Monday, October 5, 2009

மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்

டான் பிரவுன் (DAN BROWN)... பெயரைச் சொன்னவுடனே நம் நினைவுக்கு வரும் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் நாவல்கள். அதைத்தவிர‌ அவர் இன்னும் இரண்டு நாவல்கள் (டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட்) எழுதியிருந்தாலும் அவரை உலகப்புகழ்ப் பெற வைத்தது டாவின்சி கோட் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

டாவின்சி கோட் வெளிவந்து ஏறத்தாழ ஆறு வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் அவரது அடுத்த நாவல் இன்னும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. சுமார் ஐந்து வருடங்கள் டான் பிரவுன் ஆராய்ச்சி செய்து "தி சாலமன் கீ" என்ற பெயரில் எழுத ஆரம்பித்த இந்த நாவல் "தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol)" என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

டான் பிரவுனின் எழுத்துகளின் பலமே வரலாறின் மறைக்கப்பட்ட பக்கங்க‌ளை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூலம் வெளிக்கொண்டு வருவதுதான். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் நாம் அதிகம் அறிந்திராத சர்ச் வெர்சஸ் சயின்ஸ் (Church Vs Science) பற்றியும், டாவின்சி கோடில் ஏசுநாதர் திருமாணமானவர் என்பது பற்றியும் எழுதியிருந்ததும் அந்த நாவல்கள் பெருமளவு பேசப்படக் காரணமாக அமைந்தன.

லாஸ்ட் சிம்பல் கதையிலும் ஹீரோ முதல் சொன்ன இரண்டு கதைகளில் வந்த ராபர்ட் லாங்டன் (Robert Longdon). ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் ப்ரொஃபசராக இருக்கும் புகழ் பெற்ற சிம்பாலஜிஸ்ட். தன் பணக்கார நண்பரான பீட்டர் சாலமன் அழைப்பின் பேரில் வாஷிங்டனில் ஒரு உரை நிகழ்த்தச் செல்லும் லாங்டன் அங்கு சென்றபின் அந்த அழைப்பே ஒரு பொய் என்பதை அறிகிறார்.

ஃப்ரீமேசன்ஸ் (Freemasons) என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரது நண்பரை கடத்தியிருக்கும் வில்லன், ஃப்ரீமேசன்ஸ் நூற்றாண்டுகளாக பாதுகாத்து வரும் ரகசியத்தை கண்டுபிடிக்க லாங்டன் உதவி செய்தால் அவரை விடுவிப்பதாகச் சொல்கிறான். இதற்கிடையே அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கூறிக்கொண்டு சி.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரி ஒருவரும் லாங்டனை நெருக்க, அவர்களிடமிருந்து தப்பிக்க, சி.ஐ.ஏ.வின் துரத்தல்களுக்கு நடுவே பீட்டர் சாலமனின் தங்கையுடன் வாஷிங்டன் நகரில் தப்பி ஓடும் லாங்டன் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாரா, அவரது நண்பர் மீட்கப்பட்டாரா, வில்லன் என்ன ஆனான், அது என்ன ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் என்பதை சொல்லும் கதைதான் "லாஸ்ட் சிம்பல்".

கதைச்சுருக்கம் அருமையாகத் தெரிந்தாலும், கதை கொஞ்சமல்ல நிறையவே இழுவை. ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும் கதையில் (முக்கியமாக கதை முழுவதும் 12 மணிநேரத்திற்குள் நடக்கிறது) டான் பிரவுன் முடிந்தவரை சொதப்பியிருக்கிறார்.

ராபர்ட் லாங்டனின் மற்ற நாவல்களைப்போல அழுத்தமான காரணம் இந்த கதையில் இல்லை. ஏஞ்சல்ஸ் & டீமன் கதையில் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க உலகின் அனைத்து கார்டினல்களும் வாடிகனில் கூடியிருக்க அந்த இடத்தில் அணுகுண்டிற்கு இணையான அழிவை ஏற்படுத்தும் குண்டு வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அது வெடித்தால் கிறித்துவ மதத்திற்கே அது ஒரு பேரிழப்பாக இருக்கும். அதை லாங்டன் முறியடிக்க ஒவ்வொரு சர்ச்சாக அவர் செல்லும்போது நமக்கும் அந்த பரபரப்பு இருக்கும்.

அதே போல் டாவின்சி கோட் நாவலிலும் ப்ரையாரி ஆஃப் சயின் குழுவால் பாதுகாக்கப்படும் "ஏசு திருமணமானவர்" என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்தால் கிறித்துவ மத நம்பிக்கை அசைக்கப்படும். அந்த சூழ்நிலையில் நடக்கும் கதையும் நம்மை பரபரக்க வைக்கும்.

அதுபோன்ற எந்த அழுத்தமான காரணமும் இதில் இல்லை. சி.ஐ.ஏ. வருவதற்கு அவர்கள் கூறும் காரணமே கதை 80% போனபின்தான் சொல்லப்படுகிறது. அதுவரை "எதுக்குதான் அவனுங்க வந்திருக்காங்க? சொல்லித் தொலையுமைய்யா" என்று சலிப்புதான் தோன்றுகிறது. அதன்பின் அவர்கள் சொல்லும் காரணமும் சப்பையாக இருப்பது ஏமாற்றத்தின் உச்சகட்டம்.

அதைவிட பெரிய ஏமாற்றம், கதையின் முடிவு நடைபெறும் இடத்தை "விண்ணை முட்டும் பிரமிட்" என்று கதையின் ஆரம்பத்தில் லாங்டன் தேட ஆரம்பிக்கும்போதே நம்மால் யூகிக்க முடிவதுதான். ஓரளவு வாஷிங்டன் டிசி நகரத்தைப் பற்றி தெரிந்தாலே "பெரிய பிரமிட், விண்ணை முட்டும் கல்" என்ற விளக்கங்களுக்கு பொருந்தும் கட்டிடத்தை உங்களால் யூகிக்க முடிவதும், கதையின் முடிவில் அதே இடத்தில் ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் இருப்பதையும் படித்தால் "வாஷிங்டனைப் பாக்காத எனக்கே தெரியுது, எல்லாம் தெரிஞ்ச லாங்டனுக்கு இதைக் கண்டுபிடிக்க 500 பக்கமா?" என்ற சலிப்பே ஏற்படுகிறது.

எல்லாவற்றையும் விட, ஃப்ரீமேசன்ஸ் ரகசியமாக பாதுகாத்து வரும் அற்புதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்ற அவநம்பிக்கையுடனேயே கடைசி அத்தியாயம் வரை லாங்டன் செல்ல்லும்போது அவருடன் செல்லும் நம்மை ஈர்க்காமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

படமாக வந்தாலும் இந்த கதை வெற்றிபெறப்போவது இல்லை. காரணம் கதையும் நடக்கும் இடமான வாஷிங்டன் டிசியும், வெற்றிப்படமான நேஷனல் டிரசர் முதல் பாகத்தின் ரீமேக் போல் இருக்கும்.மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை ஆறு வருடங்கள் கழித்து டான் பிரவுன் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார் என்றே சொல்வேன்.

இது டான் பிரவுனின் ஐந்தாவது புத்தகம். காலவரிசையில் மட்டுமல்ல, தரவரிசையிலும் கூட‌.

Monday, September 21, 2009

உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....

"உங்களோட சீரியஸ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதாகத் தெரியவில்லையே. இது பற்றி?" கொஞ்சம் தைரியம் அதிகமான ஒரு ரிப்போர்ட்டர் கமலிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தார்.

"ஒவ்வொரு சீரியஸ் படம் பண்ணினதும் அடுத்ததாக கமல் ஒரு காமெடி படம் பண்ணுவாரு, அதைப் பாத்துக்கலாம்னு மக்கள் நினைக்குறாங்களோ என்னவோ" என்ற அவரின் பதில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கக் காரணம் அவர் சொன்ன வகை சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதுதான்.

"ஹே ராம்" பார்க்கவில்லை. "காதலா காதலா" பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை. "மகாநதி" கிளிப்பிங் வந்தாலும் சேனல் சேஞ்ச். "அவ்வை சண்முகி" பத்து தடவையாவது பார்த்தாச்சு. இதே ட்ரீட்மெண்ட்தான் கமலின் ஒவ்வொரு சீரியஸ் படங்களும் நான் கொடுத்து வந்திருக்கிறேன்.

"உன்னைப்போல் ஒருவன்" படத்தின் விளம்பரத்தை முதல்முறை பார்த்தபோதே இது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. காரணம் பெரிதாக ஏதுமில்லை என்ற போதும் கமலின் கெட்டப்பும், மோகன்லாலின் வசன உச்சரிப்புகளும் ஈர்த்தன.

அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள். அதிலும் இது அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் இந்த படத்திலும் மோகன்லாலை மட்டம் தட்டியிருப்பார், தன் மகளின் இசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்ப்பார்ப்புடனேயே படம் பார்க்கச் சென்ற என்னை நடு மண்டையில் "நச்"சென்று அடித்திருக்கிறார் கமல்.

படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை.‍ எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.

தெளிவான கதை, அதை முழு வேகத்தில் நகர்த்தும் திரைக்கதை, தனித்துத் தெரியாமல் கதையின் ஓட்டத்திற்கு துணைபுரியும் இசை, அற்புதமான கேமிரா, அந்தந்த கேரக்டர்களில் அச்சாக பொருந்தும் நடிக நடிகைகள், வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கும் இயல்பான வசனங்கள், நிஜம் என்று நம்ப வைக்கும் செட்கள் என்று பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.

படம் பார்த்து இவ்வளவு நேரமாகியும் இது தமிழ்ப்படம், கமல் படம் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ கமல்..

******************

பின்குறிப்பு 1: இவ்வளவு அற்புதமான படத்தின் இரண்டு பெரிய சறுக்கல்கள். ஒன்று சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும்.
சென்னையில் எடுத்திருந்தால் படம் இன்னமும் ஆதன்டிக்காக இருந்திருக்கும். படம் பார்க்கும் போது என் தங்கமணிக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

தங்கமணி: ஏங்க, கமல் அஞ்சு பாமும் சென்னையிலதானே வெச்சதா சொல்றாரு...
நான்: ஆமா.. ஏன் கேக்குற?
தங்கமணி: அப்புறமா ஏன் போலீஸ் போய் ஹைதராபாத்ல இருக்குற ப்ரசாத்ஸ் மல்டிப்ளக்ஸ்ல பாமை தேடுறாங்க?
நான்: ஙே...

மற்றொரு விசயம், படத்தின் ட்விஸ்டே பாம் வைப்பவரை முதலில் தீவிரவாதியாக படம் பார்க்கவர்கள் நினைக்க அதை முடிவில் மாற்றுவதுதான். ஆனால் கமல் அந்த பாத்திரத்தை செய்வதால் "நிச்சயமா இதுக்கு எதுனா நியாயமான காரணம் இருக்கும்" என்று நாம் நம்புகிறோம், அதன்படியே நடக்கிறது. ஒருவேளை மோகன்லாலும் கமலும் கதாபாத்திரங்களை மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

பின்குறிப்பு 2 : சாதரணமாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை ('கொய்யால, முதல்ல நீ பதிவே எழுதுறதில்ல, அப்படி எழுதுனாத்தானே என்னத்தை எழுதுறன்னு கவலைப்படுறதுக்கு' என்று கத்தும் கார்க்கி, ஆதி, கேபிள், பரிசல் வகையறாக்கள் அமைதி கொள்க). ஆனால் இந்தப் படம் பார்த்து இன்னமும் பிரமிப்பு நீங்காமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.

Monday, August 10, 2009

என்னவோ போங்க சார்!!!

ஏறத்தாழ ரெண்டு மாசமாகுது பதிவு போட்டு. ஜூலை மாசம் முழுசும் ஒரு பதிவு கூட போட முடியலை. முக்கியமான காரணம் ஆபிஸ்ல ப்ளாக்ஸை(Blogs) ப்ளாக்(block) பண்ணிட்டாங்க. ஹி..ஹி.. ரொம்ப ஓவராத்தான் ப்ளாக் படிச்சிருக்கேன் போல, கடுப்பாகிட்டாங்க. அதனால என்னோட ப்ளாக்கையே என்னால படிக்கமுடியல.

இருக்குற ஒரே வழி ரீடர்தான், அதிலயும் பதிவுகளை படிக்க மட்டும்தான் முடியும், பின்னூட்ட முடியாது. கஷ்டம்தான், வீட்டுல என்னோட பர்சனல் லேப்டாப்பும் என் பையன் கைவண்ணத்துல புட்டுகிச்சி, அதனாலதான் கொஞ்சம் லாங் கேப், அப்பப்போ பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு இருக்கேன். பாக்கலாம் மாசம் ஒரு பதிவாவது போட முடியுதான்னு. "போட்டுட்டாலும்...." அப்படின்றீங்களா?? என்னவோ போங்க சார்!!!

***************

பதிவர் முரளிகண்ணனை ரொம்ப நாளா காணோம், கண்டுபிடிச்சி குடுக்குறவங்களுக்கு என்ன பரிசு குடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். :)

அதேபோல கொஞ்சம் அதிகமாவே மீள்பதிவுகள் போடுற நண்பர் கார்க்கிக்கு பப்ளிக்கா ஒரு குட்டு.

சமீபத்தில் நான் ரொம்ப ரசிச்ச பதிவு நையாண்டி நைனாவோட எதிர் கவுஜகள். தபூ சங்கர் பாணி நான்கு வரி காதல் கவிதைகளை கிண்டல் அடிச்சி இவர் போடுற பதிவுகள் முற்றிலும் புதிய வகை எதிர்க்கவுஜகள். படிச்சவுடனே வாய்விட்டு சிரிக்க வைக்குது. பாராட்டுகள் அவருக்கு.

அதேபோல் நண்பர் நர்சிம். திரட்டிகளில் இருந்து விலகுன பின்னால இவரோட படைப்புகள்ல ஒரு வேகம், வித்தியாசத்தைக் காட்டுற முனைப்பு எல்லாம் தெரியுது. நடந்த பிரச்சினைகளை ஏணிப்படியா உபயோகிச்சிகிட்ட அவரோட திறமைக்கு ஒரு சல்யூட். அதனால அவரை இனிமே திரட்டிகள் உள்ளாறயே விட வேணாம்னு சொல்றியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

***************

நண்பர் ஓசை செல்லா புதுசா ப்ளாக்சாய் அப்படின்னு ஒரு தளம் ஆரம்பிச்சிருக்காரு. முதல் பார்வையில ஒரு வித்தியாசமான ப்ளாக் அக்ரிகேட்டர் மாதிரி தெரியுது. அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

அதுக்காக அவர் அனுப்பிய மெயிலில் தவறுதலாக எல்லா மெயில் ஐடிகளையும் டூ அட்ரஸிலேயே போட்டுவிட அதற்கு எல்லோரும் "ரிப்ளை டூ ஆல்" போட, அந்த அட்ரஸ்களை எடுத்து சிலர் அட்வர்டைஸ்மென்ட் அனுப்ப என்று ஒரே களேபரம். நான் போய் "ரிப்ளை டூ ஆல்" போடாதீங்க, அட்வர்டைஸ்மென்ட் அனுப்பாதீங்கன்னு சொன்னவுடனே "நீ என்ன பெரிய பில்கேட்ஸா?" என்ற ரீதியில் வந்த பதில்களில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.

அந்த பதிலை அனுப்பிய புத்திசாலிகள் மன்னிக்கவும் அதிபுத்திசாலிகள் இருக்கும் இடத்தில் என்னை போன்ற கோயிந்துகளும் இருப்பார்கள் என்பது புரியாமல் "உன் டவுசரை அமுக்குவேன்" என்ற ரீதியிலான மின்னஞ்சல்கள் அனுப்பினால் நான் பயந்துவிட மாட்டேனா? அது கூடவா சார் உங்களுக்குத் தெரியாது? என்னவோ போங்க சார்!!!

****************

உரையாடல் போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற இருபது கதைகளையும் படிச்சிட்டேன், அதனால தைரியமா வாழ்த்துவேன். :)

எதிர்பார்த்தது போலவே முடிவில் சில ஆச்சர்யங்கள். கண்டிப்பாக பரிசு பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில கதைகள் பரிசு பெறாமல் போனது குறித்த விமர்சனங்கள் எழுகின்றன. நண்பர் ஜமால் அழகாக சொல்லியிருப்பதை இங்கே கோடிட்டுக் காட்டுகிறேன்.

//
நண்பர் பைத்தியக்காரன்-சுந்தரின் முடிவு அறிவிப்பில் குறிப்பிட்டதுபோல, இது ஒரு தேர்ந்தெடுப்பு. இது மதிப்பீடு அல்ல. இதில் குறைநிறைகள் இருக்கும். அது தேர்வாளர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பயிற்ச்சி சார்ந்தது.
//

இந்த முறை பரிசு பெற்ற கதைகளில் பொதுவான அம்சமாக எனக்குத் தென்படுவது "கட்டுடைப்பு". சரியா சுந்தர்ஜி & பைத்தியக்காரன்?

ஆமா உன் கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? முதல்லயே நடுவர்கள் யாருன்னு தெரிஞ்சிருந்தாலாவது அவங்களை பாத்து "நானெல்லாம் இங்க சிறுகதை எழுத்தாளார்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா, என்னையும் ஜீப்புல ஏத்திக்குங்கய்யா"ன்னு கெஞ்சி கூத்தாடி ஜீப்ல ஏறியிருக்கலாம், கடைசி வரைக்கும் நடுவர்கள் யார்ன்றத சொல்லாமயே வெச்சிட்டாங்க நம்ம ஆளுங்க, என்னவோ போங்க சார்!!!

****************

ஆமா இது நீ வழக்கமா எழுதுற "துணுக்ஸ்"தானே, தலைப்பை மாத்தி வெச்சு ஏமாத்துறியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

Monday, June 22, 2009

கனவின் நிறம்

"ரொம்ப சந்தோசம்மா"

"எனக்கு உன் சந்தோசம்தான்டா முக்கியம். ஊரு என்னவோ சொல்லிட்டுப் போகுது. அந்த பொண்ணுதான் உனக்கு நல்ல துணையா இருப்பான்னு நெனச்சா நான் ஏன் தடை சொல்லப்போறேன். எனக்கு என்ன.. இன்னும் ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ, அதுக்கப்புறம் உன்னைப் பாத்துக்கப்போறது அவதானே"

"ச்சீ... கம்முனு இரு.. எதெதோ பேசிகிட்டு"

"டேய், எனக்கு ஒரு ஆசைடா, சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"

"சொல்லும்மா.."

"உன்னோட கல்யாணம் முடிச்சதும் நம்ம வீட்டை கொஞ்சம் மராமத்து பண்ணிடலாம்டா. ஓடெல்லாம் ரொம்ப பழசாயிடுச்சி, எல்லாத்தையும் எடுத்துட்டு புதுசா போட்டுடலாம்டா"

"அம்மா.. அம்மா.. மேஸ்திரி அண்ணன்ட்ட ஏற்கனவே பேசிட்டேன். ஓட்டை எடுத்துட்டு தார்சு போட்டுடலாம்மா. நீயி கவலையே படாத. அப்புறம், வர்ற வழியில சங்கர் மாமாவைப் பாத்தேன். ஐப்பசி மாசம் காசிக்குப் பதினஞ்சு நாள் டூர் போட்டிருக்காராம். நீயும் சொல்லிட்டே இருக்குறியே. இந்த முறை போயிட்டு வந்துடு. சரிம்மா, நான் போயி அவ அப்பாட்ட பேசிட்டு வந்துடறேன்‌"

"சாப்புடுறதுக்கு வீட்டுக்கு வந்துடுறா, உனக்குப் புடிச்ச கருவாட்டுக் கொழம்பு செஞ்சி வெக்கிறேன்"

************

"உண்மையச் சொல்லணும்னா நீங்க இவ்வளவு ஈஸியா சம்மதிப்பீங்கன்னு நாங்க ரெண்டு பேருமே நெனக்கலை மாமா"

"ஏன் மாப்பிள்ள, அந்தஸ்தை காரணம் காட்டி வேணாம்னு சொல்லிடுவேனோன்னு நெனச்சீங்களா?"

""

"இந்த சொத்தெல்லாம் நானே சொந்தமா சம்பாசித்ததில்ல, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்து இது. சொல்லப்போனா நானெல்லாம் இதுக்கு ஒரு வாட்ச்மேன் மாதிரிதான். அதை என்னிக்குமே நானோ என் குடும்பமோ மறக்குறதே இல்ல"

"ஆச்சர்யமா இருக்கு மாமா"

"அது புரிஞ்சதுனாலதான் சின்ன வயசுலயே உங்க அப்பா மாதிரி நல்ல மனுசங்க ஃப்ரெண்ட்ஸா கிடைச்சாங்க. உங்களப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் முழுசா தெரிஞ்சதுனால உங்களவிட என் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கமாட்டான்னு நம்புனதுனாலதான் இந்த கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்"

"ரொம்ப நன்றி மாமா"

"பையனும் அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டான். பொண்ணுக்கு வரப்போறவன் என்கிட்ட இருக்குற காசுக்காக வர்றவனா இருந்துட்டா அவ வாழ்க்கை நரகம் ஆகிடும் மாப்பிள்ள. என்னால அதைத் தாங்க முடியாது. அவளை நல்லா புரிஞ்சுகிட்ட உங்களாலதான் அவளை காலம் முழுக்க நல்லா வெச்சிருக்க முடியும்னு நம்புறேன் நானு"

"கண்டிப்பா மாமா.. கவலையே படாதீங்க.. உங்க பொண்ணு கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம நான் பாத்துக்குறேன். போதுமா?"

"அந்த நம்பிக்கை உங்கள விட எனக்கு அதிகம் மாப்பிள்ள.. அவ மேலதான் இருக்கா, போய் பேசிட்டு இருங்க. நான் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"

*******

"அப்புறம் உங்க அம்மாவும் எங்க அப்பாவும் குழந்தை பத்தி ஒண்ணுமே சொல்லைலியா? சொல்லியிருப்பாங்களே, கல்யாணம் ஆகி பத்து மாசத்துல ஒரு பேரன் வேணும்னு"

"ஒனக்கெல்லாம் நக்கலா இருக்கு, ஏன் கேட்டா என்ன தப்பு? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குது, இப்பவே ஆரம்பிச்சா கல்யாணம் முடிஞ்சு எட்டு மாசத்துலயே அவங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ குடுத்துடலாம்ல‌"

"ஏய் ச்சீ, கைய எடு... கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சிதான் குழந்தையெல்லாம். முதல்ல நாம நம்ம வாழ்க்கையை வாழலாம்டா, காஷ்மீர்ல ஹனிமூன், சொந்தகாரங்க வீட்டுக்கெல்லாம் ஒரு வீடு விடாம விருந்து, நல்ல பெளர்ணமி நிலா வெளிச்சத்துல உன் தோள்ல சாஞ்சிட்டே தாஜ்மஹால் தரிசனம், கோவா பீச் ஹாலிடேஸ், அந்தமான் செல்லுலார் ஜெயிலுக்குள்ள உன்னை வெச்சி ஒரு ஃபோட்டோ, லட்சத்தீவுல ஸ்கூபா டைவிங்.."

"ஹேய்.. ஹேய்... இரு இரு.. நீ இன்னமும் கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ணுல்ல, ஒரு சாதாரண சென்ட்ரல் கவர்மென்ட் வேலைக்காரனோட பொண்டாட்டி. அதுக்குத் தகுந்த மாதிரி ஆசைப்படும்மா"

"அதுக்கென்னா? எங்க அப்பாவோட பாதி சொத்து எனக்குத்தான. குடுக்க மாட்டேன்னு சொன்னா எங்க அண்ணன் மேல கேஸ் போட்டுடலாம் கவலைப்படாத"

"அடிப்பாவி... உன்னையும் உங்க அண்ணன் நம்புறானே, அவனைச் சொல்லணும்"

"ஹா..ஹா.. சும்மாச் சொன்னேன். எனக்குன்னு கேட்டா மொத்த சொத்தையும் கூட அண்ணனும் அண்ணியும் குடுத்துடுவாங்க. நான் இதுக்கு முன்னால எடுத்த எல்லா ஜென்மத்துலயும் புண்ணியம் பண்ணிகிட்டே இருந்திருக்கணும்டா.. இப்படி ஒரு அப்பா, அண்ணன், அண்ணி, எல்லாத்தையும் விட என்னா நல்லா புரிஞ்சுகிட்ட உன்கூடயே கல்யாணம்....."

"ஹேய்.. என்னாது இது? எதுக்கு அழுவுற? திடீர்னு உனக்குள்ள இருக்குற பட்டிக்காடு இப்படி வெளிய வந்துடுச்சி..."

"ச்சீய்.. போடா...."

"அம்மா... மாப்பிள்ள தம்பிக்கு ஃபோன்.. அவங்க அம்மா பேசுறாங்க‌"

*****

"உன் வெக்கேஷனைக் கட் பண்ணி அவசரமா கூப்டதுக்கு ஸாரிப்பா"

"பரவாயில்லைங்க சார்.. நானே வெக்கேஷனைக் கட் பண்ணுற ப்ளான்லதான் இருந்தேன். கல்யாணத்துக்கு நல்ல நாள் ரெண்டு மாசம் கழிச்சிதான் கிடைச்சிருக்கு. அதனால அப்ப வெக்கேஷன் எடுத்துக்கலாம்னு இருந்தேன். நீங்க கூப்பிடலைன்னாலும் மே இருவத்தஞ்சாம் தேதி நானே வந்திருப்பேன்"

"குட்..குட்.. நான் உன்னைக் கூப்பிட்டது ரொம்ப முக்கியமான விசயத்துக்காக. இந்த மாசம் முழுக்கவே நமக்கு ரொம்ப வேலை அதிகம். எல்லா வி.வி.ஐ.பி.ங்களும் தீவிரமான பிரச்சாரத்துல இருக்காங்க. சமாளிச்சடலாம்னுதான் நெனச்சி உனக்கு லீவு குடுத்தேன். பட் ரெண்டு ஹையர் ஆபிஸர்ஸ் ஆஸ்பிடல்ல படுத்துட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு. அதனாலதான் உன்னைக் கூப்பிட வேண்டியதா போச்சி"

"ஓ.. ஓகே."

"ரெண்டாவது, நீ டிபார்ட்மென்ட்ல சேந்ததுல இருந்து உன்னைக் கவனிச்சுட்டு வர்றேன். உன்னோட நேர்மை, வேலை மேல உனக்கு இருக்குற டெடிகேஷன், புது விசயங்களைக் கத்துக்குற ஆர்வம் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு அப்புறம் இந்த போஸ்டுக்கு வர்ற தகுதி இருக்குற ஆட்களா நான் நினைக்குற ஒரு சிலர்ல நீயும் ஒருத்தன். இந்த மாதிரி டஃப் சிச்சுவேஷன் எல்லாம் ஹேண்டில் பண்ணினாத்தான் உனக்கும் பின்னால உதவியா இருக்கும்"

"ரொம்ப நன்றி சார். இப்ப என்னோட அஸைன்மென்ட் என்ன?"

"வர்ற செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரு வி.வி.ஐ.பி.யோட பாதுகாப்பை நீ கவனிக்க வேண்டி இருக்கும். ப்ளான்படி அவரு செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஏர்போர்ட்டுக்கு வர்றாரு. அங்க இருந்து நம்ம டீம் சார்ஜ் எடுத்துக்குது. ஏர்போர்ட்ல இருந்து அன்னிக்கு ராத்திரி அவர் கூட்டம் முடிக்கிற வரைக்கும் நீதான் இன்சார்ஜ்"

"கவலையேப்படாதீங்க சார். அவர் சென்னைல வந்து இறங்குனதுல இருந்து மறுபடியும் ஃப்ளைட் ஏறுற வரைக்கும் அவரைவிட்டு நகர மாட்டேன். சென்னைய பொறுத்தவரைக்கும் நாந்தான் அவரோட நிழல்னு வெச்சிக்குங்களேன்"

"ஹ..ஹ..ஹ..ஹ.."

"நைட் பொதுக்கூட்டம் எங்க சார்?"

"ஸ்ரீபெரும்புதூர்"

******

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, June 17, 2009

இந்த வாரம் வலைச்சரத்தில்

நண்பர்களே,

சீனா அய்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாரம் நான் வலைச்சர ஆசிரியராக இருக்கிறேன். என் வலைச்சரப் பதிவுகளை படிக்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக்கவும்...

1. வலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்
2. விகட(ன்)கதை சொல்லிகள்!!!
3. வெண்பூவிற்கு வயது ஒன்று
4. கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்
5. என்னை அசத்திய கவிஞர்கள்
6. சினிமா வலைஞர்கள்

Monday, June 8, 2009

துரோகம்

வினய் நிலை கொள்ளாமல் தவித்தான். தரையில் இருந்து 350 கி.மீ உயரத்தில் சலிக்காமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் மிதக்கும் விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.எஸ்) தற்போதைய தலைமை விஞ்ஞானி அவ‌ன்.

முப்பத்தேழாவது முறையாக அந்த வீடியோவை பார்த்தான். இரண்டு மாதங்களுக்கு முன் எக்ஸ்பெடிஷன் 23ல் கொண்டு வரப்பட்டு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட அந்த அதி நவீன கேமிரா அப்பழுக்கின்றி வினயின் வீட்டு வாசலைப் படம் பிடித்திருந்தது. வினய்க்கு சந்தேகமே இல்லை, அது தன் மனைவி ஸ்வேதா என்பதில், ஆனால் அவளுடன் இருக்கும் அந்த அவன்? கடந்த ஒரு வாரமாக சரியாக மாலை ஆறு மணிக்கு வினயின் வீட்டிற்கு வரும் அவன் எட்டு மணிக்குத்தான் வெளியேறுகிறான். அதுவும் ஒவ்வொரு நாளும் அவன் வெளியேறும்போது வாசலில் வைத்து இருவரும் உதட்டோடு உதடு பொருத்தி... சட்... வீடியோவை அணைத்தான் வினய்.

ஆறு வருட காதலிலும் மூன்று வருட திருமண வாழ்விலும் தேனாய் இனித்த அதே முத்தம், இப்போது எட்டிக்காயாய்க் கசக்கிறது. ஏன்? ஐ.எஸ்.எஸ்.ஸில் முப்பது மாத அசைன்மென்ட் வந்தபோது அவளைப் பிரியக்கூடாது என்பதற்காகவே அதை மறுத்தவன் வினய். ஆனால் இதை விடச் சிறந்த வாய்ப்பு வேறு எப்போதும் கிடைக்காது என்பதையும், பிரிந்திருந்தால் அன்பு அதிகம் ஆகுமே தவிர குறையாது என்றும் கூறி வினயைச் சம்மதிக்க வைத்தவள் அவளேதான்.

ஆனால் ஏன் இப்போது இப்படி? தனக்காக உயிரையும் தருவாள் என்று நம்பியது பொய்யா? நாசாவில் வேலை கிடைத்து கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்த போது தன்னுடன் இருப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வந்தது பொய்யா? ஒரு வருட பிரிவில் காதல் கசந்து விட்டதா? அல்லது காதலைக் காமம் வென்று விட்டதா? கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. வினய் குழம்பினான். ஆனால் கண்முன்னால் சாட்சி வீடியோவாய் ஓடும்போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்!!!

சிறுவயதில் பெற்றோர் யாரென்றே தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்து, உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி, அந்த வைராக்கியத்தில் வெறியாய்ப் படித்து கோல்டு மெடல் வாங்கி, அமெரிக்கா வந்து நல்ல வேலையில் சேர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று இலக்கில்லாமல் இருந்தவனுக்கு வந்து சேர்ந்த முதல் உறவு ஸ்வேதாதான்.

அவளைத்தவிர வேறு உலகம் இல்லை என்று நினைத்தவனுக்குக் கடந்த வாரம் அந்த இடி இறங்கியது. புதிய கேமிராவை சோதனை செய்துக் கொண்டிருந்தவன் தற்செயலாக அதைத் தன் வீட்டை நோக்கித் திருப்பினான். அப்போதுதான் அவனைப் பார்த்தான். அதன் பின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குக் கண்காணிக்க, ஒரு நாள் விடாமல் அவன் வருவதும், 8 மணிக்கு திரும்பிச் செல்வதும், வாழ்வின் மிகக் கொடுமையான காலகட்டமாக இந்த ஒரு வாரம் மாறியிருந்தது.

'இனி என்ன? எனக்கிருக்கும் ஒரே உறவும் என்னை ஏமாற்றுகிறாளா? இனி அவளுடன் எப்படி வாழ முடியும்? நான் திரும்பிச் சென்றதும் எப்படி அவளிடம் இதைக் கேட்க முடியும்? அவன் நான் இருக்கும்போது வரப்போவது இல்லை, அவளிடன் அதைப்பற்றிக் கேட்கும் தைரியமும் எனக்கு இல்லை. வாழ்நாள் முழுவதும் போலி வாழ்க்கை வாழப்போகிறேனா? ஒவ்வொரு முறை இனி அவளை முத்தமிடும்போதும் இந்தக் காட்சி வந்து மனதில் அறையாதா. இனிமேல் யாருக்காக‌ இந்த‌ வேலை, ப‌ண‌ம் எல்லாம்?'

'இல்லை, இனிமேல் நான் உயிர் வாழ்வ‌தில் அர்த்த‌மே இல்லை. இனி தின‌ம் தின‌ம் ஒவ்வொரு வினாடியும் செத்துச் செத்துப் பிழைப்ப‌தை விட‌ ஒரேடியாய் இற‌ப்ப‌தே மேல். என் உயிர‌ற்ற‌ உட‌ல் கூட‌ அந்த‌த் துரோகிக்குக் கிடைக்க‌க் கூடாது'

முடிவு செய்த‌வ‌னாய் ஐ.எஸ்.எஸ்.இன் பின் புற‌ டாக்கிங் (Docking) ஏரியாவிற்கு சென்றான்.
இப்போதைக்கு பூமியிலிருந்து எந்த விண்கலமும் வரவில்லை என்பதால் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. கழிவுகளை வெளியேற்றும் இடத்திற்கு அருகில் வந்து நின்றான். அடுத்த இரண்டு நிமிடங்களில் கழிவுகளை வெளித்தள்ள ப்ரோக்ராம் செட் செய்துவிட்டு கழிவுகளை வைக்கும் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். இன்னும் இரண்டு நிமிடத்தில் ஐ.எஸ்.எஸ்.இல் இருந்து தூக்கி எறியப்படுவான். விண்வெளி நடைக்கான உடை, ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் வெளியேறிய உடனே அவன் உயிர் அவனை விட்டு பிரியப் போகும் வினாடிக்காகக் கண்களில் நீருடன் காத்திருக்க ஆரம்பித்தான் வினய்.

அதே விநாடி, 350 கி.மீ. கீழே, ஸ்வேதா அவனுக்கான இமெயில் மெசேஜை டைப் செய்து கொண்டிருந்தாள்.

"என் அன்பு புருஷா.. ரெண்டு வாரமா கொஞ்சம் பிஸி, இந்த ரெண்டு வாரமா உனக்கு மெயில்கூட‌ பண்ணாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குது. உங்க ஆளுங்ககிட்ட சொல்லி வாரம் ஒரு அஞ்சு நிமிசக் காலுக்கு பர்மிசன் வாங்கக் கூடாதா?"

"எனக்கு டென்வர்ல வேலை கிடைச்சிடுச்சி, போன வாரமே வந்து சேர்ந்துட்டேன். இன்னும் ஒன்றரை வருசத்துக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் இங்கதான் இருக்கப் போறேன். அப்புறம் இன்னொரு விசயம், மனசைத் தேத்திக்கோ. உன் மச்சினிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி. இப்ப அவ கலிஃபோர்னியால நம்ம வீட்டுலதான் இருக்குறா. அவளோட உட்பியும் பக்கத்துலதான் வேலை செய்யுறாரு. தினமும் சாயங்காலம் ஆபிஸ் முடிஞ்சதும் வந்துடறாரு. ரெண்டு பேரும் ஒரே அட்டகாசம்தான்."

"அவங்களைப் பாத்தா அப்படியே எனக்கு நம்ம காதல் காலம்தான் நெனப்புக்கு வருது. உனக்கு ஞாபகம் இருக்கா, நாம முதல் முதல்ல டூர் போனப்ப...."

Monday, June 1, 2009

ஒரு விரலும் ஒன்பதாவது மனிதனும் (சிறுகதை)

முன்குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.

இனி கதை...

வணக்கமுங்க. நாந்தான் வெண்பூ. இந்த உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துறாங்களாம். அனுப்பலாம்னா புதுசா ஒண்ணும் தோண மாட்டேங்குது. மூணு வருசத்துக்கு முன்னால ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை எங்கியும் அனுப்பவே இல்லை. சரி அதை உபயோகப் படுத்திக்கலாம்னு பரண்மேல ஏறி எலி கூடவெல்லாம் சண்டை போட்டு எடுத்திருக்குறேன். கீழ இருக்குறதுதான் அந்த கதை. படிச்சுட்டு சொல்லுங்க, அனுப்பலாமான்னு..

******

கி.பி. 1885

சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.

இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.

"ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?"

"ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல"

"ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்"

"அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க"

பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.

"ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?"

"என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?"

"இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்"

திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.

"உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க." என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம்.

"கண்டிப்பா" என்றனர் இருவரும் ஒரு சேர.

****

இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.

"இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?"

"கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா.."

"என்ன பிரச்சினை?"

பீட்டர் தொடர்ந்தான்.. "இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்"

"கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க"

*****

கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்...

1972ன் இறுதியில்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.

"இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?"

"இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும்.

இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது.."

"எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்"

விக்டர் புன்னகைத்தான். "இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்"

"என்ன சொல்றீங்க?"

"இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க‌. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.

அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவ‌து ஒரு பிர‌ச்சினை. அது எல்லாத்தையும் இப்ப‌ உருவாக்கி இருக்கிற‌ இந்த‌ ஒன்பதாவ‌து கருவுல‌ ச‌ரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன‌ அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு"

"இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?"

"ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபல‌ம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.

இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு"

பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,

"ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்."

'என்ன?' என்பது போல் பார்த்தான் விக்டர்.

"மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்."

"நல்லா புரிஞ்சது" என்றான் விக்டர்..

****

ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.

அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.

ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.

இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.