Saturday, September 20, 2008

என் அன்பு மகனே...



வீட்டிற்குள் நுழைந்ததும்
நாசியை நிறைக்கிறது
மணம்

எந்த அறைக்கு சென்றாலும்
தரையில் காண முடிகிறது
உன் திருவிளையாடலை

படுக்கையில் படுத்து
கண் திறந்தால்
பார்க்காமல் இருக்க‌
முடியவில்லை
நீ தீற்றிய ஓவியங்கள்

நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன‌ உச்சா...


( டிஸ்கி 1: திட்டுவதற்கு முன் லேபிளை பார்க்கவும்.
டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே விக்கியை யாரும் திட்டவேண்டாம் )

Friday, September 5, 2008

அதிஷாவிற்கு வாழ்த்துக்கள் (விகடனில் அவரது படைப்பு)

லக்கிலுக், குசும்பன், பரிசலை அடுத்து மற்றொரு பதிவரின் படைப்பு விகடனில் வந்துள்ளது.

கும்மி நண்பர் அதிஷாவின் "தமிழ் வாழ்க!" இன்று யூத்புல் விக‌ட‌னில் வ‌ந்துள்ளது. அவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் பாராட்டுக்க‌ள்.

தொட‌ர்ந்து ப‌திவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளித்துவ‌ரும் விக‌ட‌ன் குழும‌த்துக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

அவ‌ர‌து ப‌திவை வாசிக்க‌ இங்கே செல்ல‌வும்.

Link: http://youthful.vikatan.com/youth/tshirts.asp

பின்குறிப்பு: இந்த நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்ட பரிசலுக்கு நன்றி.

Tuesday, September 2, 2008

காணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... நேர்மை

"கால ஓட்டத்தில் காணாமல் போனவை" என்ற தலைப்பில் பதிவர் சுரேகா ஆரம்பித்த தொடரில் என்னையும் இணைத்த நண்பர் பரிசலுக்கு நன்றி.

கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் ஒவ்வொருவருக்குமே கால ஓட்டத்தில் காணாமல் போன ஒரு விசயமாவது நினைவுக்கு வரும் என்பதும் அது இல்லாமல் போனது குறித்த பெருமூச்சும் வெளிப்படுவது நடக்கக் கூடியதே. இந்த தொடருக்காக நான் திரும்பிப் பார்த்த போது என்னை பெருமூச்சு விட செய்த மூன்று விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


சைக்கிள்:
என் பால்ய பருவத்தில் நாங்கள் இருந்தது பாப்பிரெட்டிபட்டி வனத்துறை க்வார்ட்டர்ஸில். அந்த கொஞ்சம் பெரிய கிராமத்தில் / சிறு நகரத்தில், மொத்தமாக ஒரு 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய க்வார்ட்டர்ஸ். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 7 வீடுகள். க்வார்ட்டர்ஸின் நட்ட நடுவில் பெரிய கட்டிடத்தில் வன அலுவலகம் என்று அற்புதமான சூழ்நிலை. அவ்வளவு பெரிய இடமுமே எங்களுக்கான விளையாட்டு மைதானம்தான். அதிலும் அப்போது அருகில் வாணியாறு அணை கட்டப்பட்டு வந்ததால் அங்கு வெட்டப்பட்ட சிறிய, பெரிய மரங்களும் (சில மரங்களின் விட்டம் 10 அடிக்கு மேல்) அங்கே அடுக்கப்பட்டிருக்கும். (டிராக் மாறி போறேனோ..)

அங்கேதான் நான் முதல் முதலாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தது. அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் குரங்கு பெடல் போட கற்றது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டது (எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்), பூட்டிய சைக்கிளின் பெடலை பின்னால் சுற்றி விரல் செயினில் மாட்டிக் கொண்டு அலறியது என்று மறக்க முடியாத நினைவுகள்

இப்போது நினைத்துப் பார்த்தால் இன்று எனக்கு பயணத்தின் மீது இருக்கும் நாட்டம் அப்போதே வெளிப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.

அதன்பின் அங்கிருந்து இராசிபுரம் வந்து இரண்டு வருடங்களில் அப்பா டிவிஎஸ் 50 வாங்கிய பிறகு அவரது சைக்கிள் அண்ணனுக்கும் அண்ணனின் கொஞ்சம் குட்டையான சிவப்பு சைக்கிள் எனக்கும் வந்தது. அதை எடுத்துக்கொண்டு சில பல வருடங்களுக்கு நான் சுற்றாத இடமே இராசிபுரத்தில் இல்லை. எங்கு செல்வதென்றாலும் சைக்கிள்தான் (காலை கடனுக்கு மட்டும்தான் நடந்து, திரும்பி வரும்போது சைக்கிளில் உட்கார முடியாது என்பதால்)

அதன்பின் சேலத்தில் வேலையில் சேர்ந்தது, ஹைதரபாத் போய், முதல் வாகனமாக என் வருமானத்தில் ஸ்பெலன்டர் பைக் வாங்கி, அமெரிக்கா போனபோது ஃபோர்டு கார் வாங்கி, சென்னை திரும்பி வந்து என்று எல்லாமே நல்லவிதமாகவே நடந்தாலும் சைக்கிளை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்.

இதோ கடந்த வாரம் கொடைக்கானல் போனபோது அங்கே ஏரியை சுற்றி வர சைக்கிள் வாடகைக்கு எடுத்து முன்னால் என் குழந்தையை அமர வைத்து ஓட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (என் தங்கமணியிடமும் அதே விளைவு என்பது நானே எதிர்பாராதது).

கண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..


நண்பர்கள்:
கால ஓட்டத்தில் ஒவ்வொரு பகுதியுமே ஒரு இரயில் பயணம் போலதான். அதில் ஒரு சில நண்பர்கள் நெருங்கியவர்களாகவே இருந்தாலும் தொடர்பற்று போவது நடக்கும். அப்படிப்பட்ட தொடர்பறுந்த என் நண்பர்கள் இங்கே. இவர்களில் ஒருவராவது தொடர்பு கொண்டால் சந்தோசம‌டைவேன்.

சுபாஷ்: என் நினைவு தெரிந்து என் முதல் நண்பன். பாப்பிரெட்டிபட்டி செல்வதற்கு முன் என் 5 வயது வரை நாங்கள் சேலம் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது இவன் என் நண்பன் (1982, 83 இருக்கும்). 25 வருடம் கழித்தும் இவனது முகம் நினைவில்லாத போதும் இவன் பெயர் நினைவிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

குருபிரசாத்: பாப்பிரெட்டிபட்டியில் என்னுடன் துவக்கப்பள்ளியில் படித்தவன். அப்பா அங்கே டீக்கடை வைத்திருந்தார். பள்ளி இடைவேளைகளில் இவனது கடைக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்டது நன்றாக நினைவிருக்கிறது (இவனது முகம் சுமாராத்தான் ஞாபகத்துல இருக்குன்றது வேற விசயம்)

ராம்குமார்: என்னுடன் இராசிபுரத்தில் ஒன்பதாவது வரை படித்தவன். மிக நெருக்கமானவனாக இருந்தாலும், அதன்பின் அவன் கோவைக்கு இடம் பெயர்ந்த பிறகு தொடர்பற்று போய்விட்டது. அங்குள்ள பீளமேடு சர்வஜீன மேல்நிலைப்பள்ளியில் இவன் படித்ததாக நினைவு.

அதற்கு பிறகு என்னுடன் பழகியவர்களையெல்லாம் முடிந்தவரை தொடர்பில் வைத்திருக்கிறேன் என்பது நல்ல விஷயம்தான்.

திருட்டு விசிடி:
எனக்கு பிடிக்காத விஷயம் புதிய படங்களை திருட்டு விசிடியில் பார்ப்பது. மென்பொருள் துறையில் இருப்பதால் "பைரசி"யின் நஷ்டங்களையும் வேதனைகளையும் நன்கு அறிவேன். நான் சிடியில் படம் பார்க்கும் தருணங்கள்,

* அந்த படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியிருப்பேன், வேறெங்கும் ஓடிக் கொண்டிருக்காது
* நீண்ட தூர பயணங்களில் பஸ்களில் ஒளிபரப்படும்போது (வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டியிருக்கும். எனக்கு அமைதியான இருட்டான சூழல் இல்லாவிட்டால் தூக்கம் வராது)

எனது இந்த பார்வை / செயல்பாடு கடந்த மூன்று வருடங்களில் மாறியிருக்கிறது என்பது கேவலமான உண்மை. அமெரிக்காவில் நாங்கள் இருந்த பஃபல்லோ நகருக்கு எந்த தமிழ் படமும் வராது. இந்தியன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் தயவால் இந்தி படங்கள் மட்டுமே அவ்வப்போது ஓட்டப்படும். தங்கமணிக்கு இந்தி தெரியாததால் அதற்கும் போக முடியாது.

அதை விட்டால் 2 மணிநேரம் + 160 கி.மீ பயணம் செய்து டொரொன்டோ போக வேண்டும். போனாலும் கைக்குழந்தையுடன் படத்தை மனம் ஒன்றி பார்க்க முடியாது. கேஸினோ ராயல் படத்திற்கு சென்றுவிட்டு குழந்தை அழ ஆரம்பித்ததால் தங்கமணி முக்கால்வாசி படத்தை பார்க்க முடியாமல் வெளியே உட்கார்ந்த அனுபவத்திற்கு அப்புறம் ஆங்கில படமும் கட்.

அதனால் இணையத்தில் இருந்து டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பித்தோம். காரணங்கள் சரியாக இருந்தததால் குற்ற உணர்வு இல்லை (அல்லது குறைவாக இருந்தது).

ஆனால் மிக சமீபத்தில் பலமுறை முயன்றும் தசாவதாரம் பார்க்க முடியவில்லை. (சத்யம் தியேட்டருக்கு சென்று டிக்கெட் இல்லாமல் திரும்பி வந்தது, பணம் செலுத்திய பிறகு இன்டெர்நெட் டிரான்ஸாக்ஷன் ஃபெய்லியர் ஆனது என்று பல தடங்கல்கள்). முடிவாக இன்டர்நெட்டில் தங்கமணி தேடிக் கொடுத்த முகவரியில் இருந்து படத்தை டவுன்லோட் செய்து சென்ற வார இறுதியில் பார்த்தோம்.

படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அந்த படத்திற்காக கமல் போட்டிருக்கும் உழைப்பு அபரிமிதமானது என்பது உணர முடிந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்தை இணையத்தில் பார்த்தததால் அவருக்கு பைசா பிரயோஜனமில்லை என்பதும் என்னை வேதனைப்படுத்தியது. ஸாரி கமல்.

அதனால்தான் படம் குறித்து எந்த பதிவையும் இடவில்லை. நான் ஏன் இப்படி மாறினேன் அல்லது எது இப்படி மாற்றியது என்று பதில் எனக்கு தெரியவில்லை.

பார்க்கலாம். இனி மேலாவது இது போன்ற நேர்மையற்ற செயல்களை நான் செய்யாமல் இருக்கிறேனா என்று. :(