Tuesday, August 9, 2016

கேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்

Spoiler Alert
இதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்காதவர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. வந்திருக்கும் ஆறாவது சீசனின் கடைசி பகுதியில் இருக்கும் கதைச்சுருக்கம் பற்றி பேசுவதால் உங்களுக்கு கதையின் சஸ்பென்ஸ் போய்விடும். ஆறு சீசன்களும் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்.

************

ஆறாவது சீசனோட மிக முக்கியமான ப்ளாட் ட்விஸ்ட் / கதைத்திருப்பம்னு ஜான் ஸ்நோவோட பெற்றோரைப் பத்தி சொல்லப்படுறதை சொல்லலாம்.

ப்ரான் ஸ்டார்க் தன்னோட விஷன் மூலமா இறந்தகாலத்துக்கு போயி, தன் அத்தை லியான் ஸ்டார்க் சாகுறதைப் பார்க்குறான்.

லியான் ஸ்டார்க், நெட் ஸ்டார்க்கோட சகோதரி. லியானை ராபர்ட் பராத்தியனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க நிச்சயம் பண்ணியிருக்குறப்ப, அப்போதைய இளவரசனான ரிகர் டைகேரியன் அவளை கடத்திட்டு போயிடுறான்.

அதனால கடுப்பாகுற ராபர்ட் பராத்தியன், ஏற்கனவே கிறுக்கு அரசன் மேல மக்களுக்கு இருக்குற வெறுப்பை உபயோகப்படுத்தி உள்நாட்டு கலகத்தை உருவாக்கி எல்லா டைகேரியன்ஸையும் கொன்னு அரசன் ஆகிடுறான்.

அதன் பின், தன் சகோதரிய தேடிப்போற நெட் ஸ்ட்ராக், அவ குழந்தை பெத்து சாகக்கிடக்குறப்ப பாக்குறான். அவ, நெட் காதுல ரகசியமா எதோ சொல்லிட்டு "ராபர்ட் கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்து"ன்னு சொல்லிட்டு செத்துடுறா. அதை தனக்கும் யாரோ ஒரு பொண்ணுக்கும் பிறந்ததுன்னு நெட் சொல்லி ஜான் ஸ்நோவா வளர்த்துட்டு வர்றான்.

இதன்படி, ஜான் ஸ்நோ உண்மையில் ஒரு டைகேரியன், அதாவது டேனேரியஸோட அண்ணன் மகன், அவனும் அரியணைக்கு உரிமை உள்ளவன். இதுதான் நமக்கு சொல்லப்படுறது.

நிற்க.. ஏன், இதுக்கு மேலயும் நமக்கு சொல்லப்படாத கதை இருக்கக்கூடாது?



**********

Chances are that, Jon Snow is Baratheon and not Targaryen

ஜான் ஸ்நோ எதோ ஒரு பராத்தியன் (முக்கியமா ஸ்டானிஸ்) ஆணுக்கும், லியான் ஸ்டார்க்குக்கும் பிறந்தவனா இருக்க வாய்ப்பிருக்கு.

இதற்கான கண்ணிகள் கதை முழுக்கவே இருக்குறதா தோணுது.

1. ஜான் ஸ்நோவோட உருவம்
முதல் சீசன்ல செர்சி லானிஸ்டரோட மூணு குழந்தைகளும் ராபர்ட் பராத்தியனுக்கு பிறந்தது இல்லைன்னு நெட் ஸ்டார்க் கண்டுபிடிக்குறது அவங்களோட முடி நிறத்தை வெச்சி. பராத்தியன் குடும்பத்தில் எல்லாருக்கும் கருப்பு முடி, லானிஸ்டர்ஸ் எல்லாருக்கும் தங்கநிற முடி. அதனால அந்த குழந்தைகள் செர்சிக்கும், ஜேமிக்கும் பிறந்ததுன்னு முடிவுக்கு வருவாரு.

இந்த லாஜிக் படியே பார்த்தா, டாகேரியன் எல்லாருக்கும் தங்கநிற முடி, ஸ்டார்க் குடும்பத்துக்கும் தங்கநிற முடி. இந்த ரெண்டும் க்ராஸ் ஆகுற ஜான் ஸ்நோவுக்கு எப்படி கருப்பு சுருட்டை முடி இருக்க முடியும்?

2. ரெட் வுமனின் குழப்பம்
ஆரம்பத்தில் இருந்து மந்திரவாதியான ரெட் உமன் சொல்றது நடக்குது. அவளே சொல்ற மாதிரி, ஸ்டானிஸ் பராத்தியன் வின்டர்ஃபெல் போர்ல ஜெயிக்குறதையும், ஐயர்ன் த்ரோன்ல உக்கார்றதையும் பார்க்குறா. ஆனா, அதை சரியா புரிஞ்சிக்கலைன்னு சொல்றா. அவ பார்த்தது நிஜம், ஆனா அவ பார்த்தது ஸ்டானிஸை இல்லை, அவரோட மகன் ஜான் ஸ்நோவையா இருக்கலாம்.

3. ஸ்டானிஸ் & ஜான் ஸ்நோ சந்திப்பு
ஸ்டானிஸ்க்கு ஜான் ஸ்நோ தன்னுடைய மகன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னுதான் தோணுது. ஆனா அவனை பார்த்து பேசுறப்ப, இவன் தனக்கும் லியானுக்கு பிறந்தவளா இருக்கலாம்னு ஸ்டானிஸ் புரிஞ்சிகிட்டு இருக்கலாம். அதன் தொடர்ச்சியாத்தான் அவனை தன் படைக்கு தலைமை தாங்க கூப்பிடுறது, நீ ஸ்நோ இல்ல உன்னை "ஸ்டார்க்"ன்னு அறிவிக்குறேன்னு சொல்றது,  சர் டேவோஸ் "ஸ்டானிஸ் உன்கிட்ட எதையோ பார்க்குறாரு"ன்னு ஜான் ஸ்நோகிட்ட சொல்றது எல்லாமேன்னு தோணுது



4. லியானின் ரகசியம்
லியான் ஸ்டார்க்குக்கும் டாகேரியனுக்கும் பொறந்ததுதான் அந்த குழந்தைன்றது வெளிப்படையா தெரியுது, அப்ப லியான் மரணப்படுக்கையில நெட் ஸ்டார்க் காதுல சொல்ற ரகசியம் என்ன? அதை யோசிச்சாலே நமக்கு புரியும், அவங்க காட்டுறதுக்கும் மேல கதையில ட்விஸ்ட்கள் இருக்குன்னு

***********
என்ன நடந்திருக்கக்கூடும்னு யோசிச்சா,

ராபர்ட் பராத்தியனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும், லியான் ஸ்டார்க்குக்கு பிடிச்சது ராபர்ட்டோட தம்பி ஸ்டானிஸ் பராத்தியன். அவங்க ரெண்டு பேரும் லவ்ல இருந்திருக்கலாம். இதெல்லாம் நடக்குறப்ப டாகேரியன் அரசாட்சி கீழ பராத்தியன் ஸ்டார்க் எல்லாமே இருந்திருக்காங்க. ஸ்டானிஸ்க்கு உதவுறதுக்காக நல்ல மனசுக்காரனான ரீகர் டைகேரியன் லியானை காப்பாத்தி வெச்சிருக்கலாம். நினைவிருக்கட்டும், டைகேரியனுக்கு எதிரான போர்ல ஸ்டானிஸ் அடிபட்டு சாகக்கிடக்குறப்ப சர் டேவோஸ்தான் அவரை காப்பாத்துறாரு. அதனால ஸ்டானிஸ்னால உடனே லியானை பார்க்க போக முடியலை.

அடுத்து, லியான் "ராபர்ட் பராத்தியன்கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்து"ன்னு சொல்றதுக்குக் காரணம், லியான் மேல ராபர்ட்க்கு அளவு கடந்த காதல், அந்த கலகத்தை அவர் ஆரம்பிக்க காரணமே லியானை டாகேரியன் கடத்திட்டு போயிட்டான்றதுனாலதான். அவனுக்கு தன் தம்பி மூலமா லியானுக்கு குழந்தை பிறந்ததுன்னு தெரிஞ்சா அந்த குழந்தைய கொல்ல வாய்ப்பு அதிகம்.

அநேகமா ஸ்டேனிஸ் சாகுறதுக்கு முன்னால தன்னை கொல்ற ப்ரைய‌ன் ஆஃப் டார்த்கிட்ட இந்த உண்மையை சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கு. ரான்லி பராத்தியனுக்கு உண்மையா இருப்பேன்னு சொன்ன ப்ரையன் இதன் மூலமா மறுபடி ஒரு பராத்தியனை அரியணை ஏற்ற வாய்ப்பிருக்குன்னு ஜான் ஸ்நோவுக்கு உதவக்கூடும்

**********

அடுத்து என்ன நடக்கக்கூடும்?

மொத்தமே எட்டு சீசன்தான்னு சொல்லியிருக்குறதால, ஏழாவது சீசனோட கடைசியில ஜான் ஸ்நோ ஸ்டானிஸோட மகன்னு கதைய திருப்பலாம், எட்டாவது சீசன்ல பராத்தியன் வாரிசான ஜான் ஸ்நோவும், டகேரியன் வாரிசான டேனரியஸும் சண்டையிடக்கூடும்.

********

Saturday, April 18, 2015

இன்டெர்ஸ்டெல்லார் : கதைச்சுருக்கம்

*** ஸ்பாய்லர் அலெர்ட்****

இன்டெர்ஸ்டெல்லார் படத்தைப்பத்தி குருடர்கள் யானைய தடவிப்பாத்த மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா எழுதியிருக்காங்க. நிறைய விமர்சனங்களில் நிறைய தப்புகள் தெரியுது. அதனால என்னோட புரிதலை பதிகிறேன். ஒருதடவைதான் பார்த்திருக்கேன். நல்ல பிரிண்ட் டிவிடி கிடைச்சதும் இன்னும் சிலமுறை பார்த்துட்டு எதாவது மாற்றம் இருந்தா இந்த பதிவிலேயே அப்டேட்டுறேன்.


உலகம் அழியுது, வேற உலகம் உருவாக்கணும். இதுல முதல் பிரச்சினை புது உலகை கண்டுபுடிக்குறது. அதுக்கு தடுமாறிட்டு இருக்குறப்ப திடீர்னு எங்கிருந்தோ ஒரு வோர்ம்ஹோல் கைக்கெட்டுற தூரத்துல சூரிய மண்டலத்துலயே உருவாகுது (இந்த பிரபஞ்சத்தோட அளவை ஒப்பிட்டா நாலு கோள்கள் தள்ளி இருக்குற தூரமும் கைக்கெட்டுற தூரம்தான்).

ப்ளாக்ஹோல் மாதிரி வோர்ம் ஹோல், தானா உருவாகாது, அதை யாராவது உருவாக்கினாத்தான் உண்டு. அதனால பூமிக்கு உதவி செய்யுறதுக்காக யாரோ உருவாக்கியிருக்காங்கன்னு தோணுது. இப்ப உள்ள போக ஏழு தனித்தனி ஸ்பேஸ்க்ராஃப்ட்ல அதுக்குள்ள ஆட்களை அனுப்புறாங்க. அதுல மூணு பேர்கிட்ட இருந்து மட்டுமே பிங் வருது. அவங்க லொகேஷன் தெரியுது, ஆனா டேட்டா எல்லாம் எதுவும் வரலை. இப்ப அந்த மூணையும் தேடி மறுபடி போக ஆள் வேணும். இங்கதான் நம்ம ஹீரோ கூப்பரோட பயணம் வருது.

ஹீரோவாகப்பட்டவன் ஒரு காலத்துல ஆஸ்ட்ரோநெட். தல பூமிக்கு மேல ஒரு விண்வெளியில‌ சுத்திட்டு இருக்குறப்ப ஒரு சின்ன சிக்கல் வருது, அப்ப இவன் கொடுக்குற கட்டளைக்கு மாறா ஆட்டோபைலட் சிஸ்டம் வேற ஒரு வேலைய செஞ்சி அந்த க்ராஃப்ட் ஆக்சிடென்ட் ஆகிடுது, தல தப்பிச்சிட்டாலும், "போங்கடா, நீங்களும் உங்க விண்வெளி ஆராய்ச்சிகளும்"ன்னு கடுப்பாகி குடும்பத்தோட வந்து விவசாயம் பண்ணிட்டு இருக்காரு. தன் பொண்ணு மேல அதீத பாசம்.

இப்ப வீட்டுல க்ராவிட்டி வழியா புழுதியில எழுதப்பட்டுற மோர்ஸ் கோட்ல கிடைக்குற ஒரு லொகேசன் கோ ஆர்டினேட்ஸை வெச்சி ஒரு பெரிய விண்வெளி ஆய்வகத்துக்கு போறாரு. இது வெளியுலகத்துக்கு தெரியாம நடந்துட்டு இருக்கு. ஏன்னா உலகமே அழிஞ்சிட்டு இருக்குறப்ப விண்வெளிக்கு பில்லியன்கணக்கா செலவு செய்யுறது தப்புன்னு எதிர்ப்பு வந்ததால எல்லா நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சிகளை மூட்டை கட்டிடுது. இங்க வந்து பார்த்தா டாக்டர் க்ராண்ட் அப்படின்னு ஒரு வெள்ளைத்தலை விஞ்ஞானியும் அவரோட சூப்பர் ஃபிகரான பொண்ணும் ஒரு பெரிய விஞ்ஞான கும்பலோட வேலை செஞ்சிடுட்டு இருக்காங்க. ஏழு பேரை வோர்ம்ஹோல்க்குள்ள அனுப்பினதே இவங்கதான்.

அந்த மூணு பேரை தேடிப்போற குழுவுக்கு தலைமை தாங்க சரியான ஆள் இல்லை. இவர் வந்ததும் (வழக்கமான தமிழ் சினிமா மாதிரி) "உங்களை விட்டா இந்த பூமியை காப்பாத்த யாருமே இல்லை"ன்னு சீன் போட்டு அவரை அனுப்புறாங்க. வழக்கமான ஹாலிவுட் படமாட்டம் கூட அந்த சூப்பர் ஃபிகரும், இன்னொரு விஞ்ஞானியும் போறாங்க. நிறைய தமிழ் / ஆங்கில படம் பார்த்திருந்தா இவங்க மூணு பேர்ல ரெண்டு பேர்தான் கடைசியில உயிரோட இருப்பாங்க அதுவும் ஹீரோவும் ஹீரோயினியும் நீங்க சரியா கதைய புடிச்சிருப்பீங்க.

இவங்க எல்லாரும் ஒரு சின்ன வண்டியில கிளம்பிப்போயி விண்வெளியில இருக்குற ஒரு வட்டமான பெரிய வண்டியில ஏறி வார்ம்ஹோலுக்கு போறாங்க. வார்ம்ஹோலுக்கு போகவே ரெண்டு வருசம் ஆகும், அங்க போறாங்க, அதுக்குள்ளயும் போறாங்க.

அங்க அற்புதமா ஒரு ப்ளாக்ஹோல் இருக்கு. ப்ளாக்ஹோல்னா அது எல்லாத்தையும் உறிஞ்சிக்கும், உச்சகட்ட ஈர்ப்பு விசை இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. ஒளி கூட தப்பிக்க முடியாது. அதோட மையத்தை சிங்குலாரிட்டின்னு சொல்றாங்க. அந்த சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு கண்டுபிடிக்குறது நம்ம வெள்ளைத்தலை க்ராண்ட்டோட ரெண்டாவது பிரச்சினை. ஏன்னா என்னதான் இன்னொரு கிரகத்தை கண்டுபுடிச்சிட்டாலும், பூமியில மிச்சம்மீதி இருக்குறவங்களை அலேக்கா தூக்கிட்டு போகணும் இல்லையா, அதுக்கு எவ்ளோ சக்தி வேணும். அதை செய்ய ஒரு ஃபார்முலா வெச்சிருக்காரு, அந்த ஃபார்முலாவை கம்ப்ளீட் பண்ணா வெள்ளைத்தலையருக்கு ஒரு ப்ளாக்ஹோல்ல சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு தெரியணும்.

அதுக்குதான் அவர் பொண்ணையும் அனுப்பியிருக்காரு, அதன்படி இந்த பயணம் போறவங்க திரும்பி போக எல்லாம் முடியாது, ஒன்வே தான். இதை நம்ம ஹீரோட்ட இருந்து ஹீரோயினி மறைச்சிட்டாங்க. இங்க ஒரு லலாலலா சோக சீன் எல்லாம் உண்டு.

இதுக்கு நடுவுல ஹீரோயினி வந்ததுக்கு இன்னொரு காரணம், பிங் வந்திருக்குற மூணு பேர்ல ஒருத்தரு கூட ஹீரோயினிக்கு லவ்வு. அதனால அங்க முதல்ல போகணும்னு சொல்லிகிட்டே இருக்கு. ஆனா ஹீரோ சண்டை எல்லாம் போட்டு அதெல்லாம் ஆகாதுன்னு சொல்லிடறாரு. இதெல்லாம் சைடு ட்ராக்.

முதல் கிரகத்துக்கு போறாங்க. அது அந்த ப்ளாக்ஹோலோட ரொம்ப பக்கத்துல இருக்கு. அதனால ஈர்ப்பு விசை ரொம்ப அதிகம். அந்த அதீத ஈர்ப்பு விசையால‌ பூமியில ஒருமணிநேரம்ன்றது அங்க கிரகத்துல 7 வருசம். அதனால போய் பாத்துட்டு உடனே திரும்பிவந்துடணும். அதுக்கே ஏழு வருசம் போயிருக்கும். ரிஸ்க் எடுத்து போறாங்க. அங்க போனா முதல்ல வந்த விஞ்ஞானி செத்து போயிட்டாருன்னு தெரியுது, பெரிய அலைகள்ல மாட்டி திரும்புறதுக்கு கொஞ்சம் அதிக நேரம் ஆகிடுது. வந்து பார்த்தா பூமியில 23 வருசம் ஆகிடுது. ஹீரோவோட பொண்ணு எல்லாம் பெருசாகிடுது. அதுவும் இப்ப விஞ்ஞானி.

மூணுல ஒரு இடம் அவுட்டு. ரெண்டாவது எங்க போறது சண்டை எல்லாம் போட்டுட்டு, ஹீரோயின் சொன்ன அவர் லவ்வர் எட்மன்ட் கிரகத்து போகாம, இன்னொரு கிரகத்துக்கு போறாங்க. அங்க நம்ம மேட் டீமன் இருக்காரு. அவரு இந்த கிரகம் சூப்பர் அது இதுன்னு செம பில்ட் அப் கொடுக்குறாரு. ஆனா உண்மையில அது மனிதர்கள் வாழ தகுதியில்லாத கிரகம், ஆனாலும் இவரு இப்படி சொல்ல காரணம், அப்பதான் யாராவது வருவாங்க, அவங்க வர்ற ஸ்பேஸ்க்ராஃப்ட்ல பூமிக்கு தப்பிச்சி போயிடலாம்னு. அப்படி அவர் தப்பிக்குற முயற்சியில ஹீரோ ஹீரோயின் கூட வந்த இன்னொரு விஞ்ஞானி செத்துடறாரு. இவங்க வந்த பெரிய வட்ட வண்டியும் டேமேஜ் ஆகிடுது. மேட் டீமனும் புட்டுக்குறாரு.

இப்ப வேற வழியே இல்லை, ஹீரோயின் லவ்வர் எட்மன்ட் இருக்குற கிரகத்துக்கு போகணும். பிரச்சினை அங்க போற அளவுக்கு ஃப்யூயல் இல்லை, பெட்ரோல் தீந்து ஹைவேல நிக்குற மாதிரி விண்வெளியில ப்ளாக்ஹோல்ட்ட நிக்குறாங்க. இப்பதான் நம்ம ஹீரோ செம ஐடியா பண்ணுறாரு

ப்ளாக்ஹோலை சுத்தி அதோட ஈர்ப்பை வெச்சி வேகமா போயிட்டு திடீர்னு கிக் கொடுத்து அதை விட்டு தப்பிச்சா அந்த வேகத்துலயே ப்ளாக்ஹோலை விட்டு ரொம்ப தூரம் ரொம்ப வேகமா போயிடமுடியும். (இதை ஸ்டீஃபன் ஹாகிங் அவரோட டிஸ்கவரி சீரிஸ்ல செமையா விளக்கியிருப்பாரு). இப்ப இதை செய்யுறப்ப ஹீரோ ஒரு தியாகம் பண்ணுறாரு, ஹீரோயினை மட்டும் அனுப்பிட்டு இவரு அந்த ப்ளாக்ஹோல் உள்ளாற போயிடுறாரு, அதாவது சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு பாத்து பூமிக்கு மெஸேஜ் அனுப்பி ரெண்டாவது பிரச்சினைய தீர்க்குறதுக்கு (இங்க ஒரு லலாலாலா தீம் மீயூசிக் பேக்கிரவூன்ட்ல போட்டுக்கோங்க).

அதுக்குள்ளா போனா நம்ம ஆளு ஒரு பெரிய வித்தியாசமான டெசரக்ட்ன்ற அமைப்புள்ள போயிடுறாரு, கூடவே அவரோட செல்ல ரோபோவும். அதுக்குள்ள பல்வேற காலகட்டத்துல முன்ன பின்ன போய் பாக்க முடியும். பாக்க மட்டும்தான் முடியும், வேற ஒண்ணும் பண்ணமுடியாது. அதுல இவர் பார்க்குறது இவர் வீட்டோட லைப்ரரி.

அப்ப எப்படி மெஸேஜ் அனுப்புறது, அங்கதான் நம்ம ஆளு இன்னொரு ஐடியா பண்ணுறாரு (பெரிய ஐடியாமணியா இருப்பாரு போல). இந்த மாதிரி ஹையர் டைமன்ஷன்ல‌ (இதுக்கு தமிழ்ல என்ன?) ஊடுறவுற ஒரே விசயம் க்ராவிட்டி (ஈர்ப்பு விசை). அதன் மூலமா ஆரம்ப காலத்துக்கு போயி புழுதியை மாத்தி வெச்சி விண்வெளி மையத்தோட லொகேஷனை எழுதிடுறாரு. அதாவது இவரேதான் இவரை அங்க அனுப்பியிருக்காரு.

அடுத்ததா பூமியோட இப்போதைய காலத்துக்கு போயி, அந்த சிங்குலாரிட்டியோட ஃபார்முலாவை ஒரு வாட்ச் உள்ள மோர்ஸ் கோடா எழுதிடுறாரு. அங்க கடைசியா பார்க்க வர்ற அவர் பொண்ணு அதை எடுத்து பார்த்து படிச்சி தெளிஞ்சி "நம்ம அப்பா நம்மளை காப்பாத்திட்டாரு"ன்னு சந்தோச கூச்சல் போடுது. (இன்னொரு லலலா பாட்டு போட்டிருக்கலாம்)

இப்ப நம்ம ஆளுக்கு வந்த வேலை முடிஞ்சது. அந்த டெசரெக்ட் அப்படியே அழியுது. அதுல இருந்து நம்ம ஆளு வெளிய வந்து (வர்றப்ப ஆரம்ப பயணம் செய்யுற ஹீரோ ஹீரோயினை வேற தரிசிக்குறாரு). அப்படியே வந்து விண்வெளியில மிதக்குறாரு.

அப்ப பூமியில இருந்து வந்தவங்க அவரை கண்டுபுடிச்சி கூட்டிட்டு போறாங்க. எழுந்தாத்தான் தெரியுது நம்ம ஆளுக்கு, இவர் மெசேஜ் அனுப்பி இவங்க இவரை பிக் அப் பண்ணுறதுக்குள்ள பூமியில 50 வருசம் கடந்துடுச்சின்னு.

இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி பெரிய ஒரு விண்வெளி மையத்தை அமைச்சி அதன் மூலமா பூமியில இருக்குறவங்களை அலேக்கா தூக்கிட்டு வந்துட்டாங்க. அதன் பேரு கூப்பர் ஸ்டேஷன். "ஹை, என் பேரையே வெச்சிட்டீங்களா?"ன்னு கேக்க, "அது உங்க பேர் இல்லசார், உங்க பொண்ணோட பேரு, அவங்கதான் இதை உருவாக்கினவங்களே"ன்னு சொல்றாங்க.

இப்பதான் அந்த முக்கிய சந்திப்பு நடக்குது. பலவருசம் கழிச்சி தன் அன்பு மகளை திரும்ப சந்திக்குறாரு. ஆனா இவருக்கு 45 வயசுதான், பூமியில வருசங்கள் கடந்ததால அவர் பொண்ணு 92 வயசு கிழவியா படுத்த படுக்கையா தன் குடும்பத்தோட இருக்காங்க. (லலாலா.. லலாலா).

அவங்களை சந்திச்சி பேசுறப்ப அவங்க விளக்குறாங்க. இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி இந்த ஸ்டேஷனை கட்டி பூமியில இருக்குற உயிரினங்களை காப்பாத்தியாச்சி. இப்பதான் சமீபத்துல ஹீரோயின்கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு. எட்மன்ட் கிரகம் நல்லா இருக்காம், அங்க போக இனிமேத்தான் வேலைகள் செய்யணும்னு. தனக்கு வயசாகிட்டதால தன்னோட கடைசி காலம் தன் குடும்பத்தோட இருக்குறது நல்லதுன்னு சொல்றாங்க. அதனால ஒரு பாட்டம் அழுது முடிச்சிட்டு, நம்ம ஹீரோ ஒரு வண்டிய திருடிட்டு ஹீரோயினை பார்க்க கிளம்பிடுறாரு.

அந்த வோர்ம்ஹோல், டெசரெக்ட் எல்லாத்தையும் உருவாக்கினது யாருன்னு கேள்வி வரும். அதை செஞ்சவங்க எதிர்காலத்துல இருக்கக்கூடிய முன்னேறிய மனித இனம். இவங்க செஞ்சிருக்குற வேலைகள் மூலமா மனித இனம் வாழ்வாங்கு வாழ்ந்து, டெக்நிகலா முன்னேறி இதை எல்லாம் செஞ்சி, தங்களை தாங்களே காப்பாத்தி இருக்காங்க (தலை சுத்துதுதானே?)

அங்க ஹீரோயின் க்ரான்ட், தனியா அந்த கிரகத்துல இருக்காங்க. அவங்களுக்கும் காலம் அதிகமா ஓடலைன்றதால சின்ன வயசாவே இருக்காங்க. பின்ன ஹீரோவோட மகளுக்கு வயசாகலாம், ஹீரோயினுக்கு வயசாகுமோ? (நோலன் ரொம்ப தமிழ்ப்படம் பாக்குறாருன்னு நினைக்குறேன்). அவங்க லவ்வர் செத்து போயிடுறாரு (ஹீரோவுக்கு ரூட் க்ளியர்). மனிதர்கள் பூமியை மாதிரியே சுவாசிக்க, வாழ‌ ஏற்ற அந்த கிரகத்துல பூமியில இருந்து மனிதர்கள் வரவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க‌.

*சுபம்*

Monday, March 16, 2015

எனக்குள் ஒருவன் : தவறவிடக்கூடாத தமிழ் படம்

முன் குறிப்பு 1: நீங்கள் இன்னும் எனக்குள் ஒருவன் பார்க்கவில்லை என்றால் தியேட்டருக்கு போய் பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம்

மு.கு.2: இதன் ஒரிஜினலான கன்னட படம் "லூசியா"வை நான் பார்க்கவில்லை. என் பார்வை முழுக்க தமிழின் எனக்குள் ஒருவனைப் பற்றி மட்டுமே.

*****

கிறிஸ்டோஃபர் நோலன் உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய "இன்செப்ஷன்" படத்தில் ஒரு காட்சி வரும். கனவுக்குள் கனவு என நான்கு நிலைகளுக்கு செல்வதற்கு தகுந்த சரியான மயக்கமருந்து ஃபார்முலா தேடி ஒருவரிடம் செல்வார்கள். அவர் தன் மருந்தின் வீரியத்தை காட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கே சுமார் 20 பேர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை அடித்தால் கூட எழமாட்டார்கள்.

அந்த கெமிஸ்ட் "இவர்கள் எல்லாரும் தினம் இங்கே வருவார்கள். காலை எழுந்து சென்றுவிட்டு, மீண்டும் சீக்கிரமாக இங்கே திரும்பி விடுவார்கள்" என்பான்

லியானார்டோ அவரிடம் "திரும்ப தூங்க இங்கே வருவார்களா?" எனக்கேட்க‌

அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில் "இல்லை, அவர்கள் இங்கே வருவது திரும்ப விழித்தெழ"

அதாவது, அந்த மனிதர்களைப் பொறுத்தவரை  இந்த புற உலகம் வேறு வழியில்லாமல் இருக்கும் இடம். அந்த கனவுலகம்தான் அவர்களைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கை, அதைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

"எனக்குள் ஒருவன்" படத்தின் அடிப்படை கதையின் ஒருவரி அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில்தான்

****

ஒரு தியேட்டரில் டிக்கெட்டில் டார்ச் அடித்து சீட் நெம்பர் பார்த்து சரியான சீட்டில் உக்காரவைக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் விக்கி என்ற கருப்பு சித்தார்த்திற்கு கிடைக்கும் அற்புத மாத்திரை லூசியா.

மருந்து கம்பெனி நடத்தி வரும் ஜான் விஜய் "இதை போட்டுகிட்டா உனக்கு கனவு வரும், அதுல நீ வாழ நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம்" என்று சொல்லி கொடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க, கனவில் ஒரு பெரிய சினிமா ஸ்டாராக விக்னேஷ் என்ற வெள்ளை சித்தார்த். 

அதன்பின் கனவிலும் நிஜத்திலும் என்று பேரலலாக போகும் இரட்டை கதை, இரண்டிலும் ஒரே ஆட்கள் வேறு வேறு பாத்திரங்களாக என்று கடைசி வரை திரைக்கதையில் அதகளம்.

படத்தின் மேக்கிங் அற்புதம். அதிலும் கனவு கருப்பு வெள்ளையிலும் நிஜம் வண்ணத்திலும், அதற்கான காரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

கதையின் மிகப்பெரிய பலமே க்ளைமாக்ஸ் காட்சிகள். படம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை.  

இதற்கு மேல் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

"ஐ டோன்ட் சீ டமில் மூவிஸ்" என்று சொல்பவர்களும் பார்க்கவேண்டிய படம் இது. 

************

ஸ்பாயிலர் அலெர்ட்: படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

படம் பார்த்தவர்களுக்கு, படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமிப்பாக‌ இருந்திருக்கும். 

சில வருசங்களுக்கு முன்னால் அமெரிக்க வாழ் பதிவர் நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கதை வசனம் எழுதி நண்பர் கணேஷ் சந்திரா & அவர் நண்பர்கள் நடித்த ஒரு குறும்படம் "நிமித்தக்காரன்". சுமார் கால்மணிநேரம் ஓடும் இந்த குறும்படமும் கனவுகளைப் பற்றியே பேசுகிறது.

வசனம் அதிகம் இருந்தாலும் பொறுமையாக பார்த்தால், க்ளைமாக்ஸில் ஒரு வாவ் மொமென்ட் உண்டு, முக்கியமாக இதை எனக்குள் ஒருவனுடன் ரிலேட் செய்ய முடியும்.

பி.கு: எனக்குள் ஒருவனின் கன்னட ஒரிஜினலான லூசியா ரிலீஸ் ஆனது ஃபிப்ரவரி 2013. இந்த நிமித்தக்காரன் ரிலீஸ் ஆனது ஏப்ரல் 2011. அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பே..





Thursday, April 3, 2014

மனிதனுக்குள் ஒரு மிருகம் : The Purge (2013)

ஒரு வருசம் முழுக்க உங்களை மாடு மாதிரி வேலை வாங்கிட்டு அப்ரைசல் நடக்கும்போது "நீங்க இன்னும் நல்லா வேலை செய்யணும்"னு சொல்லி ப்ரோமோசன் குடுக்காத மேனேஜர் உங்களுக்கு இருந்திருக்காரா?

வீட்டுல ஒரு நல்லகாரியம் நடக்கும்போது எப்போதோ நடந்த பகையை அல்லது நீங்க நல்லா வாழ்றீங்கன்ற வெறுப்புல இல்லாத பொல்லாதை சொல்லி அந்த விழா மனநிலையவே கெடுக்குற ஒரு உறவினர் இருந்திருக்காரா?

தினம் தினம் தன் வீட்டு குப்பைகளை உங்க வீட்டு முன்னால கொட்டுற பக்கத்து வீட்டுக்காரர்? கொடுத்த பணத்துக்கு மீதி தராம, கேட்டா உங்களையே திட்டுற கண்டக்டர்? நாலு பேர் முன்னால உங்களை அசிங்கப்படுத்தின யாரோ ஒரு எக்ஸ் ஒய் இசட்?

இந்த மாதிரி ஆட்களைப் பாக்கும்போது உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா இவனுங்களை எல்லாம் கொலையே பண்ணிடுவேன்னு தோணுமில்லையா? உண்மையாவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வீங்க, நிஜமாவே கொலை செய்வீங்களா?

சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களும் நானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வோம்னு யாருக்கும் தெரியாது. நமக்குள்ள இருக்குற மிருகத்தோட உண்மையான முகம் அப்பதான் தெரிய வரும். அந்த மிருகத்தோட வக்கிரம் நமக்கு இப்ப தெரியுமான்றதே சந்தேகம்தான்

"அடுத்த 12 மணிநேரத்துக்கு நீ என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே. உன்மேல எந்த வழக்கும் போடப்படாது. போலீஸ், மருத்துவ உதவிகள் எதுவுமே அந்த 12 மணிநேரத்துக்கு வராது"ன்ற மாதிரியான ஒரு உத்தரவாதம் கிடைச்சா நம் ஆழ்மனசுல இருக்குற வக்கிரம் எல்லாத்தையும் நிறைவேத்திக்குவோம் இல்லையா?

அதுதான் 2013ல வந்த "The Purge" படத்தோட கதை





*****

வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கைன்னு அமெரிக்கா மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்குது. இதை சரி செய்ய அமெரிக்காவின் புதிய நிறுவனர்கள் (New Founding Fathers) ஒரு புதிய ஐடியாவை செயல்படுத்துறாங்க.

அதன்படி, வருசத்துல ஒருநாள் மாலை 7 மணிமுதல் அடுத்த நாள் காலை 7 மணி வரைக்கும் "பர்ஜ்" அப்படின்ற ஒரு நிகழ்வுக்காகன்னு ஒதுக்குறாங்க. இந்த 12 மணிநேரத்துல எந்த சட்டமும் கிடையாது. பெரிய அழிவை ஏற்படுத்துற பயங்கர ஆயுதங்கள் மற்றும் அரசின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை தாக்க மட்டும் தடை. மற்றபடி துப்பாக்கி, கத்தி இதை வெச்சி யாரையும் கொல்லலாம், காயப்படுத்தலாம், கற்பழிக்கலாம், எதுவுமே தப்பில்லை.

இதன் மூலமா மக்கள் தங்கள் ஆழ்மன வக்கிரங்களை இறக்கி வெச்சிட்டு மற்ற 364 நாட்களிலும் வேலைகளில் கவனம் செலுத்துறதால வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கை எல்லாம் குறைஞ்சி, நாடே சுபிட்சமாகிடுது.

பெரும்பாலும் இதனால பாதிக்கப்படுறது அதிக வசதியில்லாத ஏழை எளிய மக்கள்ன்றதால "இது அப்படிப்பட்டவங்களை ஒழித்துக் கட்டுறதுக்காகவே நடத்தப்படுற விசயம்"னு ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் வருடா வருடம் இது நடத்தப்படுது. நேரடி ஒளி/ஒலிபரப்பும் செய்யப்படுது

****


அப்படிப்பட்ட ஒரு பர்ஜ் இரவில் படத்தின் ஹீரோ ஜேம்ஸ், தன் மனைவி, மகன், மகளுடன் தன் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.

ஜேம்ஸ், வீட்டிற்கான செக்யூரிட்டி சிஸ்டம்களை விற்கும் சேல்ஸ்மேன். பர்ஜ் இரவில் இருந்து உயிர் தப்பிக்க பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் செக்யூரிட்டி சிஸ்டம்களை பொருத்துவதால சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பணக்காரன் ஆனவன்.

பர்ஜ் இரவிற்காக உட்சபட்ச பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, தன் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு இருக்கிறான், அப்போது வெளியே மற்றவர்களிடம் சிக்கி அடிபட்டு உயிர்தப்பிக்க ஓடி வரும் ஒருவனை ஜேம்ஸின் மகன் கதவைத் திறந்து வீட்டிற்குள் அனுமதிக்கிறான். கதவு மறுபடி மூடப்பட்டாலும், அந்த மனிதனை தேடி வரும் ஆயுதம் தாங்கிய குழு, அவனை ஒப்படைக்கா விட்டால் வீட்டில் எப்படியாவது நுழைந்து அந்த மூன்றாம் மனிதனையும், ஜேம்ஸ் குடும்பத்தாரையும் கொல்வோம் என்று கொக்கரிக்க, ஜேம்ஸ் அதை எப்படி எதிர் கொள்கிறான் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

வெறும் 3 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, விமர்சகர்களால் பெரிய அளவில் பாராட்டப்படா விட்டாலும், இந்த படம் சுமார் 90 மில்லியன் டாலர் அளவுக்கு வசூல் செய்திருப்பதே இதை மக்கள் விரும்பியதற்கு சாட்சி.

அதனாலேயே இதன் அடுத்த பாகம் ஜூலை 2014ல் வெளிவர இருக்கிறது.

ஆக்சன் / த்ரில்லர் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.

http://en.wikipedia.org/wiki/The_Purge

Friday, August 9, 2013

அணில் ரசிகர்களின் இன்றைய பொழுது














Tuesday, April 23, 2013

ம‌து என்றொரு அர‌க்க‌ன்

டெல்லியில் ஐந்து வ‌ய‌து பெண்ணை பாலிய‌ல் வ‌ன்முறைக்கு ஆளாக்கிய‌ இர‌ண்டாவ‌து ஆளை பிடித்து விட்டார்க‌ளாம். "த‌ண்ணிய‌டித்து போதையில் இருந்தோம், வெளியே சென்று யாராவ‌து பெண்ணை அழைத்து வ‌ர‌லாம் என்று போனோம், அந்த‌ குழ‌ந்தைதான் இருந்த‌து, சாக்லேட் கொடுத்து அழைத்து வ‌ந்தோம்" என்று விவ‌ரித்து இருக்கிறது அந்த‌ மிருக‌ம்.

முடிந்த‌வ‌ரை வ‌ன்முறைக்கு உட்ப‌டுத்தியபின் க‌யிறைப் போட்டு இறுக்கி, அந்த‌ குழ‌ந்தை இற‌ந்துவிட்ட‌தாக‌ நினைத்து த‌ப்பிச் சென்றிருக்கிறார்க‌ள். அந்த‌ குழ‌ந்தை பிழைத்துவிட்ட‌தை அதிர்ஷ்ட‌ம் என்ப‌தா அல்ல‌து இனி உயிர்பிழைத்த‌பின் ஒவ்வொரு விநாடியும் உட‌ல‌ள‌விலும் ம‌ன‌த‌ள‌விலும் வேத‌னையை சும‌க்க‌ப்போவ‌தை நினைத்து துர‌திர்ஷ‌ட‌ம் என்ப‌தா என்று தெரிய‌வில்லை.

க‌ட‌ந்த‌ மாத‌ம் அமெரிக்காவையே உலுக்கிய‌ ம‌ற்றொரு வ‌ழ‌க்கு. அமெரிக்க‌ டீனேஜ‌ர்க‌ள் என்றாலே எதைப்ப‌ற்றியும் க‌வ‌லைப்ப‌டாத‌வ‌ர்க‌ள், எல்லாரும் எல்லாருட‌னும் உட‌லுறவு வைத்துக்கொண்டு ஜாலியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் என்ற வெளியாட்க‌ளாகிய‌ ந‌மக்கு சூடு போட‌ ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு.

ப்ராம் என்ற‌ பெய‌ரில் வ‌ய‌சுப்ப‌ச‌ங்க‌ளும் வ‌ய‌சுப்பெண்க‌ளும் கூடிக்குடித்து கும்மாள‌ம் அடிக்கும் இன்னொரு நிக‌ழ்வாக‌ முடிந்திருக்க‌ வேண்டிய‌ நிக‌ழ்ச்சி அது. வ‌ழ‌க்க‌ம் போல‌ எல்லாரும் குடித்து சில‌ர் ம‌ட்டையான‌தும், சில‌ ஆண்ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ஒரு பெண் காரில் ஏறி இருக்கிறார். அந்த‌ பெண்ணும் முழு போதையில் இருந்ததால் அன்றிர‌வு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்றே தெரிய‌வில்லை. ம‌றுநாள் காலை ஒரு ஆண்ந‌ண்ப‌னின் வீட்டு வ‌ர‌வேற்ப‌றையில் ஒட்டுத்துணியில்லாம‌ல் எழுந்திருக்கிறார். என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌தே புரியாம‌ல் வீட்டுக்கும் போய் விட்டார்.

அடுத்த‌ சில‌ நாட்க‌ளில் அந்த‌ ஆண் ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ர் அந்த‌ பெண்ணின் உட‌லில் த‌வ‌றான‌ இட‌ங்க‌ளில் கைக‌ளையும் விர‌ல்க‌ளையும் வைத்து எடுத்து ஃபோட்டோவை பெருமையாக‌ இணைய‌த்தில் வெளியிடுகிறார்க‌ள். இதைப் பார்த்த உங்க‌ளை, என்னைப் போன்ற‌ ப‌திவ‌ர் ஒருவ‌ர் (த‌மிழ் ப‌திவ‌ர் அல்ல‌, அமெரிக்க‌ ஆங்கில‌ ப‌திவ‌ர்தான்) இதைப் ப‌ற்றி எழுதி, ந‌ம் ஊர் சிறுவ‌ர்க‌ள் எவ்வ‌ளவு மோச‌மாக‌ போய்க்கொண்டிருக்கிறார் பாருங்க‌ள் என்று த‌ன் ஆத‌ங்க‌த்தை கொட்டுகிறார். அமைதியான‌ ஊராக‌, வெளியுல‌க‌ம் அதிக‌ம் தெரிந்துகொள்ளாத‌ அந்த‌ ஊர் அடுத்த‌ சில‌ நாட்க‌ளிலேயே ஊட‌க‌ங்க‌ளின் புண்ணிய‌த்தால் பிர‌ப‌ல‌ம் ஆகிவிட்ட‌து. க‌சாப் வ‌ழக்கைப் போல‌ அந்த‌ வ‌ழ‌க்குக்கும் ந‌ட்ச‌த்திர‌ அந்த‌ஸ்து கிடைத்து எல்லாரும் பேச‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ள்.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ இரு ஆண்க‌ளுக்கும் இர‌ண்டு வ‌ருட‌ம் த‌ண்ட‌னை, ஒருவ‌ருக்கு 16 வய‌து, இன்னொருவ‌ருக்கு 17 வ‌ய‌து. வ‌ய‌து குறைவாக‌ இருப்ப‌தால் 21ம் வ‌ய‌து வ‌ரை அவ‌ர்க‌ளை உள்ளே வைக்க‌ ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ழிமுறை உள்ள‌து. ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அந்த‌ இருவ‌ர், அந்த‌ பெண் த‌விர‌ அதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட அத்த‌னை ந‌ண்ப‌ர்க‌ளும் கோர்ட்டிக்கு இழுக்க‌ப்ப‌ட்டு சாட்சிக்கூண்டில் ஏற்ற‌ப்ப‌ட்டு....... இதுகுறித்து பேட்டிய‌ளித்த‌ காவ‌ல்துறை த‌லைவ‌ர் "குழ‌ந்தைக‌ளுக்கு ஒன்றை ம‌ட்டும் சொல்லிக் கொள்கிறேன், பாலிய‌ல் அத்துமீற‌ல் என்ப‌து எந்த‌ நிலையிலும் எந்த‌ போதையில் இருந்தாலும் நிச்ச‌ய‌ம் த‌ண்ட‌னைக்குரிய‌ குற்ற‌மே" என்று சொல்கிறார்

அமெரிக்காவைப் பொறுத்த‌வ‌ரை குடிப்ப‌து என்ப‌து அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌த்தில் ஊறிய‌ ஒன்று. குடும்ப‌த்துட‌ன் உட்கார்ந்து குடிப்ப‌து எல்லாம் ச‌க‌ஜ‌மான‌ ஒன்று.  அவ‌ர்க‌ள் ஊரிலேயே இது பெரிய‌ பிர‌ச்சினை.

பாண்டிச்சேரி குறித்து எழுதும்போது பிர‌ப‌ஞ்ச‌ன் "அங்கு குடித்துவிட்டு சாக்க‌டையில் வீழ்ந்து கிட‌ப்ப‌வ‌ர்க‌ளை பார்க்க‌வே முடியாது, அப்படி விழுந்து கிட‌ப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் இருந்து செல்ப‌வ‌ர்க‌ள்தான்" என்ப‌தாக‌ சொல்லியிருப்பார். குடிக்க‌ ஆர‌ம்பித்தால், அந்த‌ கொண்டாட்ட‌ ம‌ன‌நிலையை எப்ப‌டி அனுப‌விப்ப‌து, ம‌ட்டையாவ‌தை த‌விர்க்க‌ எந்த‌ அளவுட‌ன் நிறுத்தவேண்டும் என்ற‌ எந்த‌ எழ‌வும் ந‌ம் ஆட்க‌ளுக்கு தெரியாது.

ச‌ந்தேக‌ம் இருந்தால் உங்க‌ள் க‌ம்பெனியின் ஆண்டுவிழா ந‌ட‌ந்தால் க‌டைசி வ‌ரை இருந்து பாருங்க‌ள். மாத‌ம் ஐம்ப‌தாயிர‌ம் ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் ஆள் கூட‌ 'நாலு ர‌வுண்டு முடிச்சி அஞ்சாவ‌து ழ‌வுன்டு மாப்ள‌'யில் மேடையில் பாடி / ஆடிக்கொண்டிருக்கும் செலிப்ரிட்டிக்கு ல‌ந்து கொடுத்துக் கொண்டிருப்பார். அவ‌ர் குடித்த‌ பான‌த்தின் விலை அவ‌ர‌து இர‌ண்டும‌ணி வேலைநேர‌ கூலியாக‌ இருக்கும், அதை அவ‌ரால் த‌னியாக‌ வீட்டில் வாங்கி குடிக்க‌ முடியாதா? அங்கே அவ‌ர‌து ம‌ரியாதை ச‌க‌ ஊழிய‌ர்க‌ள் முன்னால் காற்றில் ப‌ற‌ப்ப‌தை அறியாத‌வ‌ரா அவ‌ர்.. எல்லாம் தெரியும், ஆனால் ம‌துவை பார்த்துவிட்டால் "ப‌சி வ‌ந்திட‌ ப‌ற‌க்கும் ப‌த்து" ம‌ட்டும‌ல்லாது மீதி எல்லாமே ந‌ம் ஆட்க‌ளுக்கு பற‌ந்து / ம‌ற‌ந்து விடும்.

முத‌லில் சொன்ன‌ இர‌ண்டு கொடும்நிக‌ழ்வுக‌ளும் க‌ட‌லில் அள்ளிய‌ துளி போல‌த்தான். ம‌துவினால் இன்னும் எத்த‌னை எத்த‌னை கொடும்நிக‌ழ்வுக‌ள் ஒன்றும‌றியாத‌ எத்த‌னை எத்த‌னையோ பேரை, முக்கிய‌மாக‌ குழ‌ந்தைக‌ளையும் பெண்க‌ளையும் காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கிற‌து.

இந்த‌ இட‌த்தில் சூப்ப‌ர்ஸ்டார் ஒரு பொதுநிக‌ழ்ச்சியில் சொன்ன‌ க‌தை நினைவுக்கு வ‌ருகிற‌து. ஒருவ‌னை ஒரு அறைக்குள் அடைத்து அவ‌ன் முன் மூன்று ஆப்ஷ‌ன்க‌ளை கொடுத்தார்க‌ளாம். அந்த‌ அறையில் அவ‌னைத் த‌விர‌ ஒரு அழ‌கான‌ பெண், ஒரு சிறு குழ‌ந்தை, ஒரு பாட்டில் ம‌துவை வைத்துவிட்டு, "ஒண்ணு நீ அந்த‌ பொண்ணை க‌ற்ப‌ழிக்க‌ணும், இல்லைன்னா அந்த‌ குழ‌ந்தையை கொல்ல‌ணும், அதுவும் இல்லைன்னா அந்த‌ ம‌துவை குடிக்க‌ணும்" என்று. அவ‌ன் க‌ற்ப‌ழிப்பு, குழ‌ந்தைக் கொலைக்கு ப‌தில் ம‌துவே ப‌ர‌வாயில்லை என்று அதை எடுத்து குடித்தானாம். போதை த‌லைக்கேறி அந்த‌ பெண்ணின் மீது காம‌ம் கொண்டு அவ‌ளை க‌ற்ப‌ழித்தானாம், ந‌டுவில் தொந்த‌ர‌வாக‌ இருந்த‌ குழ‌ந்தையையும் கொன்றானாம். ம‌துவின் தீமையை இதைவிட‌ ந‌ன்றாக‌ சொல்ல‌முடியாது என்றே தோன்றுகிற‌து.

இந்த‌ பின்புல‌த்தில்தான் ம‌ற்றொரு செய்தியையும் ப‌டிக்க‌ நேர்ந்த‌து. த‌மிழ‌க‌த்தில் டாஸ்மாக் விற்ப‌னை இருப‌தாயிர‌ம் கோடியாம். வ‌ரும் ஆண்டிற்கு இருப‌த்தையாயிர‌ம் கோடி இல‌க்கு நிர்ண‌யித்து வேலை செய்து வ‌ருகிறார்க‌ளாம்.

இதைக் கேள்விப்ப‌டும்போது ப‌திவுல‌கில் அடிக்க‌டி சொல்ல‌ப்ப‌டும் வ‌ரிதான் நினைவுக்கு வ‌ருகிற‌து "நாடும் நாட்டும‌க்க‌ளும் நாச‌மாய் போக‌ட்டும்"

Monday, April 8, 2013

அரங்கேற்றம் (அதீதம் சிறுகதை 2)

”மெயின்ரோடுல ஆறு கிமீ போயிடுங்க தம்பி. பெரிய ஆலமரம் தாண்டி ஒரு மண்ணு ரோடு இடதுகை பக்கமா பிரியும், அதுல ரெண்டு கிமீ போனிங்கன்னா உங்க வலது பக்கமா கிழக்கு பாத்த மாதிரி பெரிய கேட்டு இருக்கும். அந்த வீடுதான். தம்பி, நான் வேணும்னா கூட வர்றேனே” என்று தயங்கி தயங்கி சொன்னார் டிரைவர் ஆறுமுகம்.

“இல்லை அண்ணே, நானே போயிட்டு வந்துடறேன். நீங்க எறங்கிக்கோங்க. சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றேன் சற்றே உயர்த்திய குரலில்

கீழே இறங்கியவர், “பெரிய அம்மாவுக்கு நான் நிச்சயமா சொல்ல மாட்டேன் தம்பி, ஆனா அவங்களுக்கு தெரியாம போயிடும்னு நினைக்குறீங்களா?” என்று கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தார் ஆறுமுகம்.

ஒரு முழுநிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன். ஸ்டியரிங்கை பற்றிய கைகள் என்னையறியாமல் ஸ்டியரிங்கை இறுக்க ஆரம்பித்தன. பெருமூச்சை விட்டபின் வண்டியை நகர்த்தினேன்.

அப்பா....

உலகின் பாதிக்கு பாதி ஆண்களைப் போலவே எனக்கும் என் அப்பாதான் ஆதர்சம். என் முதல் தோழன். அவருடன் நான் விவாதிக்காத விசயமே இல்லை.... அந்த ஒன்றைத் தவிர.

பரம்பரை சொத்தாக வந்த ஆயிரத்து சொச்ச ஏக்கர்கள். காவிரி பாசனத்தில் நெல், தோப்புகள் என்று கணக்கில்லாத பணத்துடன் பிறந்து வளர்ந்தவர். தாத்தாவின் அறிவுரைப் படி சென்னையில் வக்கீலுக்கு படித்து முடித்தபின் கிராமத்திற்கே திரும்பி பண்ணை நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்தவர். எனக்கு நினைவு தெரிந்து யாரும் அவர் பெயரைச் சொல்லிக்கூட அழைத்ததில்லை, “பெரியவர்” என்ற ஒரு சொல் சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திலும் அப்பா ஒருவரையே குறித்தது ஆச்சர்யம்தான்.


ஆலமரம் சற்று தொலைவில் தெரிந்தது.

அம்மாவின் அதிகார குரல் மனதிற்குள் கேட்டது ”என்மேல உனக்கு மரியாதை இருக்குறது உண்மைன்னா எக்காரணம் கொண்டும் அந்த பக்கம் போகக்கூடாது”

வேகம் குறைத்து இடதுபுறம் காரைத் திருப்பினேன். ரியர் வ்யூ மிரரில் என் கார் கிளப்பிய புழுதி தெரிந்தது.

எனக்கு 7ம் வகுப்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோதுதான் முதல் முதலாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு உக்கிரமான சண்டையைப் பார்த்தேன். வெளியே வைக்கோல் போர்கள் நடுவே ஐஸ்பாய் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோதே அம்மாவின் ஆக்ரோஷமான குரல் கேட்டது. அப்படியே நின்றேன். ஒன்றும் புரியவில்லை. உள்ளே தயங்கி தயங்கி நுழைந்தேன். ஒரு விநாடி எல்லோரும் அப்படியே எதுவும் பேசாமல் நின்றார்கள். அம்மா கண்ணைக் காட்ட சுந்தர் மாமாதான் வந்து “வாடா, வெளிய போயிட்டு வரலாம்” என்று என்னை இழுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.

அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து என்னை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டபோது வீட்டின் சூழல் மாறி இருந்ததை உணர முடிந்தது. அதற்குப் பிறகு அம்மாவும் அப்பாவும் எப்போதும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசிக்கொண்டதில்லை. ஆனால் இருவரின் என் மீதான அன்பும் கண்டிப்பும் எந்த மாற்றமும் இல்லாமல்தான் இருந்தது.


ஆறுமுகம் சொன்ன பெரிய மர நிறத்திலான கேட் வந்தது. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எதுவும் இல்லாமல் கல் நட்டு கம்பியினால் வேலி அமைத்திருந்திருந்தார்கள். பார்த்ததும் அந்த வீடுதான் என்று புரிந்தது.

“அருண், வீடுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? சுத்தியும் ஒரு அம்பது அடிக்காவது தோட்டம், அதுல தென்னை மரம், மாமரம், கொய்ய மரம் எல்லாம் இருக்கணும். கேட்ல இருந்து வீட்டுக்கு போற வழி ரெண்டு பக்கமும் பூச்செடிங்க நம்ம இடுப்பு உயரத்துக்கு வளந்திருக்கணும், அந்த வழியோட ஒரு பக்கம் புல்லுக்கு நடுவுல ஊஞ்சல், இன்னொரு பக்கம் பசங்க விளையாட ஒரு ஏரியா இருக்கணும்”

எல்லாமே இருந்தன. அப்பாவின் வீடு.....

அந்த சம்பவம் நடந்து, ஒரு வருடம் கழித்து அடுத்த விடுமுறையில் ஊருக்கு வந்தபோதுதான் அரசல் புரசலாக தெரியவந்தது. முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் அப்பா பக்கத்து ஊரில் ஒரு சின்ன வீட்டை கூட்டிக் கொண்டு வந்து வைத்திருப்பதாகவும் அங்கே அவருக்கு ஒரு பெண்குழந்தை கூட இருப்பதாகவும் உறுதியாக தெரிய உடைந்து போனேன்.

அம்மா அப்பாவுடன் கல்லூரியில் படித்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த அக்மார்க் தமிழ் பிராமணக் குடும்பப் பெண்ணுக்கு சுத்த கிராமத்தானாகவே தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளும் அப்பாவை பிடித்ததற்கு காரணம் இன்று வரை எனக்கு புரிந்ததில்லை. அம்மாவின் குடும்பமும் சென்னையில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள் என்பதால் இருபக்கமும் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் திருமணம் முடிந்திருக்கிறது. அப்பா பண்ணையை பார்த்துக் கொள்ள, அம்மா மேல்படிப்பை தொடர்ந்து படித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆகிற அளவுக்கு உயர்ந்த இடைவெளியில் நான் பிறந்து பள்ளிக்கு போக ஆரம்பித்திருந்தேன். அன்னியோனியமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் தாம்பத்யம் சரி செய்ய முடியாத அளவுக்கு உடைந்தது இந்த ஒரு பிரச்சினையினால்தான்.

அடிக்கடி நினைத்துக் கொள்வேன். இவ்வளவு பிரச்சினைக்குப் பிறகும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதற்குக் காரணம் நான்தானோ என்று. சுந்தர் மாமா கூட ஒரு முறை அதையேத்தான் சொன்னார். சுந்தர் மாமா என் அம்மாவின் தம்பி. எனக்கு அடுத்து என் அப்பா அம்மா இருவருக்குமே செல்லப் பிள்ளை அவர்.


வண்டியை வெளியேயே நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நாய் எதுவும் இருக்காது என்பது தெரியும், கால்கள் பின்ன மெதுவாக நடந்து போர்டிகோவை அடைந்தேன். ரத்தச் சிவப்பில் ஒரு ஆக்செண்ட் நின்றிருந்தது. போர்ட்டிகோவும் காரும் வீட்டின் கதவு ஜன்னல்கள் எல்லாவற்றிலும் ஒரு சிறு லேயர் தூசி இருந்தது. இரண்டு வாரங்கள் முன்பு வரை சுத்தமாக வைக்கப்பட்டிருந்து அதன் பின் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை உணர முடிந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தக்காளிப்பழ சாறு ஃபேக்டரிக்கு ஆர்டர் எடுக்க கொழும்பு போயிருந்தபோதுதான் ஃபோன் வந்தது. சுந்தர் மாமாதான் பேசினார். வழக்கம் போல உணர்ச்சி இல்லாத குரலில் “அருண்... அப்பா நம்மை விட்டுட்டு போயிட்டாருடா” என்றார். விசயம் புரிந்து நான் நிலைக்கு வர சில விநாடிகள் ஆனது. நடுங்கும் குரலில் “மாமா...” என்றேன். “உணர்ச்சிவசப்படாத, உடனே அடுத்த ஃப்ளைட் புடிச்சி திருச்சிக்கு வந்துரு, ஏர்போர்ட்டுக்கு கார் வந்துடும்” வைத்துவிட்டார். அப்பா இல்லாத உலகத்தை நான் அதுவரை யோசித்ததே இல்லை என்பது எனக்குப் புரிந்து நான் மீண்டும் இயல்புக்கு வர காரியம் எல்லாம் முடிந்துகூட இரண்டு நாட்கள் ஆனது.

”டிங் டாங்”

உள்ளே சில விநாடிகள் கழித்து யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்த, கலங்கிய கண்களுடன் இருந்த அந்த அம்மாளின் முகம் என்னைப் பார்த்த உடனேயே ஆச்சர்யத்தில் மலர்ந்தது. அவசர அவசரமாக கதவைத் திறந்தவர் “உள்ள வாங்க தம்பி, நான் உங்களை எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.

“என்னை உங்களுக்கு?”

“தெரியும் தம்பி, பெரியவர் உங்க கல்யாண கேசட், ஆல்பம் எல்லாம் கொண்டு வந்து காட்டியிருக்கார்”

தயக்கத்துடன் உள்ளே வந்து அமர்ந்தேன். ஒரு விசாலமான ஹால் அதன் இருபுறமும் விருந்தினர் அறைகள், ஹாலின் நடுவில் ஊஞ்சல், ஹாலைத் தாண்டினால் சூரிய வெளிச்சத்துடன் முற்றம் தெரிந்தது. முற்றத்தின் ஒரு புறம் ஸ்டோர் ரூமுடன் கூடிய சமையல் அறையும் இன்னொரு புறம் இரு படுக்கை அறைகளும் முற்றத்தை தாண்டினால் கிணறு, குளியல் அறைகளும் இருக்கும் என்று உணர முடிந்தது, அப்பா...

“டேய் உங்க அப்பா இந்த வீடு கட்டுறப்ப என்ன சொன்னாரு தெரியுமா, நடுவுல முற்றம் வைக்கணுமாம், வீட்டுக்கு பின்னால கிணறு வரணுமாம், அப்படியே பட்டிக்காடு” என்று வாய் கொள்ளா சிரிப்புடன் அம்மா அடித்த கிண்டலும் அதற்கு அப்பா புன்னகையுடன் பார்த்த பார்வையும் நினைவுக்கு வந்தது.

“செய்தி வந்தது, ஆனா வர முடியலை, காரணம் உங்களுக்கே தெரியும்” என்றார் அவர். அவரை சித்தி என்று அழைப்பதா வேணாமா என்று குழப்பத்துடன் அமைதியாக இருந்தேன்.

“குட்டி, ஒரு காஃபி போட்டு கொண்டுவா. தம்பி வந்திருக்கு பாரு.. உங்க அம்மாவுக்கு எங்க நாங்க சொத்துல உரிமை கொண்டாடிட்டு வந்துடுவோமோன்னு பயம் போல. பெரியவரோட முகத்தை கடைசியா ஒரு தடவை பாக்கக்கூட முடியாம போச்சி” என்றார் விரக்தியாக.

“நான் போய் அந்த வீட்டுக்கு போயி ஒரு நடைபார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்” தலையை சீவிக் கொண்டிருந்த கவிதா அப்படியே திரும்பி என்னைப் பார்த்தாள். ”எங்களை மாதிரியேதான் அவங்களையும் அப்பாதான் பதினைஞ்சு வருசமா காப்பாத்திட்டு வந்திருக்காரு, இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு எதாவது உதவி வேணும்னா செஞ்சிட்டு வரலாம்னு பாக்குறேன்” என்றேன்.

“அருண், அத்தைக்கு சொல்லப்போறியா?”

“இல்லைடா, அம்மா நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க. ஏற்கனவே அவங்களுக்காக அப்பா கோடியா கோடியா செலவு பண்ணி இருக்காருன்னு சொல்லி திட்டிட்டு இருக்காங்க”

“நானும் வரவா?”

“வேணாம்டா, அங்க என்ன கண்டிசன்னு தெரியலை. ஒருவேளை அம்மா நினைக்குற மாதிரி அவங்க சொத்துக்கு அடி போடுறவங்களா இருந்தா பிரச்சினையாக வாய்ப்பு அதிகம். நீ வராம இருக்குறதுதான் நல்லது”


ஒரு பெண் காஃபி கொண்டு வந்தாள், “இவதான் என்னோட பொண்ணு, குட்டின்னு கூப்பிடுவோம்” நிமிர்ந்து பார்த்தேன், என் தங்கை.. என்னை விட பத்து வயதாவது குறைவாக இருக்கும் என்று தோன்றியது. லட்சணமான முகம். பார்த்த‌தும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அப்பாவின் சாயல் அவள் முகத்தில் தெரிகிறதா என்று பார்த்தேன், தன் அம்மாவை அச்சு அசலாய் உரித்து வைத்துப் பிறந்திருந்தாள். கண்களில் லேசான சிவப்பு, அவளும் அழுதிருப்பாள் போல. காஃபியை வாங்கினேன். திரும்பி சமையல் அறைக்கு போனாள்.

”நீங்க.. நீங்க எப்படி அப்பாவுக்கு...” பேச முடியாமல் திணறினேன்.

“என்னோட சின்ன வயசுல என் வாழ்க்கை இப்படி எல்லாம் ஆகும்னு நினைச்சதே இல்லை. என் அம்மா அவ்வளவு நல்லா பரதம் ஆடுவாங்க. அவங்க கொஞ்ச கொஞ்சமா எனக்கு கத்துக் கொடுக்க என் பதினைஞ்சாவது வயசுல நாட்டிய அரங்கேற்றம் பண்ண எல்லா ஏற்பாடுகளும் பண்ணினாங்க. அரங்கேற்றத்துக்கு ஒரு மாசம் இருக்குறப்ப நடந்த ஒரு ஆக்சிடெண்ட்டுல ரெண்டு பேரும் போய் சேந்துட்டாங்க. அந்த ஆண்டவனுக்கு என் மேல கருணை இல்லை போல, என்னை மட்டும் இந்த உலகத்துல விட்டுட்டு போயிட்டான்”

காஃபியை வாயில் வைத்தேன். ஒரே சிப்பில் உணர்ந்தேன். ‘அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு மூணில் ஒரு பங்கு ஏற்காடு காஃபிக் கொட்டையில டிகாக்சன், நல்லா கலக்கிட்டு காய்ச்சின கெட்டியான எருமைப்பால் டம்ளர் நிறையும் அளவிற்கு ஊத்தி, ஸ்பூனில் மெல்லிசாய் ஒரு கலக்கு’ அப்பாவின் காஃபி.

“காஃபிக்கொட்டை ஏற்காட்டுல இருந்தது வந்தது” என்றார் என் மன ஓட்டத்தைப் படித்தவராய். ஒருநாளும் அப்பாவிற்கு எங்கள் வீட்டின் காஃபி பிடித்ததே இல்லை “எதுக்கு இவ்ளோ நுரை?” என்றோ “டிகாக்சன் கம்மியா போட்டுட்ட” என்றோ “சுகர் இவ்ளோவா அள்ளிப் போடுவீங்க” என்றோ “பசும்பால் காஃபி திக்காவே இருக்குறதில்லை” என்றோ எதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்.

அவர் விட்ட இடத்திலிருந்து கதையை தொடர்ந்தார். ”அப்பாவும் அம்மாவும் போனதும் என் சித்தப்பா வீட்டுக்கு போனேன். பணத்தைத் தவிர வேற எதுவும் தெரியாத அந்த ஆளு என்னை ஒரு பண்ணையாருட்ட அனுப்பிட்டான். ஆயிரம் பேர் முன்னால நடக்க வேண்டிய என் அரங்கேற்றம் என்னை விட முப்பது வயசு மூத்த அந்த பண்ணையாரு கூட அவரோட தனியறையில நடந்தது” என் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருக்க அவர் தட்டையாக உணர்ச்சியில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்.

”அப்புறம் மதுரை பக்கத்து ஆளுங்கள்ல நானும் பத்தோட பதினொண்ணா ஆகிட்டேன். கத்து வெச்சிருந்த நாட்டியத்தின் காரணமா அந்த கூட்டத்துலயும் தனிச்சி தெரிய ஆரம்பிச்சேன். என்னோட நாட்டியத்தைப் பாக்குறதுக்காக நூறு மைல் தள்ளி இருந்தெல்லாம் மைனருங்க வருவாங்கன்னா பாத்துக்கோங்களேன். ஆனா வெளிய மத்தவங்க எங்களைப் பாக்குறப் பார்வையிலயே கூசிப்போவேன். ஒரு காலத்துல தேவதாசிகள் கோவில்ல இறைவனுக்கு நெருக்கமானவங்களா பாக்கப்பட்டாங்கன்னு படிச்சப்ப சிரிப்புதான் வந்தது” வார்த்தைகளில் விரக்தி வழிந்தோடியதாகக் தோன்றியது எனக்கு.

திடீரென்று அவர் குரலில் ஒரு புன்னகை அல்லது வெட்கத்தை உணர முடிந்தது “அப்படி ஒரு நாட்டியம் ஆடுறப்பதான் உங்க அப்பாவைப் பார்த்தேன்”.

சில நிமிடம் அமைதியாக இருந்தார். நானும் அவரின் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். குட்டி சமையலறையில் இருந்து நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.

“அப்புறம் பெரியவர் அடிக்கடி என்னைப் பாக்க வர ஆரம்பிச்சாரு. சில தடவை ரெண்டு மூணுநாள் கூட தங்குவாரு. அவருக்கு ஏன் என்னைப் புடிச்சது, என்னை அடிக்கடி பார்க்க வர்ற அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை எதையும் நான் அவர்கிட்ட கேட்டதில்லை. ஆனா ஒண்ணு சொல்ல முடியும், பொம்பளை சுகத்துக்காக எல்லா இடத்துக்கும் அலையுற மைனர் இல்லை அவர்”

“அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி இவ பொறந்தா. அதுக்கப்புறம் மத்தவங்க என்னை ஒதுக்குனப்பவும் பெரியவரோட அன்புல எந்த மாற்றமும் இருந்ததில்லை. இவளுக்கு ரெண்டு வயசா இருந்தப்பதான் என்கூடவே வந்துட முடியுமான்னு கேட்டாரு. சரின்னு வந்துட்டோம்” மூச்சை முழுவதும் இழுத்து பெருமூச்சாய் வெளியில் விட்டார்.

”இந்த பதினைஞ்சு வருசத்துல அவரைத் தவிர வேற யாரும் என்னை நெருங்கக்கூட முடிஞ்சதில்லை. அவரோட வெளிய கோவில் குளம்னு போனதில்லையே தவிர வருசம் ரெண்டு தடவை ஒரு ஒரு வாரம் எங்கயாவது வெளியூருக்கு எங்களைக் கூட்டிட்டுப் போவாரு, எங்களுக்கு எந்த குறையும் இல்லாம பாத்துகிட்டாரு”

என்ன செய்யப்போகிறேன் நான். முற்றிலும் அப்பாவை மட்டுமே அண்டியிருந்த இவர்களுக்கு அடுத்த போக்கிடம் ஏது? அதுவும் வயதுக்கு வந்த பெண்ணுடன்.

”பெரியவர் இல்லாம போறது அப்படிங்குற விசயத்தை ஒரு நிமிசம் கூட நான் யோசிச்சே பார்த்ததில்லைன்னு நினைச்சா எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு” என்றார் வேதனையுடன். என் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவர் மனதிலும் ஓடிக் கொண்டிருப்பது புரிந்தது.

“ஆனா பெரியவர் இறந்துட்டாருன்னு தெரிஞ்சதுமே ஆளாளுக்கு தூது அனுப்ப ஆரம்பிச்சிட்டானுங்க, அதிலயும் இவ கண்ணுக்கு லட்சணமா இருக்காளே” என் நெஞ்சில் இடி இறங்கியது. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தேன்.

“அதிலும் அந்த ரைஸ்மில் மாணிக்கம் அஞ்சு லட்ச ரூபாயோட ஆள் அனுப்பிட்டான், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கன்னு”. இதயம் பிசைய கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது.

அவர் முகத்தைப் பார்க்க தைரியமில்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தேன். அவர் தொடர்ந்து சொன்னார்.

“பணத்தைத் தூக்கி வந்தவன் மூஞ்சியிலயே விசிறியடிச்சிட்டு சொன்னேன், ’பெரியவரோட உப்பை பதினஞ்சி வருசம் சாப்பிட்டு இருக்கோம். என் பொண்ணோட அரங்கேற்றம் அவர் பையன் கூடத்தான் நடக்கும்’னு”

*******

நன்றி: அதீதம் இதழ் 4 (2011 மார்ச் 1 - 15)