Monday, October 20, 2008

போடுறா.. சினிமா தொடர் பதிவை...

ஏறத்தாழ தமிழ்பதிவு எழுதுற பதிவர்கள்ல 90% பேர் ஏற்கனவே எழுதிட்ட இந்த தமிழ் சினிமா தொடர் விளையாட்டுல என்னையும் அழைத்த பரிசல், நர்சிம் மற்றும் துக்ளக் மஹேஷ் மூணு பேருக்கும் நன்றி.

முடிஞ்ச வரைக்கும் எல்லா கேள்விக்குமான பதிலையும் ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்றேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
என் சின்ன வயதில் நாங்கள் சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஹவுசிங் போர்டில் இருந்த போது அருகிலுருந்த பச்சியம்மாள் தியேட்டருக்கு சென்றது மங்கலாக நினைவில் இருக்கிறது. பெயருடன் நினைவில் நிற்கும் படம் என்றால் 20 வருடங்களுக்கு முன் பாப்பிரெட்டிபட்டியில் ஜெயஷ்ரீ திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
என் மகனை வைத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முற்றிலும் முடியாத காரணம், அதனால் ஆசை இருந்தாலும் அதிகமாக தியேட்டரில் படம் பார்ப்பதில்லை. டிரைவ் இன் தியேட்டரை அரங்கு என்று சொல்லமுடியுமா என்று தெரியாது. சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் பார்த்த சந்தோஷ் சுப்பரமணியம். என் தங்கமணியின் நண்பி குடும்பத்துடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். காருக்கு முன்னால் பெரிய பெட்ஷீட்டை விரித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு நாங்களும் அவனுடனே படுத்துக்கொண்டு ஜாலியாக பார்த்த படம். படமும் பிடித்திருந்தது. ஒரு திருப்தியான ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியுடன் திரும்பினோம். அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம்.. இதுகுறித்து ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய என்பதற்கு மிகவும் பிடித்த என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் பல படங்களை சொல்ல முடியும், பாட்ஷா, உள்ளத்தை அள்ளித்தா, கேப்டன் பிரபாகரன், Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சமீபத்தில் தசாவதாரம் படத்தின் சில காட்சிகள். நிச்சயமாக ஹாலிவுட் அளவிற்கு சொல்ல முடியாதெனினும், கண்டிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது மிக அதிகம்தான். முக்கியமாக மருத்துவமனை காட்சி, அத்தனை கமல்கள் ஒரே நேரத்தில் காட்டப்படுவதில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் மட்டும் 27 லேயர் இருந்ததாக சொன்னார்.

அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் நம்ம சினிமா பத்தின வாசிப்பு. கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..

7.தமிழ்ச்சினிமா இசை?
என் ப்ரொஃபைலில் சொல்லியிருப்பேன், "ராசா இசைன்னா சோறு தண்ணி கூட வேண்டாம்" அப்படின்னு. இளையராஜாவின் இசையை ரொம்ப பிடிக்கும்னாலும் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் நல்லா இருந்தா ரசிப்பேன். மிக மிக பிடித்த குரல், ஆண்களில் எஸ் பி பி, பெண்களில் சுசிலா & சித்ரா. என்னோட டாப் 5:

1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி
2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி
3. உதய கீதம் பாடுவேன் : உதயகீதம் : இளையராஜா : எஸ் பி பி
4. காதல் வந்தால் சொல்லியனுப்பு : இயற்கை : வித்யாசாகர் : திப்பு
5. காதல் ரோஜாவே : ரோஜா : ஏ ஆர் ரஹ்மான் : எஸ் பி பி

(அட அஞ்சுமே ஆண் குரல் சோலோ பாடல்கள்)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
சின்ன வயதிலிருந்தே ஆங்கில படங்கள் பார்ப்பதுண்டு, ஜாக்கிசானை பிடிக்கும். ஹாலிவுட் படங்களில் நல்ல ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அரிதாக மற்றவகை ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதுண்டு. அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.

ஹைதராபாத்தில் 3 வருடம் இருந்ததால் கொஞ்சம் தெலுங்கு படங்களும் பார்த்ததுண்டு. ரசித்து பார்த்தது "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்". வசூல்ராஜாவை விட பலமடங்கு நன்றாக இருந்ததாக எண்ணம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இப்போதைக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து இந்த கேள்விக்கான பதில் "ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த நினைப்பே வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சென்னையில் இருக்கும் நமக்கு பீச், தீம் பார்க் என்று பல பல பொழுது போக்குகள். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் நடுத்தர, ஏழை மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. அதனால் அது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது.

*****

எனக்கு தெரிஞ்ச எல்லா பதிவர்களும் இந்த தொடர்ல ஏற்கனவே எழுதிட்டதால நான் யாரையும் கூப்பிட முடியல. தொடர் விளையாட்டுல லேட்டா பதிவு போட்டா இதுதான் பிரச்சினை. அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))

43 comments:

said...

வெண்பூ தொடர் பதிவுக்கு கூப்பிட்டாத்தான் எழுதுவீங்க போலிருக்கே.

தற்போது வந்துள்ள புத்தம் புது பதிவர்களை நீங்கள் அழைக்கலாமே. மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைய உதவியாக இருக்கும்.

said...

//"ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" //

முரளிகண்ணன், மதன் போல விமர்சனத்தில் எங்களை வறுத்தெடுத்துக் கொண்டிருப்பார் என்றும் சேர்த்துக் கொள்ளவும்!

said...

நம்பிக்கைக்கு நன்றி!

சொன்னது போலவே, ஷார்ட் & ஸ்வீட் பதிவு!!!

said...

//ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?)//

சுருக்கமா சுவையா..

//கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)//

எல்லோரும் செய்த அதே தப்பு. டை ஹார்ட் தமிழ் ப‌டமாண்ணே?

//மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.//

போன கேல்விக்கு வந்த அதே சேம் ப்ளட்...

//"ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//


சீரியஸா பேசும்போது ஜோக் அடிக்க கூடாது.. (நான்தான் அடிக்கிறேனோ)

//அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))//

பரிசல் நோட் திஸ் பாய்ண்ட்.. (நம்ம வேலை முடிஞ்சுது.. அப்பீட்ட்)

said...

வாய்யா!வாய்யா!வாய்யா!

அப்பப்ப நம்மளும் இந்த மாதிரி வண்டில ஏறிடனும். இல்லாட்டின்னா ஒத்துக்க மாட்டாய்ங்க.

குட்!குட்!

:)))

Anonymous said...

//பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.//

தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரனம்.

Anonymous said...

//அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.//

அதைத் தான் கொஞ்சம் மாற்றி எழில் "தீபாவளி" என்று எடுத்து விட்டாரே?

said...

கலக்கல் வெண்பூ..

5வது கேள்விக்கு பதில் நச்..

நர்சிம்

said...

//கார்க்கி said...
//ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?)//

சுருக்கமா சுவையா..//

நான் சொல்ல நினைத்ததை கார்க்கி சொல்லிவிட்டார்:)!

பிடித்த பாடல்கள் என நல்ல பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி! அவை அநேகமாக எல்லாரது பிடித்த லிஸ்டிலும் இருக்கும் என நினைக்கிறேன்.

said...

// ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.//

எனக்கும் தான் அவரோட எடத்துல வேறயாரையும் பாக்கமுடியலை.பாப்போம் கிரேக் எப்படின்னு

// கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..//

சேம் ப்ளட் :-))

said...

நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்க

said...

//அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி//

அவிங்க போகும்போதே ரிடர்ன் டிக்கெட் போட்டுட்டுதான் போவாங்க. அப்பதான் கரெக்டா அதே கிராமத்துக்கு வரமுடியும்..... ஹிஹி

said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் போட்டி முடிவைக் கூறியதற்கு! நீங்க சொன்னப்புறம் தான் போய்ப் பார்த்தேன்.

said...

//
இரா. வசந்த குமார். said...
அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் போட்டி முடிவைக் கூறியதற்கு! நீங்க சொன்னப்புறம் தான் போய்ப் பார்த்தேன்.
//

வாங்க வசந்த். உங்கள் கதைகளின் வாசகனாக உங்கள் வெற்றி என்னை சந்தோசப்படுத்தியது. அதனால்தான் உடனே உங்களிடம் வந்து வாழ்த்து சொன்னேன். நேர்ல பார்க்கும்போது ட்ரீட் குடுக்க மறந்துடாதீங்க.. :)))

said...

//முரளிகண்ணன் said...
வெண்பூ தொடர் பதிவுக்கு கூப்பிட்டாத்தான் எழுதுவீங்க போலிருக்கே.
//
அச்ச‌ச்சோ.. அப்ப‌டியெல்லாம் இல்லை முர‌ளிக‌ண்ண‌ன். வீட்டிலிருந்து அதிக‌ம் ப‌திவ‌தில்லை. அலுவ‌ல‌க‌த்திலும் வேலைக்கு ந‌டுவே எழுத‌ முடிவ‌தில்லை. அத‌னால்தான். இந்த‌ ப‌திவே மூன்று பேர் அழைத்து ஒரு வார‌த்திற்கு மேல் ஆன‌பின்தான் எழுத‌ முடிந்த‌து.

//
தற்போது வந்துள்ள புத்தம் புது பதிவர்களை நீங்கள் அழைக்கலாமே. மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைய உதவியாக இருக்கும்.
//
சொல்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக தமிழ்மணம் பக்கமே போகவில்லை. ரீடரில் மட்டும்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னால் இதை செயல்படுத்த முடியவில்லை. புதிய பதிவர்கள் மன்னிக்க வேண்டும்.

said...

//
பரிசல்காரன் said...

முரளிகண்ணன், மதன் போல விமர்சனத்தில் எங்களை வறுத்தெடுத்துக் கொண்டிருப்பார் என்றும் சேர்த்துக் கொள்ளவும்!
//

கண்டிப்பாக.. சேர்க்க மறந்துவிட்டேன். :)))

said...

வாங்க பரிசல்.. பாராட்டுக்கு நன்றி.

வாங்க கார்க்கி.. இது தமிழ் சினிமா பத்தி இருந்தாலும், நான் உட்பட பல பதிவர்களும் இதை ஒட்டு மொத்த சினிமா அனுபவங்களை பத்தி எழுதுறதுக்கு ஒரு வாய்ப்பா உபயோகிச்சிகிட்டோம். தெரிஞ்சே செய்த தவறு இது. மன்னிச்சிருங்களேன்.. விமர்சனத்திற்கு நன்றி.

said...

வாங்க அப்துல்லா.. பின்ன நானும் ரவுடிதான்னு எப்படி இந்த பேட்டை ஒத்துக்கும்? நாமளே வேன்ல ஏறிட வேண்டியதுதான்.

வாங்க வேலன் சார்.. என்ன செய்ய? தமிழ்சினிமாவோட தலையெழுத்து இது..

said...

//
pathivu said...
//அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.//

அதைத் தான் கொஞ்சம் மாற்றி எழில் "தீபாவளி" என்று எடுத்து விட்டாரே?
//

வாங்க பதிவு.. ஹீரோயின் காதலிக்கிறத மறக்குறதுதான் ரொம்ப நாளா இருக்கே (மூன்றாம் பிறையில இருந்து). ஆனா அந்த படத்துல அது ஒரு பார்ட்தான். தலைப்புக்கேத்த மாதிரி ஹீரோ ஒவ்வொரு நாளும் என்ன பண்ணி அவளை கவுக்கப்போறான் அப்படின்றத பேஸ் பண்ணி எந்த படமும் வந்ததா ஞாபகம் இல்லை.

said...

வாங்க நர்சிம், ராமலக்ஷ்மி, கார்த்திக், வால்பையன்.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..

said...

//
ச்சின்னப் பையன் said...
//அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி//

அவிங்க போகும்போதே ரிடர்ன் டிக்கெட் போட்டுட்டுதான் போவாங்க. அப்பதான் கரெக்டா அதே கிராமத்துக்கு வரமுடியும்..... ஹிஹி
//

ஹா..ஹா..ஹா.. ஆனாலும் இந்த மாதிரியெல்லாம் யோசிக்க உங்க ஒருத்தரால மட்டும்தான் முடியும் ச்சின்னப்பையன்.. வருகைக்கு நன்றி.

said...

நல்லா எழுதி இருக்கீங்க வெண்பூ!

///திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை///

அதே தான் நானும் என் பதிவில் சொல்லி இருந்தேன். அந்த ரோஜாப்பூ போட்ட சட்டை இன்னும் நினைவில் இருக்கு...:)

said...

"1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி
2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி"

aaha.. arumaiyaana paadalgal!!!
eppothum kettukkonde irukkalaam!!!
Rajanna Raajaathaan!!!

said...

வாங்க தமிழ் பிரியன். உங்க பதிவு படிக்கிறப்பவே நெனச்சேன், அட இவரோடதும் நம்மோடதும் மேட்ச் ஆகுதுன்னு.. நீங்களும் சொல்லிட்டீங்க.. :)

வாங்க இனியா.. கண்டிப்பா ராஜா ராஜாதான்.. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கிறதே இல்லை. வருகைக்கு நன்றி.

said...

மீ த 25த்... ஹி..ஹி..

said...

//மீ த 25த்... //

இதத்தான் பெரியவங்க பின்னூட்டக் கயமைத்தனம்னு சொல்வாங்க, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):):)

said...

//ஷார்ட் & ஸ்வீட்டா//

ஷார்ட் சரி, எழுதுற நீங்க சொல்லலாம், ஸ்வீட்டா இல்லையான்னு படிக்கிற நாங்கதான முடிவு பண்ணனும்:):):) ஹி ஹி ஜாலியா சொன்னேன், நிஜமாகவே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக இருந்தது:):):)

said...

//வாங்க கார்க்கி.. இது தமிழ் சினிமா பத்தி இருந்தாலும், நான் உட்பட பல பதிவர்களும் இதை ஒட்டு மொத்த சினிமா அனுபவங்களை பத்தி எழுதுறதுக்கு ஒரு வாய்ப்பா உபயோகிச்சிகிட்டோம். தெரிஞ்சே செய்த தவறு இது. மன்னிச்சிருங்களேன்.. விமர்சனத்திற்கு நன்றி.//


இதுக்கெல்லாம் மண்ணிப்பு கேட்டிங்க பாருங்க‌ அத மண்ணிக்கவே மாட்டேன்..

said...

//ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.//

டேனியல் கிரேக் அபாரமான நடிப்பாற்றலோட கொஞ்ச நாள்ல எல்லாரோட உள்ளத்தையும் கொள்ளை கொ'ல்ல' வர்றார், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

me the 30th

said...

//குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எல்லாத்தையும் படிச்சிட்டு, இவ்ளோதான்னு வேற சொல்றீங்களா:):):)

said...

//"ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//

கூடிய சீக்கிரம் இதுல இன்னொருத்தரும் சேருவார், ஹையா ஜாலி அப்போ இது எனக்கு மட்டும்தான் தெரியும்:):):)

said...

//அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...//

super:):):)

said...

//சுசிலா//

ஆஹா, சுசீலா அவர்கள், என்ன ஒரு அற்புதமான பாடகி. இவங்களோட குரல் மாதிரி ஒரு இனிமையானக் குரல், அழகான உச்சரிப்பு ஆஹா, ஆஹா, ஆஹா:):):)

said...

//தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது//

இது எந்த காலக்கட்டத்தில் இல்லைன்னு பாருங்க. ஆனா எல்லா நேரத்திலும் ஸ்ரீதர் சார், பாரதிராஜா, பாலச்சந்தர் மாதிரி ஆட்கள் இருக்கத்தானே செய்தாங்க. இப்போக் கூட சுப்பிரமண்யப்புரம் சசி சார், வெங்கட்பிரபு இப்டி இருக்கத்தானே செய்றாங்க:):):)

said...

உங்க 5-1 சிறுகதையை படித்த பிறகு, உங்க நண்பர்களின் வரிசையில் உங்களையும் சேர்க்கலாம். இது என் honest opinion.

said...

படா சோக்கா கீதுப்பா..டாங்க்ஸ் பா ...
எனக்கும் அந்த பாட்டுங்க எல்லாம் ரொம்ப பிடிக்கும்...ரொம்ப பிடிச்சது,
"ராஜ ராஜ சோழன் நான்" பாட்டு தான்...

said...

பின்னூட்ட சுனாமியா பின்னூட்டத்தை குமிச்சிட்டீங்க, ராப்.. நன்றி..

said...

rapp said...
இது எந்த காலக்கட்டத்தில் இல்லைன்னு பாருங்க. ஆனா எல்லா நேரத்திலும் ஸ்ரீதர் சார், பாரதிராஜா, பாலச்சந்தர் மாதிரி ஆட்கள் இருக்கத்தானே செய்தாங்க. இப்போக் கூட சுப்பிரமண்யப்புரம் சசி சார், வெங்கட்பிரபு இப்டி இருக்கத்தானே செய்றாங்க:):):)
//

கண்டிப்பாக வெட்டியாப்பீசர். ஆனால் இவர்கள் விதிவிலக்குதானே 1 அல்லது 2 சதவீதம்தான் இதுபோன்ற சுய முயற்சியால் மேலே வருபவர்கள். வெங்கட் பிரபு கூட கங்கை அமரனின் மகன் என்பது உங்களுக்கு தெரியாதா?

said...

//
கயல்விழி said...
உங்க 5-1 சிறுகதையை படித்த பிறகு, உங்க நண்பர்களின் வரிசையில் உங்களையும் சேர்க்கலாம். இது என் honest opinion.
//

பாராட்டுக்கு நன்றி கயல்.. ஆனால் நானெல்லாம் ஒருநாள் முதல்வர் மாதிரிதான்.. அப்பப்போ தோணுறதை எழுதுறேன். அவர்கள் அளவுக்கு போவதெற்கெல்லாம் இன்னும் அதிக கற்பனைத் திறன் வேண்டும்..

said...

//
coolzkarthi said...
படா சோக்கா கீதுப்பா..டாங்க்ஸ் பா ...
எனக்கும் அந்த பாட்டுங்க எல்லாம் ரொம்ப பிடிக்கும்...ரொம்ப பிடிச்சது,
"ராஜ ராஜ சோழன் நான்" பாட்டு தான்...
//

வாங்க கூல்ஸ் கார்த்தி.. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

said...

தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...// ர‌சித்தேன்.. க‌ச்சித‌மாக‌ இருந்த‌து.

said...

வாங்க தாமிரா.. வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.. :)))