Monday, October 13, 2008

சுழல் கதைகள் (5 இன் 1)

டிஸ்கி: இந்த பதிவுல மொத்தம் 5 சின்னக்கதைகள் இருக்கு. ஒவ்வொரு கதையும் தனித்தனி. அதனால போர் அடிச்சா அப்படியே மீதியை விட்டுட்டு பின்னூட்டம் போட போயிடலாம். ஒவ்வொரு கதையோட முடிவும் அடுத்த கதையோட ஆரம்பம் அப்படின்ற மாதிரி எழுதியிருக்கேன். நல்லாயிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.

***

இதயத்திற்குள் நுழைந்த துப்பாக்கி குண்டை கைகளால் அழுந்தியபடி சரிந்த சரவணபாண்டியன் நம்ப முடியாமல் எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.

"என்னடா பாக்குற? பி.ஏ.கிட்ட மினிஸ்டரு பணம் குடுத்துவிட்டதா சொன்னாரு, ஆனா இவன் சுட்டுட்டானேன்னா!! ஹா..ஹா..ஹா.. எதிர்க்கட்சியில இருந்து இங்க வந்து நீ சேந்ததே ஏதாவது ஆதாயம் கிடைக்குமுன்னுதான். அதே மாதிரி உன்னால என்ன ஆதாயம் கிடைக்குமுன்னு எங்க மினிஸ்டரும் யோசிக்க மாட்டாரா? நீ இங்க வந்து சேந்தது இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரியும், இப்ப உன்னை கொன்னது எதிர்கட்சிக்காரன்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. அது எங்களுக்கு வரப்போற தேர்தல்ல உதவப்போகுது. வரட்டா?"

என்றவாறே கிளம்பி சென்றவனை பார்த்தவாறே கண்களை மூடினார் சரவணபாண்டியன்.

அமைச்சருக்காக அரைமணி நேரம் காத்திருந்து அவர் வந்தவுடன் நடந்ததை விளக்கி பணம் வாங்கிக் கொண்டு கிளம்பும்போது கதவு தட்டப்பட்டது. திற‌ந்த அமைச்சர் இன்ஸ்பெக்டரை பார்த்து அதிர்ந்தார்.

"ஆளுங்கட்சி பணம் கொடுத்து ஆளுங்களை இழுக்குறத நிரூபிக்கறதுக்காக எதிர்கட்சிக்காரங்க ஏற்பாடு பண்ணின ஸ்டிங் ஆபரேசன்தான் சரவணபாண்டியன் உங்க கட்சிக்கு வந்து சேர்ந்தது. நீங்க பணம் குடுக்குறத படம் புடிக்க உங்களுக்கே தெரியாம வெச்சிருந்த வீடியோ கேமிரால உங்க பி.ஏ. சுட்டதும், பேசுனதும் தெளிவா பதிவாயிடுச்சி. சி.எம் உங்களை அமைச்சர் போஸ்ட்ல இருந்தும், கட்சியில இருந்தும் நீக்கிட்டாரு. போலாமா சார்?"

என்றவாறே கை விலங்கை காட்டியவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் முன்னாள் அமைச்சர்.

******

கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட அவனை பயத்துடன் பார்த்தனர் கோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும். அவன் பீட்டர் சக்திவேல். தென்னிந்தியாவின் மிகக் கொடூரமான தீவிரவாதி. 2003ல் முத்துநகர் எக்ஸ்பிரஸிலும், 2004ல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், 2005ல் சென்னை வடபழனி பேருந்திலும் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே. அதன் சூத்திரதாரி.

கடந்த மாதம் அரிசிக் கடத்தலை தடுக்க நடந்த இரவு நேர சோதனையில் காவல்துறையே நம்பமுடியாத வகையில் மாட்டியவன். எதற்காக அவன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தான் என்பது புரியாமல் காவல்துறை பெருந்தலைகள் இல்லாத முடியை பிய்த்துக்கொண்டிருப்பது அறிந்ததே.

இதோ ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை வந்துவிட்டு சென்னை திரும்பும் காவல் வாகனத்தில் 5 காவலர்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.

'இன்னிக்கு மதுரையில அழகர் ஆத்துல இறங்கப்போறாரு. அந்த இடத்துல வெக்கிறதுக்காக நான் பாம் செஞ்சு குடுத்துட்டு வர்றப்பதான் என்னை புடிச்சிட்டீங்க. இதோ நான் மதுரையில இருந்து கிள‌ம்பிட்டேன். இன்னும் 2 ம‌ணி நேர‌த்துல‌ வெடிக்க‌ப்போகுது. போங்க‌டா போக்க‌த்த‌வ‌னுங்க‌ளா'

என்று நினைத்துக் கொண்டிருந்த‌ அதே வேளையில், அவ‌ன் போலீஸில் சிக்கிய‌தும், போலீஸுக்கு பயந்த அவன் கூட்டாளி வெடிகுண்டை ஒரு பப்ளிக் டாய்லெட்டில் வீசிவிட்டு சென்றதும், அடுத்த பத்து நிமிடத்தில் உணவகத்தில் நிற்கும்போது டாய்லெட் செல்லும் அவன் வெடித்து சிதறப்போவதும் தெரியாம‌ல் ச‌ந்தோச‌ப்ப‌டும் அவ‌னை நினைத்து அழ‌க‌ர் சிரித்துக் கொண்டிருந்தார்.

****

"ஐயா.. எதுக்குயா சிரிக்கிறீங்க?"

"என்னா சோலை.. வறட்சி நிவாரணம் பணம் முழுசும் உனக்கே குடுத்துட்டா அப்புறம் எங்களுக்கு நிவாரணம் யாரு குடுக்குறது? ஒனக்கு ஏக்கருக்கு ரெண்டாயிரம்னு மொத்தம் பத்தாயிரம் சாங்ஷன் ஆகியிருக்கு, வெளியில போயி முருகன் இருப்பான், அவன்கிட்ட ஆயிரம் ரூபா குடுத்துட்டு வா, ஒனக்கு நான் டோக்கன் குடுக்குறேன்"

வெளியில் வந்த சோலை "படுபாவிங்க, 6 மாசமா மழையே இல்லாம கடவுள்தான் கழுத்தறுக்குறாருன்னா, கவர்மென்டு குடுக்குற வறட்சி நிவாரணத்தைக் குடுக்குறதுக்கு இவனுங்களும் கழுத்தறுக்கிறானுங்க" என்று நினைத்தவாறே, கடன் வாங்கி வந்திருந்த ஆயிரம் ரூபாயை ஆபிசர் சொல்லியவனிடம் கொடுத்து, பின் டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தான்.

'இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும். ஆண்டவனே! எவ்ளோ நல்லா விவசாயம் நடந்துட்டு இருந்த கிராமம். மழை சரியா பேஞ்சு முப்போகமும் வெளஞ்சி கிராமமே பச்சப் பசேல்னு இருக்குமே! கொஞ்சம் கொஞ்சமா மழை கொறஞ்சி இந்த வருசம் சுத்தமா இல்லாம போச்சே.. ஏன் எங்கள இப்படி சோதிக்கிற' என்று புலம்பியவாறே வறண்டு கிடந்த ஏரிக்குள் நுழைந்தான்.

லேசாக வானம் கறுக்க ஆரம்பித்திருந்தது, அவன் அணிந்திருந்த அழுக்கான மெல்லிய சட்டையைத் தாண்டி லேசான குளிர் தெரிய ஆரம்பித்தது. த‌லையைத் தூக்கி வான‌த்தைப் பார்த்த‌வ‌ன் ஆண்ட‌வ‌னை வேண்ட‌ ஆர‌ம்பித்தான்..

'ஆண்ட‌வா! இன்னும் ரெண்டு கிலோமீட்ட‌ர் ஊருக்கு போக‌ணும். இந்த பணத்தை நம்பிதான்யா எங்க எதிர்காலமே இருக்கு. ஏரியைத் தாண்டி வூட்டுக்கு போற‌ வ‌ரைக்கும் ம‌ழை வ‌ராம‌ நீதாம்பா காப்பாத்துணும்'

****

"என்னாது நான் உன்ன காப்பாதுறதா? நான் என்னைய‌ காப்பாத்திக்கவே போராடிட்டு இருக்கேன்" என்றான் மாணிக்கம்.

"அதில்ல மச்சான்.. உனக்குதான் தெரியுமே நான் அந்த சீட்டு கம்பெனியில வேலைக்கு சேந்தது. எங்க குப்பத்துல என்னைய எல்லாருக்கும் நல்லா தெரியும்ன்றதால எல்லார்கிட்டயும் பேசி சீட்டு சேத்து விட்டேன். எனக்கும் கமிஷன் கிடைச்சிது. அந்த நாதாரி இப்படி ஒரே நைட்ல எல்லா பணத்தையும் எடுத்துட்டு ஓடுவான்னு எனக்கென்னா தெரியும்?"

"சரி.. சரி.. அழுவாத.. அதுக்குதான் நான் மொதல்லயே சொன்னேன். இப்பல்லாம் ஏமாத்துறவனுங்க டைரக்டா செய்யுறதில்ல, இப்படி அந்த ஏரியாவுல நல்ல பேர் இருக்குறவனா பாத்து புடிச்சு போடுறானுங்க.. நீயும் அதுக்கு பலிகடா ஆயிட்ட"

"ஆமா மச்சான்"

"சரி.. ஒண்ணு பண்ணு.. சாப்டுட்டு போய் நம்ம போட்டாண்ட நில்லு, கபாலி வருவான், இன்னிக்கு அவன் மட்டும்தான் கடலுக்கு போறான். நீயும் அவன் கூட போயிட்டு வா. தரையில இருக்குறது ஒனக்கு இப்ப சேஃப் இல்ல"

ஒரு மணிநேரம் கழித்து கபாலி வந்தான். அவனிடம் விவரம் எதுவும் சொல்லாமல் ஒரு சிறிய பிரச்சினை என்று மட்டும் சொல்லி, அவனுடன் படகில் கிளம்பினான்.

கபாலியும், மச்சானும்தான் சேர்ந்து இந்த படகை வாங்கினார்கள். கபாலி ரொம்ப நல்லவன். 15 வருசமாக இருவரும் சேர்ந்து தொழில் செய்தாலும் இதுவரை தகராறு எதுவும் வந்ததில்லை. ஆனால் அவன் ஒரு வாயாடி.. பேசிக்கொண்டே வந்தான். 2 மணிநேரத்திற்கு பிறகு மெதுவாக கபாலி கேட்டான்..

"ஏன் முத்து.. நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் புதுசா சீட்டு கம்பெனி ஆரம்பிச்சிருக்காரு.. நல்ல மனுசந்தான்.. நானே சேத்து உடறேன்.. நீ வேணா ஒரு அம்பதாயிரம் ரூபா சீட்டு போடேன்"

****

"என்னது? இன்னொரு சீட்டு போடுறதா? என்னடா விளையாடுறியா?" என்று மெதுவான குரலில் கேட்டான் கிருஷ். அவர்கள் இருந்தது நகரின் பிரபலமான காஸினோவின் ப்ளாக் ஜாக் டேபிளில்..

"விளையாண்டுட்டுதானேடா இருக்கோம்" சிரித்தான் சித்தார்த்.

"ஏற்கனவே 18 இருக்கு, இன்னும் கார்டு கேக்குற, ரெண்டு, மூணு இல்லை ஏஸ் வரலைன்னா நீ தோத்துடுவ"

"பரவாயில்ல, டிரை பண்ணுவோம், லைஃப்ல ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாதுடா. அதுவும் இது என்னா சுண்டைக்கா, ரெண்டாயிரம் டாலர்தான, போயிட்டு போவுது"

அடுத்த சீட்டு 2 வந்தது. சித்தார்த் ஜெயித்தான். அவன், அமெரிக்க ராணுவத்திற்கு தளவாடம் சப்ளை செய்யும் மிக முக்கியமான நிறுவனத்தின் ஆர் & டி பிரிவின் மிக மிக முக்கியமான நபர். மறுநாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நடக்க இருக்கும் ரகசிய டெமோவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரிலாக்ஸேஷனுக்காக காஸினோ வந்திருந்தனர்.

"என்னமோ போடா.. உன்னை பாராட்டுறதா திட்டுறதான்னு தெரியல. ஒரு விசயம், எல்லா நேரத்திலயும் அதிர்ஷ்டம் கை குடுக்காது. பாத்து நடந்துக்க"

"கம்முனு இருடா.. சும்மா பாட்டி மாதிரி புத்தி சொல்லிட்டு" சிரித்துக் கொண்டே காரை கிளப்பினான்.

மறுநாள், புதிதாக வடிவமைக்கப்பட்ட குறைந்த எடையுடைய ஆனால் அதி நவீன துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாவையும் தடுக்கக்கூடிய கவச உடை டொமோ. கடந்த ஒரு மாதமாக எல்லா விதமாக டெஸ்டிங்கும் செய்து அறிக்கை அளித்திருந்த அவனது டீமிற்கு நன்றி சொல்லிவிட்டு டெமோ பீஸுடன் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் சித்.

"ஹாய் சித்.. ஏன் இந்த டெமோவை வெளியில வெச்சிக்கக் கூடாது. ஏன்னா ரியல் டைம் டெமோவா இருக்கணும்னு பார்க்குறோம்"

"ஷ்யூர்.. வாங்க போகலாம்" வெளியே வந்தான். மே மாத வெயில் 98 டிகிரியில் கொளுத்திக்கொண்டிருந்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

"இப்போ நானே இதை போட்டுக்கிறேன்."

"ஏன் வேற யாராவது..."

"அப்படி பண்ணினா, இந்த ப்ராடக்ட் மேல எனக்கே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்" ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தான் சித்.

"நீங்க என் உடம்பை குறி பாத்து சுடுங்க ஜாக்.."

"நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சித்" என்று கூறியவாறே குறி பார்த்து சுட்டான் ஜாக்.

அவன் டிரிக்கரை அழுத்திய வினாடி, சித்தார்த்திற்கு முதல் நாள் டெஸ்ட் ரிப்போர்டில் படித்த ஃபெய்லியர் கேஸஸ் லிஸ்ட் நினைவுக்கு வந்தது.

'வெப்பநிலை 95 டிகிரிக்கு அதிகமாகவும் ஈரப்பதம் 30%க்கு அதிகமாகவும் செல்லும்போது கவச உடையில் உள்ள ஃபைபர் நெகிழ்ந்து துப்பாக்கி குண்டை தடுக்கும் சக்தியை இழக்கிறது. 116க்கு 1 முறை இந்த நிகழ்வு காணப்பட்டது'

வெப்பநிலை கிட்டதட்ட 100 இருக்கும். தன் வேர்வையில் ஏற்கனவே உடை முழுதும் நனைந்துள்ளது. அதிர்ந்து போய் பார்த்தான். துப்பாக்கி குண்டு அவன் நெஞ்சுக்கு நேராக வந்துகொண்டிருந்தது.

(இப்போ முதல் கதையை படிக்க ஆரம்பிங்க)

52 comments:

Anonymous said...

ஐந்துமே கலக்கல். அதிலும் அந்த மூன்றாவது கதை(வெள்ள நிவாரணம்) அருமை! படித்தவுடன் கதையின் முதல் வரியை என்னைப் பார்த்துக் கேட்கத் தோன்றியது! :-)

said...

அசத்தலாக எழுதி இருக்கிங்க, ஒரு கதையை எழுதிவிட்டு அடுத்த கதைக்கு மாசக் கணக்கில் யோசிப்பவர்களும் இருக்கிறார்கள், ஐந்து கதையையும் ஒன்றாகப் போட்டு கலக்கிட்டிங்க,

முடிவின்... ஆரம்பம் .....சூப்பர் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

மீ த தேர்டா?

said...

அட இப்பதான் பரிசல் அண்ணே நீங்க ரொம்ப நாளா எழுதாம இருக்கீங்கன்னு ஓரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்காரு. அங்க போய் பாருங்க :))

said...

சரிப்பா பதிவ படிச்சுட்டு அப்புறம் வர்றேன்.

said...

கலக்கல்!!!!

சுழல் கதைகள் ஐடியாவும் சூப்பர், கதைகளும் சூப்பர்!!!!

said...

ஓ இதான் சுழல் கதையா ... கலக்கலா இருக்கு வெண்பூ

said...

இதுக்கு ஐந்து கமெண்ட் போடணுமா??

said...

ஐந்துமே கலக்கல்.

said...

என்னா டேலண்டுய்யா ஒனக்கு! ச்சான்ஸே இல்ல!


பதிவுலகல சிறுகதைமன்னன் நீங்கதான் பார்ட்னர்.

நீங்க சொன்னதிலிருந்தே, எப்படா வரும்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். எதிர்பார்ப்பை வீணாக்கல.

அஞ்சுமே, அஞ்சு தளத்துல இருக்கறது அபாரம்!

said...

//கோவி.கண்ணன் said...

அசத்தலாக எழுதி இருக்கிங்க, ஒரு கதையை எழுதிவிட்டு அடுத்த கதைக்கு மாசக் கணக்கில் யோசிப்பவர்களும் இருக்கிறார்கள், //

படிக்கற எல்லாருமே ‘என்னைப் பத்தி கோவி சொல்லியிருக்காரு’ன்னு நெனைக்கவைக்குது!

ஹா..ஹா.ஹ்ஹா!
:-)

said...

கதை கலக்கலா இருக்குங்க,அசத்தலா எழுதி இருக்கீங்க..

said...

Super !!! Very Nice Attempt !!!

said...

லிங்க் கதை 1 டூ 2 : சுமார்
லிங்க் கதை 2 டூ 3 : நல்லாருக்கு
லிங்க் கதை 3 டூ 4 : நைஸ்
லிங்க் கதை 4 டூ 5 : வெரி நைஸ்
லிங்க் கதை 5 டூ 1 : கலக்கிட்டீர் ஓய்!! ஃபீஈஈஈ(விசிலடிக்கிறேனாக்கும்!!!);-))

said...

வெண்பூ.. கலக்கல்.. இவ்வளவு திறமையை எப்படி அடக்கி வச்சுகிட்டு பதிவு போடுறதுல தாமதப்படுத்துறீங்க.. நிறைகுடம் தத்துவமா??

3வது கதை அருமை.. சுழலுக்கு ஏற்ப சூழல சுழட்டுனது ரொம்ப அருமை..

நர்சிம்

said...

வெண்பூ,

உன் விஞ்ஞானக் கதைகளைப் பார்த்து அசந்தவன் நான். இந்தச் சுழல் கதைகள் ஆதலால் பெரிய திகைப்பு தரவில்லை. உன் திறமைக்கு இது ஒரு உதாரணம். இன்னும் நிறைய எழுதவேண்டும் நீ. ஆயினும் உனது தளம் உனக்கே இன்னும் பிடிபடவில்லை என்பது என் எண்ணம். நிறைய எதிர்பார்ப்புகளுடன்

அனுஜன்யா

Anonymous said...

வெண்பூ,

ரொம்ப நல்லா இருக்குங்க.

ஒரு பிரபல வார இதழ்ல கதைன்ற பேர்ல போடற மொக்கை தாங்க முடியல. :-((
அந்த கதையெல்லாம் விட உங்களுது ஆயிரம் மடங்கு நல்லாருக்கு

said...

கென் எழுதிய 'வராமலிருந்திருக்கலாம்' என்ற கவிதையை நினைவு செய்தது மூன்றாவது கதை. உங்கள் வாசிப்பிற்காக இதோ:

//சூரியனை விரட்டிட்ட‌ மழைநாளில்
ஈரம் ஒட்டிய ஆடையுடன்
ஏதும் நிகழாத வண்ணம்
குடை மடக்கி போகிறவளும்

சேறு பூசிய முகத்துடன்
ஆறிப்போன டீ குடிப்பவனும்
ஆழ்ந்து யோசிக்கிறார்கள்

இன்றைக்கு வராமலிருந்திருக்கலாம்
மழையென்று

ஏதோ ஒரு நாளின்
உச்சி வெயில் தாளாமல்
மழை வந்திருக்கலாம்
என்றும் யோசித்தவர்கள்

வருகின்ற காலம் எதுவும்
பொருந்தவில்லை
வந்தபின்னும்//

அனுஜன்யா

said...

வெண்பூ
கதைகள் அனைத்தும் சூப்பர்.
என் வோட்டு first and last கதைக்குதான்:)

said...

சுழல் கதைகள்-புதுமையான முயற்சி. அதிலும் ஐந்து கதைகளுமே அற்புதமாக அமைந்து விட்டன. வாழ்த்துக்கள் வெண்பூ. இது போல இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

said...

யப்பா வெண்பூ -> பின்னீட்டீங்க.... எல்லா கதைகளும் சூப்பர். அடிக்கடி எழுதுங்க இதே மாதிரி....

said...

சூப்பர்:):):)

said...

நீங்க சிறில் சார் நடத்தின போட்டியப்ப எழுதியதும் சரி, இப்பவும் சரி, செமக் கலக்கலா இருக்கு. இனி அடிக்கடி கதைகளும் எழுதுங்க. சூப்பர்:):):) அந்த அஞ்சாவது கதைதான், ஹி ஹி, நான் எழுதுற மாதிரி இருக்கு(எப்படி வேணும்னாலும் எடுத்துக்கங்க, எப்படி நம்ம வித்தியாசம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

said...

//ஐந்துமே கலக்கல்.//

சிவாண்ணே, இதெல்லாம் பதிவை படிக்கறவங்க சொல்ல வேண்டியது:):):)

said...

me the 25th

said...

//போர் அடிச்சா அப்படியே மீதியை விட்டுட்டு பின்னூட்டம் போட போயிடலாம்.//

அவ்ளோ நல்லவரா நீங்க

said...

அட க்ரைம் கதை நல்லாருக்கே

said...

இரண்டாவது கதை!
குழப்பமாக இருக்கிறது
அதாவது புரிந்தும் புரியாமலும்!

கூட சேர்ந்து போலிஸ்காரர்களும் ஏன் சாகனும்

said...

மூன்றாவது கதை,
நகைமுரண்

said...

சீட்டை விட இப்போதெல்லாம் மல்டி லெவல் மார்கெட்டிங் தொல்லைகள் தான் அதிகம்

said...

//
rapp said...

//ஐந்துமே கலக்கல்.//

சிவாண்ணே, இதெல்லாம் பதிவை படிக்கறவங்க சொல்ல வேண்டியது:):):)
//

சரி சரி லூஸ்ல விடுங்க!!
:))))

said...

\\வெண்பூ.. கலக்கல்.. இவ்வளவு திறமையை எப்படி அடக்கி வச்சுகிட்டு பதிவு போடுறதுல தாமதப்படுத்துறீங்க.. நிறைகுடம் தத்துவமா??
\\

10 times repeatee

said...

//வெண்பூ,

ரொம்ப நல்லா இருக்குங்க.

ஒரு பிரபல வார இதழ்ல கதைன்ற பேர்ல போடற மொக்கை தாங்க முடியல. :-((
அந்த கதையெல்லாம் விட உங்களுது ஆயிரம் மடங்கு நல்லாருக்கு

//

இந்த அனானிமஸ் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.

5 கதையிலுமே குடும்பப்பிரச்சினைகளை தொடாமல் சமுதாயப்பிரச்சினைகளை அணுகி இருப்பதற்கு முக்கிய பாராட்டுக்கள்!

Anonymous said...

Nice and superb.

said...

நன்றி.. நன்றி.. நன்றி.. இந்த கதைகள் எழுத ஆரம்பிச்சது செப்டம்பர் மாச கடைசியில. இதுவரைக்கும் நான் எழுதின 24 பதிவுலயும் அதிக நேரம் எடுத்தது இந்த பதிவுதான். ஒவ்வொரு முறையும், கதையை முடிச்சிட்டு அடுத்த கதைக்கான கருவை யோசிச்சி, முதல் கதைக்கும் அடுத்த கதைக்கும் லிங்க் குடுத்துன்னு முழுசா முடிக்க ஏறத்தாழ 2 வாரமாச்சி.

பயந்துட்டே இருந்தேன், உங்களுக்கெல்லாம் பிடிக்குமோ இல்லையோன்னு. உங்கள் ரெஸ்பான்ஸில் நெகிழ்ந்து விட்டேன். அனைவருக்கும் நன்றி..

****

பெரும்பாலானவங்களுக்கு பிடிச்ச அந்த மூணாவது கதைதான் எனக்கும் பிடிச்சிருந்தது, ஏன்னா அது மனம்மாறும் மனித இயல்பை காட்டுறதால. அனுஜன்யாவுக்கு ஒரு ஆச்சரியமான செய்தி.. அந்த கதையை முதலில் நானும் கவிதையாக(?)த்தான் யோசிச்சேன். சொல்லப்போனா நான் ரொம்ப நாள் முன்னாடியே முதல்முதலா யோசிச்ச(!!) கவிதை அது.. இங்க குடுக்குறேன்..(திட்டாதீங்க)

முரண்
------
கையில்
வறட்சி நிவாரணப் பணத்துடன்
கால்கடுக்க காத்திருந்த‌
விவசாயி
கவலையுடன் கருமேகம் பார்த்தான்..
எது முதலில் வரும்
மழையா?
பேருந்தா?

****

பாராட்டிய எல்லோருக்கும் மீண்டும் நன்றி.. நன்றி.. நன்றி.. (அசத்த போவது யாரு ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்)

said...

//கையில்
வறட்சி நிவாரணப் பணத்துடன்
கால்கடுக்க காத்திருந்த‌
விவசாயி
கவலையுடன் கருமேகம் பார்த்தான்..
எது முதலில் வரும்
மழையா?
பேருந்தா?
//

இது கதையை விட நன்றாயிருக்கிறது!!!

said...

வெண்பூ,

கவிதையும் கலக்கல். தயவு செய்து கதை எழுதுவதுடன் நிறுத்திகொள்ளவும். எங்க பொழப்பில் மண் அள்ளிப் போடவேண்டாம்.

அனுஜன்யா

said...

Super !!! Very Nice Attempt !!!

said...

Super !!! Very Nice Attempt !!!

said...

Super !!! Very Nice Attempt !!!

said...

அண்ணே கலக்கல்.... அடுத்த கதைகு கொக்கி போட்டது, ஒவ்வொண்ணுலயும் ஒரு கடைசி பரால திருப்பம், வேற வேற களங்கள்ல எழுதுனதுன்னு எல்லாமே கலக்கல்... (நாங்கள்லாம் வெட்டியா எழுதறோம் போல இருக்கே?)

Anonymous said...

இந்த கதைகளை பாராட்டலேன்னா, எந்த கதையையும் பாராட்டகூடாது! பின்னி, பெடலெடுத்துட்டீங்கண்ணே...சூப்பரப்பு!!

said...

நல்லா இருக்குங்க மூனு முடிச்சிட்டேன், மிசசம் ரெண்டு படிக்க மீண்டும் வரேன்.

said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டிருக்கேன். வந்து பாருங்க.

said...

மீண்டும் பாராட்டியதற்கு மீண்டும் நன்றிகள் யோசிப்பவர், அனுஜன்யா..

பாராட்டுக்களுக்கு நன்றி கீ, மஹேஷ், பிரகாஷ், குடுகுடுப்பை...

said...

Dear Venpu...

Wonderful. Nice try.
it
Keep up.

;-)

said...

வாங்க வசந்த். பாராட்டுக்கு நன்றி..

said...

நர்சிம் :நிறைகுடம் தத்துவமா??// நிஜமான கேள்வி. மேலும் உங்கள் நீண்ட நாட்கள் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. கற்பனைக்கதைகள் எனக்கு சுட்டுப்போட்டாலும் வருமா தெரியவில்லை. பத்திரிகை சிறுகதைகளைவிடவும் மேலான தரத்தில் இருந்தன கதைகள். பிளீஸ் நிறைய எழுதுங்கள்.. இந்த கான்செப்டும் பிரமாதம். நீங்களே யோசித்ததா? அல்லது எங்காவது மண்டபத்தில்.? (இதைப்பாராட்டாக கொள்ளவும்)

இருப்பினும் மூன்றாம் கதையின் கிளைமாக்ஸ் ரொம்பவே கதைத்தனமாக இருந்தது. பணம் நனையக்கூடாது என்பதற்காக அப்படியொரு சூழலில் இருப்பவர் மழைவரக்கூடாது என நினைப்பாரா என்பது சந்தேகமே.! கடைசிக்கதையில் டெக்னிகல் பிழை இருக்கிறதோ? (இந்த அளவில் குட்டிக்கதைகளில் உள்ளே போய் பார்க்கக்கூடாதோ?) மற்ற படி அனைத்து கதைகளும் நல்ல வேகம். பிரமாதம். வாழ்த்துகள்.!

said...

வாங்க தாமிரா.. இடைவிடாத வேலைக்கு நடுவிலயும் இவ்ளோ பெரிய பதிவை ரசிச்சி படிச்சி, விமர்சனமும் எழுதுனதுக்கு நன்றி..

said...

நானே 50 அடிச்சிக்கிறேன்.. (பின்னூட்ட கயமைத்தனம்..ஹி..ஹி..ஹி..)

said...

நல்ல முயற்சி வெண்பூ....
எனக்குப் பிடித்தது 3 ம்ற்றும் 4 வது கதைகள்...
//பணம் நனையக்கூடாது என்பதற்காக அப்படியொரு சூழலில் இருப்பவர் மழைவரக்கூடாது என நினைப்பாரா என்பது சந்தேகமே.//
சந்தேகமே வேண்டாம் தாமிரா.அட் லீஸ்ட் முதல் ஓரிரு நிமிடங்களுக்காவது அவ்வெண்ணம் ஓடும். பின்புதான் சுயநினைவு வரும்.ஆனால் அதற்குள்தான் குட்டிக்கதையை வெண்பூ புத்திசாலித்தனமாக முடித்திருக்கிறார்.

said...

வாங்க தமிழ்ப்பறவை.. வருகைக்கும், பாராட்டுக்கும், விளக்கத்திற்கும் நன்றி..