Monday, February 16, 2009

நினைவுகளை மீட்டெடுத்த‌ விப‌த்து

விபத்துகள்... இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு சில விபத்துகள் நம்மை உலுக்கும், ஒரு சில நம் பழைய நினைவுகளை கிளறும். இந்த வாரம் 50 பேரை பலிகொண்ட அமெரிக்காவில் நடந்த விமான விபத்தும் என்னை கொஞ்சம் பாதித்தது உண்மை, காரணம்... விபத்து நடந்த இடம்.. நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரம் (Buffalo). என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒன்றரை வருடங்களை கழித்த இடம்.

முதல் வெளிநாட்டுப் பயணம், கேரியர் கிராஃப் 90 டிகிரியில் ஏறிய காலகட்டம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நான் நானாக இருந்த / இருக்கவிட்ட‌ சூழல், தங்கமணியுடன் பூசல்களே இல்லாமல் இருந்த நாட்கள் (அ) மாதங்கள், முதல் குழந்தையின் முதல் விநாடிகளும் முதல் ஸ்பரிசமும், முதல் கார், அளவில்லாத பயணங்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை பஃபல்லோ எனக்கு அளித்தது என்றால் மிகையில்லை.

***

புவியியல் ரீதியாக பஃபல்லோ அமைந்திருக்கும் இடமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம். உலகின் மிகப்பெரிய அருவி + உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான நயாகாரா அருவியின் மிக அருகில் உள்ள பெரிய நகரம். நியூயார்க் மாகாணத்தின் மேற்கு எல்லையில் நியூயார்க் நகரில் இருந்து 8 மணி நேர தொலைவில் இருந்தாலும், நயாகராவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்க வேண்டிய விமான நிலையம் பஃபல்லோ நயாகரா சர்வதேச விமான நிலையம்தான். எழுத்தாளர் சுஜாதா கூட தனது நயாகரா பயண அனுபவங்களில் இங்கே தங்கியிருப்பதை குறிப்பிட்டிருப்பார்.

நியூயார்க், நேவார்க், டெட்ராய்ட், வாஷிங்டன், சிகாகோ என்று எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் வரும் விமானங்கள் சுற்றுலா பயணிகளாலும், புகழ்பெற்ற பஃபல்லோ பல்கலைக்கழக மாணவர்களாலும் நிரம்பி வழியும். நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும், தன் மேல் படிப்புக்கான ஆர்வத்துடனும் பயணம் செய்த எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.

விபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இன்று உலகம் முழுதும் கிடைக்கும் ப‌ஃபல்லோ சிக்கன் விங்ஸ், நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்க நகரம், பஃபல்லோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிக அதிகமான எண்ணைக் கொண்ட நெடுஞ்சாலை (I 990) என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த நகரின் இன்னொரு பிரபலமான‌ அடையாளம் குளிர்.

நான் முதல் முதலில் அங்கே சென்றபோது வெயில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க, எங்கு நோக்கினும் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. என் கிளையண்டிடம் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, "ஒரு வருசத்தோட நான்கு சீசன்ஸ் என்னன்னு தெரியுமா" என்று கேட்க, "ஏன் தெரியாமல், சம்மர், ஃபால், வின்ட்டர், ஸ்ப்ரிங்" என்றேன். "அது மத்த ஏரியாக்களுக்கு, இந்த ஏரியாவை பொறுத்தவரைக்கும், அல்மோஸ்ட் வின்ட்டர், வின்ட்டர், ஸ்டில் வின்ட்டர், கன்ஷ்ட்ரக்ஷன்" என்றார். பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை.

அமெரிக்காவின் 5 பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான எர்ரீ ஏரியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சமயத்தில் மைனஸ் 20 டிகிரி ஃபார்ன்ஹீட் வரைகூட வெப்பநிலை செல்லும் என்றால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விபத்திற்கும் காரணம் விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்தது காரணமாக இருக்கலாம் என்று வரும் செய்திகளை படிக்கும்போது பனிப்பொழிவில் இரண்டு மூன்று அடி பனிகுவியலுக்குள் சிக்கிக் கிடக்கும் காரும், அதை சரி செய்ய ஐஸ் ஸ்கார்ப்பர், டீ ஐசிங் உப்பு, நான்‍ஃப்ரீஸ் வின்ஷீல்ட் வாட்டர் என்று ஒவ்வொரு கார் ஓனரும் தயாராய் இருக்க, விமானத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டிருக்கும், அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எப்படியோ, 50 பேரை பலி கொண்ட இந்த விபத்து என் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்தது என்று சொல்லலாம்..

ஐ மிஸ் யூ பஃபல்லோ..

Thursday, February 12, 2009

தங்கமான வண்டியும் தங்கமணியும்

"வண்டிய ஃபுல் சர்வீஸ் பண்ணிடுங்க"

"கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்"



"ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க?"

"போட்டாச்சும்மா.. சொல்ல மறந்துட்டேன்"

"ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா? குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா?"

"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற‌?"

"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?"


"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. "

"ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க"

"ஃப்ரன்ட்லயும் மாத்திடவா சார்?"

"மாத்திடுங்க"


"பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும். அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. "

"ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்"

"அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன‌ என‌க்கா கேக்குறேன்?"


"கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க"

"சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்"

"சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா?"


"ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா?"

"இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா"

"வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது.."


"டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"

"சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா"


"மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க. நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே?"

""

"கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா?"


"மொத்தம் எவ்ளோ வரும்?"

"சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி"


"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?"

"நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?"

"#$%#%#$%#$%&$%&"

"*(&*(&^%&^%%^%$$&$^$"

"^%(**()&()&()*"

Monday, February 9, 2009

உங்களுக்கு "எழுத்தாளர் சுஜாதா"வைப் பிடிக்காதா?

சுஜாதா... இவரை வெறுமனே எழுத்தாளர் என்று குறிப்பிட்டதற்காக என்னை திட்டி ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருப்பீர்கள் (அ) போடத் தயாராக இருப்பீர்கள். தமிழக அரசியல் வரலாறை பேசும் யாருமே திட்டியாவது கலைஞரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் சொல்வது சுஜாதாவுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ் எழுத்துலகம் குறித்து யாராவது பேசினால் அது இவரைக் குறித்து பேசாமல் முற்றுபெறாது..

இப்ப அதுக்கு என்னடா நாயே? என்று கவுண்டமணி ஸ்டைலில் கேட்பவர்களுக்கு, "கொஞ்சம் பொறுங்க சாமி"

நான் சுஜாதாவின் கதைகளை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவில்லை, என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது "ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.

கற்றதும் பெற்றதும் மூலமாகத்தான் அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது வார இதழ்களில் வரும் அவரது சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவரது "ஏன்? எதற்கு? எப்படி?" தொடரின் புத்தகத்தை படித்தபின் பல்வேறு துறைகள் மீதான அவரது அறிவும், ஈடுபாடும் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

அவர் ஒரு சிறந்த அறிவியல் கதை எழுத்தாளர் என்பதை நான் படிக்கும் எழுத்தாளர்களும், சந்திக்கும் நண்பர்களும் அடிக்கடி சொன்னாலும் நான் அவரது அறிவியல் கதைகளை படித்ததே இல்லை என்பதே உண்மை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த பிரிவான அறிவியல் புனைகதைகளில் அவர் மன்னர் என்பது தெரிந்திருந்தாலும் நான் அவரது புத்தகங்களை படிக்க எந்த முயற்சியும் எடுக்காதது எனக்கே இன்று வரை ஆச்சர்யம்தான்.

இந்தமுறை சென்னை புத்தக சந்தைக்கு செல்வது என்று முடிவு செய்தவுடனே நான் எடுத்துக்கொண்ட சபதம் இந்த முறை அவரது புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று வழிகாட்டி உதவிய லக்கிலுக்கிற்கு நன்றி.

முதலில் படித்து முடித்த "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" பற்றி மற்றொரு சமயம் பதிவிடுகிறேன். இந்த பதிவில் நான் சொல்ல வந்தது அவரது "கறுப்புக் குதிரை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றி..

விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுஜாதாவின் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 2000ம் ஆண்டு வாக்கில் ஆனந்த விகடனில் வெளிவந்த "புதிய தூண்டில் கதைகள்" என்ற தொடரின் புத்தக வடிவம் இது.

சிறுகதைத் தொடர்கள் நம் எல்லாருக்குமே பரிச்சயமானதுதான். ஒரே எழுத்தாளரால் வாரம் ஒரு சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்), கார்க்கியின் புட்டிக்கதைகள் என்று நாம் எல்லோருமே விரும்பி படித்து வரும் (அ) வந்த தொடர்கள் கணக்கிலடங்கா..

சுஜாதாவின் இந்தத் தொடர் எப்படி இதிலிருந்து எல்லாம் வேறுபட்டது? நிஜமாகவே அந்த மனிதரை எல்லோரும் புகழும் அளவுக்கு அவரிடம் சரக்கிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு சரியான விடை இந்த புத்தகத்தை படிப்பதுதான்.

தொகுப்பில் இருக்கும் 12 கதைகளும், நம்புங்கள், 12 வித்தியாசமான தளங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. எந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை அல்லது துளிகூட எழுத்தாளனின் சாயல் தெரியவே இல்லை. "கறுப்புக் குதிரை" கிரிக்கெட் சூதாட்டம் என்றால் அதற்கு அடுத்த கதையான "எல்லாமே இப்பொழுதே" முழுக்க முழுக்க மனித இனத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கடுத்த "கி.பி.2887ல் சில விலாசங்கள்" கட்டுப்பாடுகள் நிறைந்த எதிர்காலத்தில் சட்டத்தை மீறி ஒரு பெண்ணைத் தேடிச்செல்லும் ஒருவனைப் பற்றி. ஒவ்வொரு கதையை படித்து முடிக்கும்போதும் ஒரு சிறுகதையை படித்து முடித்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.

சுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா?) எழுத்தாளர் என்பதற்கு சரியான உதாரணம் இந்தத் தொகுப்பு..

நீங்கள் சுஜாதா ரசிகர் என்றால் இந்தக் புத்தகத்தைப் படியுங்கள். அவர் மீதான உங்கள் அபிமானம் இன்னும் அதிகமாகும். ஒருவேளை நான் தலைப்பில் சொல்லியிருப்பதுபோல், நீங்கள் இணையத்தில் எழுதும் ஒரு சிலரை போல், "அவனெல்லாம் ஒரு எழுத்தாளர்னு கொண்டாடுறானுங்க‌" என்று நினைப்பவராக இருந்தால், நீங்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். உங்கள் நினைப்பு தவறு என்பது உங்களுக்கே தெரியும். மொத்தத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகம்: கறுப்புக் குதிரை

வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ் (திருமகள் பதிப்பகம்)

பிரிவு: சிறுகதைத் தொகுப்பு

விலை: ரூ.50/ (நிஜமாத்தான்.. ஒரு கதையின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவு)

இது மலிவு விலை பதிப்பல்ல. தரமான தாளிலேயே அச்சிட்டு குறைந்த விலைக்கு கொடுத்த பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.