Wednesday, July 30, 2008

ஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 3

ஐயாக்களே..அம்மாக்களே... வலையுலக மகாஜனங்களே!! நான்பாட்டுக்கு ஏதோ எனக்கு இருக்குற அறிவை(?) வச்சி யோசிச்சி, யோசிச்சி(?) அறிவியல் கதையா எழுதி குமிச்சிட்டு(?) இருந்தா, ஒரு மனுசனுக்கு அது அடுக்கலை. நான் அந்த போட்டியில பரிசு வாங்கிட்டாம பண்ணிடனும்ன்றதுக்காக என்னை இந்த மொக்கையில இழுத்து விட்டுட்டு அவரு வேலையை பாத்துக்கிட்டு நல்ல புள்ளன்னு பேரு வாங்கிட்டு இருக்காரு.

அதனால இந்த மொக்கைக்காக திட்டறதா இருந்தா என்னை திட்டாதீங்க.. அவரை திட்டுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்ற மாதிரி, எல்லா வசவும் பரிசலுக்கே!!! (சும்மானாச்சிக்கு பரிசல்...உல்லல்லாய்ய்ய்ய்..)

ந‌ம்ம‌ மேட்ட‌ருக்கு போவோம்..

*******

பார்ட் 1
பார்ட் 2

எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..

“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”

இனி......

"யாருய்யா இவன்.. நம்ம போனை நம்மள கேக்காம எடுத்து பேசுறான்.. லேண்ட்லைன்ல கான்ஃப்ரன்ஸ் கால்ன்றான்.." என்கிறார் டைரக்டர்.

மீஜிக்.. "அதுகூட பரவாயில்லங்க.. அந்த போன் 3 நாளா டெட். நானே டெலிபோன் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணி அலுத்துப் போயிட்டேன். அதுல எடுத்து பேசிட்டு போவுது பைத்தியம்"

"இப்பதான் புரியுது மீஜிக். இவன் எதுனா வலைப்பதிவரா இருப்பான். ஒருத்தருமே படிக்கலைன்னாலும் தினமும் 4 பதிவு போடுவானுங்க. யாருமே பின்னூட்டம் போடுலைன்னா அவனுங்களே அனானியா பின்னூட்டம் போட்டு ஹிட் கவுண்ட் ஏத்துவானுங்க. ரொம்ப முத்திப்போயி இப்படி டெட்டான போன்ல பேசுறான். இவன் பெரும்பதிவரா இருப்பான்னு நினைக்கிறேன்"

'டொக்..டொக்..'

"இவனை விடுங்க, கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு பாருங்க"

கதவைத் திறந்தவுடன் டைரக்டர் டெர்ரராகிறார்.. அங்கே நிற்பது..

கார்த்திக், எஸ்.ஜே.சூர்யாவுடன்..... ஜே.கே.ரித்தீஷ்..

டைரக்டர் மனதிற்குள் 'இன்னிக்கு காலையில ராசிபலன்ல எதிர்பாராத வரவுன்னு போட்டிருந்தப்பவே டவுட் ஆனேன். இப்படி மாட்டிகிட்டேனே' என்றவர் சத்தமா "வாங்க..வாங்க.. நீங்கல்லாம் வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை, என் பொண்டாட்டியோட சின்ன பாட்டி வயசுக்கு வந்துட்டாங்களாம். இப்பதான் போன் வந்தது.. மன்னிக்கணும் நான் உடனே கிளம்பியாகணும்" என்றவாறே எஸ்ஸாகிறார்.

தப்பிக்க வழியில்லாமல் மீஜிக் நடுங்கி கொண்டே உட்காருகிறார்.

கார்த்திக்: நாங்க.... இங்க... எதுக்கு... வந்தமுன்னா... இப்ப.. எனக்கு அரஷியல்ல... கொஷ்சம்.. ரெஸ்ட் கிடைச்சிருக்கு

மீஜிக் (மனதிற்குள்): 'அதுக்கு மறுபடியும் படத்துல‌ நடிக்கப் போறியா? வேணான்டா த‌மிழ்நாடு தாங்காது'

கார்த்திக்: நான் ஒரு படம்... ப்ரொட்யூஷ்... பண்ணப்போறேன்.. அதை ஸீர்யா டைர‌க்ட்.. பண்றாரு.. ரித்தீஷ் தம்பிதான் ஹீரோவா நடிக்கப்போறாரு..

மீஜிக் : 'உலகம் அழிஞ்சிரும்டா மக்கா' (ச‌த்த‌மாக‌) அதுக்கு...

எஸ்.ஜே: நீங்க‌தான் ம்யூஸிக் போட‌ணும்...

மீஜிக் : 'உன் ப‌ட‌த்துக்கு எதுக்குடா த‌னியா ம்யூசிக்..எதோ ரெண்டு பாரின் சி.டி.யிலருந்து சவுண்ட் எஃபக்ட் காப்பி பண்ணாபோதாதா'.. க‌ண்டிப்பா ப‌ண்ணிட‌லாம் சார்.

ரித்தீஷ்: ப‌ட‌த்துக்கு டைட்டில் "பாட்ஷா" அப்ப‌டின்னு வெச்சிக்க‌லாமா?

மீஜிக் : 'வாடா உன்னைத்தான் எதிர்பாத்துகிட்டு இருக்கேன்! கமல் முடிஞ்சது அடுத்தது ரஜினியா?' சார் டைட்டானிக் அப்ப‌டின்னு வேணும்னா வெக்க‌லாமே?

ரித்தீஷ்: ந‌ல்லாயிருக்கே.. இந்த‌ ப‌ட‌த்துக்கு அப்புற‌ம் ந‌டிக்க‌ப்போற‌ அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இந்த‌ பேரையே வெச்சிக்கிறேன்..

மீஜிக் : 'ஆஹா.. இன்னும் ஒரு ப‌ட‌மா... நானெல்லாம் இன்னும் கான‌ல் நீர் பாதிப்புல‌ இருந்தே வெளியில‌ வ‌ருல‌'

ரித்தீஷ்: சூர்யா சார்... இந்த‌ ப‌ட‌த்துக்காக‌ நான் எதுனா கெட்‍அப் சேஞ்ச் ப‌ண்ண‌னுமா?

மீஜிக் : 'ப‌ண்ணிட்டாலும்'

சூர்யா : ஆஆ.. அதெல்லாம் தேவையில்ல‌.. நான் ரொம்ப‌ இய‌ற்கையா எல்லாத்தையும் காட்டுவேன்..

மீஜிக் : 'ஆமா.. எல்லா நடிகைகளையும் இவரு ரொம்ப‌ இய‌ற்கையா காட்டுவாரு'

ரித்தீஷ்: இந்த படத்துக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு கெடக்கணும். நீங்கதான் பொறுப்பு. என்னா செலவானாலும் பரவாயில்ல..

மீஜிக் : 'அட‌ப்பாவி! அது என்னா அர‌சாங்க‌ அவார்டா! ஆளுங்க‌ட்சி மேடையில‌ எதிர்க‌ட்சிகார‌னை கெட்ட‌வார்த்தையில‌ பேசுனா குடுக்குற‌துன்னு நென‌ச்சியா!'


கார்த்திக்கின் செல்போன் அடிக்கிறது.

கார்த்திக் போனை எடுத்து "ஷொல்லுங்க...நான் கட்சித்தலைவர்தான்... பேசுறேன்..என்னது கட்ஷியில.. சேரப்போறீங்களா..ஒரு நிமிஷம்.." என்றவர் மீஜிக் பக்கம் திரும்பி "என் கட்ஷி பேர் மறந்துட்டேன்.. உங்களுக்கு.. ஞாபகம் இருக்கா?" என்கிறார்.

மீஜிக்: 'உருப்பட்டாப்புலதான்.. எதாவது சொல்லுவோம்.. வெளங்காத வெண்ணை கட்சின்னு சொல்லுவோம்'.. வெ.வெ.க அப்படின்னு ஷொல்லுங்க..ச்சீ.. சொல்லுங்க..

கார்த்திக் போனில்.. "அப்படியா.. உடனே வர்றேன்.." என்றவர் மற்றவர்களிடம் "வாங்க ஸீர்யா..ரித்தீஷ் தம்பி.. போய் அவரை பாத்துட்டு அப்புறமா வரலாம்" என்றவாறு கிளம்புகிறார்.

எல்லாம் சென்றவுடன் "அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்" என்றாவாறு உட்கார,

'டொக்..டொக்..'

சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..

****

இந்த இடத்திலிருந்து திருப்பூர் தங்கம், நொய்யல் ஆற்றங்கரை நல்லவர், கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் பரிசல் தொடர்வாராக...

Sunday, July 27, 2008

மாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை)

2008 ஆகஸ்ட் 15, நேரம் மாலை 6.45 மணி

தன்னைச் சுற்றிலும் இருந்த பெரிய பெரிய இரும்பு பெட்டிகளையும் அதற்குள்ளே செல்லும் பல‌வண்ண வயர்களையும் பார்த்து வியந்து நின்று கொண்டிருந்த நாதனின் தோளில் தட்டினான் கிருஷ்ணா.

"என்ன புரொபசர், திகைச்சி போய் நின்னுட்டீங்க போலிருக்கு"

"க‌ண்டிப்பா கிருஷ். நீ ஐ.ஐ.டி.ல‌ ப‌டிச்ச‌ப்ப‌ நான் உன்னோட‌ புரொப‌ச‌ர். ரொம்ப‌ ப்ரைட்டா இருந்த‌தால‌ எல்லாருக்கும் உன்னை ரொம்ப‌ பிடிக்கும். நீ உன்னோட‌ பி.எச்.டிக்கு என்னை கைடா செல‌க்ட் ப‌ண்ணின‌துக்கு உன்னை விட‌ நான் ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டேன். இதோ 13 வ‌ருச‌ம் க‌ழிச்சி இப்ப‌ உன்னை ஏர்போர்ட்ல‌ பாத்தப்ப‌ என‌க்கே உன்னை அடையாள‌ம் தெரிய‌ல‌. என்னை பாத்த‌வுட‌னே சின்ன‌க்குழ‌ந்தை மாதிரி என்னை க‌ட்டிபிடிச்சி சீன் கிரியேட் ப‌ண்ணிட்டே. உன்கூட‌ வ‌ந்தே ஆக‌ணும்னு ஒரே அட‌ம்பிடிச்சி என்னை இங்க கூட்டிட்டு வந்தே. இங்க வந்து பாத்தா இந்த லேப் என்னோட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதா இருக்கு. என்ன பண்ணிட்டு இருக்க நீ கிருஷ்?"

"புரொபசர், உங்களுக்கே தெரியும்.. எனக்கு கம்ப்யூட்டர்னா உயிர்னு. அதனாலதான் சூப்பர் கம்ப்யூட்டர் பத்தி பி.எச்.டி. பண்ணினேன். அது முடிஞ்சதும் அமெரிக்காவில வேலை கிடைச்சி போனதும் உங்களுக்குத் தெரியும். அங்க போயி கொஞ்ச நாள்லயே எனக்கு அது போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதனாலதான் இந்தியா திரும்பி வந்து இந்த லேப் ஆரம்பிச்சேன்"

"அதுவும் எனக்கு தெரியும் கிருஷ். உன்னைப் பத்திதான் எல்லா மீடியாவும் பேசிட்டிருக்கே"

"நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட புது கண்டுபிடிப்பைப் பத்தி உங்களுக்கு சொல்றதுக்காகதான். இதுபத்தி இன்னும் யாருக்கும் சொல்லவேயில்லை. நீங்கதான் முதல்ல தெரிஞ்சிக்கப் போறீங்க"

"சொல்லு கிருஷ்" என்றார் நாதன் சிறிதும் கலப்படமில்லாத நிஜமான ஆர்வத்துடன்.

"இப்ப இருக்கிறதுலயே அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எதுன்னு சொல்லுங்க"

"ஐ.பி.எம். மூணு மாசத்துக்கு முன்னால அறிவிச்ச ரோடுரன்னர் (IBM RoadRunner). சரியா? அதோட வேகம் கூட 1 பீட்டா ஃப்ளாப்க்கு (Peta Flops - Floting Point Operations Per Second) மேலன்னு ஞாபகம்"

"ரொம்ப சரி புரொபசர். சாதாரண கம்ப்யூட்டரோட வேகம் சில மெகா ஃப்ளாப்ல இருக்குறப்ப இந்த ரோடுரன்னர் அதை விட லட்சக்கணக்கான மடங்கு வேகத்துல செயல்படுது"

"ரொம்ப சரி கிருஷ். அவங்க அடுத்த ப்ராஜக்ட் கூட ஆரம்பிச்சிட்டதா கேள்விப்பட்டேன். அது இதை விட ரெண்டு அல்லது மூணு மடங்கு வேகம் கொண்டதா இருக்கும்னும் அது 2010ல வந்துடும்னும் பேசிக்கிறாங்க"

பதில் சொல்லாமல் லேசான புன்னைகையுடன் தீர்க்கமாக பார்த்தான் கிருஷ்ணா.

"என்ன கிருஷ்.. அப்படி பாக்குற?"

"நீங்க நம்பமாட்டீங்க புரொபசர். நான் அதை விட பல மடங்கு சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிட்டேன்"

"என்னப்பா சொல்றே?" ஆச்சரியம் + அதிர்ச்சியுடன் கேட்டார் நாதன்.

"ஆமா சார். நீங்க இப்ப அதுக்கு நடுவுலதான் நிக்கிறீங்க"

ஆச்சரியம் விலகாமல் சுற்றி இருந்த அனைத்தையும் பார்த்தார் நாதன்.

"எங்கப்பா எனக்காக விட்டுட்டு போன ஆயிரக்கணக்கான கோடிகள்ல பாதிக்கும் மேல விழுங்கிட்டு இதோ இங்க 8 ஏக்கர் பரப்பளவில நிக்குதே இதுதான் என்னோட கண்டுபிடிப்பு. இதோட ஸ்பெசிஃபிகேஷன் சொல்றேன் கேக்குறீங்களா புரொபசர்?

மொத்தம் இதுல 2048 சப்சிஸ்டம் (sub-system) இருக்கு. ஒவ்வொரு சப்சிஸ்டத்திலயும் 1024 யூனிட், ஒவ்வொரு யூனிட்லயும் 64 க்வாட் கோர் ப்ராசஸர் (quad core processor). மொத்தம் 2048 * 1024 * 64 = 134 மில்லியன் ப்ராசஸர்ஸ் இருக்கு. நம்ப முடியல இல்லை. அது மட்டுமில்ல. இந்த எல்லா சப்சிஸ்டமும் அதி நவீன ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமா இணைக்கப்பட்டிருக்கு. இதுல இருக்குற மொத்த மெமரி பவர், கூகுள் கம்பெனி வெச்சிருக்கிற எல்லா சர்வர்கள்லயும் இருக்குறத விட அதிகம்."

"வாவ்"

"இன்னிக்கு உலகத்தில பயன்பாட்டில இருக்கிற அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரைவிட இது ஏறத்தாழ‌ 3,000 மடங்கு சக்தி வாய்ந்தது. என்ன ஒண்ணு, சின்ன நகரத்துக்கு ஒரு மாசத்துக்குத் தேவைப்படுற மின்சாரம் இதுக்கு ஒவ்வொரு நாளும் தேவை"

"நீ சொன்னது நிஜம்தான் கிருஷ்.. என்னால நம்பவே முடியல"

சிரித்தான் கிருஷ்ணா.

"ஆனா உன்னை நான் பாராட்டணும் கிருஷ். உனக்குள்ள இருந்த அந்த வேகம் வெறியா மாறிடுச்சின்னுதான் சொல்லுவேன். ஆனா அதை நீ சரியான திசையில செலுத்தியிருக்க. அதுதான் இன்னிக்கு இப்படி உருமாறி நிக்குது"

"நன்றி புரொபசர்"

"ஆமா இதை எதுக்காக உபயோகப்படுத்தப் போற?"

"சாதரணமா சூப்பர் கம்யூட்டர்கள் ஒரு சில குறிப்பிட்ட வேலைகளுக்குத்தான் உபயோகப்படுத்தப்படுது. உதாரணமா காலநிலை மாற்றங்கள், அணுகுண்டு ஆராய்ச்சி இப்படி. நான் செய்யப் போறது முற்றிலும் வேற மாதிரி"

"என்ன கிருஷ்?"

"இந்த உலகத்தில முதல் முதல்ல உயிரினம் எப்படி தோன்றிச்சி அப்படின்றதப் பத்திதான் என்னோட இந்த குழந்தை ஆராய்ச்சி பண்ணப் போகுது"

"எப்படி?"

"அணுகுண்டுகளை வெடிக்காம ஆனா அதே நேரத்தில அது வெடிச்சா எப்படி இருக்கும் அப்படின்றத பத்திதான் இன்னிக்கு பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. என்ன பண்ணுவாங்கன்னா அணுகுண்டு வெடிக்கிறதுக்கு முன்னால இருக்குற எல்லா விசயங்களையும் சூப்பர் கம்ப்யூட்டர்ல ஏத்திடுவாங்க. அதுக்கப்புறம் தன்னோட ப்ராசஸிங் பவரை வெச்சி குண்டு வெடிச்சா என்ன ஆகும், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், கதிர்வீச்சு எந்த அளவில இருக்கும் அப்படின்றத சூப்பர் கம்ப்யூட்டர் கணக்கிடும்.

நான் அதேமாதிரி, இந்த பூமி உருவானப்ப எப்படி இருந்தது, அதோட இயல்புகள் என்ன அப்படின்றத என்னோட கம்ப்யூட்டர்ல ஏத்திட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் என்னோட கம்ப்யூட்டர் எப்படி உயிர்கள் தோன்றியது அப்படின்னு கணக்கிடப் போகுது. இதுக்குப் பேர் சிமுலேசன் (Simulation).

எல்லாம் சரியா நடந்தா மனுசன் எப்படி உருவானான் அப்படின்ற குழப்பமான கேள்விக்கும் கூட விடை தெரிய வாய்ப்பு இருக்கு புரொஃபசர்"

"அற்புதம் கிருஷ். நீ எது செஞ்சாலும் அதுல வெற்றியடையத்தான் போற. எனக்கு இன்னும் ஒரு சில டீடெய்ல்ஸ் தெரிஞ்சிக்கணும்"

***

கி.பி.2908 ஆகஸ்ட் 15, மாலை 7.00 மணி

"மிஸ்டர் கே89. என்னை எதுக்காக அவசரமா கூப்பிட்டீங்க?"

"இதோ இதைப் பாருங்க" என்றவாறே எதிரில் இருந்த 30 அடி நீள சுவர் மீதிருந்த மானிட்டரைத் தொட்டான். அது உலக வரைபடத்தைக் காட்ட அதில் இந்தியாவை தொட அது இந்தியாவை மட்டும் பெரிதாக்கிக் காட்டியது. அப்படியே தொடர்ந்து நான்கைந்து தொடல்களுக்குப் பிறகு நாதனையும், கிருஷ்ணாவையும் காட்டியது.

"அவங்க பேசுறதை கேளுங்க ஜே40"

இருவரும் பேசிக் கொள்வது தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

சரியாக 30 நிமிடங்களில் அவர்கள் ஒரு அறையில் குழுமியிருந்தார்கள். நாட்டின் அதிபர், முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அமர்ந்திருக்க ஜே40 பேச ஆரம்பித்தார்.

"அதிவேக கம்ப்யூட்டர்கள் மூலமா இந்த சிமுலேசன் ஆரம்பிக்கப்பட்டு இன்னியோட 140 வருசம் ஆச்சு. இந்த உலகத்துல முதல் ஒரு செல் உயிரினம் தோன்றுனதுல இருந்து பரிணாமத்தோட ஒவ்வொரு கட்டத்தையும் இந்த சிமுலேசன் மூலமா நாம தெரிஞ்சிட்டு வந்திருக்குறோம். மனுசன் எப்படி தோன்றுனான் அப்படின்றது உட்பட பல விடை தெரியாத கேள்விகளுக்கு நமக்கு இந்த ப்ராஜக்ட் விடை தந்திருக்கு.

இப்ப இந்த சிமுலேசனோட முக்கியமான கட்டத்துல இருக்கோம். கோடிக்கணக்கான வருசத்தப் பத்தி தெரிஞ்சிட்ட நாம இப்ப கி.பி.2008ம் வருசத்துல இருக்கோம். இன்னும் அடுத்து வரப்போற 400 வருசங்களைப் பத்தியும் தெரிஞ்சிட்டாதான் இன்னிக்கு உலகத்துல நாம எதிர்கொண்டிருக்குற கடுமையான வியாதிகள், காலநிலை மாறுபாடுகள் மாதிரியான‌ பல விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனா இப்ப நாம பாக்கிற இந்த கிருஷ்ணான்ற‌ என்டிட்டி (Entity) சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சியிருக்குறதாகவும், அது மூலமா சிமுலேசனை ஆரம்பிக்கப் போறதாகவும் சொல்லுது. இது நமக்கு தலைவலிதான்.

ஏன்னா, ஏற்கனவே இவங்க இருக்கிறது சிமுலேசன்ல. அதுல இருந்து இன்னொரு சிமுலேசன் ரிகர்ஸிவா (recursive) ஆரம்பிக்கறதுன்றது தேவையில்லாதது மட்டுமில்ல, நிறைய எனர்ஜி மற்றும் ரிசோர்ஸ் தேவைப்படுற ஒண்ணு.

இதனால நம்ம இப்ப எதிர்பார்க்கறமாதிரி 2923ம் வருசத்துக்குள்ள கி.பி.2500ம் வருசத்த தொட முடியாமக் கூட போகலாம்."

சிறிது நேரம் அந்த அறையில் மயான அமைதி நிலவியது.

"சரி..இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றீங்க ஜே40?" என்றார் அதிபர்.

*******

2008 ஆகஸ்ட் 16, நேரம் காலை 7.00 மணி

டி.வி.யில் அழகான அந்த பெண் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.

"இந்தியாவின் பிரபல கணிப்பொறி விஞ்ஞானி கிருஷ்ணா நேற்று இரவு அவரது ஆராய்ச்சிக்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மரணமடைந்தார். மின்கசிவின் காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் அவரது கல்லூரி விரிவுரையாளார் நாதன் உள்ளிட்ட மேலும் ஆறு பேரும் பலியானர்கள் என்றும் மருத்துவமனையில் படுகாயத்துடன் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன"

*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான மூன்றாவது இடுகை ***

Wednesday, July 23, 2008

புது ப்ராஜக்ட் (சின்னக் கதைகள் - 1)

"உங்களையெல்லாம் நான் எதுக்கு கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு கூப்டிருக்கன்னா, ஒரு புது ப்ராஜக்ட் வருது, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ப்ராஜக்ட், டெக்னிகலி சேலஞ்சிங்..

அதுக்காக கம்பெனியில இருக்குற உங்களை மாதிரி திறமையான ஆளுங்களை எல்லாம் அசைன் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர். உங்களுக்கெல்லாம் சந்தோசம்ன்றது உங்க முகத்துல இருந்தே தெரியுது..

பல‌ வருசம் போகபோற இந்த ப்ராஜக்டுக்கு வருசத்துக்கு 10 மில்லியன் டாலர்னு கான்ட்ராக்ட் சைன் ஆகியிருக்கு..

சொல்றேன்..சொல்றேன்.. நம்ப மாட்டீங்க.. இந்த ப்ராஜக்ட் சித்திரகுப்தனோட பிரம்மச்சுவடிய மேனேஜ் பண்ண வேண்டிய 'சொர்க்கலோகம் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்' ப்ராஜக்ட்தான். நேத்துதான் சித்திரகுப்தன் வந்து நம்ம மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசி ஆர்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டு போயிருக்காரு..

குட்.. ரொம்பவும் ரியல் டைம் டேட்டா இருக்கப்போறதால செக்யூர்டாவும் அதே நேரம் டைம் கிரிட்டிகலா இருக்கறதுனால பெர்ஃபார்மென்ஸும் நல்லா இருக்கணும்...

ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"

Monday, July 14, 2008

நீங்கள் ஒரு பின்நவீனத்துவவாதியா? ஒரு சிறு தேர்வு

வெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.

நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.

மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி...
"

பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.

Saturday, July 12, 2008

ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகத்தில்...

டிஸ்கி 1: இந்த இடுகையில் வரும் எல்லா பாத்திரங்களும் கற்பனையே. கண்டிப்பாக உண்மையில்லை

டிஸ்கி 2:....

டிஸ்கி 3:...

டிஸ்கி 4: இடுகையின் தலைப்பிலோ அல்லது முதல் 3 வரிகளிலோ சாமம், சட்டி போன்ற தவிர்க்கப்படவேண்டிய போன்ற வார்த்தைகள் வரவில்லை.

இனி இடுகைக்குப் போவோம்..

அது ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகம். வடிவேலு அமர்ந்திருக்க வேக வேகமாக ஓடி வருகிறார் ஒரு அடிப்பொடி.

"அண்ணே, அண்ணே, அந்த ஜ்யோலட்சுமண கந்தர் மறுபடியும் சாமக்கதைகள போட்டிருக்காரு"

விருட்டென எழுகிறார் வடிவேலு.

"அந்த சைடுநவீனத்துவ கும்பலுக்கு இதுவே வேலயா போச்சி, உடனே கிளம்புறேன்"

வழியில் பார்க்கும் ஒருவர்....

"கால்புள்ள கோவமா கிளம்பிட்டான் போல இருக்கு, இன்னிக்கு எத்தன பதிவர்கள் தலை உருளப்போவுதோ?"

வடிவேலு வருகிறார். அங்கே ஜ்யோலட்சுமண கந்தர், பைத்தியம் தெளிந்தவன், களர், லக்கியில்லாத லுக் எல்லாம் நிற்கின்றனர்.

"டாய் கந்தர்...எதுக்குடா அதைப் போட்ட?"

"ம்ம்ம்ம்ம்ம்... என்ன சொல்றன்னு புரியல... உன் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன் ரொம்ப சின்ன எழுத்துல இருக்கு.. கொஞ்சம் பெரிய ஃபான்ட்ல போடு"

"டாய் கந்தர், நீ ஒரு கீ போர்டுல டைப் பண்ற ஆளா இருந்தா இன்னொரு இடுகை போடுறா பாக்கலாம்"

அதற்குள் லக்கியில்லாத லுக் "சட்டி சுட்டதடா, கை விட்டதடா" என்று ஒரு பதிவிடுகிறார்.

"ஒத்துக்கறேன்.. நீங்க எல்லாம் ஒரே கீ போர்டுல டைப் பண்றவங்கன்றதான்கறத‌ ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்"

திரும்பி நடக்கிறார். எல்லோரும் சுற்றி நிற்கிறார்கள்.

"உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. இதுவரைக்கும் யாரும் என்னை கும்முனதில்ல"

"போன மாசம்தான ஆங்கிலச்சி விசயத்துல உன் டவுசர கிழிச்சோம்"

"அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்..."

பைத்தியம் தெளிந்தவர் ஒரு பதிவிடுகிறார் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு விண்ணப்பம்" என்ற தலைப்பில்.

"வேணாம்"

லக்கியில்லாத லுக் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு அவசர கடிதம்" என்ற தலைப்பில் அடுத்த பதிவிடுகிறார்.

"வலிக்குது"

எல்லோரும் பின்னூட்டமிட ஆரம்பிக்க,

"அழுதுடுவேன்... அழுதுடுவேன்..."

அங்கே இருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லாரும் வரிசையாக பின்னூட்ட கும்மியை ஆரம்பிக்கிறார்கள்.

Wednesday, July 2, 2008

கடைசி ஆசை

கி.பி. 2058 ல் ஒருநாள். அவன் இருந்தது சென்னை அதி பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைமை பொறுப்பாளருடன்.

"நண்பரே, உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் த.பொ. அவனிடம். அவன் மரணதண்டனைக் கைதி. அவன் செய்த குற்றம் நமது கதைக்கு தேவையற்றது என்பதால் நேரடியாக அவனது கடைசி ஆசைக்கு செல்வோம்.

"அரசிடம் இருந்து ஒப்புதல் வந்துவிட்டதா?" என்றான் அவன்.

"ஆம் நண்பரே, இன்னும் 1 மணிநேரத்தில் தங்களது தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. எனவே உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றச் செல்வோமா?"

"கண்டிப்பாக" என்றான் மனதெங்கு‍‍‍ம் மகிழ்ச்சியுடன்.

*********

அடுத்த அறையில்...

"நண்பரே, இதுதான் கால இயந்திரம். உங்கள் கடைசி ஆசையின்படி நீங்கள் இதில் பயணம் செய்யப்போகிறீர்கள்...ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன்"

அவன் அமைதியாக இருந்தான்.

"முதலில், நீங்கள் இறந்த காலத்திற்குத்தான் செல்ல முடியும், எதிர்காலத்திற்கு அல்ல, நீங்கள் மரணதண்டனை குற்றவாளி என்பதால். அடுத்தது உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே, அதன்பின் நீங்களாகவே திரும்பிவிட வேண்டும், 1 நிமிட தாமதம் கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மூன்றாவது ஏதேனும் ஒரே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்ல முடியும், அங்கேயிருந்து வேறு ஒரு காலத்திற்கு உங்களால் செல்ல முடியாது, திரும்பி இங்கே வருவது மட்டுமே சாத்தியம். புரிகிறதா?"

"புரிகிறது"

"எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள்?"

"நூறு ஆண்டுகளுக்கு முன்னால்"

"நல்ல தேர்வு, மாசுபடாத காற்று, சுத்தமான நீர், அபரிமிதமான இயற்கை வளம் எல்லாம் அனுபவிக்க முடியும்."

மறுபுறம் திரும்பி அங்கே இருந்த க்வான்டம் கணினியில் ஒரு சில உள்ளீடுகளைச் செய்தார்.

"உலகின் எந்த பகுதிக்கு செல்ல விரும்புகிறீர்கள்? இந்தியாவின் ஏதோ ஒரு பகுதிக்கா? கிழக்கு அல்லது மேற்கு பகுதிக்கா?"

அவன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன். காதலியுடன் ஐரோப்பா முழுவதையும் ரசித்தவன். எனவே

"கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று"

"கண்டிப்பாக ந‌ண்ப‌ரே"

மீண்டும் ஏதோ உள்ளீடுகளைச் செய்தார்.

"அனைத்தும் தயார். இதை அணிந்து கொள்ளுங்கள். இது இன்னும் எத்தனை நிமிடங்கள் மீதி உள்ளன என்று காட்டும். இதோ இந்த கதவில் உள்ளே செல்லுங்கள். கடைசியாக சில அறிவுரைகள், நீங்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குச் செல்லப் போகிறீர்கள். இந்த கால இயந்திரம் நவீன க்வாண்டம் கணிணியின் உதவியுடன் உங்களை குறிப்பிட்ட காலத்திற்கு அனுப்ப உதவும். சரியாக கிளம்பிய 55 நிமிடத்தில் நீங்கள் மீண்டும் இதற்குள் வந்து இந்த சிவப்புப் பொத்தானை அழுத்தினால் நீங்கள் இங்கேயே திரும்பி வந்து சேருவீர்கள். மீண்டும் சொல்கிறேன். கால தாமதம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. மேலும் இது 16 மெகா பிட் நீளமுள்ள பாதுகாப்புத் தகவலுடன் இயங்குகிறது, தற்போதுள்ள அதிவேக க்வாண்டம் கணினியால் இதை உடைக்கவே 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே உங்களுக்கு இருக்கும் 55 நிமிடத்தில் முயற்சி செய்யாதீர்கள்."

"நான் தயார்" என்றான் அவன்.

"உற்சாகமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்."

த‌.பொ. மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பின் பச்சை நிறத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்.


********

அவன் சடாரென உள்ளிழுக்கப்பட்டான் அல்லது பட்டதாக உணர்ந்தான். அடுத்த வினாடி அவனது கால் மற்றும் கை விரல்களில் ஆரம்பித்த வலி உடலெங்கும் பரவ ஆரம்பித்தது. அவன் உடல் வெப்பநிலை திடீரென்று உயர்ந்தது.

'என்ன இது.. நான் ஏமாற்றப்பட்டேனா? எனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா?'

அவன் வலியால் கத்த ஆரம்பித்த நேரம் அவன் பனி வெள்ளத்திற்குள் விழுந்தது போல் உணர்ந்தான். வலி முற்றிலும் இல்லாமல் காற்றில்லா தளத்தில் மிதப்பது போல். அவன் மனதை அதுவரை அவன் கடந்த மகிழ்ச்சியான தருணங்களால் நிரப்பினான்.

பத்து வயது சிறுவனாக அம்மா மடியில் தலை வைத்து படுத்தான். பதினைந்து வயதில் சக தோழியிடம் இருந்து முதல் முத்தம் பெற்றான். கைத்தட்டல்களுக்கு நடுவே பல்கலை கழகத்தின் மேடையில் தங்கப்பதக்கம் பெற்றான். காதலியுடன் ஐரோப்பிய தங்கும் அறைகளில் கட்டிப் புரண்டான்.

அவன் நினைவு தடைபட்டது. எதன் மீதோ மோதி பிடிமானமில்லாமல் விழுந்தான். மெல்ல கண்களைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தன. கால இயந்திரம் ஏதோ ஒரு அழகான பூங்காவின் பச்சைப் புல்வெளியில் நின்றிருந்தது.

மணிக்கட்டைப் பார்த்தான். இன்னும் 54 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கதவைத் திறந்து வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்தான்.

'இதோ இங்கே இரண்டாயிரம் காவலர்களின் பாதுகாப்பு இல்லை. கதவுகளைத் திறக்க இருநூற்று ஐம்பத்தாறு எழுத்துகளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு மாத்திரைகள் இல்லை. தப்பிச் செல்லாமல் இருக்க பதினாறு வளைய சுற்றுச் சுவர்கள் இல்லை. வான் வழித் தப்புதலைத் தடுக்க கண்ணிற்குத் தெரியாத லேசர் படலங்கள் இல்லை. சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பிக்க நினைப்போரை பொடிப் பொடியாக்கிக் கரைக்கும் அமிலக் குழாய்கள் இல்லை.

நினைக்கும் போதெல்லாம் நாவிற்கு சுவையான உணவு, சுதந்திரமான சுற்றுப்புறம், அபரிமிதமான பெட்ரோல், அழகான பெண்கள்.

இல்லை. நான் திரும்பிப் போவது இல்லை. இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகிறேன். முதலில் இங்கேயிருந்து தொலைவில் செல்ல வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு. ஒருவேளை அவர்கள் என்னைத் தேடி வந்தாலும், என்னைப் பிடிப்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கக் கூடாது. திரும்பிச் சென்றால் உடனடியாக நான் லேசர் அறைக்குள் அனுப்பப்பட்டு என் சாம்பல் கடலில் கரைக்கப்படும். இங்கேயே இருப்பதன் மூலம் அவர்கள் வந்து என்னைப் பிடித்தாலும் குறைந்தது எனது ஆயுள் ஒரு மணிநேரமாவது நீட்டிக்கப்படும்.

ஒருவேளை அவர்கள் வராமலே போனால் புதிய வாழ்க்கையை தொடங்குவேன். ஆம் அதுதான் சரி'

நினைத்துக்கொண்டே கால இயந்திரத்தை விட்டு நகரம் தெரிந்த திசையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

******

அங்கே....

"இவர் திரும்பி வருவார் என்று நம்புகிறீர்களா?" என்றார் உதவிக்காவலர்.

பதில் சொல்லாமல் புன்னகைத்தார் த.பொ.

******

அது ஒரு அற்புதமான காலை நேரம். சூரியன் லேசாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. வழியில் பார்த்த எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருப்பதாக பட்டது அவனுக்கு. எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்; தெருவை சுத்தப்படுத்திக் கொண்டும், பள்ளிக்கு சென்று கொண்டும், தினப் பத்திரிக்கைகளை விற்றுக் கொண்டும், இரு சக்கர மிதிவண்டிகளில் அலுவலகங்களுக்குப் போய்க் கொண்டும்....

'ம்ம்ம்ம் நூறு ஆண்டுகளில் உலகம் எவ்வளவுதான் மாறிவிட்டது'

அவனுக்கு அப்பொழுது ஒரே பிரச்சினை, தான் எங்கே இருக்கிறேன், எந்த தேதியில் இருக்கிறேன் என்று தெரியாதது. எல்லா அறிவிப்புப் பலகைகளிலும் சித்திர எழுத்துகளே பிரதானமாக இருந்தது. எந்த நாடு என்பதைக் கூட யூகிக்க முடியவில்லை.

எதிப்பட்டவர்களிடம் "இங்கிலீஷ்" என்றான். எல்லோரும் அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு தலையை இட வலமாக அசைத்தனர்.அரை மணி நேர நடைக்குப் பின்னர் நகரத்தின் முக்கிய வீதியை வந்தடைந்தான். மற்ற இடங்களை விட இது பரபரப்பாக இருந்தது. மணிக்கட்டை பார்த்தான் 22 என்று காட்டியது.

வீதியில் நடக்க ஆரம்பித்தான். வழியிலிருந்த தண்ணீர் குழாயில் குளிர்ந்த நீரை உடலெல்லாம் வழிய வயிறு முட்டக் குடித்தான். சின்ன சின்னதாக கால்களை ஆட்டியவாறு நடைபாதையிலேயே குட்டி ஆட்டம் ஆடினான்.

எதிர்ப்பட்டவர்களிடம் ஆட்களைத் தேர்ந்தெடுத்து "இங்கிலீஷ்" என்றான், வெகு நேரத்திற்கு வெற்றி இல்லாமல். கடைசியாக ஒருவன் "யெஸ்" என்றான்.

மனம் நிறைந்த மகிழ்வுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான்.

"இது எந்த நாடு?"

"ஆச்சரியமான கேள்வி. நீங்கள் என்னை சோதிக்கிறீர்களா? நீங்கள் இருப்பது எம்பயர் ஆஃப் ஜப்பான்"

'அற்புதம், சரியான இடத்தில்தான் இருக்கிறேன். ஜப்பானின் வேகமான வளர்ச்சியில் நானும் பங்கு கொள்ளப் போகிறேன், தொண்ணூறுகளில் பொருளாதார தாழ்நிலை ஏற்படும்போது நான் இயற்கையாகவே மரித்திருப்பேன்'

*******

அங்கே....

"இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றது" என்றார் உதவிக்காவலர் தவிப்புடன்.

"காத்திருப்போம்" என்றார் த.பொ.

*******

"நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறீர்கள்?"

"என் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான். நீங்கள்?"

"நான் அமெரிக்காவில் படித்தவன்"

அவர் முகம் மாறியது.

"இந்தியன். ஆனால் படித்தது மட்டும் அமெரிக்காவில். இனி பிழைக்கப் போவது இந்த ஜப்பானில்"

அவர் சிரித்துக் கொண்டே "நல்வரவு" என்றார்.

*******

அங்கே...

உதவிக்காவலர் பதறினார் "55 நிமிடங்களிக்கு மேலே 15 வினாடிகள் ஆகிவிட்டன. அவர் திரும்பி வருவதாகத் தெரியவில்லை. இன்னும் கால இயந்திரம் திரும்புவதற்காக ஆரம்பிக்கப்படவே இல்லை. அவர் திரும்பி வரப் போவதில்லை"

த‌.பொ. எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து சுவரிலிருந்த தகவல் பலகைக்குப் போனார். அங்கே அவன் புகைப்படத்திற்கு நேராக இருந்த 'தண்டனை நிறைவேற்றப்பட்டது' என்ற பொத்தானை அழுத்தினார்.

*******

அவன் உற்சாகமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"இன்றைய தேதி என்ன?"

"ஹா..ஹா..ஹா..நீங்கள் என்னவோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப் போல் கேட்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, 1945ம் வருடம், நேரம் காலை 8.14 மணி. நீங்கள் நின்று கொண்டிருப்பது நகரின் பிரபலமான‌ ஷிமா மருத்துவமனை வாசலில். போதுமா தகவல்கள்?"

ஏதோ நெருடியது...'06 ஆகஸ்ட் 1945, காலை 8.14 மணி'

நடுங்கும் குரலில் கேட்டான் "இது என்ன நகரம்?"

அவர் உற்சாகமாக பதிலளித்தார் "ஹிரோஷிமா"

32,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் ஓசை அவன் காதில் கேட்டது.


*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது இடுகை ***