Friday, October 5, 2012

ராம்னி Vs ஒபாமா : அருமையான நேருக்கு நேர்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருப்பதை இந்நேரம் அறிந்திருப்பீர்கள். கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்து வந்த பிரச்சாரம் கடந்த மாதத்தில் நடந்த கட்சிகளின் மாநாடுகள் மூலம் சூடு பிடித்தது.

 நம் ஊரைப் போல, கட்சியோட தலைவர்தான் நிரந்தரமா முதலமைச்சர் வேட்பாளர், எத்தனை தடவை என்றாலும் அவர்தான் முதலமைச்சர் / பிரதமர். அவரோட நெருங்கிய சொந்தக்காரர்தான் அடுத்த இடம் என்பதெல்லாம் இங்கே செல்லுபடி ஆவதில்லை. இரண்டே கட்சிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் அரசியல் களத்தில் இரு கட்சிகளில் இருந்தும் முதல் படியாக கட்சியின் வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நடக்கிறது.

டெமாக்ரட்ஸ் கட்சிக்கு பெரிய பிரச்சினை இல்லை. ஏற்கனவே அதிபராக இருக்கும் ஒபாமா சுலபமாக கட்சியின் வேட்பாளர் ஆகிவிட்டார். இங்கே ஒருவர் இருமுறைதான் அதிபர் ஆக முடியும் என்பது கூடுதல் தகவல். ரிபப்ளிகன் கட்சியில் கடும் போட்டி. போட்டி போட்ட ஏழெட்டு பேரில் மாஸ்ஸூட்டஸ் கவர்னராக பணியாற்றிய மிட் ராம்னி முண்ணனிக்கு வந்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கடந்த மாத மாநாட்டில் அறிவிக்கப்பட்டு விட்டார்.

என்னதான் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருந்தாலும், பொருளாதாரம் அடி வாங்கி இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ராம்னியை விட ஒபாமா பல புள்ளிகள் முண்ணனியிலேயே இருந்தார். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஒபாமாவை ஆதரித்து அவரது மனைவி மிஷேல் பேசிய பேச்சும், முன்னாள் டெமாக்ட்ரடிக் அதிபர் பில் கிளிண்டனின் பேச்சும் அவருக்கு ஒரு சிறப்பான இடத்தை இந்த போட்டியில் பெற்றுத்தந்தது என்று உறுதியாக கூற முடியும்.

அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம்:
இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் ”பிரசிடென்சியல் டிபேட்” நடந்தது. நம் ஊரில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விசயம். அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவரும் ஒரு பெரிய அரங்கில் மக்கள் முன்னிலையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தும் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்பதால் சுமார் அறுபது லட்சம் பேர் நேரடியாக பார்க்க வாய்ப்பு இருந்தது.

ஏற்கனவே நான்கு ஆண்டுகள் ஓரளவு சுமாராக ஆட்சி செய்தது, ராம்னி தனது பிரச்சாரத்தின் இடையில் தன் ஆதரவாளர்களுடன் பேசுகையில் அரசு உதவி பெறுபவர்களை மோசமாக பேசியதன் வீடியோ வெளியானது, பெரு நிறுவனங்களுக்கு ராம்னி ஆதரவானவர் என்ற பொது கருத்து, ஒபாமாகேர் எனப்படும் அனைத்து மக்களுக்கான மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் கொண்டு வந்தது என்று அனைத்தும் ஒபாமாவிற்கு ஆதரவாகவே இருந்தன. வாத பிரதிவாதத்தில் சிறந்தவராக அறியப்பட்ட ஒபாமா சுலபமாக ராம்னியை நசுக்கி விடுவார், ஒபாமாவின் வெற்றி 100% இந்த விவாதத்தில் உறுதிப்படுத்தப்படும் என்பதே பரவலான பேச்சாக இருந்தது.

நடந்தது என்ன? டென்வர் பல்கலைக்கழக அரங்கில் விவாதம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் மட்டுமே நேரடியாக அரங்கில் அமர்ந்து பார்க்க முடியும். பத்திரிக்கையாளர் ஒருவர், இந்த விவாதத்தை வழிநடத்தினார். விவாதத்தில் பங்குபெறும் இரு வேட்பாளார்கள் மற்றும் நடத்துனர் தவிர அரங்கில் இருக்கும் யாரும், இந்த 90 நிமிட விவாதத்தின் போது எதுவும் பேசவோ, கைதட்டவோ கூடாது என்று கடுமையான விதிமுறைகள். 

விவாதத்தை 6 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கி, ஒவ்வொரு ஆளும் பேச ஆளுக்கு இரண்டு நிமிடம், அதன் பின் ஒருவர் சொல்வதை மற்றவர் மறுத்து / விளக்கி கேள்விகள் கேட்பது என்று அருமையான வழிமுறைகளுடன் விவாதம் ஆரம்பித்தது.

பெரும்பாலோனோர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, ஒபாமா இந்த விவாதத்தில் சொதப்போ சொதப்பு என்று சொதப்பினார். எந்த விசயத்தையும் தெளிவாக சுருக்கமாக எண்ணிக்கைகள் அடிப்படையில் சொல்ல அவரால முடியவே இல்லை. மாறாக, ராம்னி ஒவ்வொரு தலைப்பிலும் பாயிண்ட் பை பாயிண்டாக கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்ய தவறினார்கள், அதை எப்படி சரி செய்வது, அதற்கு தன்னிடம் இருக்கும் திட்டங்கள் என்ன, ஒபாமா சொல்லும் திட்டங்களில் பிரச்சினைகள் என்ன என்று தெள்ளத் தெளிவாக எந்த தயக்கமும் இல்லாமல் (சரியோ தவறோ) நெம்பர்களை குறிப்பிட்டு விளாசி விட்டார்.

ஒட்டுமொத்தமாக விவாதம் முடிந்த போது, ராம்னியை விட ஒபாமா ஐந்து நிமிடங்கள் அதிகமாக பேசியிருந்தாலும் விவாதத்தின் வெற்றியாளர் சந்தேகமே இன்றி ராம்னிதான். மிகச் சிறந்த முறையில் அவர் தயாராகி வந்திருந்ததையும், ஒபாமா ஏனோதானோ என்று தயாராகி இருந்ததையும் நன்றாக உணர முடிந்தது.

இந்த விவாத வெற்றியின் மூலமாக மட்டுமே ராம்னி வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்பதையும் ராம்னியும் உணர்ந்தே இருப்பார். ஆனால் நேருக்கு நேர் நிற்கும்போது, தன் போட்டியாளரை விட தான் சிறந்த லீடர் என்பதை நிச்சயம் இந்த விவாதத்தில் உணர்த்தியிருக்கிறார்.

இன்னும் இரு விவாதங்கள் இருக்கின்றன. ஒருவேளை ஒபாமா விழித்துக்கொள்ளாமல் இதே போன்று ஏனோதானோ என்று அடுத்த இரு விவாதங்களையும் எதிர்கொள்வாரேயானால் ராம்னி சுலபமாக வெள்ளை மாளிகையில் குடியேறி விட முடியும். அதிலும் இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிராக கடும் விளைவுகள் ஏற்பட்டு வரும் வேளையில் அடுத்த விவாதம் “வெளியுறவு கொள்கைகள்” குறித்து என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் நான்கு ஆண்டுகள் அமெரிக்காவையே திறமையாக ஆண்ட ஒபாமா அப்படி ஒன்றும் சுலபமாக இதை விட்டுவிடுவார் என்று தோன்றவில்லை.

மொத்தத்தில், இந்த முதல் விவாதத்தின் மூலம் ஒபாமா மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சுகமான பயணத்தில் ஒரு எதிர்பாராத “ஸ்பீட் ப்ரேக்கரை” ராம்னி போட்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

பி.கு: முழு விவாதமும் யூ ட்யூபில் இருக்கிறது. அதன் லிங்க் இங்கே.
http://www.youtube.com/politics?feature=etp-pv-ype-3bff3fd3f0

7 comments:

said...

Obama, has already handed out the oval office key to the cocky faced Romney... Enjoy :)

said...

நன்றி சகோ. விவரமா சொல்லி இருக்கீங்க.

said...

Just in one debate R did better. Still Obama is way ahead in polls. I dont think Romney can beat him in other 2 debates! O will win the Election :-)

said...

ஒரு தகவலுக்காக கேட்கிறேன், இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபராவது ஆட்சியில் இருக்கும்போதே இரண்டாம் முறை போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறாரா?

said...

Thanks!! Nice post!

said...தெகா,

அந்த‌ அளவு எக்ஸ்ட்ரீமா போகுமான்னு தெரிய‌லை, ஆனா வாய்ப்பிருக்கு :)

வ‌ருண்,

அதே.. ஒபாமா திரும்ப‌ வ‌ர‌ வாய்ப்பிருக்குன்னு தோணுது, அடுத்த‌ டிபேட்டை ஆர்வ‌மா எதிர்பார்க்க‌ வெச்சிட்டாங்க‌ :)

க‌ட‌ற்க‌ரை,

ப‌ல‌முறை.. சீனிய‌ர் புஷ் 1992ல‌ பில் கிளின்ட‌ன்ட்ட‌ தோத்து போயிருக்காரு. அவ‌ரு ரிப‌ப்ளிக‌ன். டெமாக்ர‌ட்ல‌ க‌டைசியா ரீ எல‌க்ஷ‌ன் தோத்துப்போன‌து ஜிம்மி கார்ட்ட‌ர், ரீக‌ன்கிட்ட‌ 1980ல‌ தோத்துப் போயிருக்காரு. (ந‌ன்றி.. விக்கிபீடியா) :)

சின்ன‌ப்பைய‌ன், சுகுமார்...

ந‌ன்றி

said...

அண்ணே ரெண்டு பேருல யாரு வந்தாலும் நமக்கு பைசா பிரயோஜனம் இல்லை... ரெண்டு பேரும் அமெரிக்கா நலனை பார்ப்பார்கள். அமெரிக்காவின் நலன் = மற்ற நாடுகளின் அழிவு