Monday, June 22, 2009

கனவின் நிறம்

"ரொம்ப சந்தோசம்மா"

"எனக்கு உன் சந்தோசம்தான்டா முக்கியம். ஊரு என்னவோ சொல்லிட்டுப் போகுது. அந்த பொண்ணுதான் உனக்கு நல்ல துணையா இருப்பான்னு நெனச்சா நான் ஏன் தடை சொல்லப்போறேன். எனக்கு என்ன.. இன்னும் ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ, அதுக்கப்புறம் உன்னைப் பாத்துக்கப்போறது அவதானே"

"ச்சீ... கம்முனு இரு.. எதெதோ பேசிகிட்டு"

"டேய், எனக்கு ஒரு ஆசைடா, சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"

"சொல்லும்மா.."

"உன்னோட கல்யாணம் முடிச்சதும் நம்ம வீட்டை கொஞ்சம் மராமத்து பண்ணிடலாம்டா. ஓடெல்லாம் ரொம்ப பழசாயிடுச்சி, எல்லாத்தையும் எடுத்துட்டு புதுசா போட்டுடலாம்டா"

"அம்மா.. அம்மா.. மேஸ்திரி அண்ணன்ட்ட ஏற்கனவே பேசிட்டேன். ஓட்டை எடுத்துட்டு தார்சு போட்டுடலாம்மா. நீயி கவலையே படாத. அப்புறம், வர்ற வழியில சங்கர் மாமாவைப் பாத்தேன். ஐப்பசி மாசம் காசிக்குப் பதினஞ்சு நாள் டூர் போட்டிருக்காராம். நீயும் சொல்லிட்டே இருக்குறியே. இந்த முறை போயிட்டு வந்துடு. சரிம்மா, நான் போயி அவ அப்பாட்ட பேசிட்டு வந்துடறேன்‌"

"சாப்புடுறதுக்கு வீட்டுக்கு வந்துடுறா, உனக்குப் புடிச்ச கருவாட்டுக் கொழம்பு செஞ்சி வெக்கிறேன்"

************

"உண்மையச் சொல்லணும்னா நீங்க இவ்வளவு ஈஸியா சம்மதிப்பீங்கன்னு நாங்க ரெண்டு பேருமே நெனக்கலை மாமா"

"ஏன் மாப்பிள்ள, அந்தஸ்தை காரணம் காட்டி வேணாம்னு சொல்லிடுவேனோன்னு நெனச்சீங்களா?"

""

"இந்த சொத்தெல்லாம் நானே சொந்தமா சம்பாசித்ததில்ல, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்து இது. சொல்லப்போனா நானெல்லாம் இதுக்கு ஒரு வாட்ச்மேன் மாதிரிதான். அதை என்னிக்குமே நானோ என் குடும்பமோ மறக்குறதே இல்ல"

"ஆச்சர்யமா இருக்கு மாமா"

"அது புரிஞ்சதுனாலதான் சின்ன வயசுலயே உங்க அப்பா மாதிரி நல்ல மனுசங்க ஃப்ரெண்ட்ஸா கிடைச்சாங்க. உங்களப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் முழுசா தெரிஞ்சதுனால உங்களவிட என் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கமாட்டான்னு நம்புனதுனாலதான் இந்த கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்"

"ரொம்ப நன்றி மாமா"

"பையனும் அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டான். பொண்ணுக்கு வரப்போறவன் என்கிட்ட இருக்குற காசுக்காக வர்றவனா இருந்துட்டா அவ வாழ்க்கை நரகம் ஆகிடும் மாப்பிள்ள. என்னால அதைத் தாங்க முடியாது. அவளை நல்லா புரிஞ்சுகிட்ட உங்களாலதான் அவளை காலம் முழுக்க நல்லா வெச்சிருக்க முடியும்னு நம்புறேன் நானு"

"கண்டிப்பா மாமா.. கவலையே படாதீங்க.. உங்க பொண்ணு கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம நான் பாத்துக்குறேன். போதுமா?"

"அந்த நம்பிக்கை உங்கள விட எனக்கு அதிகம் மாப்பிள்ள.. அவ மேலதான் இருக்கா, போய் பேசிட்டு இருங்க. நான் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"

*******

"அப்புறம் உங்க அம்மாவும் எங்க அப்பாவும் குழந்தை பத்தி ஒண்ணுமே சொல்லைலியா? சொல்லியிருப்பாங்களே, கல்யாணம் ஆகி பத்து மாசத்துல ஒரு பேரன் வேணும்னு"

"ஒனக்கெல்லாம் நக்கலா இருக்கு, ஏன் கேட்டா என்ன தப்பு? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குது, இப்பவே ஆரம்பிச்சா கல்யாணம் முடிஞ்சு எட்டு மாசத்துலயே அவங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ குடுத்துடலாம்ல‌"

"ஏய் ச்சீ, கைய எடு... கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சிதான் குழந்தையெல்லாம். முதல்ல நாம நம்ம வாழ்க்கையை வாழலாம்டா, காஷ்மீர்ல ஹனிமூன், சொந்தகாரங்க வீட்டுக்கெல்லாம் ஒரு வீடு விடாம விருந்து, நல்ல பெளர்ணமி நிலா வெளிச்சத்துல உன் தோள்ல சாஞ்சிட்டே தாஜ்மஹால் தரிசனம், கோவா பீச் ஹாலிடேஸ், அந்தமான் செல்லுலார் ஜெயிலுக்குள்ள உன்னை வெச்சி ஒரு ஃபோட்டோ, லட்சத்தீவுல ஸ்கூபா டைவிங்.."

"ஹேய்.. ஹேய்... இரு இரு.. நீ இன்னமும் கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ணுல்ல, ஒரு சாதாரண சென்ட்ரல் கவர்மென்ட் வேலைக்காரனோட பொண்டாட்டி. அதுக்குத் தகுந்த மாதிரி ஆசைப்படும்மா"

"அதுக்கென்னா? எங்க அப்பாவோட பாதி சொத்து எனக்குத்தான. குடுக்க மாட்டேன்னு சொன்னா எங்க அண்ணன் மேல கேஸ் போட்டுடலாம் கவலைப்படாத"

"அடிப்பாவி... உன்னையும் உங்க அண்ணன் நம்புறானே, அவனைச் சொல்லணும்"

"ஹா..ஹா.. சும்மாச் சொன்னேன். எனக்குன்னு கேட்டா மொத்த சொத்தையும் கூட அண்ணனும் அண்ணியும் குடுத்துடுவாங்க. நான் இதுக்கு முன்னால எடுத்த எல்லா ஜென்மத்துலயும் புண்ணியம் பண்ணிகிட்டே இருந்திருக்கணும்டா.. இப்படி ஒரு அப்பா, அண்ணன், அண்ணி, எல்லாத்தையும் விட என்னா நல்லா புரிஞ்சுகிட்ட உன்கூடயே கல்யாணம்....."

"ஹேய்.. என்னாது இது? எதுக்கு அழுவுற? திடீர்னு உனக்குள்ள இருக்குற பட்டிக்காடு இப்படி வெளிய வந்துடுச்சி..."

"ச்சீய்.. போடா...."

"அம்மா... மாப்பிள்ள தம்பிக்கு ஃபோன்.. அவங்க அம்மா பேசுறாங்க‌"

*****

"உன் வெக்கேஷனைக் கட் பண்ணி அவசரமா கூப்டதுக்கு ஸாரிப்பா"

"பரவாயில்லைங்க சார்.. நானே வெக்கேஷனைக் கட் பண்ணுற ப்ளான்லதான் இருந்தேன். கல்யாணத்துக்கு நல்ல நாள் ரெண்டு மாசம் கழிச்சிதான் கிடைச்சிருக்கு. அதனால அப்ப வெக்கேஷன் எடுத்துக்கலாம்னு இருந்தேன். நீங்க கூப்பிடலைன்னாலும் மே இருவத்தஞ்சாம் தேதி நானே வந்திருப்பேன்"

"குட்..குட்.. நான் உன்னைக் கூப்பிட்டது ரொம்ப முக்கியமான விசயத்துக்காக. இந்த மாசம் முழுக்கவே நமக்கு ரொம்ப வேலை அதிகம். எல்லா வி.வி.ஐ.பி.ங்களும் தீவிரமான பிரச்சாரத்துல இருக்காங்க. சமாளிச்சடலாம்னுதான் நெனச்சி உனக்கு லீவு குடுத்தேன். பட் ரெண்டு ஹையர் ஆபிஸர்ஸ் ஆஸ்பிடல்ல படுத்துட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு. அதனாலதான் உன்னைக் கூப்பிட வேண்டியதா போச்சி"

"ஓ.. ஓகே."

"ரெண்டாவது, நீ டிபார்ட்மென்ட்ல சேந்ததுல இருந்து உன்னைக் கவனிச்சுட்டு வர்றேன். உன்னோட நேர்மை, வேலை மேல உனக்கு இருக்குற டெடிகேஷன், புது விசயங்களைக் கத்துக்குற ஆர்வம் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு அப்புறம் இந்த போஸ்டுக்கு வர்ற தகுதி இருக்குற ஆட்களா நான் நினைக்குற ஒரு சிலர்ல நீயும் ஒருத்தன். இந்த மாதிரி டஃப் சிச்சுவேஷன் எல்லாம் ஹேண்டில் பண்ணினாத்தான் உனக்கும் பின்னால உதவியா இருக்கும்"

"ரொம்ப நன்றி சார். இப்ப என்னோட அஸைன்மென்ட் என்ன?"

"வர்ற செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரு வி.வி.ஐ.பி.யோட பாதுகாப்பை நீ கவனிக்க வேண்டி இருக்கும். ப்ளான்படி அவரு செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஏர்போர்ட்டுக்கு வர்றாரு. அங்க இருந்து நம்ம டீம் சார்ஜ் எடுத்துக்குது. ஏர்போர்ட்ல இருந்து அன்னிக்கு ராத்திரி அவர் கூட்டம் முடிக்கிற வரைக்கும் நீதான் இன்சார்ஜ்"

"கவலையேப்படாதீங்க சார். அவர் சென்னைல வந்து இறங்குனதுல இருந்து மறுபடியும் ஃப்ளைட் ஏறுற வரைக்கும் அவரைவிட்டு நகர மாட்டேன். சென்னைய பொறுத்தவரைக்கும் நாந்தான் அவரோட நிழல்னு வெச்சிக்குங்களேன்"

"ஹ..ஹ..ஹ..ஹ.."

"நைட் பொதுக்கூட்டம் எங்க சார்?"

"ஸ்ரீபெரும்புதூர்"

******

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, June 17, 2009

இந்த வாரம் வலைச்சரத்தில்

நண்பர்களே,

சீனா அய்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாரம் நான் வலைச்சர ஆசிரியராக இருக்கிறேன். என் வலைச்சரப் பதிவுகளை படிக்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக்கவும்...

1. வலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்
2. விகட(ன்)கதை சொல்லிகள்!!!
3. வெண்பூவிற்கு வயது ஒன்று
4. கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்
5. என்னை அசத்திய கவிஞர்கள்
6. சினிமா வலைஞர்கள்

Monday, June 8, 2009

துரோகம்

வினய் நிலை கொள்ளாமல் தவித்தான். தரையில் இருந்து 350 கி.மீ உயரத்தில் சலிக்காமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் மிதக்கும் விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.எஸ்) தற்போதைய தலைமை விஞ்ஞானி அவ‌ன்.

முப்பத்தேழாவது முறையாக அந்த வீடியோவை பார்த்தான். இரண்டு மாதங்களுக்கு முன் எக்ஸ்பெடிஷன் 23ல் கொண்டு வரப்பட்டு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட அந்த அதி நவீன கேமிரா அப்பழுக்கின்றி வினயின் வீட்டு வாசலைப் படம் பிடித்திருந்தது. வினய்க்கு சந்தேகமே இல்லை, அது தன் மனைவி ஸ்வேதா என்பதில், ஆனால் அவளுடன் இருக்கும் அந்த அவன்? கடந்த ஒரு வாரமாக சரியாக மாலை ஆறு மணிக்கு வினயின் வீட்டிற்கு வரும் அவன் எட்டு மணிக்குத்தான் வெளியேறுகிறான். அதுவும் ஒவ்வொரு நாளும் அவன் வெளியேறும்போது வாசலில் வைத்து இருவரும் உதட்டோடு உதடு பொருத்தி... சட்... வீடியோவை அணைத்தான் வினய்.

ஆறு வருட காதலிலும் மூன்று வருட திருமண வாழ்விலும் தேனாய் இனித்த அதே முத்தம், இப்போது எட்டிக்காயாய்க் கசக்கிறது. ஏன்? ஐ.எஸ்.எஸ்.ஸில் முப்பது மாத அசைன்மென்ட் வந்தபோது அவளைப் பிரியக்கூடாது என்பதற்காகவே அதை மறுத்தவன் வினய். ஆனால் இதை விடச் சிறந்த வாய்ப்பு வேறு எப்போதும் கிடைக்காது என்பதையும், பிரிந்திருந்தால் அன்பு அதிகம் ஆகுமே தவிர குறையாது என்றும் கூறி வினயைச் சம்மதிக்க வைத்தவள் அவளேதான்.

ஆனால் ஏன் இப்போது இப்படி? தனக்காக உயிரையும் தருவாள் என்று நம்பியது பொய்யா? நாசாவில் வேலை கிடைத்து கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்த போது தன்னுடன் இருப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வந்தது பொய்யா? ஒரு வருட பிரிவில் காதல் கசந்து விட்டதா? அல்லது காதலைக் காமம் வென்று விட்டதா? கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. வினய் குழம்பினான். ஆனால் கண்முன்னால் சாட்சி வீடியோவாய் ஓடும்போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்!!!

சிறுவயதில் பெற்றோர் யாரென்றே தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்து, உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி, அந்த வைராக்கியத்தில் வெறியாய்ப் படித்து கோல்டு மெடல் வாங்கி, அமெரிக்கா வந்து நல்ல வேலையில் சேர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று இலக்கில்லாமல் இருந்தவனுக்கு வந்து சேர்ந்த முதல் உறவு ஸ்வேதாதான்.

அவளைத்தவிர வேறு உலகம் இல்லை என்று நினைத்தவனுக்குக் கடந்த வாரம் அந்த இடி இறங்கியது. புதிய கேமிராவை சோதனை செய்துக் கொண்டிருந்தவன் தற்செயலாக அதைத் தன் வீட்டை நோக்கித் திருப்பினான். அப்போதுதான் அவனைப் பார்த்தான். அதன் பின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குக் கண்காணிக்க, ஒரு நாள் விடாமல் அவன் வருவதும், 8 மணிக்கு திரும்பிச் செல்வதும், வாழ்வின் மிகக் கொடுமையான காலகட்டமாக இந்த ஒரு வாரம் மாறியிருந்தது.

'இனி என்ன? எனக்கிருக்கும் ஒரே உறவும் என்னை ஏமாற்றுகிறாளா? இனி அவளுடன் எப்படி வாழ முடியும்? நான் திரும்பிச் சென்றதும் எப்படி அவளிடம் இதைக் கேட்க முடியும்? அவன் நான் இருக்கும்போது வரப்போவது இல்லை, அவளிடன் அதைப்பற்றிக் கேட்கும் தைரியமும் எனக்கு இல்லை. வாழ்நாள் முழுவதும் போலி வாழ்க்கை வாழப்போகிறேனா? ஒவ்வொரு முறை இனி அவளை முத்தமிடும்போதும் இந்தக் காட்சி வந்து மனதில் அறையாதா. இனிமேல் யாருக்காக‌ இந்த‌ வேலை, ப‌ண‌ம் எல்லாம்?'

'இல்லை, இனிமேல் நான் உயிர் வாழ்வ‌தில் அர்த்த‌மே இல்லை. இனி தின‌ம் தின‌ம் ஒவ்வொரு வினாடியும் செத்துச் செத்துப் பிழைப்ப‌தை விட‌ ஒரேடியாய் இற‌ப்ப‌தே மேல். என் உயிர‌ற்ற‌ உட‌ல் கூட‌ அந்த‌த் துரோகிக்குக் கிடைக்க‌க் கூடாது'

முடிவு செய்த‌வ‌னாய் ஐ.எஸ்.எஸ்.இன் பின் புற‌ டாக்கிங் (Docking) ஏரியாவிற்கு சென்றான்.
இப்போதைக்கு பூமியிலிருந்து எந்த விண்கலமும் வரவில்லை என்பதால் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. கழிவுகளை வெளியேற்றும் இடத்திற்கு அருகில் வந்து நின்றான். அடுத்த இரண்டு நிமிடங்களில் கழிவுகளை வெளித்தள்ள ப்ரோக்ராம் செட் செய்துவிட்டு கழிவுகளை வைக்கும் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். இன்னும் இரண்டு நிமிடத்தில் ஐ.எஸ்.எஸ்.இல் இருந்து தூக்கி எறியப்படுவான். விண்வெளி நடைக்கான உடை, ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் வெளியேறிய உடனே அவன் உயிர் அவனை விட்டு பிரியப் போகும் வினாடிக்காகக் கண்களில் நீருடன் காத்திருக்க ஆரம்பித்தான் வினய்.

அதே விநாடி, 350 கி.மீ. கீழே, ஸ்வேதா அவனுக்கான இமெயில் மெசேஜை டைப் செய்து கொண்டிருந்தாள்.

"என் அன்பு புருஷா.. ரெண்டு வாரமா கொஞ்சம் பிஸி, இந்த ரெண்டு வாரமா உனக்கு மெயில்கூட‌ பண்ணாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குது. உங்க ஆளுங்ககிட்ட சொல்லி வாரம் ஒரு அஞ்சு நிமிசக் காலுக்கு பர்மிசன் வாங்கக் கூடாதா?"

"எனக்கு டென்வர்ல வேலை கிடைச்சிடுச்சி, போன வாரமே வந்து சேர்ந்துட்டேன். இன்னும் ஒன்றரை வருசத்துக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் இங்கதான் இருக்கப் போறேன். அப்புறம் இன்னொரு விசயம், மனசைத் தேத்திக்கோ. உன் மச்சினிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி. இப்ப அவ கலிஃபோர்னியால நம்ம வீட்டுலதான் இருக்குறா. அவளோட உட்பியும் பக்கத்துலதான் வேலை செய்யுறாரு. தினமும் சாயங்காலம் ஆபிஸ் முடிஞ்சதும் வந்துடறாரு. ரெண்டு பேரும் ஒரே அட்டகாசம்தான்."

"அவங்களைப் பாத்தா அப்படியே எனக்கு நம்ம காதல் காலம்தான் நெனப்புக்கு வருது. உனக்கு ஞாபகம் இருக்கா, நாம முதல் முதல்ல டூர் போனப்ப...."

Monday, June 1, 2009

ஒரு விரலும் ஒன்பதாவது மனிதனும் (சிறுகதை)

முன்குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.

இனி கதை...

வணக்கமுங்க. நாந்தான் வெண்பூ. இந்த உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துறாங்களாம். அனுப்பலாம்னா புதுசா ஒண்ணும் தோண மாட்டேங்குது. மூணு வருசத்துக்கு முன்னால ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை எங்கியும் அனுப்பவே இல்லை. சரி அதை உபயோகப் படுத்திக்கலாம்னு பரண்மேல ஏறி எலி கூடவெல்லாம் சண்டை போட்டு எடுத்திருக்குறேன். கீழ இருக்குறதுதான் அந்த கதை. படிச்சுட்டு சொல்லுங்க, அனுப்பலாமான்னு..

******

கி.பி. 1885

சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.

இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.

"ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?"

"ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல"

"ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்"

"அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க"

பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.

"ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?"

"என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?"

"இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்"

திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.

"உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க." என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம்.

"கண்டிப்பா" என்றனர் இருவரும் ஒரு சேர.

****

இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.

"இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?"

"கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா.."

"என்ன பிரச்சினை?"

பீட்டர் தொடர்ந்தான்.. "இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்"

"கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க"

*****

கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்...

1972ன் இறுதியில்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.

"இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?"

"இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும்.

இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது.."

"எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்"

விக்டர் புன்னகைத்தான். "இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்"

"என்ன சொல்றீங்க?"

"இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க‌. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.

அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவ‌து ஒரு பிர‌ச்சினை. அது எல்லாத்தையும் இப்ப‌ உருவாக்கி இருக்கிற‌ இந்த‌ ஒன்பதாவ‌து கருவுல‌ ச‌ரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன‌ அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு"

"இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?"

"ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபல‌ம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.

இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு"

பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,

"ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்."

'என்ன?' என்பது போல் பார்த்தான் விக்டர்.

"மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்."

"நல்லா புரிஞ்சது" என்றான் விக்டர்..

****

ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.

அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.

ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.

இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.