Thursday, April 3, 2014

மனிதனுக்குள் ஒரு மிருகம் : The Purge (2013)

ஒரு வருசம் முழுக்க உங்களை மாடு மாதிரி வேலை வாங்கிட்டு அப்ரைசல் நடக்கும்போது "நீங்க இன்னும் நல்லா வேலை செய்யணும்"னு சொல்லி ப்ரோமோசன் குடுக்காத மேனேஜர் உங்களுக்கு இருந்திருக்காரா?

வீட்டுல ஒரு நல்லகாரியம் நடக்கும்போது எப்போதோ நடந்த பகையை அல்லது நீங்க நல்லா வாழ்றீங்கன்ற வெறுப்புல இல்லாத பொல்லாதை சொல்லி அந்த விழா மனநிலையவே கெடுக்குற ஒரு உறவினர் இருந்திருக்காரா?

தினம் தினம் தன் வீட்டு குப்பைகளை உங்க வீட்டு முன்னால கொட்டுற பக்கத்து வீட்டுக்காரர்? கொடுத்த பணத்துக்கு மீதி தராம, கேட்டா உங்களையே திட்டுற கண்டக்டர்? நாலு பேர் முன்னால உங்களை அசிங்கப்படுத்தின யாரோ ஒரு எக்ஸ் ஒய் இசட்?

இந்த மாதிரி ஆட்களைப் பாக்கும்போது உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா இவனுங்களை எல்லாம் கொலையே பண்ணிடுவேன்னு தோணுமில்லையா? உண்மையாவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வீங்க, நிஜமாவே கொலை செய்வீங்களா?

சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களும் நானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வோம்னு யாருக்கும் தெரியாது. நமக்குள்ள இருக்குற மிருகத்தோட உண்மையான முகம் அப்பதான் தெரிய வரும். அந்த மிருகத்தோட வக்கிரம் நமக்கு இப்ப தெரியுமான்றதே சந்தேகம்தான்

"அடுத்த 12 மணிநேரத்துக்கு நீ என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே. உன்மேல எந்த வழக்கும் போடப்படாது. போலீஸ், மருத்துவ உதவிகள் எதுவுமே அந்த 12 மணிநேரத்துக்கு வராது"ன்ற மாதிரியான ஒரு உத்தரவாதம் கிடைச்சா நம் ஆழ்மனசுல இருக்குற வக்கிரம் எல்லாத்தையும் நிறைவேத்திக்குவோம் இல்லையா?

அதுதான் 2013ல வந்த "The Purge" படத்தோட கதை





*****

வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கைன்னு அமெரிக்கா மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்குது. இதை சரி செய்ய அமெரிக்காவின் புதிய நிறுவனர்கள் (New Founding Fathers) ஒரு புதிய ஐடியாவை செயல்படுத்துறாங்க.

அதன்படி, வருசத்துல ஒருநாள் மாலை 7 மணிமுதல் அடுத்த நாள் காலை 7 மணி வரைக்கும் "பர்ஜ்" அப்படின்ற ஒரு நிகழ்வுக்காகன்னு ஒதுக்குறாங்க. இந்த 12 மணிநேரத்துல எந்த சட்டமும் கிடையாது. பெரிய அழிவை ஏற்படுத்துற பயங்கர ஆயுதங்கள் மற்றும் அரசின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை தாக்க மட்டும் தடை. மற்றபடி துப்பாக்கி, கத்தி இதை வெச்சி யாரையும் கொல்லலாம், காயப்படுத்தலாம், கற்பழிக்கலாம், எதுவுமே தப்பில்லை.

இதன் மூலமா மக்கள் தங்கள் ஆழ்மன வக்கிரங்களை இறக்கி வெச்சிட்டு மற்ற 364 நாட்களிலும் வேலைகளில் கவனம் செலுத்துறதால வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கை எல்லாம் குறைஞ்சி, நாடே சுபிட்சமாகிடுது.

பெரும்பாலும் இதனால பாதிக்கப்படுறது அதிக வசதியில்லாத ஏழை எளிய மக்கள்ன்றதால "இது அப்படிப்பட்டவங்களை ஒழித்துக் கட்டுறதுக்காகவே நடத்தப்படுற விசயம்"னு ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் வருடா வருடம் இது நடத்தப்படுது. நேரடி ஒளி/ஒலிபரப்பும் செய்யப்படுது

****


அப்படிப்பட்ட ஒரு பர்ஜ் இரவில் படத்தின் ஹீரோ ஜேம்ஸ், தன் மனைவி, மகன், மகளுடன் தன் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.

ஜேம்ஸ், வீட்டிற்கான செக்யூரிட்டி சிஸ்டம்களை விற்கும் சேல்ஸ்மேன். பர்ஜ் இரவில் இருந்து உயிர் தப்பிக்க பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் செக்யூரிட்டி சிஸ்டம்களை பொருத்துவதால சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பணக்காரன் ஆனவன்.

பர்ஜ் இரவிற்காக உட்சபட்ச பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, தன் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு இருக்கிறான், அப்போது வெளியே மற்றவர்களிடம் சிக்கி அடிபட்டு உயிர்தப்பிக்க ஓடி வரும் ஒருவனை ஜேம்ஸின் மகன் கதவைத் திறந்து வீட்டிற்குள் அனுமதிக்கிறான். கதவு மறுபடி மூடப்பட்டாலும், அந்த மனிதனை தேடி வரும் ஆயுதம் தாங்கிய குழு, அவனை ஒப்படைக்கா விட்டால் வீட்டில் எப்படியாவது நுழைந்து அந்த மூன்றாம் மனிதனையும், ஜேம்ஸ் குடும்பத்தாரையும் கொல்வோம் என்று கொக்கரிக்க, ஜேம்ஸ் அதை எப்படி எதிர் கொள்கிறான் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

வெறும் 3 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, விமர்சகர்களால் பெரிய அளவில் பாராட்டப்படா விட்டாலும், இந்த படம் சுமார் 90 மில்லியன் டாலர் அளவுக்கு வசூல் செய்திருப்பதே இதை மக்கள் விரும்பியதற்கு சாட்சி.

அதனாலேயே இதன் அடுத்த பாகம் ஜூலை 2014ல் வெளிவர இருக்கிறது.

ஆக்சன் / த்ரில்லர் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.

http://en.wikipedia.org/wiki/The_Purge

5 comments:

said...

விமர்சனம் படிச்சது படம் பார்க்கனும்னு தோணுது.

said...

அவசியம் பார்க்கனும்ணேய்.

ப்லாக்குகள்ல கமெண்ட் போட்டு பல வருஷமாகிப்போச்சுங்களா...அதான் என்னா சொல்றதுன்னு குயப்பம்.

said...

பார்த்திடுவோம். நன்றி!

said...

படம் வந்த போதே, யாரோ இதைப்பற்றி எழுதி படிச்சதா நினைவு. ஓகே, இப்ப டவுன்லோட் லிஸ்ட்ல வச்சிக்கிடுறேன்!

said...

Seems a good one,thank you for the suggestion