Tuesday, April 23, 2013

ம‌து என்றொரு அர‌க்க‌ன்

டெல்லியில் ஐந்து வ‌ய‌து பெண்ணை பாலிய‌ல் வ‌ன்முறைக்கு ஆளாக்கிய‌ இர‌ண்டாவ‌து ஆளை பிடித்து விட்டார்க‌ளாம். "த‌ண்ணிய‌டித்து போதையில் இருந்தோம், வெளியே சென்று யாராவ‌து பெண்ணை அழைத்து வ‌ர‌லாம் என்று போனோம், அந்த‌ குழ‌ந்தைதான் இருந்த‌து, சாக்லேட் கொடுத்து அழைத்து வ‌ந்தோம்" என்று விவ‌ரித்து இருக்கிறது அந்த‌ மிருக‌ம்.

முடிந்த‌வ‌ரை வ‌ன்முறைக்கு உட்ப‌டுத்தியபின் க‌யிறைப் போட்டு இறுக்கி, அந்த‌ குழ‌ந்தை இற‌ந்துவிட்ட‌தாக‌ நினைத்து த‌ப்பிச் சென்றிருக்கிறார்க‌ள். அந்த‌ குழ‌ந்தை பிழைத்துவிட்ட‌தை அதிர்ஷ்ட‌ம் என்ப‌தா அல்ல‌து இனி உயிர்பிழைத்த‌பின் ஒவ்வொரு விநாடியும் உட‌ல‌ள‌விலும் ம‌ன‌த‌ள‌விலும் வேத‌னையை சும‌க்க‌ப்போவ‌தை நினைத்து துர‌திர்ஷ‌ட‌ம் என்ப‌தா என்று தெரிய‌வில்லை.

க‌ட‌ந்த‌ மாத‌ம் அமெரிக்காவையே உலுக்கிய‌ ம‌ற்றொரு வ‌ழ‌க்கு. அமெரிக்க‌ டீனேஜ‌ர்க‌ள் என்றாலே எதைப்ப‌ற்றியும் க‌வ‌லைப்ப‌டாத‌வ‌ர்க‌ள், எல்லாரும் எல்லாருட‌னும் உட‌லுறவு வைத்துக்கொண்டு ஜாலியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் என்ற வெளியாட்க‌ளாகிய‌ ந‌மக்கு சூடு போட‌ ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு.

ப்ராம் என்ற‌ பெய‌ரில் வ‌ய‌சுப்ப‌ச‌ங்க‌ளும் வ‌ய‌சுப்பெண்க‌ளும் கூடிக்குடித்து கும்மாள‌ம் அடிக்கும் இன்னொரு நிக‌ழ்வாக‌ முடிந்திருக்க‌ வேண்டிய‌ நிக‌ழ்ச்சி அது. வ‌ழ‌க்க‌ம் போல‌ எல்லாரும் குடித்து சில‌ர் ம‌ட்டையான‌தும், சில‌ ஆண்ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ஒரு பெண் காரில் ஏறி இருக்கிறார். அந்த‌ பெண்ணும் முழு போதையில் இருந்ததால் அன்றிர‌வு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்றே தெரிய‌வில்லை. ம‌றுநாள் காலை ஒரு ஆண்ந‌ண்ப‌னின் வீட்டு வ‌ர‌வேற்ப‌றையில் ஒட்டுத்துணியில்லாம‌ல் எழுந்திருக்கிறார். என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌தே புரியாம‌ல் வீட்டுக்கும் போய் விட்டார்.

அடுத்த‌ சில‌ நாட்க‌ளில் அந்த‌ ஆண் ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ர் அந்த‌ பெண்ணின் உட‌லில் த‌வ‌றான‌ இட‌ங்க‌ளில் கைக‌ளையும் விர‌ல்க‌ளையும் வைத்து எடுத்து ஃபோட்டோவை பெருமையாக‌ இணைய‌த்தில் வெளியிடுகிறார்க‌ள். இதைப் பார்த்த உங்க‌ளை, என்னைப் போன்ற‌ ப‌திவ‌ர் ஒருவ‌ர் (த‌மிழ் ப‌திவ‌ர் அல்ல‌, அமெரிக்க‌ ஆங்கில‌ ப‌திவ‌ர்தான்) இதைப் ப‌ற்றி எழுதி, ந‌ம் ஊர் சிறுவ‌ர்க‌ள் எவ்வ‌ளவு மோச‌மாக‌ போய்க்கொண்டிருக்கிறார் பாருங்க‌ள் என்று த‌ன் ஆத‌ங்க‌த்தை கொட்டுகிறார். அமைதியான‌ ஊராக‌, வெளியுல‌க‌ம் அதிக‌ம் தெரிந்துகொள்ளாத‌ அந்த‌ ஊர் அடுத்த‌ சில‌ நாட்க‌ளிலேயே ஊட‌க‌ங்க‌ளின் புண்ணிய‌த்தால் பிர‌ப‌ல‌ம் ஆகிவிட்ட‌து. க‌சாப் வ‌ழக்கைப் போல‌ அந்த‌ வ‌ழ‌க்குக்கும் ந‌ட்ச‌த்திர‌ அந்த‌ஸ்து கிடைத்து எல்லாரும் பேச‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ள்.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ இரு ஆண்க‌ளுக்கும் இர‌ண்டு வ‌ருட‌ம் த‌ண்ட‌னை, ஒருவ‌ருக்கு 16 வய‌து, இன்னொருவ‌ருக்கு 17 வ‌ய‌து. வ‌ய‌து குறைவாக‌ இருப்ப‌தால் 21ம் வ‌ய‌து வ‌ரை அவ‌ர்க‌ளை உள்ளே வைக்க‌ ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ழிமுறை உள்ள‌து. ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அந்த‌ இருவ‌ர், அந்த‌ பெண் த‌விர‌ அதில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட அத்த‌னை ந‌ண்ப‌ர்க‌ளும் கோர்ட்டிக்கு இழுக்க‌ப்ப‌ட்டு சாட்சிக்கூண்டில் ஏற்ற‌ப்ப‌ட்டு....... இதுகுறித்து பேட்டிய‌ளித்த‌ காவ‌ல்துறை த‌லைவ‌ர் "குழ‌ந்தைக‌ளுக்கு ஒன்றை ம‌ட்டும் சொல்லிக் கொள்கிறேன், பாலிய‌ல் அத்துமீற‌ல் என்ப‌து எந்த‌ நிலையிலும் எந்த‌ போதையில் இருந்தாலும் நிச்ச‌ய‌ம் த‌ண்ட‌னைக்குரிய‌ குற்ற‌மே" என்று சொல்கிறார்

அமெரிக்காவைப் பொறுத்த‌வ‌ரை குடிப்ப‌து என்ப‌து அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌த்தில் ஊறிய‌ ஒன்று. குடும்ப‌த்துட‌ன் உட்கார்ந்து குடிப்ப‌து எல்லாம் ச‌க‌ஜ‌மான‌ ஒன்று.  அவ‌ர்க‌ள் ஊரிலேயே இது பெரிய‌ பிர‌ச்சினை.

பாண்டிச்சேரி குறித்து எழுதும்போது பிர‌ப‌ஞ்ச‌ன் "அங்கு குடித்துவிட்டு சாக்க‌டையில் வீழ்ந்து கிட‌ப்ப‌வ‌ர்க‌ளை பார்க்க‌வே முடியாது, அப்படி விழுந்து கிட‌ப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் இருந்து செல்ப‌வ‌ர்க‌ள்தான்" என்ப‌தாக‌ சொல்லியிருப்பார். குடிக்க‌ ஆர‌ம்பித்தால், அந்த‌ கொண்டாட்ட‌ ம‌ன‌நிலையை எப்ப‌டி அனுப‌விப்ப‌து, ம‌ட்டையாவ‌தை த‌விர்க்க‌ எந்த‌ அளவுட‌ன் நிறுத்தவேண்டும் என்ற‌ எந்த‌ எழ‌வும் ந‌ம் ஆட்க‌ளுக்கு தெரியாது.

ச‌ந்தேக‌ம் இருந்தால் உங்க‌ள் க‌ம்பெனியின் ஆண்டுவிழா ந‌ட‌ந்தால் க‌டைசி வ‌ரை இருந்து பாருங்க‌ள். மாத‌ம் ஐம்ப‌தாயிர‌ம் ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் ஆள் கூட‌ 'நாலு ர‌வுண்டு முடிச்சி அஞ்சாவ‌து ழ‌வுன்டு மாப்ள‌'யில் மேடையில் பாடி / ஆடிக்கொண்டிருக்கும் செலிப்ரிட்டிக்கு ல‌ந்து கொடுத்துக் கொண்டிருப்பார். அவ‌ர் குடித்த‌ பான‌த்தின் விலை அவ‌ர‌து இர‌ண்டும‌ணி வேலைநேர‌ கூலியாக‌ இருக்கும், அதை அவ‌ரால் த‌னியாக‌ வீட்டில் வாங்கி குடிக்க‌ முடியாதா? அங்கே அவ‌ர‌து ம‌ரியாதை ச‌க‌ ஊழிய‌ர்க‌ள் முன்னால் காற்றில் ப‌ற‌ப்ப‌தை அறியாத‌வ‌ரா அவ‌ர்.. எல்லாம் தெரியும், ஆனால் ம‌துவை பார்த்துவிட்டால் "ப‌சி வ‌ந்திட‌ ப‌ற‌க்கும் ப‌த்து" ம‌ட்டும‌ல்லாது மீதி எல்லாமே ந‌ம் ஆட்க‌ளுக்கு பற‌ந்து / ம‌ற‌ந்து விடும்.

முத‌லில் சொன்ன‌ இர‌ண்டு கொடும்நிக‌ழ்வுக‌ளும் க‌ட‌லில் அள்ளிய‌ துளி போல‌த்தான். ம‌துவினால் இன்னும் எத்த‌னை எத்த‌னை கொடும்நிக‌ழ்வுக‌ள் ஒன்றும‌றியாத‌ எத்த‌னை எத்த‌னையோ பேரை, முக்கிய‌மாக‌ குழ‌ந்தைக‌ளையும் பெண்க‌ளையும் காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கிற‌து.

இந்த‌ இட‌த்தில் சூப்ப‌ர்ஸ்டார் ஒரு பொதுநிக‌ழ்ச்சியில் சொன்ன‌ க‌தை நினைவுக்கு வ‌ருகிற‌து. ஒருவ‌னை ஒரு அறைக்குள் அடைத்து அவ‌ன் முன் மூன்று ஆப்ஷ‌ன்க‌ளை கொடுத்தார்க‌ளாம். அந்த‌ அறையில் அவ‌னைத் த‌விர‌ ஒரு அழ‌கான‌ பெண், ஒரு சிறு குழ‌ந்தை, ஒரு பாட்டில் ம‌துவை வைத்துவிட்டு, "ஒண்ணு நீ அந்த‌ பொண்ணை க‌ற்ப‌ழிக்க‌ணும், இல்லைன்னா அந்த‌ குழ‌ந்தையை கொல்ல‌ணும், அதுவும் இல்லைன்னா அந்த‌ ம‌துவை குடிக்க‌ணும்" என்று. அவ‌ன் க‌ற்ப‌ழிப்பு, குழ‌ந்தைக் கொலைக்கு ப‌தில் ம‌துவே ப‌ர‌வாயில்லை என்று அதை எடுத்து குடித்தானாம். போதை த‌லைக்கேறி அந்த‌ பெண்ணின் மீது காம‌ம் கொண்டு அவ‌ளை க‌ற்ப‌ழித்தானாம், ந‌டுவில் தொந்த‌ர‌வாக‌ இருந்த‌ குழ‌ந்தையையும் கொன்றானாம். ம‌துவின் தீமையை இதைவிட‌ ந‌ன்றாக‌ சொல்ல‌முடியாது என்றே தோன்றுகிற‌து.

இந்த‌ பின்புல‌த்தில்தான் ம‌ற்றொரு செய்தியையும் ப‌டிக்க‌ நேர்ந்த‌து. த‌மிழ‌க‌த்தில் டாஸ்மாக் விற்ப‌னை இருப‌தாயிர‌ம் கோடியாம். வ‌ரும் ஆண்டிற்கு இருப‌த்தையாயிர‌ம் கோடி இல‌க்கு நிர்ண‌யித்து வேலை செய்து வ‌ருகிறார்க‌ளாம்.

இதைக் கேள்விப்ப‌டும்போது ப‌திவுல‌கில் அடிக்க‌டி சொல்ல‌ப்ப‌டும் வ‌ரிதான் நினைவுக்கு வ‌ருகிற‌து "நாடும் நாட்டும‌க்க‌ளும் நாச‌மாய் போக‌ட்டும்"

13 comments:

said...

Good one!

said...

உண்மைதான். என் போன்றவர்களின் மனக்குமுறல்களை நன்றாக பிரதிபலித்திருக்கிரீர்கள். நன்கு கற்றவர்களும் படிக்காத பாமரர்களும் மதுவுக்கு அடிமையாய் ஆகிவிட்டனர். எங்காவது டிவிடப் நடந்தால் குடி நிச்சயம் உண்டு. நானும் பல் டாக்டர் ரியாசும் அவ்விடத்தை விட்டு அகன்று விடுவோம். கருப்பையா மது அருந்தாவிட்டாலும், அருந்துபவர்கள் அளவுக்கு மீறி அருந்தி ஏதாவது அபத்தம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உடனிருப்பார். இன்று மது பழக்கம் அளவுக்கு மீறி போய்விட்டது. முழு முதற்காரணம் அரசு. முன்பு லாட்டரி மூலம் சீரழித்தது போல இன்று டாஸ்மாக். மதுவை ஒழித்தால், கள்ளச்சாராயம் பெருகும்.காவலர்களுக்கு நல்ல வருமானம். பணம் படைத்தவர்கள் ஹை கிளாஸ் பாருக்கு போவார்கள். பலர் கண்கள் பாதித்து பார்வை இழப்பார்கள். :( நன்றி

said...

செம ரைட்டிங்.

said...

nice writeup. worthy content.!

said...

மது சனியனை ஒழித்தால்தான் இந்த நாடு கொஞ்சமாச்சும் உருப்படும். இல்லாவிடில் இது போன்ற கொடூரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்..!

said...

நல்ல பதிவு!

said...

சாலை விபத்துகளில் அப்பாவிகளின் மரணம், இளம் விதவைகள் அதிகரிப்பு, மாணவர்களிடமும் பரவும் பழக்கம் - விஷ ஊசி போட்டு மெல்ல கொல்வது போல - இன்னும் ஒரு பத்து வருடங்களில் மோசமான இனப்படுகொலைக்கு ஒப்பானது ஆகப் போகிறது
நடராஜன்

said...

ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே....

Anonymous said...

பத்திரிகையாளரின் ஆபாசநடத்தை http://thinathee.blogspot.in/2013/04/1.html

said...

Good write-up

said...

//worthy content.//

i second Jey's comment.

said...

அருமையாக சொல்லியிருகிறீர்கள்.
அளவுக்கு மீறி குடிப்பதுதான் பெரும் பிரச்சினை..
அதிலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் குடும்பத்தோடு மது அருந்தும் அமெரிக்காவிலே.
அமெரிக்காவில் மட்டுமல்ல, எங்குமே, அளவுக்கு மீறினால் அதரகளம் தான்.
பாண்டிச்சேரி நிகழ்வு என் கண்களால் கண்ட நிகழ்வு. பிரபஞ்சன் உண்மைதான் கூறியிருக்கிறார்.
"எந்த‌ அளவுட‌ன் நிறுத்தவேண்டும் என்ற‌ எந்த‌ எழ‌வும் ந‌ம் ஆட்க‌ளுக்கு தெரியாது"……. நிறுத்தாத பட்சத்தில் அமெரிக்கனாவது, இந்தியனாவது..... எல்லோருமே குடிகாரர்கள் தான்.

மும்பையில் "Sailors Institute” என Bar ஒன்று உள்ளது.
நாலுமாடி “மது அருந்தகம்” என சொல்லலாம்.
குடிப்பகம் என சொல்லக்கூடாது. ஏனெனில் மது "குடிப்பவர்கள்" அங்கே கிடையாது. மது "அருந்துபவர்கள்" தான் அதிகம். அதுவும் சீனியர்கள் முன்னிலையில் கற்றுக்கொள்வார்கள். நானும் அப்படித்தான்.

மேலும், எதையுமே கட்டுக்குள் வைத்தால் தெறித்துவிடும் அபாயம் உண்டு. அதனால் தான் மேலை நாடுகளில்.. மதுபழக்கம் சமூக பழக்கமாக உள்ள நாடுகளில்…. மது சம்பந்தமான குற்றச் செயல்கள் இந்தியாவை விட குறைவு.
நீங்கள் சொல்லும் அந்த "குடி-செயல்கள்" கூட மீடியாவினால் படப்பிவிடப்பட்டு செய்தியாகிவிட்டது.

மாதம் 50கே வாங்கும் அந்த ஆள் ஏன் அப்படி அலுவலக விழாவில் செய்கிறார்...? மிட்டாய் கடையை கண்டவன் நடத்தைதானே அங்கும் இருக்கும்.

சமீபத்தில் சகலையின் திருமண விழாவிற்கு மொத்தம் 22பாட்டில் வாங்கிப் போனேன். அனைத்தையும் திறந்து ஆசைதீரக் குடிக்கும் ஆசை அவனின் நண்பர்களுக்கு காணாததை கண்டது போல.
இப்ப மறுபடி பாண்டிச்சேரி கதையை நினைத்துப்பாருங்கள்.

அருந்தலுக்கும் குடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் அறிவீர்கள் தானே.
ஆனால் நீங்கள் சொல்வது போல் "எந்த‌ அளவுட‌ன் நிறுத்தவேண்டும் என்ற‌ எந்த‌ எழ‌வும் ந‌ம் ஆட்க‌ளுக்கு தெரியாது"... அளவு அறியாமல் முழுவதுமாக குடிப்பதால் தானும் நாசமாகி உடன் வாழ்பவரையும் நாசமாக்கி விடுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் சொன்ன கதயில் கூட "முழு மதுவையும்' குடிப்பதே" குழந்தையைக் கொல்வதற்கு சமமான தீய செயலாத்தான் கூறப்படுகிறது.
வேண்டிய அளவு குடிக்க சொல்லவில்லையே.

டெல்லி சம்பவத்தில் அந்த குழந்தை இரு நாட்களாக கயவர்களின் பிடியில் இருந்துள்ளாள். இரு முழு நாட்களும் போதையோடு வேலை செய்யவோ வழக்கமான காரியத்தையோ செய்ய முடியாது. போதையில் செய்தேன் என சொல்வதின் மூலம் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள் அந்தக் கயவர்கள்.

இந்தியாவில் "டயபடீஸ்" நோயாளிகள் அதிகமாகி விட்டனர். எனவே அனைத்து இனிப்புக்கடைகளையும் மூட சொல்ல வேண்டும் என்பது போல் உள்ளது டாஸ்மாக் பற்றிய பிரச்சினை.

சுகர் பிரச்சினைன்னா, நாக்க அடக்கிகிட்டு உக்காரணும். அதுக்காக “நீ விக்கிற…. அதனாலேதான் எனக்கு சுகர் பிரச்சினை”ன்னு கொடி தூக்க முடியுமா..?
ஆனாலும் தூக்குறாங்க. என்ன பண்ண..! அவங்களும், ரெண்டு குவார்டரூ பிரியாணிக்குத்தான் வர்றாங்க.

விக்கிறவன் விக்கத்தான் செய்வான், கடையிலே விக்குதேங்கிறதுக்காக எல்லாத்தையும் வாங்கிக்கொட்டிகொள்ள முடியுமா... ? அதுபோலத்தான் டாஸ்மாக்.
டாஸ்மாக்கை மூடினா குடிக்காம இருப்பானுங்களா இவனுங்க..?

நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்னு வீரப்பா சொல்லிட்டாரு.

சட்டத்திற்கும் தண்டனைகளுக்கும் பயப்படாத……
ஒழுக்கமிழந்த சமூகத்தில் இருக்கும் இந்த மக்கள்தான் மாக்களாகி நாசப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்...

மது மட்டுமே சகலத்திற்கும் காரணமல்ல.
ஒழுக்கத்தையும், நாகரீகத்தையும் குழிதோண்டி புதைத்தபடி ஒரு சமூகம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

said...

@Anand Raj...

நீங்க‌ சொன்ன‌தேதான் நானும் சொல்லியிருக்கேன். அள‌வு தெரியாம‌ குடிச்சி சீர‌ழியுற‌ சீர‌ழிக்குற‌ ம‌க்க‌ள் ஒருப‌க்க‌ம், அவ‌ர்க‌ளை ந‌ல்வ‌ழிப்ப‌டுத்த‌ வேண்டிய‌ இட‌த்துல‌ இருந்தாலும் அதை விட்டுட்டு அவ‌ங்க‌ளை அதிக‌ம் குடிக்க வைக்குற‌தை கொள்கையா கொண்டு செய‌ல்ப‌டுற‌ அர‌சாங்க‌ம் இன்னொரு ப‌க்க‌ம்.. அதை சுட்டிக் காட்டுற‌து ம‌ட்டுமே இந்த‌ ப‌திவோட‌ நோக்க‌ம்..