Monday, September 21, 2009

உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....

"உங்களோட சீரியஸ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதாகத் தெரியவில்லையே. இது பற்றி?" கொஞ்சம் தைரியம் அதிகமான ஒரு ரிப்போர்ட்டர் கமலிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தார்.

"ஒவ்வொரு சீரியஸ் படம் பண்ணினதும் அடுத்ததாக கமல் ஒரு காமெடி படம் பண்ணுவாரு, அதைப் பாத்துக்கலாம்னு மக்கள் நினைக்குறாங்களோ என்னவோ" என்ற அவரின் பதில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கக் காரணம் அவர் சொன்ன வகை சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதுதான்.

"ஹே ராம்" பார்க்கவில்லை. "காதலா காதலா" பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை. "மகாநதி" கிளிப்பிங் வந்தாலும் சேனல் சேஞ்ச். "அவ்வை சண்முகி" பத்து தடவையாவது பார்த்தாச்சு. இதே ட்ரீட்மெண்ட்தான் கமலின் ஒவ்வொரு சீரியஸ் படங்களும் நான் கொடுத்து வந்திருக்கிறேன்.

"உன்னைப்போல் ஒருவன்" படத்தின் விளம்பரத்தை முதல்முறை பார்த்தபோதே இது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. காரணம் பெரிதாக ஏதுமில்லை என்ற போதும் கமலின் கெட்டப்பும், மோகன்லாலின் வசன உச்சரிப்புகளும் ஈர்த்தன.

அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள். அதிலும் இது அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் இந்த படத்திலும் மோகன்லாலை மட்டம் தட்டியிருப்பார், தன் மகளின் இசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்ப்பார்ப்புடனேயே படம் பார்க்கச் சென்ற என்னை நடு மண்டையில் "நச்"சென்று அடித்திருக்கிறார் கமல்.

படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை.‍ எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.

தெளிவான கதை, அதை முழு வேகத்தில் நகர்த்தும் திரைக்கதை, தனித்துத் தெரியாமல் கதையின் ஓட்டத்திற்கு துணைபுரியும் இசை, அற்புதமான கேமிரா, அந்தந்த கேரக்டர்களில் அச்சாக பொருந்தும் நடிக நடிகைகள், வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கும் இயல்பான வசனங்கள், நிஜம் என்று நம்ப வைக்கும் செட்கள் என்று பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.

படம் பார்த்து இவ்வளவு நேரமாகியும் இது தமிழ்ப்படம், கமல் படம் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ கமல்..

******************

பின்குறிப்பு 1: இவ்வளவு அற்புதமான படத்தின் இரண்டு பெரிய சறுக்கல்கள். ஒன்று சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும்.
சென்னையில் எடுத்திருந்தால் படம் இன்னமும் ஆதன்டிக்காக இருந்திருக்கும். படம் பார்க்கும் போது என் தங்கமணிக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

தங்கமணி: ஏங்க, கமல் அஞ்சு பாமும் சென்னையிலதானே வெச்சதா சொல்றாரு...
நான்: ஆமா.. ஏன் கேக்குற?
தங்கமணி: அப்புறமா ஏன் போலீஸ் போய் ஹைதராபாத்ல இருக்குற ப்ரசாத்ஸ் மல்டிப்ளக்ஸ்ல பாமை தேடுறாங்க?
நான்: ஙே...

மற்றொரு விசயம், படத்தின் ட்விஸ்டே பாம் வைப்பவரை முதலில் தீவிரவாதியாக படம் பார்க்கவர்கள் நினைக்க அதை முடிவில் மாற்றுவதுதான். ஆனால் கமல் அந்த பாத்திரத்தை செய்வதால் "நிச்சயமா இதுக்கு எதுனா நியாயமான காரணம் இருக்கும்" என்று நாம் நம்புகிறோம், அதன்படியே நடக்கிறது. ஒருவேளை மோகன்லாலும் கமலும் கதாபாத்திரங்களை மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

பின்குறிப்பு 2 : சாதரணமாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை ('கொய்யால, முதல்ல நீ பதிவே எழுதுறதில்ல, அப்படி எழுதுனாத்தானே என்னத்தை எழுதுறன்னு கவலைப்படுறதுக்கு' என்று கத்தும் கார்க்கி, ஆதி, கேபிள், பரிசல் வகையறாக்கள் அமைதி கொள்க). ஆனால் இந்தப் படம் பார்த்து இன்னமும் பிரமிப்பு நீங்காமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.