விபத்துகள்... இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு சில விபத்துகள் நம்மை உலுக்கும், ஒரு சில நம் பழைய நினைவுகளை கிளறும். இந்த வாரம் 50 பேரை பலிகொண்ட அமெரிக்காவில் நடந்த விமான விபத்தும் என்னை கொஞ்சம் பாதித்தது உண்மை, காரணம்... விபத்து நடந்த இடம்.. நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரம் (Buffalo). என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒன்றரை வருடங்களை கழித்த இடம்.
முதல் வெளிநாட்டுப் பயணம், கேரியர் கிராஃப் 90 டிகிரியில் ஏறிய காலகட்டம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல்

நான் நானாக இருந்த / இருக்கவிட்ட சூழல், தங்கமணியுடன் பூசல்களே இல்லாமல் இருந்த நாட்கள் (அ) மாதங்கள், முதல் குழந்தையின் முதல் விநாடிகளும் முதல் ஸ்பரிசமும், முதல் கார், அளவில்லாத பயணங்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை பஃபல்லோ எனக்கு அளித்தது என்றால் மிகையில்லை.
***
புவியியல் ரீதியாக பஃபல்லோ அமைந்திருக்கும் இடமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம்.

உலகின் மிகப்பெரிய அருவி + உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான நயாகாரா அருவியின் மிக அருகில் உள்ள பெரிய நகரம். நியூயார்க் மாகாணத்தின் மேற்கு எல்லையில் நியூயார்க் நகரில் இருந்து 8 மணி நேர தொலைவில் இருந்தாலும், நயாகராவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்க வேண்டிய விமான நிலையம் பஃபல்லோ நயாகரா சர்வதேச விமான நிலையம்தான். எழுத்தாளர் சுஜாதா கூட தனது நயாகரா பயண அனுபவங்களில் இங்கே தங்கியிருப்பதை குறிப்பிட்டிருப்பார்.
நியூயார்க், நேவார்க், டெட்ராய்ட், வாஷிங்டன், சிகாகோ என்று எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் வரும் விமானங்கள் சுற்றுலா பயணிகளாலும், புகழ்பெற்ற பஃபல்லோ பல்கலைக்கழக மாணவர்களாலும் நிரம்பி வழியும். நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும், தன் மேல் படிப்புக்கான ஆர்வத்துடனும் பயணம் செய்த எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.
விபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?
இன்று உலகம் முழுதும் கிடைக்கும் பஃபல்லோ சிக்கன் விங்ஸ், நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம்,

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்க நகரம், பஃபல்லோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிக அதிகமான எண்ணைக் கொண்ட நெடுஞ்சாலை (I 990) என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த நகரின் இன்னொரு பிரபலமான அடையாளம் குளிர்.
நான் முதல் முதலில் அங்கே சென்றபோது வெயில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க, எங்கு நோக்கினும் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. என் கிளையண்டிடம் கேட்க,

அவர் சிரித்துக் கொண்டே, "ஒரு வருசத்தோட நான்கு சீசன்ஸ் என்னன்னு தெரியுமா" என்று கேட்க, "ஏன் தெரியாமல், சம்மர், ஃபால், வின்ட்டர், ஸ்ப்ரிங்" என்றேன். "அது மத்த ஏரியாக்களுக்கு, இந்த ஏரியாவை பொறுத்தவரைக்கும், அல்மோஸ்ட் வின்ட்டர், வின்ட்டர், ஸ்டில் வின்ட்டர், கன்ஷ்ட்ரக்ஷன்" என்றார். பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை.
அமெரிக்காவின் 5 பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான எர்ரீ ஏரியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சமயத்தில் மைனஸ் 20 டிகிரி ஃபார்ன்ஹீட் வரைகூட வெப்பநிலை செல்லும் என்றால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த விபத்திற்கும் காரணம் விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்தது காரணமாக இருக்கலாம்

என்று வரும் செய்திகளை படிக்கும்போது பனிப்பொழிவில் இரண்டு மூன்று அடி பனிகுவியலுக்குள் சிக்கிக் கிடக்கும் காரும், அதை சரி செய்ய ஐஸ் ஸ்கார்ப்பர், டீ ஐசிங் உப்பு, நான்ஃப்ரீஸ் வின்ஷீல்ட் வாட்டர் என்று ஒவ்வொரு கார் ஓனரும் தயாராய் இருக்க, விமானத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டிருக்கும், அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
எப்படியோ, 50 பேரை பலி கொண்ட இந்த விபத்து என் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்தது என்று சொல்லலாம்..
ஐ மிஸ் யூ பஃபல்லோ..