதாம‌ல் விட்ட‌ ம‌லைய‌ள‌வு பொய்க‌ளை அவ‌ர் என்னிட‌ம் கூறியிருக்கிறார் (அடிக்க‌டி அவ‌ர் சொல்லும் "ம‌றைமலை ந‌க‌ர் ஃபேக்ட‌ரியில‌ இருக்கேன்" என்ப‌து. ரென்ட‌ல் க‌ம்பெனி மேனேஜ‌ருக்கு கார் உற்ப‌த்தி செய்யும் ஃபேக்ட‌ரியில் என்ன‌ வேலை என்ப‌து என் சிற்ற‌றிவுக்கு எட்ட‌வில்லை). என்னைப் போல‌வே அவ‌ருட‌ன் நெருங்கி இருந்த‌ ப‌ல‌ரும் அவ‌ரால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு உள்ளாகி உள்ள‌ன‌ர் என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து. அத‌னால், நான் சொல்ல‌ வ‌ரும் முன்னெச்ச‌ரிக்கை ஒன்றே ஒன்றுதான்.

ப‌திவுல‌கில் யார் ஒருவ‌ர் சொல்வ‌தை வைத்தும், அவ‌ர்க‌ளைப் பற்றிய‌ பிம்ப‌த்தை க‌ட்ட‌மைத்துக் கொள்ள‌வேண்டாம். குறைந்த‌து அப்ப‌டி க‌ட்டமைக்க‌ப்ப‌டும் பிம்ப‌த்தை ந‌ம்பி ப‌ண‌மாவ‌து கொடுக்காம‌ல் இருப்ப‌து ந‌ல‌ம்..

Monday, January 10, 2011

திருவிழாவில் தொலைந்து போன கதை

காட்சி 1:
”ஹலோ பாஸ், சொல்லுங்க”

“எப்ப வர்றீங்க நீங்க? சொல்லுங்க மீட் பண்ணலாம்”

காட்சி 2:
”சகா, ஒரு விசயம் பேசணும்”

“அங்க வருவீங்கள்ல, மீட் பண்ணி பேசலாம்”

காட்சி 3:
”ஹலோ, பிசியா?”

“ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா அங்கதான் போயிட்டு இருக்கேன், நீங்க எப்ப வர்றீங்க?”

******

இதற்கு மேலும் புத்தகக் கண்காட்சிக்கு (தப்பு.. தப்பு) திருவிழாவிற்கு போகவில்லை என்றால் பாரா, பத்ரி தலைமையில் பிரபல பதிவர்கள் ஒன்று கூடி ”பதிவர்கள் என்னுடன் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்று தீர்ப்பு எழுதிவிடுவார்களோ என்ற பயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 2011) குடும்பத்துடன் போவதற்கு திட்டம் தீட்டினேன்.

ஞாயித்துக்கிழமை கூட கொஞ்சநேரம் சேத்தி தூங்க விட மாட்டீங்களே என்று தங்கமணி திட்டிக்கொண்டே எட்டரை மணிக்கு எழுந்து கிளம்பத் துவங்கினார். கண்காட்சியின் துவக்க நேரத்தை 8 மணிக்கு வைக்காமல் 11 மணிக்கு வைத்தவர் கிடைத்தால் பூசை அறையில் அவர் படத்தை மாட்டி வழிபடுவார் போல தெரிந்தது. நல்லவேளை, அந்த புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை.

பதினொன்றரை மணிக்கு உள்ளே நுழையும் போதே கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பெரும்பாலும் தனியர்களும் ஒரு சில குடும்பஸ்தர்களையும் பார்க்க முடிந்தது. மதிய உணவுக்கு பிறகே கண்காட்சி களைகட்டும் என்று நான் போட்ட கணக்கு தப்பவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது (பின்ன கணக்குல பத்தாவதுல செண்டம் வாங்குனவங்கல்ல நாங்க எல்லாம்)

சென்ற ஆண்டு 5 ரூபாய் இருந்த பார்க்கிங் இந்த ஆண்டு 20 ரூபாய், என்ன கொடுமை இது என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே பார்க்கிங் டிக்கெட்டை வாங்கினேன், ’போன தடவை பைக், இந்த முறை கார், அப்புறம் எதுக்கு அவங்களை திட்டுற’ என்று உள்மனசு எச்சரித்தாலும் ஆற்றாமையாகத்தான் இருந்தது. :)

உள்ளே நுழைவதற்கு முன்னரே வலது புறம் இருந்த ஃப்ரூட் சாலட், ட்ரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸ், வறுகடலை பாக்கெட்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். நுழைவுச் சீட்டு வழக்கம்போல் ஐந்து ரூபாய். அதில் இருந்த பரிசுக் கூப்பனை கூட்டமாக நின்று எழுதிக் கொண்டிருந்தார்கள். என் அதிர்ஷ்டத்தின் மீது இருந்த அலாதி நம்பிக்கையால், அவர்கள் எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பரிசு பெறுபவர் எனக்கு நன்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்.

உள்ளே சென்றதும் ஏற்பட்ட மன உணர்வை விவரிக்க இயலவில்லை. ஒரு மிட்டாய் கடையுனுள் நுழையும் சிறுவனைப் போல எந்த பக்கம் போவது, எதை வாங்குவது என்று வழக்கம் போலவே குழம்பினேன். பிறகு முடிவெடுத்து வலது பக்க கடைசி வரிசைக்கு சென்று பார்க்க ஆரம்பித்தோம்.

ஜூனியருக்கான கதை, கலரிங், ட்ராயிங் புத்தகங்களை தங்கமணி தேடத் தொடங்கி இருந்தார். நான் நண்பர்களுக்கு அலைபேச ஆரம்பித்தேன். “வந்துட்டீங்களா சகா, இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்” என்றார் ஒருவர். “இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவேன். நான் நேத்தே பார்க்கிங் ரொம்ப கஷ்டப்பட்டேன், இடமே இருக்க மாட்டேங்குது, ஏதாச்சும் செய்யணும் பாஸ்” என்றார் அடுத்தவர்.

கடைசியில் அலுவலக நண்பர் ஒருவர் சிக்கினார். தங்கமணி மற்றும் அவர் தம்பியை விட்டுவிட்டு நண்பரும் நானும் ஜூனியரை இழுத்துக் கொண்டு பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களைத் தேடிப் போனோம்.

காலச்சுவடிற்கு சென்றேன். பதிப்பகத்தார் அந்த நேரத்திற்கு பில்லிங் டேபிள் மீது அமர்ந்திருந்த ஈக்களை துரத்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். புத்தக அடுக்குகளில் ஒரு பார்வையை ஓடவிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

உயிர்மையில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. மனுஷ்யபுத்திரன் வாசலிலேயே உட்கார்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த வாசகர்களுக்கு ஆட்டோக்ராஃபிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க ஆசையாய் இருந்தாலும் கவிதைக்கும் எனக்குமான தொலைவு பயமுறுத்தியதால் முயற்சியை கைவிட்டுவிட்டு நண்பர் நர்சிம்மின் ”தீக்கடல்” வாங்கினேன் (யாருப்பா அது, அந்த புக்கும் கவிதைதான்னு சொல்றது?). பலநாட்களாக வாங்க நினைத்த கிரா, காழியூரானின் “மறைவாய் சொன்ன கதைகள்” புத்தகத்தையும் வாங்கினேன்.

நண்பர் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுஜாதாவை மட்டுமே வாங்கினார். வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.

அடுத்த ஸ்டாப் எங்கே செல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை, கண்காட்சிக்கு வந்து விட்டு “வரலாற்றுச் சுவடுகள்” வாங்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்தி இருந்ததால் இரண்டாம் எண் ஸ்டாலுக்கு விரைந்தேன். தினந்தந்தியின் ஸ்டால், உள்ளே ஒரே ஒரு புத்தக விற்பனை மட்டுமே, ஆனாலும் அந்த கண்காட்சி ஆரம்ப நேரத்திலும் ஐந்து பேராவது நின்றிந்தார்கள். ஆறாவது மற்றும் ஏழாவதாய் நாங்கள் நின்றோம். முந்நூறு ரூபாயே குறைவு என்று எல்லாரும் கூவிவிட்ட இந்த புத்தகம் 10 சதவீத கழிவிற்கு பிறகு 270 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்ன ஒரே பிரச்சினை, சில்லறை இல்லை மற்றும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை. இருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பார்கையில் சந்தேகமே இல்லாமல் இந்த கண்காட்சியின் ”பெஸ்ட் செல்லர்” இதுதான் என்று சொல்ல முடியும்.

கிழக்கை அடைந்தோம். இந்த கண்காட்சியின் மிகப்பெரிய ஸ்டால் இவர்களுடையது. புத்தகங்களை இன்னும் சிறப்பாக அடுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த புத்தகம் எங்கே என்று தேட வேண்டி இருந்தது, அதுவும் அவ்வளவு பெரிய ஸ்டாலில். சொக்கனின் “காந்தி கொலை வழக்கு” வாங்கினேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மிஸ்ஸாகி இருந்ததால், நான் வாங்க உத்தேசித்து இருந்த பாராவின் புத்தகத்தின் பெயர் சட்டென்று நினைவில் வராமல் அங்கே இருந்தவரிடம் “பாராவோட புது புக்கு என்ன வந்திருக்கு” என்றேன். ”மாயவலை” என்றார். “அது போன வருசமே இருந்ததுங்க, வேற” என்றேன். “டாலர் தேசம்” என்றார். “ஸாரிங்க, நானெல்லாம் ரூபாய்ல சம்பாதிக்குறவன்” என்று கூறிவிட்டு நானே தேட முனைந்தேன்.

கிழக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் போல. ஒரு மாதிரி மிரட்சியுடனே நின்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவரும் பாராவின் இரண்டு புத்தகங்கள் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. பதிப்பகம் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்தால் என் தொப்பையைப் பார்த்த உடனே “உணவின் வரலாறு” என்று சரியாக சொல்லியிருப்பார். நானேதான் தேடி எடுத்துக் கொண்டேன். நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். இன்னொரு பெஸ்ட் செல்லரான ”ஆர் எஸ் எஸ்” அவரது பட்டியலில் இருந்ததால் அதையும் அள்ளினார்.

பத்ரி ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல பில்லிங் சிறப்பாக, விரைவாக முடிகிறது. நன்றி. பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். அன்றைய பெஸ்ட் செல்லர் எது என்பது குறித்தாக இருக்கலாம், அவர் முக பாவங்களைப் பார்த்தபோது அநேகமாக பால்கோவாவை லிச்சி ஜூஸ் ஓவர்டேக் செய்துவிட்டது என்று தோன்றியது :)

வெளியில் வந்தால் பதிவர் வெயிலான் வந்திருந்தார். அலுவலக வேலையாக சென்னை வந்தவர் இங்கு வருவதற்காகவே ஒருநாளை ஒதுக்கி இருப்பது தெரிந்தது. பை நிறைய புத்தகங்களுடன் இன்னும் வாங்கவிருப்பதாக சொன்னார். வாழ்க வாசிப்பின் மீதான அவரது ஈடுபாடு.

ஜூனியரை அவரது அம்மாவுடன் கோர்த்துவிட்டு விட்டு விகடன் பிரசுரத்தை தேடினோம். வழியில் புதிய தலைமுறை தென்பட்டது. ஸ்டால் முழுவதும் பெயருக்கேற்றார் போல் இளம் தலைமுறை. எந்த பெண்ணாவது என்னைப் பார்த்து புன்னகைப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதனால் நானும் புறக்கணித்து விகடனுக்கு சென்றேன்.

கட்டெறும்பு சைஸாகிவிட்ட விகடன் ஸ்டால் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சிறு ஸ்டால், அதிலும் ஒரே ஒரு வழி மட்டுமே. மறுவழி அடைக்கப்பட்டிருந்தது. மிகக்குறைவான அளவில் புத்தகங்கள். இந்த வார ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் கூட இருந்த மாதிரி தெரியவில்லை. என்ன ஆனது விகடனுக்கு என்று புரியவில்லை. நண்பருக்கு “வந்தார்கள் வென்றார்கள்” மற்றும் “லிங்கம்” வாங்க ஆலோசனை கூறினேன். இரண்டையும் வாங்கினார்.

விடிய‌ல் ஸ்டால் க‌ண்ணில் ப‌ட்ட‌து. சென்ற‌ முறை வாங்கிய‌ "ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம்" ந‌ன்றாக‌ இருந்த‌தால் இம்முறையும் எதாவ‌து தேறுமா என்று பார்க்க‌ அருகில் சென்றேன். ஆளுய‌ர‌த்திற்கு பெரிய‌ சைஸ் புத்த‌க‌ங்களை அடுக்கி புர‌ட்சி செய்திருந்த‌ன‌ர். வீட்டில் த‌லைய‌ணைக‌ள் தேவை இல்லாத‌தால் எதுவும் வாங்க‌வில்லை.

வெளியே வரும் வழியில் கண்ணதாசனில் “வனவாசம்”, “மனவாசம்” மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன். நண்பர் விடைபெற்றுக் கொண்டு சென்றதும், ஜூனியருக்கு ஃப்ரூட் சாலட் வாங்கி மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சாப்பிட்டோம். முடித்தவுடன் அந்த டப்பாவைப் போட குப்பைக் கூடைகள் எங்குமே இல்லை. ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைக்க ஆவன செய்யலாம்.

அவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போனால் சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று நல்ல எண்ணத்தில் சாப்பிடப்போனோம். வழக்கம்போலவே ஒரு சிறிய இடம். உணவின் சுவையும் தரமும் விலையும் ஓரளவிற்கு இருந்தாலும் அமர்ந்து சாப்பிட இடவசதி அவ்வளவு கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் இது. பரோட்டாவும் சாம்பார் சாதமும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம்.

சில ஆச்சர்யங்களும், ஏமாற்றங்களும்:
1. தங்கமணி ஜூனியருக்கான புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி இருந்தார். இந்த முறையாவது எட்டு புள்ளிக் கோலம், செட்டிநாட்டு அசைவ உணவுகள் செய்முறை இதை எல்லாம் வாங்குவாரா என்று எதிர்பார்த்திருந்தேன். வாங்கவில்லை. சிட்னி ஷெல்ட‌ன், அக‌த்தா கிறிஸ்டி என்று பேசிக் கொண்டிருந்தார். த‌மிழ் எழுத்தாள‌னை ம‌திக்காத‌ த‌மிழ் ச‌மூக‌ம் என்ப‌து புரிந்த‌து.
2. பெரும்பாலான‌ கடைகளில் கார்ட் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் கொண்டு செல்வது நல்லது.
3. சில்லறைத் தட்டுப்பாடு (அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள்) பார்க்கிங் முதற்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கிறது, தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லவும்
4. முதலிலேயே வாங்க வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டு செல்லவும், அதை பத்திரமாக வைத்திருப்பது அதை விட முக்கியம்.
5. கிழக்கு, உயிர்மை போன்ற வெகு சிலரே சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை பதிப்பாளர்கள் சுற்றுச்சூழலை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதால் ப்ளாஸ்டிக் பைகளே அதிகம் தென்படுகிறது. தவிர்க்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு செல்வது நல்லது.

நான் கிளம்பும்வரை பதிவுலக நண்பர்கள் வரவில்லை. இன்னும் ஒருமணிநேரத்துல வந்துடுவேன், அரை மணிநேரத்துல வந்துடுவேன் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த சகா இரண்டு மணிக்கு நான் கிளம்பும் வரை கண்ணில் தென்படவில்லை, தோழியுடன் அப்பாயிண்ட்மெண்ட் போல. :)

இந்த புத்தகக்கண்காட்சியில் கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபல பதிவரும் வரவில்லை. பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்திருப்பார் அல்லது பேனா வாங்க எங்காவது சென்றிருப்பாராய் இருக்கும். :)