Thursday, October 29, 2009

உங்களுக்கு துப்பறியும் கதைகள் பிடிக்குமா?

இந்த இடுகையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் தலைப்பில் இருக்கும் கேள்விக்கான பதில் "ஆமாம்" என்பதாகவே 99 சதவீதம் இருக்கும். "இல்லை" என்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம். :)

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தங்களின் பதின்ம வயதுகளை (டீன் ஏஜ்) கடந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜேஷ்குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் துப்பறியும் நாவல்களில் மனதை பறிகொடுத்திருப்பீர்கள் (அ) பறிகொடுத்திருக்கிறோம்.

விவேக், ரூபலா, நரேந்திரன், வைஜெயந்தி, பரத், சுசிலா இவர்களோடு வயது வித்தியாசம் இல்லாமல் விஷ்ணு, செல்வா, முருகேசன், ராமதாஸ் (அவரு இல்லீங்க), ஜான்சுந்தர், அனிதா என்று அனைவரும் நமக்கு நெடுநாள் நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.

இவர்கள் அனைவருக்கும் முன்னோடி அல்லது எழுத்துலகின் முதல் பிரபல துப்பறியும் ஹீரோ என்றால் அது ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்ட இந்த மனிதரைப் படைத்தவர் ஆர்தர் கோனன் டாயில்.

ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வெற்றியே வாசகர்கள் அவரை நிஜம் என்று நினைப்பதும், அவரை பின்பற்ற நினைப்பதுமே. உதாரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பல வசனங்களை நாம் நம்மை அறியாமலேயே நம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துகிறோம் என்பதே அவரின் வெற்றியாகக் கருத முடியும். அந்த வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வெளிவந்து வெற்றியடைந்த காலகட்டத்தில் கதைகளில் வரும் அவரது முகவரியான "221 பி, பேக்கர்ஸ் தெரு, லண்டன்" என்ற முகவரிக்கு கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவரை உண்மையான மனிதராக வாசகர்கள் நினைத்தார்கள் என்றால் அவரது வீச்சினைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழர்களிடையே அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவரது பெயரை எங்காவது எப்பொழுதாவது கேட்டிருக்கும் நமக்கு அவரது கதைகளைப் படிக்க அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது.

இந்த குறையைப் போக்க தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சியாகவே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!" வரிசையின் முதல் புத்தகமான "ஒரு மோதிரம் இரு கொலைகள்!" அமைந்திருக்கிறது. தமிழில் இதை மொழி பெயர்த்திருப்பவர் நம் பதிவர்களிடையே நன்கு அறிமுகமான "பத்ரி சேஷாத்ரி".

ஹோம்ஸை வைத்து ஆர்தர் எழுதிய முதல் கதையான A Study in Scarlet என்ற கதையையே முதல் கதையாக மொழிபெயர்த்திருப்பது ஹோம்ஸை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல உத்தியாக இருக்கிறது. ஹோம்ஸ் யார், அவரது தோற்றம், இயல்புகள், அவருக்குத் தெரிந்தது, தெரியாதது என்று அனைத்தையும் நம்மால் இந்த முதல் கதையிலேயே அறிந்து கொள்ள முடிவது இந்த புத்தகத்தின் சிறப்பு.

இலக்கியத்தனமாக இல்லாமல் நாம் ஏற்கனவே விரும்பி படிக்கும் தமிழ் துப்பறியும் நாவல்களின் மொழியிலேயே ஓரளவுக்கு இந்த புத்தகமும் வந்திருப்பது படிப்பதற்கு இதமாக இருக்கிறது. மேலும், எழுத்தாளர் ஆர்தர் டாயில் குறித்தும், ஹோம்ஸ் குறித்தும் பத்ரி கொடுத்திருக்கும் முன்னுரைகள் கதை படிக்கும் முன்பு நம்மை அழகாக தயார் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது என்றே சொல்வேன்.

இனி, கதைக்குச் செல்வோம். ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகள் எல்லாமே அவரது நண்பரான டாக்டர் வாட்சன் என்பவரது பார்வையிலேயே செல்லும். கதைகளை எழுதிய ஆர்தர் டாயில் ஒரு மருத்துவர் என்பதால் தன்னை வாட்சன் இடத்தில் வைத்து எழுத இந்த நடை அவருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான இந்த கதைகளின் களம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பும் டாக்டர் வாட்ஸன் தன் நண்பர் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸுடன் அறையில் தங்குகிறார். ஹோம்ஸின் வித்தியாசமான நடவடிக்கைகளால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாமல் சில நாட்கள் குழம்பும் வாட்ஸன், பின்னர் அவர் ஒரு துப்பறியும் நிபுணர் என்பதும், காவல்துறையினர் கண்டுபிடிக்கவே திணறும் சில வழக்குகளில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

லண்டன் நகரில் கொல்லப்படும் அமெரிக்கப் பிரஜை ஒருவரது கொலைக்கான காரணத்தைத் தேடும் இரு ஸ்காட்லாண்ட் யார்டு அதிகாரிகளுக்கு உதவ ஹோம்ஸ் செல்ல அவருடன் தொடரும் வாட்ஸன், கொலை நடக்கும் இடத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களை வைத்து ஹோம்ஸ் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதை விவரிக்கிறார். கதையின் முதல் பாதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட, கொலைக்கான காரணம் கதையின் இரண்டாவது பாதியில் விரிகிறது.

இரண்டாவது பாதியில் விவரிக்கப்படும் அமெரிக்காவின் யுடா மாகாண குடியமர்தலும் அந்த மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் மூடப் பழக்க வழக்கங்களும், அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களும் என்று முதல் பாதி கதைக்கு முற்றிலும் வேறான‌ தளத்தில் கதை பயணிப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.

கதையின் முடிவில், தான் கொலைகாரனை கண்டுபிடித்தது எப்படி என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் விவரிக்கும்போது அவரது துப்பறியும் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மை. ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வளவு பிரபலம் என்பதற்கு சரியான விளக்கமே அந்த கடைசி அத்தியாயம் என்பதே என் கருத்து.

துப்பறியும் நாவல் பிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகமான இது மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பனுபத்தைத் தரும் என்பதற்கு நான் உத்தரவாதம்.


பதிப்பாளர்கள்: கிழக்குப் பதிப்பகம்
புத்தகத் தொடர்: ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!
புத்தகம்: 1. ஒரு மோதிரம் இரு கொலைகள்!
எழுதியவர்: ஆர்தர் கோனன் டாயில்
தமிழில்: பத்ரி சேஷாத்ரி

மேலதிக தகவல்கள் மற்றும் ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

Monday, October 26, 2009

ஒரு சட்டப்பூர்வமான கொடிய தண்டனை

ஒரு குற்றவாளிக்கு தரப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை எது? இந்த கேள்விக்கு எல்லா நாடுகளிலும் ஒரே பதில் "மரண தண்டனை" என்பதே. சில நாடுகளில் தூக்கு, சில நாடுகளில் மின்சார இருக்கை, சில நாடுகளில் கல்லால் அடித்துக் கொலை என்று தண்டனையை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதில் மாற்றம் இருந்தாலும் மரணதண்டனைக்கு மிஞ்சிய தண்டனை இல்லை என்றுதான் எல்லா நாட்டு சட்டங்களும் சொல்கின்றன.

அந்த குறிப்பிட்ட நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது விஷ ஊசியின் மூலம், காரணம் மற்ற முறைகளை விட விஷ ஊசி முறையில்தான் சாவதற்கான உடல் வேதனை குறைவு என்பது அவர்கள் வாதம். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 1984ல் ஒரு 14 வயது சிறுமியைக் கடத்தி, கற்பழித்துக் கொன்ற அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. நமது நாடு போல் தீர்ப்பு வந்தது 10 வருடம் கழித்தல்ல, ஒரு வருடத்திற்குள்ளாகவே. ஆனால் அதை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள்: மரணதண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நம் நாட்டைப் போலவே அங்கும் விவாதம், தண்டனை நிறைவேற்ற போதுமான பணம் ஒதுக்காதது போன்ற காரணங்களினால் ஏற்கனவே மரண தண்டனை பெற்று விஷ ஊசிக்கு காத்திருப்பவர்கள் வரிசையில் அவனும் சேர்க்கப்படுகிறான்.

பாதுகாப்பான சிறையில் பரோலில் வெளிவர முடியாத கைதியாக சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் காவல் அதிகாரி வந்து "அடுத்த வாரம் உனக்கு தண்டனை நிறைவேற்றப்படும்" என்று சொல்வார் என்ற நிலை. இப்படி அவன் காத்திருந்தது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 25 வருடங்கள். எந்த நிமிடமும் தன் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது மரணதண்டனையை விட கொடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.

முடிவாக, செப்டம்பர் 15, 2009ல் அவனது தண்டனையை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்கிறார்கள் சிறைத்துறையினர். விடுதலையை விட அதிக மகிழ்ச்சியை அவன் அடைந்திருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் விதி வேறு வடிவத்தில் விளையாடும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

மதியம் இரண்டு மணிக்கு அவன் மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருபதிற்கும் அதிகமான மனிதர்கள் (அ) சாட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்படுகிறான். மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, நேரடியாக விஷ ஊசிமட்டுமே. ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் வலி, வேதனை இல்லாமல் உயிர் பிரிவது வாடிக்கை.

இதற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஊசி மற்றும் விஷத்திற்கான ரசாயனங்களுடன் அறைக்குள் செல்கின்றனர். எல்லாம் தயார் என்ற நிலையில்தான் எதிர்பாராத, இதுவரை வரலாற்றில் நிகழாத அந்த விஷயம் நடக்கிறது. விஷ ஊசியைப் போடுவதற்கான இரத்தக் குழாயை அந்த மருத்துவப் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு கைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காலில் அல்லது தொடையில் ஊசி போடப்படும். என்ன காரணமோ அவனது உடலில் எந்த பகுதியிலும் இரத்தக்குழாய்களை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இப்படி அவர்கள் அவன் உடல் முழுவதும் இரத்தக் குழாய்களை தேடிக்கொண்டிருந்தது ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அல்ல, முழுதாக இரண்டு மணிநேரம். இரண்டு மணிநேரம் கழித்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மரணதண்டனை நிறைவேற்றப்பட முடியவில்லை என்று கூறி அவன் சிறைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.

அவன் செய்த ஒரு கொலைக்கு இன்றோ நாளையோ என்ற நிலையில் இருபத்தைந்து வருடங்கள் சிறையில் வைத்திருந்து, மரணத்தின் வாசலுக்கு கொண்டு சென்று இரண்டு மணிநேரம் வைத்திருந்து, அவனை சிறைக்குத் திருப்பி அனுப்பி மறுபடியும் இன்றோ நாளையோ என்ற நிலையில் வைத்திருக்கும் அந்த நாடு, உலகுக்கே நாட்டாமை பண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்கா. இந்த நரக வேதனைக்கு அவன் பிடிபட்ட அன்றே என்கவுன்ட்டரில் கொன்றிருந்தாலும் பரவாயில்லை என்பதே உண்மை.

சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

1. இந்த ஒரு குற்றவாளியைப் போன்றே அமெரிக்கச் சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் விஷ ஊசிக்குக் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் அவர்களை இப்படி வைத்திருக்கப்போகிறார்கள்?
2. நமது நாடு போல அரசியல் காரணங்கள் இல்லாமல் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றால் உடனடியாக நிதி ஒதுக்கி அவர்களின் தண்டனையை நிறைவேற்றலாமே, தண்டனையை நிறைவேற்றும் முறையில் கூட வலியும் வேதனையும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், டெத் ரோ (Death Row) எனப்படும் மரண வரிசையில் காத்திருப்பவர்களின் மனதளவில் ஏற்படும் வலியையும் வேதனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?
3. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரே நாட்டின் குடிமக்களிடையே ஏன் இந்த வேறுபாடு?

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த செய்தி இது. இது குறித்த முழு விவரமும் இங்கே.

Monday, October 19, 2009

இரண்டு புத்தகங்கள் + இரண்டு திரைப்படங்கள் + ஒரு தத்துவம்

புத்தகம் 1: எரியும் பனிக்காடு:
நாம் தினமும் குடிக்கும் தேநீரின் பின்னால் இருக்கும் கறுப்பு சரித்திரத்தை சொல்லும் ரெட் டீ (Red Tea) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்த புத்தகம். ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் இரா.முருகவேள் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புத்தகம், 1920களில் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டம் அமைக்க இந்திய ஏழைகளின் வாழ்க்கையை சூறையாடிய வெள்ளையர்கள் + இந்தியர்களின் வாழ்க்கையை சொல்லும் இரத்தம் தோய்ந்த வரலாறு.

தமிழகத்தில் நடக்கும் கதை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மீண்டும் தமிழில் மொழிபெயர்ப்பது சவாலான விசயம். அந்த பகுதி மக்கள் அந்த காலகட்டத்தில் பேசிய மொழியை எழுத்தில் கொண்டுவந்திருக்கும் முருகவேள் பாராட்டப்பட வேண்டியவர்.

அவசியம் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களின் வரிசையில் முதல் சில இடங்களில் இருக்கும் புத்தகம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த புத்தகம் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இங்கே.

திரைப்படம் 1: Hangover:
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்று. படத்தின் நான்கு ஹீரோக்களில் ஒருவனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட லாஸ் வேகாஸ் நகருக்கு செல்பவர்கள், தாங்கள் தங்கும் ஹோட்டலின் மொட்டைமாடியில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிக்கிறார்கள். காலையில் தங்கள் அறையில் விழித்து எழுந்தால் முதல் நாள் நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்ற நிலையில், அறையில் பாத்ரூமில் ஒரு புலி உறும, கப்போர்டில் குழந்தை அழ, இவர்கள் கார் என்று ஒரு போலீஸ் காரை கொண்டு வந்து ஹோட்டல் சிப்பந்தி நிறுத்த என்று குழப்பத்தின் மேல் குழப்பமாக ஆரம்பித்து அனைத்தும் சுபமாக முடிவதுதான் கதை.

தமிழில் உல்டா பண்ண அருமையான திரைக்கதை. யார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கரின் விமர்சனம் இங்கே.

புத்தகம் 2: Pirate Latitudes:
ஜுராஸிக் பார்க் எழுதிய மைக்கேல் கிரிக்டன் போன வருடம் இறந்த பிறகு அவரது கணிணியை நோண்டிக் கொண்டிருந்த அவரது உதவியாளர் கண்டுபிடித்த இதுவரை வெளிவராத இரண்டு நாவல்களில் ஒன்று "பைரேட் லாட்டிட்யூட்ஸ்". கிரிக்டனால் முழுவதுமாக‌ எழுதி முடிக்கப்பட்டிருந்த இந்த நாவல் நவம்பர் இறுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கிடைத்துள்ள இன்னொரு முடிக்கப்படாத நாவலை எழுதி முடிக்க எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறாராம் பதிப்பாளர். ஒரு அப்ளிகேஷன் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :)

சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.

திரைப்படம் 2: 2012:
உலகின் மிகப்பெரிய அழிவு எது நடந்தாலும் அல்லது நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை படமாக்குவது ஹாலிவுட் இயக்குனர்களுக்குக் கை வந்த கலை. டைட்டானிக், 9/11, உலகப்போர்கள் என்ற பெரிய அழிவுகளை வெற்றிப்படங்களாக்கியவர்கள் அவர்கள். இன்டிபென்டன்ஸ் டே, காட்ஸில்லா, டே ஆஃப்டர் டுமாரோ ஃபேன்டஸி படங்களின் இயக்குனர் ரோலன்ட் எம்மரிக் இயக்கி நவம்பர் 13ல் வெளிவர இருக்கும் 2012 படம், 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனரின் முந்தைய படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரே மிரட்டுகிறது. சும்மாவா பின்ன, 260 மில்லியன் டாலர் பட்ஜெட்டாச்சே (சுமாராக 1300 கோடி ரூபாய்). ஏறத்தாழ தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியின் ஐந்து வருட பட்ஜெட்டை விட இந்த ஒரு படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகம்தான்.

நான் அதிகம் எதிர்பார்க்கும் படம் இது.

தத்துவம்:
நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சன்ஸ் ஆஃப் ஃபார்சூன் (Sons Of Fortune) கதையில் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) கொடுத்திருக்கும் ஆலிவர் ஹோம்ஸ்(Oliver Wendell Homes)ன் ஒரு தத்துவம் இன்றைய பதிவுலகத்திற்கு பொருத்தமாக தோன்றியது.

'Beat a man with the strength of your argument, not the strength of your arm'

Thursday, October 8, 2009

இணையம் இல்லா எட்டு நாட்களும், கற்பிழந்த மலைகளின் ராணியும்

ஆகஸ்ட் நடுவுல இருந்து செப்டம்பர் வரைக்கும் ஏறத்தாழ ஒரு மாசமாவே நான் வலையுலகில் அதிகம் செயல்படவில்லை. ஏற்கனவே சொன்ன மாதிரி அலுவலகத்தில் வலைப்பூக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டதால் என்னால் வலையுலகில் பதிவுகளை முழுவதுமாக படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியவில்லை. அது மட்டுமின்றி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஒரு வாரம் எங்காவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்திருந்ததும் காரணம். ஒரு வார விடுமுறைக்கு முன்னால் முடிக்கவேண்டிய பணிகளும், விடுப்பு முடிந்து வந்ததும் சேர்ந்து போன ஆணிகளை பிடுங்கிய வகையிலும் ஏறத்தாழ ஒரு மாதமே ஆகிவிட்டது.

சென்ற வருடம் இதே நேரத்தில் நாங்கள் ஐந்து நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தோம். அந்த பயணம் அருமையாக இருந்ததால் இந்த வருடம் அதே போல் ஊட்டி செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். சென்ற வருடம் போலவே, கணிணி, இணையம், அலுவலக வேலைகள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு வாரம் மொத்தமாக லீவ்.

எனக்கென்னவோ கொடைக்கானலைப் போல் ஊட்டி வசீகரிக்கவில்லை. முதல் காரணம் ஊரே முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டிருப்பதுதான். எங்கெங்கு திரும்பினாலும் கடைகள், கடைகள், கடைகள். மக்கள் நடமாட்டமும் மிக அதிகம். சீசனே இல்லாத இந்த சமயத்திலே இப்படி என்றால் சீசன் சமயத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

வெள்ளையன் கண்டுபிடித்து ஆரம்பித்த ஒரு இயற்கையான மலைப்பிரதேசத்தை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் சீரழித்து இருக்கிறோம். மிகச்சிறந்த உதாரணம் ஏரி. கூவத்தின் மறுபதிப்புதான் அந்த மலைவாசஸ்தலத்தின் ஏரி. மலைரயில் ஊட்டியைத் தொடும்போதே தெரியும் கழிவுநீர்க் கால்வாயும், நம் நாசியை நிறைக்கும் கெட்ட வாடையும் இந்த முறை எங்கள் தேர்வு தவறு என்று சத்தியம் செய்து சொன்னதாகவே தோன்றியது.

ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்ற மலைரயில் பயணமும் அவ்வளவு இனிதாக இல்லை. கால் வைக்கவே இடம் இல்லாத அளவுக்கு சின்ன இடத்தில் ஐந்து மணிநேரப் பயணம் கொஞ்சம் கடுப்படித்தது. டார்ஜிலுங் மலை ரயில் குறித்து படித்தபோது இதை விட சிறிய ட்ராக்கில் ஓடினாலும் முதல் வகுப்பு என்று தனியாக ஒன்று உண்டு என்பது தெரிந்தது. அதுபோல் எதாவது மாற்றம் செய்தால் சிரமம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

அதையும் தாண்டி பயணத்தில் கண்ட‌ சில நல்ல விசயங்கள்:
1. சாப்பாடு பிரச்சினையே இல்லை. நாங்கள் சேரிங்கிராஸ் அருகே தங்கியிருந்த ப்ரீதி பேலஸ் ஹோட்டலின் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் அருமை. அதிலும் அங்கே சாப்பிட்ட ஆனியன் ஊத்தப்பம்.....ம்ம்ம்ம்ம்ம்ம். மறக்காமல் முயற்சிக்கவும். அது மட்டும் இல்லாமல் பல தரமான உணவகங்களைக் காணமுடிந்தது. ஒரு சுற்றுலா பிரதேசத்தில் உணவுப் பிரச்சினை இல்லாமல் இருப்பது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.
2. ஊட்டியின் க்ளைமேட். அற்புதம், வேறென்ன சொல்ல‌??
3. கொடநாடு வ்யூபாய்ண்ட்: கொஞ்சம் தூரம்தான் என்றாலும் (ஊட்டியில் இருந்து 50 கி.மீ. கோத்தகிரியில் இருந்து சுமார் 20 கி.மீ). மிஸ் பண்ணக்கூடாத இடம். மற்ற வ்யூபாய்ண்ட்கள் போலில்லாமல் தூரத்தில் தெரியும் பரந்து விரிந்த சத்தியமங்கலம் காடுகளும், ஒரு கோடு போல் தெரியும் பவானி ஆறும், தூரத்தே தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கமும் முற்றிலும் வித்தியாசமான அனுபவம். கொடநாடு எஸ்டேட்டின் விஸ்தீரணத்தையும் வழியில் பார்க்கமுடிவது ஒரு ப்ளஸ். :)
4. திரும்பும் நாளன்று எதேச்சையாக கோத்தகிரியில் ஏற்பட்ட பதிவர் லதானந்த் அவர்களுடனான சந்திப்பு ஒரு கூடுதல் ஆச்சர்யம்.

Monday, October 5, 2009

மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்

டான் பிரவுன் (DAN BROWN)... பெயரைச் சொன்னவுடனே நம் நினைவுக்கு வரும் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் நாவல்கள். அதைத்தவிர‌ அவர் இன்னும் இரண்டு நாவல்கள் (டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட்) எழுதியிருந்தாலும் அவரை உலகப்புகழ்ப் பெற வைத்தது டாவின்சி கோட் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

டாவின்சி கோட் வெளிவந்து ஏறத்தாழ ஆறு வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் அவரது அடுத்த நாவல் இன்னும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. சுமார் ஐந்து வருடங்கள் டான் பிரவுன் ஆராய்ச்சி செய்து "தி சாலமன் கீ" என்ற பெயரில் எழுத ஆரம்பித்த இந்த நாவல் "தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol)" என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

டான் பிரவுனின் எழுத்துகளின் பலமே வரலாறின் மறைக்கப்பட்ட பக்கங்க‌ளை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூலம் வெளிக்கொண்டு வருவதுதான். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் நாம் அதிகம் அறிந்திராத சர்ச் வெர்சஸ் சயின்ஸ் (Church Vs Science) பற்றியும், டாவின்சி கோடில் ஏசுநாதர் திருமாணமானவர் என்பது பற்றியும் எழுதியிருந்ததும் அந்த நாவல்கள் பெருமளவு பேசப்படக் காரணமாக அமைந்தன.

லாஸ்ட் சிம்பல் கதையிலும் ஹீரோ முதல் சொன்ன இரண்டு கதைகளில் வந்த ராபர்ட் லாங்டன் (Robert Longdon). ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் ப்ரொஃபசராக இருக்கும் புகழ் பெற்ற சிம்பாலஜிஸ்ட். தன் பணக்கார நண்பரான பீட்டர் சாலமன் அழைப்பின் பேரில் வாஷிங்டனில் ஒரு உரை நிகழ்த்தச் செல்லும் லாங்டன் அங்கு சென்றபின் அந்த அழைப்பே ஒரு பொய் என்பதை அறிகிறார்.

ஃப்ரீமேசன்ஸ் (Freemasons) என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரது நண்பரை கடத்தியிருக்கும் வில்லன், ஃப்ரீமேசன்ஸ் நூற்றாண்டுகளாக பாதுகாத்து வரும் ரகசியத்தை கண்டுபிடிக்க லாங்டன் உதவி செய்தால் அவரை விடுவிப்பதாகச் சொல்கிறான். இதற்கிடையே அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கூறிக்கொண்டு சி.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரி ஒருவரும் லாங்டனை நெருக்க, அவர்களிடமிருந்து தப்பிக்க, சி.ஐ.ஏ.வின் துரத்தல்களுக்கு நடுவே பீட்டர் சாலமனின் தங்கையுடன் வாஷிங்டன் நகரில் தப்பி ஓடும் லாங்டன் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாரா, அவரது நண்பர் மீட்கப்பட்டாரா, வில்லன் என்ன ஆனான், அது என்ன ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் என்பதை சொல்லும் கதைதான் "லாஸ்ட் சிம்பல்".

கதைச்சுருக்கம் அருமையாகத் தெரிந்தாலும், கதை கொஞ்சமல்ல நிறையவே இழுவை. ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும் கதையில் (முக்கியமாக கதை முழுவதும் 12 மணிநேரத்திற்குள் நடக்கிறது) டான் பிரவுன் முடிந்தவரை சொதப்பியிருக்கிறார்.

ராபர்ட் லாங்டனின் மற்ற நாவல்களைப்போல அழுத்தமான காரணம் இந்த கதையில் இல்லை. ஏஞ்சல்ஸ் & டீமன் கதையில் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க உலகின் அனைத்து கார்டினல்களும் வாடிகனில் கூடியிருக்க அந்த இடத்தில் அணுகுண்டிற்கு இணையான அழிவை ஏற்படுத்தும் குண்டு வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அது வெடித்தால் கிறித்துவ மதத்திற்கே அது ஒரு பேரிழப்பாக இருக்கும். அதை லாங்டன் முறியடிக்க ஒவ்வொரு சர்ச்சாக அவர் செல்லும்போது நமக்கும் அந்த பரபரப்பு இருக்கும்.

அதே போல் டாவின்சி கோட் நாவலிலும் ப்ரையாரி ஆஃப் சயின் குழுவால் பாதுகாக்கப்படும் "ஏசு திருமணமானவர்" என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்தால் கிறித்துவ மத நம்பிக்கை அசைக்கப்படும். அந்த சூழ்நிலையில் நடக்கும் கதையும் நம்மை பரபரக்க வைக்கும்.

அதுபோன்ற எந்த அழுத்தமான காரணமும் இதில் இல்லை. சி.ஐ.ஏ. வருவதற்கு அவர்கள் கூறும் காரணமே கதை 80% போனபின்தான் சொல்லப்படுகிறது. அதுவரை "எதுக்குதான் அவனுங்க வந்திருக்காங்க? சொல்லித் தொலையுமைய்யா" என்று சலிப்புதான் தோன்றுகிறது. அதன்பின் அவர்கள் சொல்லும் காரணமும் சப்பையாக இருப்பது ஏமாற்றத்தின் உச்சகட்டம்.

அதைவிட பெரிய ஏமாற்றம், கதையின் முடிவு நடைபெறும் இடத்தை "விண்ணை முட்டும் பிரமிட்" என்று கதையின் ஆரம்பத்தில் லாங்டன் தேட ஆரம்பிக்கும்போதே நம்மால் யூகிக்க முடிவதுதான். ஓரளவு வாஷிங்டன் டிசி நகரத்தைப் பற்றி தெரிந்தாலே "பெரிய பிரமிட், விண்ணை முட்டும் கல்" என்ற விளக்கங்களுக்கு பொருந்தும் கட்டிடத்தை உங்களால் யூகிக்க முடிவதும், கதையின் முடிவில் அதே இடத்தில் ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் இருப்பதையும் படித்தால் "வாஷிங்டனைப் பாக்காத எனக்கே தெரியுது, எல்லாம் தெரிஞ்ச லாங்டனுக்கு இதைக் கண்டுபிடிக்க 500 பக்கமா?" என்ற சலிப்பே ஏற்படுகிறது.

எல்லாவற்றையும் விட, ஃப்ரீமேசன்ஸ் ரகசியமாக பாதுகாத்து வரும் அற்புதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்ற அவநம்பிக்கையுடனேயே கடைசி அத்தியாயம் வரை லாங்டன் செல்ல்லும்போது அவருடன் செல்லும் நம்மை ஈர்க்காமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

படமாக வந்தாலும் இந்த கதை வெற்றிபெறப்போவது இல்லை. காரணம் கதையும் நடக்கும் இடமான வாஷிங்டன் டிசியும், வெற்றிப்படமான நேஷனல் டிரசர் முதல் பாகத்தின் ரீமேக் போல் இருக்கும்.மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை ஆறு வருடங்கள் கழித்து டான் பிரவுன் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார் என்றே சொல்வேன்.

இது டான் பிரவுனின் ஐந்தாவது புத்தகம். காலவரிசையில் மட்டுமல்ல, தரவரிசையிலும் கூட‌.