Sunday, June 29, 2008

இரண்டாவது மூளை

"சொல்லுங்க மாமா. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த போட்டித்தேர்வில நான் முதல் 3 இடத்துகுள்ள வரணும்" என்றேன் நான்.

என்னால் மாமா என்றழைக்கப்பட்ட மருதமூர்த்தி அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். என் அப்பாவும் அவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பதாலும், என் அப்பா அகால மரணமடைந்த பின்னர் தாயும் இல்லாமல் தனி மரமாக நான் நின்ற போது என் படிப்பிற்கான முழு செலவையும் செய்தவர் அவர் என்பதாலும் அவர் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. மற்றவர்கள் அவரை அங்கிள் என்று விளித்தபோதும் மாமா என்று கூப்பிடுவது என்னவோ எனக்கு அவரை மிக நெருக்கமாக உணர்த்தியதால் எனக்கு மாற்றத் தோன்றவில்லை.

மருதமூர்த்தி மாமா ஒரு சராசரி அறிவியல் ஆராய்ச்சியாளனுக்குரிய எல்லா இயல்புகளையும் கொண்டிருந்தார்; சரியான உடை உடுத்தாதது, முக்கியமான விசயங்களை மறந்து போவது என்று. அவரது சகா கிருஷ்ணகுமாருடன் இணைந்து ஏதோ ஒரு ராணுவ தளவாடங்களைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதாக நினைவு. கிருஷ்ணகுமார் அங்கிளும் அப்பாவின் நண்பர்தான்.

நான் மருதமூர்த்தி மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தது அடுத்த வாரம் நடக்க இருக்கும் முக்கியமான போட்டித் தேர்வைப் பற்றி. அதில் வெற்றி பெற்றால் எனக்கு மேற்படிப்புக்கான அமெரிக்க நுழைவு சுலபமாக இருக்கும், அதன்பின் என் கனவான நாசாவில் நுழைவதற்கு எனக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் அந்த தேர்வுக்கு நான் படித்த முதுகலை இன்சினியரிங் மிகக் குறைந்த அளவே உதவப் போகிறது. அது பற்றி ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்க, அது பற்றி பேச என்னை பார்க்கிற்கு அழைத்திருந்தார்.

"ஒரு வழி இருக்குப்பா. ஆனா அது 100% இல்லீகல்" என்றார்.

"என்ன வழி மாமா?" அவ‌ரை அவ‌ச‌ர‌ப்ப‌டுத்தினேன்.

"நான் என்ன‌ ஆராய்ச்சி ப‌ண்ணிட்டு இருக்கேன்னு உன‌க்குத் தெரியுமா?"

"ஏதோ ராணுவத்துக்காக‌ அதிந‌வீன‌ க‌ருவிக‌ள் ச‌ம்ப‌ந்த‌மான்ற‌ அள‌வுக்கு தெரியும் மாமா. ராணுவ‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌தா இருக்குற‌தால‌ நான் இதைப்ப‌த்தி மீரா கிட்ட‌க் கூட‌ எதுவும் கேட்கிற‌தில்லை" மீரா அவ‌ர‌து அழ‌கான‌ திரும‌ணமாகாத‌ மகள். என் சிறுவ‌ய‌துத் தோழி. அவ‌ள்தான் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் இருவ‌ருக்குமான‌ ஒரே உத‌வியாளினி. நான் அவ‌ரை மாமா என்ற‌ழைப்ப‌த‌ற்கு அவ‌ளும் ஒரு கார‌ண‌ம்.

"அந்த‌ ஆராய்ச்சி நான், கே.கே.கூட‌ சேர்ந்து ப‌ண்ற‌து. அடிப்ப‌டையில‌ நான் உயிரிய‌ல் விஞ்ஞானின்ற‌தால‌ மூளையைப் ப‌த்தியும் ஆராய்ச்சிப் ப‌ண்ணிட்டிருக்கேன். இது வெளிய‌ யாருக்கும் தெரியாது. கே.கே.க்குக் கூட‌ முழு விவ‌ர‌ம் தெரியாது"

"ஓ.."

"ஒரு மனுசனோட மூளையோட திறனை அதிகரிக்கறது எப்படின்றதுதான் என்னோட ஆராய்ச்சி, மூளைக்கு ரெண்டு விதமான திறமைகள் இருக்கு, கம்ப்யூட்டர் மாதிரியே, ஒண்ணு தகவல்களை சேமிச்சிக்குற மெமரி பவர், இன்னொன்னு சேமிச்சத் தகவல்கள தேடற ப்ராசசிங் பவர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மாதிரின்னு வெச்சிக்கேன்"

"ம்"

"என்னோட ஆராய்ச்சியின் மூலமா நான் இது ரெண்டையுமே அதிகப்படுத்தறதுல வெற்றியடைஞ்சிட்டேன்னுதான் சொல்லணும்"

"வாவ்...க்ரேட்"

"இத வெளிய சொல்றதா வேணாமான்னு இன்னும் முடிவு பண்ணல. ஏன்னா இது எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அவ்வளவுக்கு அவ்வளவு கெட்டதும் கூட"

அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நீ படிச்சி முடிச்ச உடனே என்கூட என் ஆராய்ச்சியில சேர்ந்துடுவன்னு நெனச்சேன். ஆனா உன்னோட லட்சியம் வேறயா இருக்கு. பரவாயில்ல. இந்த புதுகருவியின் மூலமா உனக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம்தான். ஆனா நீ ஒரு விசயத்தை மறந்துடக்கூடாது"

கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தேன்.

"என்னோட இந்தக் கருவி இப்போதைக்கு 100% சரியா வேலை செய்யுது. ஆனா இதுவரைக்கும் நான் மனுசங்ககிட்ட உபயோகிச்சதில்லை. குரங்குகள்கிட்ட மட்டும்தான் உபயோகிச்சிருக்கேன். அதனால நான் என்னோட ஆராய்ச்சிக்கு உன்னை பயன்படுத்திக்கிறேன்னு நினைச்சிடக் கூடாது."

"புரியுது மாமா. நான் இந்த விசயத்துல எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கேன். இது எப்படி வேலை செய்யுது மாமா?"

"நான் இந்த கருவியை உன் தலைக்குள்ள ஆபரேசன் பண்ணி பொருத்திடுவேன். இது தனியா செயல்படுற சின்ன கம்ப்யூட்டர் மாதிரின்றதால வெளிய இருந்து எந்த சிக்னலும் இதுக்குத் தேவை இல்ல. இதோட அளவும் ரொம்ப சின்னதா இருக்குறதால ஸ்கல்ல ஓபன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. சின்னதா ஒரு ஓட்டையிலயே வேலை முடிஞ்சிடும், ஒரு மணி நேர ரெஸ்ட்க்கு பின்னால நீ எல்லா வேலையும் செய்யலாம். இதுல 6 GB அளவுக்கு மெமரி இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு சின்ன ப்ரோகிராமும் இருக்கு. டெஸ்ட்டுக்கு முதல் நாள் நான் இதை உன் தலையில வெச்சிடுவேன், உன் டெஸ்ட்டுக்குத் தேவையான எல்லா விசயங்களோட‌."

"அது மறுபடியும் எப்ப எடுப்பீங்க மாமா?"

"தேவையே இல்லை. இது சரியா 24 மணிநேரம்தான் வேலை செய்யும், அதுக்கப்புறம் தானா கரைஞ்சிடும், கரையாத பாகங்கள் எல்லாம் உன்னோட கழிவுகள் வழியா வெளியேறிடும். அதுக்கப்புறம் நீயே சத்தியம் பண்ணி சொன்னாலும் எந்த கொம்பனாலயும் நிரூபிக்க முடியாது"

"அட்டகாசம் மாமா. என்னால நம்பவே முடியலை"

அமைதியா சிரித்தார் மருதமூர்த்தி மாமா.

"மாமா, நான் ஒரு விசயம் சொல்லணும். உங்க கூட இருக்குற எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எவ்வளவு உழைக்கிறீங்க, எவ்வளவு திறமையானவர்னு. ஆனா உங்களோட பல வெற்றிகள் கே.கே. அங்கிளுக்குத்தான் போகுது. நீங்க வேலை செய்றீங்க ஆனா அவர் பேர் தட்டிட்டுப் போறாரு. "

மாமாவின் முகம் மாறியது, கண்டிப்பாக அவர் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது.

"மன்னிக்கணும் மாமா. அப்பா இருந்தவரைக்கும் பலதடவை இதைப்பத்திப் பேசியிருக்காரு, நீங்க ரெண்டு பேருமே அவருக்கு நல்ல நண்பர்களா இருந்தாலும். ஏதோ சொல்லணும்னு தோணுனது அவ்வளவுதான் மாமா"

"ஹே..மை பாய்... இதெல்லாம் பத்திக் கவலைப்படாதே. வர வியாழக்கிழமை சாயங்காலம் என் ஆய்வுக்கூடத்துக்கு வந்துடு. அதுக்கு முன்னால இன்னிக்கு வீட்டுக்குப் போன உடனே எனக்கு உன்னோட ஸ்டடி மெட்டீரியல் எல்லாத்தையும் மெயில் அனுப்பிடு"

"கண்டிப்பா மாமா. மீராவை கேட்டதா சொல்லுங்க. பை"

எல்லாம் எதிர்பார்த்தபடி சென்றது. எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆபரேசன் முடிந்தது. அங்கேயே ஒருமுறை சாம்பிள் டெஸ்ட் எழுத எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வந்து விழுந்தது, மந்திரத்தில் மாங்காய் விளைந்தது போல.

மறுநாள் போட்டித்தேர்விலும் அட்டகாசமாக எழுதினேன். கண்டிப்பாக முதல் இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளியே வந்து முதல் வேலையாக மாமாவிற்கு போன் செய்தேன். மாலை வந்து பார்க்குமாறு கூறினார்.

சந்தோசமாக வந்து பைக்கை எடுத்த போது கண்கள் இருண்டது.. எல்லாமே இருட்டாக மயங்கி விழ ஆரம்பித்தேன்.

******

கண் விழித்த போது ஏதோ ஒரு அழுக்கான எட்டுக்கு எட்டு அறையின் கட்டாந்தரையில் மல்லாந்து இருந்தேன். ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க அதிர்ந்தேன். அது ஒரு லாக்‍‍ அப்.

தட்டுத் தடுமாறி எழுந்து அமர, கம்பிக்கு வெளியே வந்து நின்ற கான்ஸ்டபிள்

"ங்கொய்யா... உன்னப் பத்திதான்டா இன்னிக்கு பேப்பர்ல முதல் பக்கத்துல போட்டிருக்கு. படி. ஒழுங்கு மரியாதையா ஏன் பண்ணினன்னு சொல்லு"

என்றவாறே அன்றைய நாளிதழை எறிந்தார். நடுங்கும் விரல்களால் அதை பிரிக்க, அதில் இருந்த உண்மை முகத்தில் அறைந்தது.

"கல்லூரி மாணவனால் விஞ்ஞானி கிருஷ்ணக்குமார் கொலை: கொலைக்கான காரணத்தைப் போலீஸ் துப்புத் துலக்குகிறது"


*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***

Saturday, June 28, 2008

வெறும்பயல் விமர்சனங்கள் (2)

செய்தி: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பைலட்கள் தூங்கியதால் பரபரப்பு.

வெறும்பயல்: அதுக்குதான் ஃப்ளைட்ல 'குருவி' படம் போடாதீங்கன்னு சொன்னேன். கேட்டாங்களா!!

--------

செய்தி: பூரண மதுவிலக்கை கொண்டுவரக் கோரி பா.ம.க.வினர் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்பாட்டம் நடத்துவார்கள்.

வெறும்பயல்: கலந்துக்குற தொண்டர்களுக்கு பிரியாணி கிடைக்குதோ இல்லையோ குவாட்டர் பாட்டில் கிடைக்கிறதுல பிரச்சினை இருக்காது

--------

செய்தி: விலைவாசி உயர்வுப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ முடிவெடுக்காமல் கலைந்தது. மீண்டும் 29ம் தேதி கூடப் போவதாக அறிவிப்பு.

வெறும்பயல்:கண்டிப்பா 29ம் தேதி முடிவை அறிவிச்சிடுவாங்க - மறுபடியும் எப்ப பொலிட் பீரோவ கூட்டறதுன்ற முடிவை !!

-------

செய்தி: பணவீக்கம் இன்னும் அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்குத் தொடரும் என நிபுணர்கள் கருத்து

வெறும்பயல்: மொத்தத்துல பர்ஸ் வீக்கம் இன்னும் கம்மியாயிடும்ன்றீங்க. சரிதான். ஏற்கனவே ஆரஞ்சு மாதிரி இருந்த பர்ஸ் இப்ப சுருங்கி எலுமிச்சம்பழம் ரேஞ்க்கு ஆயிடுச்சி. அத எலந்த பழம் ரேஞ்சுக்கு கொண்டு வந்துடுவீங்க போல.

----------

அமெரிக்க துணைத் தூதர்: உயர் படிப்பிற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வெறும்பயல்: நம்ம ஊர் மெடிக்கல் காலேஜ்லயும் இஞ்சினியரிங் காலேஜ்லயும் கேக்கற டொனேசன விட அமெரிக்கா போய் படிக்க கம்மியாத்தான் செலவாவுன்றது படிக்கற பசங்களுக்குத் தெரியாதா என்ன?

Sunday, June 22, 2008

வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்

டிஸ்கி: இந்த பதிவில் ஒரு சில மிகச்சிறந்த பதிவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் கோபப் பட மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களின் பெயர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தாலே எனக்கு வெற்றிதான்.

மதுரை செல்லும் டெக்கான் ஏர்வேஸ் விமானத்துக்குள் ஏறுகிறார் விஜயகாந்த். "வெல்கம் சார்" என்ற விமானப் பணிப்பெண்ணிடம் "ஏதாவது அரசியல்வாதிகள் இருக்காங்களா?" என்று செக் செய்து கொள்கிறார். பணிப்பெண் "இருக்காங்க சார், அது மட்டும் இல்ல, இந்த தடவை வலைப்பதிவர் மாநாடு மதுரையில நடக்குதாம். அதனால கொஞ்சம் வலைப்பதிவர்களும் இருக்காங்க" என்கிறார். "அவங்களால நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை" என்று நினைத்துக் கொண்டே சென்று காலியான ஒரு சீட்டில் உட்கார்கிறார் விஜயகாந்த் வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியாமல்.

அருகில் இருப்பவர் "வணக்கம் சார்" என்கிறார், பார்த்தால் பண்ருட்டி ராமச்சந்திரன்.

வி: நீங்க எப்படி சார் இங்க?

ப.ரா: நீங்க வரதா சொன்னாங்க, அதுதான் நானும் ஒரு டிக்கெட் போட்டுட்டேன். ஒரு முக்கியமான விசயம். 2011ல் நம்ம ஜெயிச்ச உடனே துணை முதலமைச்சர்னு ஒரு பதவிய ஏற்படுத்தி, அதுல ஒங்க கூடவே இருக்குற ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிய போடுங்க, அது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்

வி: (மனதுக்குள்) நானே ராமு வசந்தன கழட்டி விட்டுட்டு நெம்பர் 2 இடத்துல சுதீஷ ஒக்கார வெக்க படாத பாடு பட்டுட்டு இருக்கேன். இதுல இவரு வேற (சத்தமாக) இந்த சீட் செரியில்ல, நான் பின்னால உக்காந்துக்கிறேன்..

எழுந்து பின்னால் அமர்கிறார், அருகில் பார்த்தால் சுதீஷ்..

சு: மாமா 2011 நம்ம ஜெயிச்ச உடனே பதவியேற்பு விழாவ எங்க வெச்சுக்கலாம்? மெட்றாஸ் யுனிவர்சிட்டி ஆடிட்டோரியத்திலயா? இல்ல நேரு ஸ்டேடியத்திலயா?

வி: (மனதுக்குள்) இப்பதான் குழந்தை பொறந்து தவழவே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள வயசுக்கு வர சடங்குக்கு வளையல் என்ன டிசைன்ல போடறதுன்னு இவனுக்கு கவலை. திட்டவும் முடியாது, உடனே அவங்க அக்காட்ட வத்தி வெச்சுடுவான் (சத்தமாக) எது நல்லா பெருசா இருக்கோ அதிலயே வெச்சுக்கலாம் மாப்ளே.

எழுந்து வேறு ஒரு சீட்டில் அமர்கிறார். அருகில் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவர் திரும்புகிறார்...ஓ.பி.எஸ். விஜயகாந்த் சுதாரித்து எழுவதற்குள் ஓ.பி.எஸ் விஜயகாந்த் கையை பிடித்துக்கொண்டு தனது துண்டை எடுத்து இருவரின் கையயும் மூடுகிறார்.

வி: சார்... சார்... என்ன பண்றீங்க? ஏன் என்னோட ஒரு விரல மட்டும் புடிச்சி இந்த அழுத்து அழுத்துறீங்க?

ஓ.பி.எஸ்: உஷ்.. கூட்டணி பத்தி பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்குறப்ப சத்தம் போடாதீங்க. இதுக்கு ஒத்துக்குறீங்களா இல்லயா?

வி: (மனதுக்குள்) ஒத்துக்கலன்னா விட மாட்டான் போல இருக்கே இந்த ஆளு, கை வேற இந்த வலி வலிக்குதே (சத்தமாக) ஒத்துக்கிறேன் சார், கைய விடுங்க.

கையை விடுகிறார் ஓ.பி.எஸ்.
சிரித்துக்கொண்டே ஓ.பி.எஸ்.: அப்பாடா வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு தொகுதிக்கே ஒத்துகிட்டீங்க. நான் அம்மாட்ட பேசிடறேன், உங்களுக்கு பொட்டி வந்துரும். எந்த தொகுதின்னு முடிவு பண்ணி அம்மா சொல்வாங்க, நீங்க உடனே தமிழகம் முழுசும் சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பிச்சிடுங்க.. அனேகமா உங்களுக்கு பாண்டிச்சேரி தொகுதிய அம்மா கொடுப்பாங்கன்னு நினக்கிறேன்...

விஜயகாந்த் டெரர்ராகி வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் இருப்பவர் புதிய முகமாக ஜெர்மானிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க தைரியமாக பேச ஆரம்பிக்கிறார்.

வி: வணக்கம் சார். அரசியல்வாதிங்கள பாத்தாலே பயமா இருக்கு.

அவர்: கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க "சோ" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க?

வி: (என்னாது சோ கிட்ட போய் ஆலோசனையா? விளங்குனா மாதிரிதான்) பரவாயில்ல சார், நான் அந்த சீட்ல போய் உக்காந்துக்கிறேன்.

உட்கார்ந்த பின்புதான் கவனிக்கிறார், அருகில் சுப்பிரமணிய சாமி.

சு.சாமி: இங்க பாருங்கோ.. நான் ஜெயலலிதாட்ட பேசிட்டேன், அவா உங்களுக்கு 2 சீட் தர சம்மதிச்சுட்டா. இப்படியே நாம கோயமுத்தூர் போயி அங்க இருந்து கார்ல கொடநாடு போயிறலாம். ஃப்ளைட் மதுரைக்கு போகுதேன்னு கவலப்படாதேள், இந்த ஏர் டெக்கான் பைலட் ஜெட் ஏர்வேஸ்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினதோட சி.டி. எங்கிட்ட இருக்கு, அதை சொல்லி அவாள மிரட்டி கோயமுத்தூருக்கு போக சொல்லலாம்.

வி: நான் யோசிச்சி சொல்றேன்

சு.சாமி: இதுக்கு நீங்க ஒத்துக்கலேன்னா, ஒபாமாவ தோக்கடிக்கறது எப்படின்னு உங்க மச்சான் சுதீஷ், பி.ஜே.பி வட்டச் செயலாளர்கிட்ட பேசிட்டு இருந்த சி.டி. இருக்கு, ஆதாரத்தோட வெளிய விட்டுடுவேன், பாத்துகோங்க.

(கொல்றானுங்களே) என்று நினைத்துக் கொண்டு வேறு சீட்டில் அமர்கிறார்.

அருகிலிருப்பவர்: நீங்க என்கிட்டதான் வருவீங்கன்னு தெரியும். மதுரை போனதும் அஞ்சா நெஞ்சன போயி பாத்துடுவோம். அப்படியே கிளம்பி சென்னை வந்தீங்கன்னா, மடிப்பாக்கத்துல ஒங்களுக்கு ஒரு வார்டு கவுன்சிலர் பதவி உறுதி. தேர்தல்ல நான், நம்ம உடன்பிறப்புங்க எல்லாம் உங்களுக்கு வேலை செய்றோம். உண்மைத்தமிழன்ட மட்டும் போயிடாதீங்க, அவரு அம்மா கட்சிக்காரரு..

வி: (என்னது வார்டு கவுன்சிலரா? இதுக்கு அவனுங்களே பரவாயில்லயே) ஆமா யாரு நீங்க?

அருகிலிருப்பவர்: கட்சியல உப்புமா போஸ்ட்ல இருக்குறானே இவன் வந்து கூட்டணி பத்தி பேசுறானேன்னு நினைக்காதிங்க. நான் மடிப்பாக்கத்துலயே ரொம்ப லக்கியான ஆளு..

வி: யேய் அவனா நீயி....

அலறியடித்துக் கொண்டு போய் வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் அ.இ.நா.ம.க கார்த்திக். (ஆஃப் ஆன லேப்டாப்பையே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்)

கா: அது.. வந்து... நீங்களும்... நானும்... கூட்டணி வெஷ்ஷா...நாமதான் ஜெயிப்போம்... என்...கட்சிக்காரங்க 190... தொகுதியில நிக்கறதுக்கு....ரெடியா இருக்காங்க...மீதியில ... உங்க ஆளுங்கள....நிறுத்துங்க...

வி: அது என்னா 190 கணக்கு?

கா: அது... வந்து.. கட்ஷியில... இது...வரைக்கும்... 190.... பேர்தான்.... சேர்ந்திருக்காங்க. அதுதான்....

வி: (இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேன்னே தெரியலயே)

ஃப்ளைட் முழுக்கத் தேடி சாந்தமான ஒருவர் அருகில் அமர்கிறார்.

அவர்: நீங்க யாரு?

வி: (லேசான ஏமாற்றத்துடன்) நாந்தான் விஜயகாந்த், நல்லா ஆக்சன் படம்லாம் நடிப்பேன், இப்பதான் கட்சி ஆரம்பிச்சிருக்கேன். நீங்க?

அவர்: நான் ஒரு வாத்தியார், ரொம்ப நாளா நம்ம பசங்களுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கேன். என் கையில பிரம்பு எல்லாம் இல்ல. அடிச்சு சொல்லிக் குடுக்காம அன்பா சொல்லிக் கொடுப்பேன். ஆமா இன்னும் 3 வருசத்தில நீங்க என்னாவா ஆகப் போறீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?

வி: (இவரும் அதயே நோண்டுராறே) அது வந்து..நான் சி.எம்.மா இருப்பேன்

அவர்: அது எப்படி நீங்க சொல்றீங்க? உங்க ஜாதகத்தைப் பாத்தீங்களா?

வி: அத எதுக்கு நான் பார்க்கணும்?

அவர்: எல்லாருமே அவங்கவங்க ஜாதகத்தை நல்லா மனப்பாடம் பண்ணிக்கனும். ஜோசியம் அப்படின்றது ஒரு கடல் மாதிரி, நான் அதுல உங்கள ஒரு பயணம் அழைச்சிட்ட்டுப் போறேன்.

வி: நீங்க எதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறீங்க?

அவர்: உங்களுக்கு விருப்பமில்லேன்னா வேண்டாம், கரையிலயே நின்னுக்கங்க, விருப்பம் இருக்கறவங்க மட்டும் வந்தா போதும். அலோ எங்க போறீங்க?

வி: அது... எல்லார்கிட்டயும் பேசுனதுல எனக்கு வயித்த கலக்குது, நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்.

வேக வேகமாக நடக்கிறார். பக்கத்திலிருந்து ஒரு குரல்

அவர்: வாங்க கேப்டன் வந்து என் பக்கத்தில உக்காரதுக்கு நன்றி

வி: நாந்தான் உங்க பக்கத்திலேயே உக்காரவே இல்லயே

அவர்: ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானே ஒரு சின்னப் பையன்ங்க. இப்பிடியே பின்னூட்டம் போட்டு போட்டு பழக்கமாயிடுச்சி. வருத்தப்படாதீங்க

"ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேய்" என்று ஒரு ஐம்பது, அறுபது குரல்கள் கேட்க திடுக்கிடுகிறார்,

வி: என்னங்க இப்படி கத்துறாங்க?

அவர்: அவங்கள்லாம் என்னோட கருத்த வழிமொழியுறாங்களாம், இதெல்லாம் உங்களுக்கு புரியாது. விடுங்க.

வி: (எனக்கு இன்னிக்கு சனி உச்சத்துல இருக்குன்னு நெனக்கிறேன்)

பாத்ரூம் அருகில் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர்: கவலப்படாதீங்க அய்யா. அந்த ஆளூ இந்த வண்டியிலதான் வராரு. ஏரோப்ளேன் ஸ்டேன்ட்லயே அவனைத் தூக்குறோம்.

மற்றவர்: என்ன சொல்ற குரு, ஏரோப்ளேன் ஸ்டேன்டா?

முதலாமவர்: ஆமாங்கய்யா, பஸ் நிக்கற இடம் பஸ் ஸ்டேன்ட். அதே மாதிரி ஏரோப்ளேன் நிக்கற எடம் ஏரோப்ளேன் ஸ்டேன்ட்தான. அங்கதான் நம்ம பசங்க சுமோவோட நிக்கறாங்க. தூக்கிட்டு தோட்டத்துக்கு கொண்டாந்துறோம்.

"எங்க போனாலும் விட மாட்டேன்றானுங்களே" என்று புலம்பியபடி பயத்துடன் கதவைத் திறக்கிறார் விஜயகாந்த். அது பாத்ரூம் இல்லை, பாராசூட் ரேம்ப்.

"ஆகா, இதுதான்டா இவங்க எல்லார்கிட்ட இருந்து தப்பிக்க நல்ல வழி. கீழப்போயி ஒரு லாரியோ, ஷேர் ஆட்டோவோ புடிச்சி மதுரைக்கு போயிட வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டு ஒரு பாராசூட்டை எடுக்கிறார்.

அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்,

"எங்க கூட கூட்டணி வெச்சீங்கன்னா நாம கண்டிப்பா ஜெயிக்கறோம். நீங்கதான் துணை முதலமைச்சர்"

"ஆகா, காலையில இருந்து இப்பதான் ஒரு நல்ல வார்த்தையை காதில் கேக்குறேன்" என்று நினைத்தவாறு திரும்புகிறவர் அதிர்ச்சியில் சிலையாகிறார்.

அங்கே நிற்பது விஜய டி.ராஜேந்தர்..

"நீ வேணான்ற தி.மு.க
உன்ன வேணான்னுது அ.தி.மு.க.
ஆனா உனக்காகவே காத்திருக்குயா ல.தி.மு.க

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
சிம்பு செட் பண்றான்டா ட்ரெண்ட்

எல்லா கம்பெனியிலயும் இருப்பாங்க ஜி.எம்.மு
என் கூட நீ கூட்டணி வெச்சா நாந்தாங்க சி.எம்.மு"

விஜயகாந்த்: என்னா சொன்னீங்க?

டி.ஆர்: 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த்: (அழுகிற குரலில்) இன்னொரு தபா சொல்லுங்க?

டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார்.

Saturday, June 21, 2008

வெறும்பயல் விமர்சனங்கள்

நிதியமைச்சர்: பணவீக்கம் 11.05% ஆனது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது


வெறும்பயல்: நாங்க அப்ப ஒரு வார்த்தை இப்ப ஒரு வார்த்தை சொல்லவே மாட்டோம். 8% ஆனப்ப என்ன சொன்னமோ அதேதான் இப்பவும் சொல்றோம், நாளைக்கு 15% ஆவுறப்பவும் சொல்வோம்


-----

ராமதாஸ் : தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களை கழட்டி விட்டது நியாயமற்றது


வெறும்பயல்: பின்ன என்ன? தேர்தல் கிட்ட வரும்போது நியாயமான முறையில அவரா எதிரணி கூட போய் சேருவதற்குள் தி.மு.க.விற்கு என்ன அவசரமுன்னு கேக்குறாரோ?


------


கருணாநிதி: குரு பேசியது 6 மாதங்களுக்கு முன்பே முடிந்து போன விசயம், அதை இப்போது ஏன் பேச வேண்டும் என்கிறார் ராமதாஸ். நான் கேட்கிறேன் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையை இப்போது விசாரித்து தீர்ப்பு கொடுக்கக்கூடாதா?


வெறும்பயல் : யாருப்பா அது, ஒரு வருசத்துக்கு முன்னால தினகரன் ஆபிஸ்ல நடந்த 3 கொலையவே இன்னும் விசாரிக்கலன்னு சொல்றது?


------


ஞாநி: மகளிர் மாநாட்டில் முதல் முறையாக கருணாநிதி இரு மனைவிகளுடனும் மேடையேறியுள்ளதன் மூலம், கணவன் என்ன செய்தாலும் மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான கருத்தை வலியுறுத்தி உள்ளார்.


வெறும்பயல் : இருக்கப்பட்ட மவராசன் அள்ளி முடியுறாரு. நம்ம எதுக்கு சார் வயிறெரியணும்? அது சரி இப்பல்லாம் அவரு எது பண்ணினாலும் உங்களுக்கு தப்பாவே தோணுதே, ஏன்னு யோசிச்சி பாத்தீங்களா சார்?


--------


செய்தி : ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டிலேயே 2 மாதங்களாக ஓய்வில் உள்ளார். இது அ.தி.மு.க வளர்ச்சியை பாதிக்கும் என விசுவாசிகள் கவலை.


வெறும்பயல் : அவங்களும் கார்த்திக் மாதிரி லேப்டாப்லயே எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்காங்களோ என்னவோ?


-----


குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி : சட்டமன்றத் தேர்தலையும் உடனே நடத்தி விட கருணாநிதி ஆலோசனை


வெறும்பயல் : அவர் ஒரு சாணக்யன் அப்படின்றதுக்கு இதுதான் நல்ல உதாரணம். பின்ன எல்லாரும் 2011ல் நாங்கதான் ஜெயிப்போம்ன்றாங்க, 2011ல எலக்சனே நடக்குலன்ன எப்படி ஜெயிப்பீங்க? எப்படி ஜெயிப்பீங்க? ஐ.. டனக்குனக்கா நக்கா,, டனக்குனக்கா நக்கா,,


-------


செய்தி : நடிகர் (டாக்டர்) விஜய் மன்றக் கொடியை அறிமுகப் படுத்துகிறார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி.வெறும்பயல் : 2016ல் நாந்தான் முதலமைச்சர்னு சொல்வாரோ? குருவியோட பிரம்மாண்டமான(!) வெற்றியை பார்த்து இப்படி ஒரு ஆக்சனில் இறங்கிட்டாரோ?

Thursday, June 19, 2008

எதிர்காலத்தில் இருந்து ஒரு செய்தி (சற்றே பெரிய்ய்ய சிறுகதை)

விஞ்ஞானி நீலகண்டன் பரபரப்பாக தனது உதவியாளன் அசோக்கிற்கு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இன்று அவரது கனவு நனவாகப் போகிற சந்தோசத்தை அவரது முகத்தில் பார்க்க முடிந்தது.

"சார், இப்பவாவது எனக்கு இதை எப்படி சாதிச்சீங்கன்னு சொல்லக் கூடாதா சார்?" என்றான் அசோக் ஏக்கத்துடன்.

"அசோக், கண்டிப்பா சொல்றேன். ஒரு செகண்ட் அப்படின்றத எப்படி அளக்கறதுன்னு தெரியுமா?"


"நீங்க கேக்கறது புரியலயே சார். காலத்த வெச்சிதான் மத்த எல்லாத்தயும் அளக்குறோம், ஒலி மற்றும் ஒளியோட வேகம், உங்களுக்கும் எனக்கும் எத்தனை வயசு எல்லாமே?"

"அதுதான் தப்பு அசோக். ஒளியோட வேகத்த காலத்த வெச்சி அளக்குறதில்ல, காலத்ததான் ஒளியோட வேகத்த வச்சி அளக்குறோம், புரியற மாதிரி சொல்றேன், ஒரு செகண்ட் அப்படின்னா ஒளி 3 லட்சம் கி.மீ கடக்க ஆகற நேரம்"

"அதுதான் 8வது படிக்கிற பசங்களுக்குக் கூட தெரியுமே சார்"

"கரெக்ட். ஆனா, நீ ஒரு செகண்டுக்கு ஒன்றரை லட்சம் கி.மீ. வேகத்துல ட்ராவல் பண்றதா வச்சிக்குவோம், இப்ப உனக்கு ஒளியோட வேகம் எவ்வளவு?"

"நான் ஒன்றரை லட்சம் கி.மீ. வேகத்துல போறதுனால, என்னோட ராக்கெட் உள்ளாற ஒளி ஒன்றரை லட்சம் கி.மீ, வேகம்தான் இருக்கும், சரியா?"


"தப்பு.....என்ன பார்க்கிற...அப்பவும் ஒளியோட வேகம் கான்ஸ்டன்ட்தான். உன்னோட வேகத்துல, உன் ராக்கெட் உள்ளாற 3 லட்சம் கீ.மீ கடக்க ஒளிக்கு 2 செகண்ட் தேவைப்படும், ஏன்னா நீ ஏற்கனவே ஒன்றரை லட்சம் கி.மீ வேகத்துல போயிட்டு இருக்குற. சரியா? "

"சரி மாதிரிதான் தோணுது"

"இப்போ ராக்கெட் வெளியில இருக்குறவங்களுக்கு 2 செகண்ட் ஆகியிருக்கும், ஆனா உனக்கு ஒரு செகண்ட்தான் ஆகியிருக்கும், அதுதான் தியரி, அதாவது, நீ அந்த ராக்கெட்ல 5 வருசம் சுத்திட்டு கீழ இருங்குனா உனக்கு 5 வயசுதான் கூடி இருக்கும் ஆனா எனக்கு 10 வயசு கூடியிருக்கும் - அதாவது நீ எதிர்காலத்துல நுழைஞ்சு இருப்ப, யு வுட் ஏவ் ட்ராவல்டு இன் டு த ஃபியூச்சர்"

"ஆச்சரியமா இருக்கு சார், அப்ப ஒளி வேகத்துல ட்ராவல் பண்ணா எனக்கு வயசே ஆகாது இல்லயா?"

"யு காட் த பாயிண்ட். ஆனா இயற்கை எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வெச்சிருக்கறதால நம்மால அதையெல்லாம் கற்பனை பண்ண மட்டும்தான் முடியும். ஒரு மணி நேரத்துக்கு 30,000 கி.மீ அப்படின்ற அளவுக்குத்தான் மனுசனால இப்ப ராக்கெட்லாம் செய்ய முடியுது"

"ஆனா நீங்க எப்படி சார் சாதிச்சீங்க?"

"சொல்றேன். நான் பண்ணியிருக்கிறது எதிர்காலத்துக்கு போற மெஷின் இல்ல, இறந்த காலத்துக்கு போறது"

"வாவ்....எப்படி சார்?"

"இன்னும் கொஞ்சம் தியரி இருக்கு பரவாயில்லயா? 2 அல்லது 3 வழிமுறைகள் இருக்கு, முதல் வழி ஒளியை விட வேகமா ட்ராவல் பண்றது, இதுக்கு வாய்ப்பே இல்ல, இன்னொன்னுதான் லேசர் உபயோகப்படுத்துறது, அதுலதான் எனக்கு வெற்றி கிடச்சிருக்கு"


"அதுக்குதான் லேசர்ல பி.எச்டி. வாங்கின என்ன புடிச்சி போட்டுடீங்களா சார்?"

"கரெக்ட். லேசர் நேர்க்கோட்ல பயணிக்கும் அப்படின்றது எல்லார்க்கும் தெரியும். ஆனா லேசர் கதிர்கள் வளைக்கப்பட்டா அது இறந்த காலத்துக்கு போகும்ன்றது தியரி. எலக்ட்ரோ மேக்னடிக் சக்திய வச்சி நான் அதை சாதிச்சிட்டேன்"

"ப்ரில்லியண்ட் சார்"


"இதன் மூலமா நாம இறந்த காலத்துக்கு ட்ராவல் பண்ண முடியாது, ஆனா செய்தி அனுப்ப முடியும், ஆப்டிகல் ஃபைபர் மூலமா டேட்டா ட்ரான்ஸ்பர் பண்ற மாதிரி"

"அட்டகாசம் சார்"

"அப்படின்னா ஜெயிக்கப் போற லாட்டரி நெம்பர், எந்த ஷேர் விலை ஏறும் இதெல்லாம் நாமே ஃபியூச்சர்ல இருந்து அனுப்பி நெறய பணம் சம்பாதிச்சிரலாம், இல்லாயா சார்?"

"ஒருவேளை நானும் 30 வயசுக்காரனா இருந்தா இப்படித்தான் யோசிப்பேனோ என்னமோ? என்னோட கனவெல்லாம் இந்த மெஷின் ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் உபயோகப்படணும். இயற்கை சீற்றங்கள், தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மருந்து இதெல்லாம் எதிர்காலத்தில் இருந்து வந்தா எவ்வளவு நல்லது நடக்கும்"

"கரெக்ட் சார்"

"என்னோட இந்த 10 வருஷ ஆராய்ச்சியில் உன்னோட கடந்த 2 வருஷ உதவிய என்னால மறக்கவே முடியாது. நீதான் என்கூட இருந்து இதை உபயோகிக்க உதவி பண்ணனும்."


"கண்டிப்பா சார்"


"என்னோட ஆராய்ச்சியோட எல்லா விவரமும் இந்த கம்ப்யூட்டர்ல இருக்கு. உனக்குத்தான் ஏற்கனவே பாஸ்வேர்டு தெரியுமே. சரி பேசுனது போதும், எனக்கு பின்னால இருக்குற ஏ21 போர்ட்ல 24 ஆம்ப்ஸ் கரண்ட் செட் பண்ணு"

செய்தான்...

"இப்ப நான் இதை ஆன் செய்யப் போறேன், பார்க்கலாம் எதிர்காலத்தில இருந்து நானோ, நீயோ என்ன மெஸெஜ் அனுப்புறோம்னு" - நீலகண்டன் உற்சாகமாக கத்திக்கொண்டிருந்தார்.

கம்ப்யூட்டர் செய்திகளை வரி வரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.


-எதிர்காலத்தில் இருந்து ஒரு செய்தி

-தேதி 18 ஜூன் 2018-அனுப்புனர் - அசோக்

"இன்னயில இருந்து சரியா 10 வருஷம் கழிச்சி நீ மெசேஜ் அனுப்பிட்டு இருக்க அசோக்"


- இன்றைய டைரிக் குறிப்பு

- இன்று எனக்கு நியூயார்க் லாட்டரியில் 360 மில்லியன் டாலர் பரிசு அடித்துள்ளது.


அதிர்ந்தார் நீலகண்டன், அவரது கண்களில் ஆத்திரம் மின்னியது. கம்ப்யூட்டர் தொடர்ந்து செய்தியை கொடுத்துக் கொண்டே இருந்தது.


- அது தவிர ஒரு முக்கியமான கூட்டம் வேறு.

- 10 வருசத்துக்கு முன்னால் தனது ஆராய்ச்சிக்கூடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட எனது புரபசர் நீலகண்டனின் 10வது நினைவு நாள் கூட்டத்தில் வேறு கலந்து கொள்ளவேண்டி இருந்தது.

திடுக்கிட்டு திரும்பினார் நீலகண்டன். கையில் துப்பாக்கியுடனும் வாய் நிறைய புன்னகையுடனும் நின்றிருந்தான் அசோக்,

"மன்னிச்சிடுங்க புரபசர், இப்படிப்பட்ட அரிய கண்டுபிடிப்ப கோட்டை விடாம இருக்க எனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியல" என்று கூறிக்கொண்டே ட்ரிக்கரை அழுத்தினான்.

சென்னையில் ஒரு மழைநாளில்.... (சிறுகதை)

இன்று எனக்கு திருமண நாள். வழக்கம்போல காலையில் எழுந்து, தலைக்கு குளித்து, வேட்டி சட்டை உடுத்தி, மனைவியை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்து, காலை டிபன் முடித்து, புது சட்டை, பேன்ட் மற்றும் மனைவி வற்புறுத்தி வாங்கிக் கொடுத்த குளிர் கண்ணாடி அணிந்து, மனைவியை முத்தமிட்டு வீட்டை விட்டு கிளம்பும் வரை எல்லாமே நன்றாகத்தான் நடந்தது.

வண்டியை கிளப்பும்போதுதான் முதல் சோதனை. டயர் பங்ச்சர்.
"போறப்ப மெக்கானிக் கிட்ட சொல்லிட்டு போறேன். வந்து கழட்டிடு போய் சரி பண்ணி கொண்டாந்து மாட்டிடுவான். காசு கொடுத்துடு" என்று சொல்லிவிட்டு ஓட்டமும், நடையுமாக கிளம்பினேன். கடந்த 2 நாள் மழைக்குப் பிறகு லேசாக தூறிக் கொண்டிருந்தது.

மெக்கானிக் ஒரு டி.வி.எஸ் 50ன் பின் டயரை சீரியஸாக கழட்டிக்கொண்டிருந்தான். எப்போதும் தூரமாக பார்த்தாலே எல்லா பல்லும் தெரிய சிரிப்பவன், இன்று அருகிலேயே நின்று கொண்டிருப்பது தெரிந்தும், தலையை தூக்கமலேயே "சொல்லுங்க சார்" என்றான். "எல்லாம் வளர்ந்துட்டானுங்க" என்று மனதிலேயே நினைத்துக் கொண்டு, வண்டியை சரி செய்ய சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

எதிரில் நடராஜன் சார் வந்து கொண்டிருந்தார். ரிடயரட் அரசு அலுவலர். அவரது மகனும் நானும், சிறு வயது நண்பர்கள் என்பதால், எங்கே பார்த்தாலும் விசாரிப்பார். பார்த்தவுடன் புன்னகைத்தேன். அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தவர், "ஒரு முக்கியமான வேலை, அப்புறம் பேசறேனே" என்று வேகமாக விலகி நடந்தார். பேருந்தில் ஏறி உட்கார்ந்தால், கண்டக்டரும், முறைப்பது போலவே தெரிந்தது. "எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க" என்று நினைத்துக் கொண்டேன்.

அலுவலகம் சென்றால், வாட்ச்மேனும் வணக்கம் வைக்காமல் திரும்பிக் கொள்வதாகவே பட்டது. பியூன் ராமசாமியும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றான். பக்கத்து டெஸ்க் பார்த்தசாரதியும் வணக்கம் கூட சொல்லாமல் உர் என்று பார்த்தான். ஏதோ புரிவது போல் இருந்தது - ப்ரோமசன் ரிசல்ட் வந்திருக்கும். ரெகமண்டேசன் லிஸ்டில் நானும் எனக்கு சீனியரான முருகேசன் சார் பேரும் இருந்தது, அனேகமாக எனக்கு மட்டும் வந்திருக்கும், அதனால எல்லாம் கடுப்புல இருக்கானுங்க!

கண்ணாடியை கழற்றிவிட்டு முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு யோசித்தேன். ம்ம்ம் எப்படி இதையெல்லாம் சமாளிப்பது? ஏற்கனவே எனக்கு நண்பர்கள் கம்மி, இதுல ஆபிஸ்ல வேற எல்லாம் எதிரி மாதிரி ஆனா என்ன செய்வது?

ஒன்றுமே தோணாமல், மேஜை மேலிருந்த ஃபைல்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தேன். ராமசாமி மெல்ல அருகில் வந்தான் "சார், நீங்க நல்லா இருக்கீங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?" என்றான். "ஏன் ராமசாமி அப்படி கேக்குறீங்க?" என்றேன். அவன் சொன்ன பதிலில் எல்லாம் புரிந்தது - " இல்ல கூலிங் கிளாஸ் போட்டிருந்தீங்க, 'மெட்ராஸ் ஐ'ன்னு நெனச்சேன்"

Tuesday, June 17, 2008

நான் ஏன் எழுதுகிறேன்?

எல்லாருக்கும் வணக்கமுங்க.

ஏறத்தாழ 6 மாசமா தமிழ் வலைப்பூக்களை படிச்சிட்டு இருந்தாலும், இதுவரைக்கும் நான் எந்த பதிவுமே போடாம இருக்கிறதுக்கு ரொம்ப முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கு, அதை நான் கடைசியா சொல்றேன்.

முதல்ல என்னை எது இந்த பக்கம் இழுத்ததுன்னு சொல்லியே ஆகணும். வார வாரம் எது நடந்தாலும், எனக்கு விகனட படிச்சிடனும். அந்த விகடன்ல அப்பிடி என்ன இருக்குன்னு எப்ப பாத்தாலும் அதை தொறந்து வச்சிக்கிட்டு உக்காந்துகிட்டு இருக்கீங்கன்னு தங்கமணி கத்துனாலும், நம்ம அதை கண்டுகிறது இல்ல.

ஏற்கனவே ப்ளாக் பத்தி தெரிஞ்சிருந்தாலும், அதுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லன்னு, கூட்டணிய பத்தி கவலப்படாத குரு கணக்காத்தான் இருந்தேன். ஒரு தடவ விகடன்ல இட்லிவடைய பத்தி போட்ருந்தாங்க. சாப்பாட்டு மேல இயல்பாவே இருக்குற ஒரு ஈர்ப்பு என்ன இந்த ப்ளாக் பக்கம் இழுத்திச்சி. படிச்சி பாத்தா நக்கல், நையாண்டி எல்லாமே இருக்க, அதை தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.

அப்படியே பின்னூட்டம் வழியா மத்த வலைஞர்கள் (ஐ... இந்த வார்த்தை நல்லா இருக்கே) அறிமுகம் கெடச்சது. லக்கிலுக், ச்சின்னப்பையன், டோண்டு சார், பரிசல்காரன், லதானந்த் இப்படி.... நாம ஒண்ணும் பெரிய இலக்கியவாதி இல்லன்றதாலும் (அது புரியாததாலும்) நெறய முக்கியமான பேர்லாம் நம்ம லிஸ்ட்ல விட்டு போயிருக்கும். திட்டாதீங்க...

இது வரைக்கும் படிச்சதுலயே என்ன ரொம்ப கவர்ந்தது...

இட்லிவடை - நக்கலும், நையாண்டியும் (முக்கியமா மஞ்ச கலர்ல பட்டையடிச்சு குடுக்கிற எல்லாமே 'டவுட் தனபாலு' ரேஞ்சுக்கு இருக்கும்)

லக்கிலுக் - நகைச்சுவை கலந்த எழுத்து நடை (மறக்கமுடியாத பதிவு - 'கிளிஞ்சது போ')

ச்சின்னப்பையன் - சின்ன சின்ன ஐடியாக்கள் (சென்னையை சிங்காரச் சென்னையா ஆக்கறது எப்படின்ற மாதிரி)

டோண்டு ராகவன் - நான் இப்படித்தான் அப்படின்னு டோன் செட் செய்றது - இது இந்த காலத்துல ரொம்ப முக்கியம். அப்புறம் ரசிக்கிற மாதிரி உலக விசயங்கள சொல்றது..

பரிசல்காரன் - நல்ல புரியுறமாதிரி அதே சமயம் சீரியஸான கதை, கவிதை..

லதானந்த் - குறுகிய காலத்தில தனக்குன்னு ஒரு இடம் புடிச்சது. ஆச்சரியமா இருக்கு, எப்படித்தான் இவ்ளோ எழுதுறாருன்னு, கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைன்றதால நெறய டைம் கிடைக்குதா அங்கிள்? கோச்சுகாதிங்க :) என்னோட அப்பாவும் உங்க டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சு ரிடயர் ஆனவர்தான்

இனிமே நானும் ரெகுலரா எழுதலாம்னு இருக்கிறேன் (வாரத்துக்கு ஒரு பதிவாவது), பாக்கலாம் முடியுதான்னு. படிச்சிட்டு நல்லா இருக்கா, மொக்கயான்னு பின்னூட்டம் போடுங்க, இம்ப்ரூவ் பண்ணிக்கிறேன்.

முடிக்கிறதுக்கு முன்னால, இத்தனை நாளா எழுதாம இருக்கிறதுக்கு காரணம் சொல்றதா சொல்லியிருந்தேனே, சொல்றேன்..... வேறென்ன..... சோம்பேறித்தனம்தான்...