Saturday, April 18, 2015

இன்டெர்ஸ்டெல்லார் : கதைச்சுருக்கம்

*** ஸ்பாய்லர் அலெர்ட்****

இன்டெர்ஸ்டெல்லார் படத்தைப்பத்தி குருடர்கள் யானைய தடவிப்பாத்த மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா எழுதியிருக்காங்க. நிறைய விமர்சனங்களில் நிறைய தப்புகள் தெரியுது. அதனால என்னோட புரிதலை பதிகிறேன். ஒருதடவைதான் பார்த்திருக்கேன். நல்ல பிரிண்ட் டிவிடி கிடைச்சதும் இன்னும் சிலமுறை பார்த்துட்டு எதாவது மாற்றம் இருந்தா இந்த பதிவிலேயே அப்டேட்டுறேன்.


உலகம் அழியுது, வேற உலகம் உருவாக்கணும். இதுல முதல் பிரச்சினை புது உலகை கண்டுபுடிக்குறது. அதுக்கு தடுமாறிட்டு இருக்குறப்ப திடீர்னு எங்கிருந்தோ ஒரு வோர்ம்ஹோல் கைக்கெட்டுற தூரத்துல சூரிய மண்டலத்துலயே உருவாகுது (இந்த பிரபஞ்சத்தோட அளவை ஒப்பிட்டா நாலு கோள்கள் தள்ளி இருக்குற தூரமும் கைக்கெட்டுற தூரம்தான்).

ப்ளாக்ஹோல் மாதிரி வோர்ம் ஹோல், தானா உருவாகாது, அதை யாராவது உருவாக்கினாத்தான் உண்டு. அதனால பூமிக்கு உதவி செய்யுறதுக்காக யாரோ உருவாக்கியிருக்காங்கன்னு தோணுது. இப்ப உள்ள போக ஏழு தனித்தனி ஸ்பேஸ்க்ராஃப்ட்ல அதுக்குள்ள ஆட்களை அனுப்புறாங்க. அதுல மூணு பேர்கிட்ட இருந்து மட்டுமே பிங் வருது. அவங்க லொகேஷன் தெரியுது, ஆனா டேட்டா எல்லாம் எதுவும் வரலை. இப்ப அந்த மூணையும் தேடி மறுபடி போக ஆள் வேணும். இங்கதான் நம்ம ஹீரோ கூப்பரோட பயணம் வருது.

ஹீரோவாகப்பட்டவன் ஒரு காலத்துல ஆஸ்ட்ரோநெட். தல பூமிக்கு மேல ஒரு விண்வெளியில‌ சுத்திட்டு இருக்குறப்ப ஒரு சின்ன சிக்கல் வருது, அப்ப இவன் கொடுக்குற கட்டளைக்கு மாறா ஆட்டோபைலட் சிஸ்டம் வேற ஒரு வேலைய செஞ்சி அந்த க்ராஃப்ட் ஆக்சிடென்ட் ஆகிடுது, தல தப்பிச்சிட்டாலும், "போங்கடா, நீங்களும் உங்க விண்வெளி ஆராய்ச்சிகளும்"ன்னு கடுப்பாகி குடும்பத்தோட வந்து விவசாயம் பண்ணிட்டு இருக்காரு. தன் பொண்ணு மேல அதீத பாசம்.

இப்ப வீட்டுல க்ராவிட்டி வழியா புழுதியில எழுதப்பட்டுற மோர்ஸ் கோட்ல கிடைக்குற ஒரு லொகேசன் கோ ஆர்டினேட்ஸை வெச்சி ஒரு பெரிய விண்வெளி ஆய்வகத்துக்கு போறாரு. இது வெளியுலகத்துக்கு தெரியாம நடந்துட்டு இருக்கு. ஏன்னா உலகமே அழிஞ்சிட்டு இருக்குறப்ப விண்வெளிக்கு பில்லியன்கணக்கா செலவு செய்யுறது தப்புன்னு எதிர்ப்பு வந்ததால எல்லா நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சிகளை மூட்டை கட்டிடுது. இங்க வந்து பார்த்தா டாக்டர் க்ராண்ட் அப்படின்னு ஒரு வெள்ளைத்தலை விஞ்ஞானியும் அவரோட சூப்பர் ஃபிகரான பொண்ணும் ஒரு பெரிய விஞ்ஞான கும்பலோட வேலை செஞ்சிடுட்டு இருக்காங்க. ஏழு பேரை வோர்ம்ஹோல்க்குள்ள அனுப்பினதே இவங்கதான்.

அந்த மூணு பேரை தேடிப்போற குழுவுக்கு தலைமை தாங்க சரியான ஆள் இல்லை. இவர் வந்ததும் (வழக்கமான தமிழ் சினிமா மாதிரி) "உங்களை விட்டா இந்த பூமியை காப்பாத்த யாருமே இல்லை"ன்னு சீன் போட்டு அவரை அனுப்புறாங்க. வழக்கமான ஹாலிவுட் படமாட்டம் கூட அந்த சூப்பர் ஃபிகரும், இன்னொரு விஞ்ஞானியும் போறாங்க. நிறைய தமிழ் / ஆங்கில படம் பார்த்திருந்தா இவங்க மூணு பேர்ல ரெண்டு பேர்தான் கடைசியில உயிரோட இருப்பாங்க அதுவும் ஹீரோவும் ஹீரோயினியும் நீங்க சரியா கதைய புடிச்சிருப்பீங்க.

இவங்க எல்லாரும் ஒரு சின்ன வண்டியில கிளம்பிப்போயி விண்வெளியில இருக்குற ஒரு வட்டமான பெரிய வண்டியில ஏறி வார்ம்ஹோலுக்கு போறாங்க. வார்ம்ஹோலுக்கு போகவே ரெண்டு வருசம் ஆகும், அங்க போறாங்க, அதுக்குள்ளயும் போறாங்க.

அங்க அற்புதமா ஒரு ப்ளாக்ஹோல் இருக்கு. ப்ளாக்ஹோல்னா அது எல்லாத்தையும் உறிஞ்சிக்கும், உச்சகட்ட ஈர்ப்பு விசை இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. ஒளி கூட தப்பிக்க முடியாது. அதோட மையத்தை சிங்குலாரிட்டின்னு சொல்றாங்க. அந்த சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு கண்டுபிடிக்குறது நம்ம வெள்ளைத்தலை க்ராண்ட்டோட ரெண்டாவது பிரச்சினை. ஏன்னா என்னதான் இன்னொரு கிரகத்தை கண்டுபுடிச்சிட்டாலும், பூமியில மிச்சம்மீதி இருக்குறவங்களை அலேக்கா தூக்கிட்டு போகணும் இல்லையா, அதுக்கு எவ்ளோ சக்தி வேணும். அதை செய்ய ஒரு ஃபார்முலா வெச்சிருக்காரு, அந்த ஃபார்முலாவை கம்ப்ளீட் பண்ணா வெள்ளைத்தலையருக்கு ஒரு ப்ளாக்ஹோல்ல சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு தெரியணும்.

அதுக்குதான் அவர் பொண்ணையும் அனுப்பியிருக்காரு, அதன்படி இந்த பயணம் போறவங்க திரும்பி போக எல்லாம் முடியாது, ஒன்வே தான். இதை நம்ம ஹீரோட்ட இருந்து ஹீரோயினி மறைச்சிட்டாங்க. இங்க ஒரு லலாலலா சோக சீன் எல்லாம் உண்டு.

இதுக்கு நடுவுல ஹீரோயினி வந்ததுக்கு இன்னொரு காரணம், பிங் வந்திருக்குற மூணு பேர்ல ஒருத்தரு கூட ஹீரோயினிக்கு லவ்வு. அதனால அங்க முதல்ல போகணும்னு சொல்லிகிட்டே இருக்கு. ஆனா ஹீரோ சண்டை எல்லாம் போட்டு அதெல்லாம் ஆகாதுன்னு சொல்லிடறாரு. இதெல்லாம் சைடு ட்ராக்.

முதல் கிரகத்துக்கு போறாங்க. அது அந்த ப்ளாக்ஹோலோட ரொம்ப பக்கத்துல இருக்கு. அதனால ஈர்ப்பு விசை ரொம்ப அதிகம். அந்த அதீத ஈர்ப்பு விசையால‌ பூமியில ஒருமணிநேரம்ன்றது அங்க கிரகத்துல 7 வருசம். அதனால போய் பாத்துட்டு உடனே திரும்பிவந்துடணும். அதுக்கே ஏழு வருசம் போயிருக்கும். ரிஸ்க் எடுத்து போறாங்க. அங்க போனா முதல்ல வந்த விஞ்ஞானி செத்து போயிட்டாருன்னு தெரியுது, பெரிய அலைகள்ல மாட்டி திரும்புறதுக்கு கொஞ்சம் அதிக நேரம் ஆகிடுது. வந்து பார்த்தா பூமியில 23 வருசம் ஆகிடுது. ஹீரோவோட பொண்ணு எல்லாம் பெருசாகிடுது. அதுவும் இப்ப விஞ்ஞானி.

மூணுல ஒரு இடம் அவுட்டு. ரெண்டாவது எங்க போறது சண்டை எல்லாம் போட்டுட்டு, ஹீரோயின் சொன்ன அவர் லவ்வர் எட்மன்ட் கிரகத்து போகாம, இன்னொரு கிரகத்துக்கு போறாங்க. அங்க நம்ம மேட் டீமன் இருக்காரு. அவரு இந்த கிரகம் சூப்பர் அது இதுன்னு செம பில்ட் அப் கொடுக்குறாரு. ஆனா உண்மையில அது மனிதர்கள் வாழ தகுதியில்லாத கிரகம், ஆனாலும் இவரு இப்படி சொல்ல காரணம், அப்பதான் யாராவது வருவாங்க, அவங்க வர்ற ஸ்பேஸ்க்ராஃப்ட்ல பூமிக்கு தப்பிச்சி போயிடலாம்னு. அப்படி அவர் தப்பிக்குற முயற்சியில ஹீரோ ஹீரோயின் கூட வந்த இன்னொரு விஞ்ஞானி செத்துடறாரு. இவங்க வந்த பெரிய வட்ட வண்டியும் டேமேஜ் ஆகிடுது. மேட் டீமனும் புட்டுக்குறாரு.

இப்ப வேற வழியே இல்லை, ஹீரோயின் லவ்வர் எட்மன்ட் இருக்குற கிரகத்துக்கு போகணும். பிரச்சினை அங்க போற அளவுக்கு ஃப்யூயல் இல்லை, பெட்ரோல் தீந்து ஹைவேல நிக்குற மாதிரி விண்வெளியில ப்ளாக்ஹோல்ட்ட நிக்குறாங்க. இப்பதான் நம்ம ஹீரோ செம ஐடியா பண்ணுறாரு

ப்ளாக்ஹோலை சுத்தி அதோட ஈர்ப்பை வெச்சி வேகமா போயிட்டு திடீர்னு கிக் கொடுத்து அதை விட்டு தப்பிச்சா அந்த வேகத்துலயே ப்ளாக்ஹோலை விட்டு ரொம்ப தூரம் ரொம்ப வேகமா போயிடமுடியும். (இதை ஸ்டீஃபன் ஹாகிங் அவரோட டிஸ்கவரி சீரிஸ்ல செமையா விளக்கியிருப்பாரு). இப்ப இதை செய்யுறப்ப ஹீரோ ஒரு தியாகம் பண்ணுறாரு, ஹீரோயினை மட்டும் அனுப்பிட்டு இவரு அந்த ப்ளாக்ஹோல் உள்ளாற போயிடுறாரு, அதாவது சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு பாத்து பூமிக்கு மெஸேஜ் அனுப்பி ரெண்டாவது பிரச்சினைய தீர்க்குறதுக்கு (இங்க ஒரு லலாலாலா தீம் மீயூசிக் பேக்கிரவூன்ட்ல போட்டுக்கோங்க).

அதுக்குள்ளா போனா நம்ம ஆளு ஒரு பெரிய வித்தியாசமான டெசரக்ட்ன்ற அமைப்புள்ள போயிடுறாரு, கூடவே அவரோட செல்ல ரோபோவும். அதுக்குள்ள பல்வேற காலகட்டத்துல முன்ன பின்ன போய் பாக்க முடியும். பாக்க மட்டும்தான் முடியும், வேற ஒண்ணும் பண்ணமுடியாது. அதுல இவர் பார்க்குறது இவர் வீட்டோட லைப்ரரி.

அப்ப எப்படி மெஸேஜ் அனுப்புறது, அங்கதான் நம்ம ஆளு இன்னொரு ஐடியா பண்ணுறாரு (பெரிய ஐடியாமணியா இருப்பாரு போல). இந்த மாதிரி ஹையர் டைமன்ஷன்ல‌ (இதுக்கு தமிழ்ல என்ன?) ஊடுறவுற ஒரே விசயம் க்ராவிட்டி (ஈர்ப்பு விசை). அதன் மூலமா ஆரம்ப காலத்துக்கு போயி புழுதியை மாத்தி வெச்சி விண்வெளி மையத்தோட லொகேஷனை எழுதிடுறாரு. அதாவது இவரேதான் இவரை அங்க அனுப்பியிருக்காரு.

அடுத்ததா பூமியோட இப்போதைய காலத்துக்கு போயி, அந்த சிங்குலாரிட்டியோட ஃபார்முலாவை ஒரு வாட்ச் உள்ள மோர்ஸ் கோடா எழுதிடுறாரு. அங்க கடைசியா பார்க்க வர்ற அவர் பொண்ணு அதை எடுத்து பார்த்து படிச்சி தெளிஞ்சி "நம்ம அப்பா நம்மளை காப்பாத்திட்டாரு"ன்னு சந்தோச கூச்சல் போடுது. (இன்னொரு லலலா பாட்டு போட்டிருக்கலாம்)

இப்ப நம்ம ஆளுக்கு வந்த வேலை முடிஞ்சது. அந்த டெசரெக்ட் அப்படியே அழியுது. அதுல இருந்து நம்ம ஆளு வெளிய வந்து (வர்றப்ப ஆரம்ப பயணம் செய்யுற ஹீரோ ஹீரோயினை வேற தரிசிக்குறாரு). அப்படியே வந்து விண்வெளியில மிதக்குறாரு.

அப்ப பூமியில இருந்து வந்தவங்க அவரை கண்டுபுடிச்சி கூட்டிட்டு போறாங்க. எழுந்தாத்தான் தெரியுது நம்ம ஆளுக்கு, இவர் மெசேஜ் அனுப்பி இவங்க இவரை பிக் அப் பண்ணுறதுக்குள்ள பூமியில 50 வருசம் கடந்துடுச்சின்னு.

இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி பெரிய ஒரு விண்வெளி மையத்தை அமைச்சி அதன் மூலமா பூமியில இருக்குறவங்களை அலேக்கா தூக்கிட்டு வந்துட்டாங்க. அதன் பேரு கூப்பர் ஸ்டேஷன். "ஹை, என் பேரையே வெச்சிட்டீங்களா?"ன்னு கேக்க, "அது உங்க பேர் இல்லசார், உங்க பொண்ணோட பேரு, அவங்கதான் இதை உருவாக்கினவங்களே"ன்னு சொல்றாங்க.

இப்பதான் அந்த முக்கிய சந்திப்பு நடக்குது. பலவருசம் கழிச்சி தன் அன்பு மகளை திரும்ப சந்திக்குறாரு. ஆனா இவருக்கு 45 வயசுதான், பூமியில வருசங்கள் கடந்ததால அவர் பொண்ணு 92 வயசு கிழவியா படுத்த படுக்கையா தன் குடும்பத்தோட இருக்காங்க. (லலாலா.. லலாலா).

அவங்களை சந்திச்சி பேசுறப்ப அவங்க விளக்குறாங்க. இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி இந்த ஸ்டேஷனை கட்டி பூமியில இருக்குற உயிரினங்களை காப்பாத்தியாச்சி. இப்பதான் சமீபத்துல ஹீரோயின்கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு. எட்மன்ட் கிரகம் நல்லா இருக்காம், அங்க போக இனிமேத்தான் வேலைகள் செய்யணும்னு. தனக்கு வயசாகிட்டதால தன்னோட கடைசி காலம் தன் குடும்பத்தோட இருக்குறது நல்லதுன்னு சொல்றாங்க. அதனால ஒரு பாட்டம் அழுது முடிச்சிட்டு, நம்ம ஹீரோ ஒரு வண்டிய திருடிட்டு ஹீரோயினை பார்க்க கிளம்பிடுறாரு.

அந்த வோர்ம்ஹோல், டெசரெக்ட் எல்லாத்தையும் உருவாக்கினது யாருன்னு கேள்வி வரும். அதை செஞ்சவங்க எதிர்காலத்துல இருக்கக்கூடிய முன்னேறிய மனித இனம். இவங்க செஞ்சிருக்குற வேலைகள் மூலமா மனித இனம் வாழ்வாங்கு வாழ்ந்து, டெக்நிகலா முன்னேறி இதை எல்லாம் செஞ்சி, தங்களை தாங்களே காப்பாத்தி இருக்காங்க (தலை சுத்துதுதானே?)

அங்க ஹீரோயின் க்ரான்ட், தனியா அந்த கிரகத்துல இருக்காங்க. அவங்களுக்கும் காலம் அதிகமா ஓடலைன்றதால சின்ன வயசாவே இருக்காங்க. பின்ன ஹீரோவோட மகளுக்கு வயசாகலாம், ஹீரோயினுக்கு வயசாகுமோ? (நோலன் ரொம்ப தமிழ்ப்படம் பாக்குறாருன்னு நினைக்குறேன்). அவங்க லவ்வர் செத்து போயிடுறாரு (ஹீரோவுக்கு ரூட் க்ளியர்). மனிதர்கள் பூமியை மாதிரியே சுவாசிக்க, வாழ‌ ஏற்ற அந்த கிரகத்துல பூமியில இருந்து மனிதர்கள் வரவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க‌.

*சுபம்*

1 comments:

said...

வாட்...
நிறய இருக்குது இன்னும் நன்றி