Monday, October 26, 2009

ஒரு சட்டப்பூர்வமான கொடிய தண்டனை

ஒரு குற்றவாளிக்கு தரப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை எது? இந்த கேள்விக்கு எல்லா நாடுகளிலும் ஒரே பதில் "மரண தண்டனை" என்பதே. சில நாடுகளில் தூக்கு, சில நாடுகளில் மின்சார இருக்கை, சில நாடுகளில் கல்லால் அடித்துக் கொலை என்று தண்டனையை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதில் மாற்றம் இருந்தாலும் மரணதண்டனைக்கு மிஞ்சிய தண்டனை இல்லை என்றுதான் எல்லா நாட்டு சட்டங்களும் சொல்கின்றன.

அந்த குறிப்பிட்ட நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது விஷ ஊசியின் மூலம், காரணம் மற்ற முறைகளை விட விஷ ஊசி முறையில்தான் சாவதற்கான உடல் வேதனை குறைவு என்பது அவர்கள் வாதம். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 1984ல் ஒரு 14 வயது சிறுமியைக் கடத்தி, கற்பழித்துக் கொன்ற அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. நமது நாடு போல் தீர்ப்பு வந்தது 10 வருடம் கழித்தல்ல, ஒரு வருடத்திற்குள்ளாகவே. ஆனால் அதை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள்: மரணதண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நம் நாட்டைப் போலவே அங்கும் விவாதம், தண்டனை நிறைவேற்ற போதுமான பணம் ஒதுக்காதது போன்ற காரணங்களினால் ஏற்கனவே மரண தண்டனை பெற்று விஷ ஊசிக்கு காத்திருப்பவர்கள் வரிசையில் அவனும் சேர்க்கப்படுகிறான்.

பாதுகாப்பான சிறையில் பரோலில் வெளிவர முடியாத கைதியாக சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் காவல் அதிகாரி வந்து "அடுத்த வாரம் உனக்கு தண்டனை நிறைவேற்றப்படும்" என்று சொல்வார் என்ற நிலை. இப்படி அவன் காத்திருந்தது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 25 வருடங்கள். எந்த நிமிடமும் தன் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது மரணதண்டனையை விட கொடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.

முடிவாக, செப்டம்பர் 15, 2009ல் அவனது தண்டனையை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்கிறார்கள் சிறைத்துறையினர். விடுதலையை விட அதிக மகிழ்ச்சியை அவன் அடைந்திருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் விதி வேறு வடிவத்தில் விளையாடும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

மதியம் இரண்டு மணிக்கு அவன் மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருபதிற்கும் அதிகமான மனிதர்கள் (அ) சாட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்படுகிறான். மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, நேரடியாக விஷ ஊசிமட்டுமே. ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் வலி, வேதனை இல்லாமல் உயிர் பிரிவது வாடிக்கை.

இதற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஊசி மற்றும் விஷத்திற்கான ரசாயனங்களுடன் அறைக்குள் செல்கின்றனர். எல்லாம் தயார் என்ற நிலையில்தான் எதிர்பாராத, இதுவரை வரலாற்றில் நிகழாத அந்த விஷயம் நடக்கிறது. விஷ ஊசியைப் போடுவதற்கான இரத்தக் குழாயை அந்த மருத்துவப் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு கைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காலில் அல்லது தொடையில் ஊசி போடப்படும். என்ன காரணமோ அவனது உடலில் எந்த பகுதியிலும் இரத்தக்குழாய்களை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இப்படி அவர்கள் அவன் உடல் முழுவதும் இரத்தக் குழாய்களை தேடிக்கொண்டிருந்தது ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அல்ல, முழுதாக இரண்டு மணிநேரம். இரண்டு மணிநேரம் கழித்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மரணதண்டனை நிறைவேற்றப்பட முடியவில்லை என்று கூறி அவன் சிறைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.

அவன் செய்த ஒரு கொலைக்கு இன்றோ நாளையோ என்ற நிலையில் இருபத்தைந்து வருடங்கள் சிறையில் வைத்திருந்து, மரணத்தின் வாசலுக்கு கொண்டு சென்று இரண்டு மணிநேரம் வைத்திருந்து, அவனை சிறைக்குத் திருப்பி அனுப்பி மறுபடியும் இன்றோ நாளையோ என்ற நிலையில் வைத்திருக்கும் அந்த நாடு, உலகுக்கே நாட்டாமை பண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்கா. இந்த நரக வேதனைக்கு அவன் பிடிபட்ட அன்றே என்கவுன்ட்டரில் கொன்றிருந்தாலும் பரவாயில்லை என்பதே உண்மை.

சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

1. இந்த ஒரு குற்றவாளியைப் போன்றே அமெரிக்கச் சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் விஷ ஊசிக்குக் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் அவர்களை இப்படி வைத்திருக்கப்போகிறார்கள்?
2. நமது நாடு போல அரசியல் காரணங்கள் இல்லாமல் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றால் உடனடியாக நிதி ஒதுக்கி அவர்களின் தண்டனையை நிறைவேற்றலாமே, தண்டனையை நிறைவேற்றும் முறையில் கூட வலியும் வேதனையும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், டெத் ரோ (Death Row) எனப்படும் மரண வரிசையில் காத்திருப்பவர்களின் மனதளவில் ஏற்படும் வலியையும் வேதனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?
3. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரே நாட்டின் குடிமக்களிடையே ஏன் இந்த வேறுபாடு?

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த செய்தி இது. இது குறித்த முழு விவரமும் இங்கே.

14 comments:

said...

குற்றவாளிக்கு இதைவிட பெரிய தண்டனை ஏதுமில்லை. இறந்தால் ஒரே நொடி. நினைச்சு நினைச்சு மனசு மருங்கும் வேதனைக்கு ......


எங்கூரில் மரணதண்டனை இல்லை.

Anonymous said...

கொடுமையா இருக்கு படிக்கவே. சிங்கப்பூர் மாதிரி உடனடியா தண்டனை குடுத்தாப்பரவாயில்லை.

said...

<<<
14 வயது சிறுமியைக் கடத்தி, கற்பழித்துக் கொன்ற
>>>

14 வயசு புள்ளைய கொன்னுருக்குறான்... அவனுக்கு பச்சாதாபபட்ட் ஒரு பதிவு வேற, கொடிய தண்டனைனுலாம் சொல்ல கூடாது, எது கொடிய தண்டனை? வாழ வேண்டிய சிறுமியின் வாழ்க்கைய அழிச்சுட்டான், அவனுக்கு தண்டனை மிகச் சரிதான். அந்த சிறுமி, அதன் குடும்பம் நிலையில் நினைத்து பாருங்கள்.

25 வருசம் வச்சுருக்க கூடாது, அப்பவே போட்டுதள்ளீருக்கனும்.

தப்பு செய்தவன் கண்டிப்பா தண்டனை அடையனும்

said...

பொதுவாக தண்டனை என்பது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை, பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே! தண்டனையை அனுபவிக்கிறவன் தரப்பை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்ற ஆதிகாலத்து நாகரீகமற்ற சமுதாயத்ததின் மிச்ச சொச்சமாகவே இதைப் பார்க்க முடிகிறது.

அமெரிக்கா இருக்கட்டும்! இங்கே உள்ளூர் விஷயத்தைப் பாருங்கள்.இங்கே வழக்கு விசாரணை முடிவதற்குள்ளாகவே, குற்றவாளி இயற்கையாக வயது முதிர்ந்து அப்படியே.....ஏதோ ஒரு பிளைவுட் கம்பனி விளம்பரத்தில் வருகிற மாதிரி, இழுத்துக் கொண்டே போகிற அவலம் கண்ணுக்குத் தெரியவில்லையா?

தேவையே இல்லாமல், கைது செய்யப்பட்டு, வாய்தாவுக்கு மேல் வாய்தாவாகத் தள்ளிப்போய்க் கொண்டே, அவதிப்படும் உள்ளூர் விசாரணைக் கைதிகள் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியதுண்டா?

i
அனுதாபத்தைப் பெற வேண்டுமானால் கூட வெளிநாட்டில் பிறந்தால் தான் உண்டுபோல:-(

said...

A wrong-doer should get punished.... there could be no second opinion on that. But delayed judicial processes, even delayed punishment etc are problems in every country. Because of the base principle that an innocent should not get punished in haste. In countries like singapore, sheer size helps them close the cases quickly. This cannot be compared with much larger countries like India or America. This is a perennial problem and we need to look at other alternatives.

said...

பதிவில் நான் எழுத நினைத்து எழுதாமல் விட்ட சில விசயங்கள்:

1. அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை சரியா தவறா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல. கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மன உளைச்சலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதே. மரணதண்டனை என்று அறிவித்த பின்னும் அவனை ஏன் மன உளைச்சலுக்கு அதுவும் கால் நூற்றாண்டாக செய்ய வேண்டும் என்பதே என் வாதம்.
2. இந்த ஒரு செய்தி ஏற்படுத்திய பாதிப்பே இந்த பதிவு. இது போல் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான குற்றவாளிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்ததே. நம் நாட்டிலோ அல்லது நம் மாநிலத்திலோ இது போன்று நடந்தால் அது குறித்து அனைத்து ஊடகங்களும் பேசி இருப்பார்கள். இது வெளிநாட்டில் நடந்ததால் இதைக் குறித்து இணையத்தில் இருக்கும் தமிழர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பதாகவே இந்த பதிவை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். வதை முகாமில் லட்சக்கணக்கில் தமிழன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறான், உனக்கு எவனோ ஒரு அமெரிக்கக் குற்றவாளியின் கஷ்டம் பெரிதா என்ற ரீதியில் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டாம்.
3. எந்த இடத்திலும் அவன் நல்லவன் என்றோ விடுதலை செய்யப்பட வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

said...

மகேஷ் நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இத்தனை இழுத்தடிப்பும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

நீண்ட விவாதமாக இங்கே பின்னூட்டத்தில் நடத்த விரும்பவில்லை என்பதால் யோசித்துப்பார்ப்பதற்காக மட்டும்:

இந்தியாவில், அரசியல்வாதிகள் மட்டும் இல்லை நீதித்துறையுமே கூட போதிய முதிர்ச்சி அதாவது இன்னும் வாயசுக்கு வரல!

அடுத்து, தண்டனைக்கைதியின் மனநிலை ஒருபக்கம் கிடக்கட்டும்! அவனுடைய குடும்பம் அவனுடைய கதை முடிந்துபோன பின்னாலும் கூட எவ்வளவு மன உளைச்சல், வலி, வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது இப்படி ஒரு கோணமும் இருக்கிறது. அதற்கு என்ன பதில்? என்ன பரிகாரம்?

எந்த ஒரு விஷயத்திற்கும் நேரெதிர் விளைவுகள் தவிர பக்க விளைவுகளும் இருக்கிறது என்பதை மட்டுமே நான் மறுபடி வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

நான் உள்ளூர்ப் பிரச்சினையை மட்டுமே தொட்டுப்பேசினேன்.

said...

Dear Krishnamurthy, I do understand your stand and I do empathise those unfortunate in the "death row" and their families. What I wanted to tell is that the judical system and the processes are so complicated with lots of holes all around which are exploited and hinder the way. Ofcourse, the vested interests are always there to put more hurdles on the way.

We need the will to do. Which we lack in abundance.

said...

வெண்பூவின் கேள்விகளுடன் நானும் ஒத்துப்போகிறேன்.

மேலும் மரணதண்டனைக்கு எதிராகவே என் கருத்தை பதிவுசெய்துகொள்கிறேன்.

said...

எந்த நிமிடமும் தன் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும்//

ஏங்க அந்த புள்ளைய பெத்தவங்க மனம் என்ன பாடுபட்டிருக்கும் ...பாடுபட்டுக்கொண்டிருக்கும் . ஒருசில குற்றங்களுக்கு மரணதண்டணை சரிதான்...அப்பத்தான் ஒரு பயம் ஒழுங்கு இருக்கும்.

said...

சில குற்றங்களால் சிலர் வாழத் தகுதியற்றவர்களாகின்றனர். அவர்களுக்கு மரண தண்டனைத் தருவது தவறில்லை. மிருகத்தனமான பாலியல் குற்றங்கள், பயங்கரவாத செயல்கள் போன்றவற்றிற்கு இந்த தண்டனை அளிக்கலாம். ஆனால் எதற்காகவும் இது போல் காத்திருக்க வைத்திருக்க வேண்டியதில்லை.

said...

///ஆதிமூலகிருஷ்ணன் said...
வெண்பூவின் கேள்விகளுடன் நானும் ஒத்துப்போகிறேன்.

மேலும் மரணதண்டனைக்கு எதிராகவே என் கருத்தை பதிவுசெய்துகொள்கிறேன்.///

Repeateyyy

said...

வாங்க டீச்சர்.. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி..

வாங்க சின்ன அம்மிணி.. சரியா சொன்னீங்க..

வாங்க மஸ்தான்.. தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கணும் அப்படின்றதுல எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அது எந்த வகையான தண்டனைன்றதுதன் பிரச்சினையே.

வாங்க கிருஷ்ணமூர்த்தி.. நான் படித்ததில் என்னை பாதித்த செய்தி என்பதால் இது குறித்து எழுதினேன். மற்றபடி நான் உள்ளூரில் இருப்பவர்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்று நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

வாங்க மஹேஷ்.. மக்கள்தொகை அதிகமா இருக்குன்னா அதுக்கு தகுந்த மாதிரி சிறைகளின் அளவும் அதற்கான செலவினங்களும் ஒதுக்கீடு பண்ணியாக வேண்டும் இல்லையா? அதனால்தான் இது போன்ற பிரச்சினைகள்.

said...

வாங்க ஆதி & சி.கருணாகரசு, சஞ்சய், டி.வி.ராதாகிருஷ்ணன்.. நான் மரணதண்டனைக்கு எதிரானவன் கிடையாது, ஆனா மரணதண்டனை கொடுத்தபிறகு 25 வருஷமா மனதளவில் சித்ரவதை செய்வது, இரண்டு மணிநேரத் தேடலில் அந்த சித்ரவதை உச்சத்துக்குப் போனதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.