Monday, January 10, 2011

திருவிழாவில் தொலைந்து போன கதை

காட்சி 1:
”ஹலோ பாஸ், சொல்லுங்க”

“எப்ப வர்றீங்க நீங்க? சொல்லுங்க மீட் பண்ணலாம்”

காட்சி 2:
”சகா, ஒரு விசயம் பேசணும்”

“அங்க வருவீங்கள்ல, மீட் பண்ணி பேசலாம்”

காட்சி 3:
”ஹலோ, பிசியா?”

“ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா அங்கதான் போயிட்டு இருக்கேன், நீங்க எப்ப வர்றீங்க?”

******

இதற்கு மேலும் புத்தகக் கண்காட்சிக்கு (தப்பு.. தப்பு) திருவிழாவிற்கு போகவில்லை என்றால் பாரா, பத்ரி தலைமையில் பிரபல பதிவர்கள் ஒன்று கூடி ”பதிவர்கள் என்னுடன் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்று தீர்ப்பு எழுதிவிடுவார்களோ என்ற பயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 2011) குடும்பத்துடன் போவதற்கு திட்டம் தீட்டினேன்.

ஞாயித்துக்கிழமை கூட கொஞ்சநேரம் சேத்தி தூங்க விட மாட்டீங்களே என்று தங்கமணி திட்டிக்கொண்டே எட்டரை மணிக்கு எழுந்து கிளம்பத் துவங்கினார். கண்காட்சியின் துவக்க நேரத்தை 8 மணிக்கு வைக்காமல் 11 மணிக்கு வைத்தவர் கிடைத்தால் பூசை அறையில் அவர் படத்தை மாட்டி வழிபடுவார் போல தெரிந்தது. நல்லவேளை, அந்த புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை.

பதினொன்றரை மணிக்கு உள்ளே நுழையும் போதே கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பெரும்பாலும் தனியர்களும் ஒரு சில குடும்பஸ்தர்களையும் பார்க்க முடிந்தது. மதிய உணவுக்கு பிறகே கண்காட்சி களைகட்டும் என்று நான் போட்ட கணக்கு தப்பவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது (பின்ன கணக்குல பத்தாவதுல செண்டம் வாங்குனவங்கல்ல நாங்க எல்லாம்)

சென்ற ஆண்டு 5 ரூபாய் இருந்த பார்க்கிங் இந்த ஆண்டு 20 ரூபாய், என்ன கொடுமை இது என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே பார்க்கிங் டிக்கெட்டை வாங்கினேன், ’போன தடவை பைக், இந்த முறை கார், அப்புறம் எதுக்கு அவங்களை திட்டுற’ என்று உள்மனசு எச்சரித்தாலும் ஆற்றாமையாகத்தான் இருந்தது. :)

உள்ளே நுழைவதற்கு முன்னரே வலது புறம் இருந்த ஃப்ரூட் சாலட், ட்ரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸ், வறுகடலை பாக்கெட்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். நுழைவுச் சீட்டு வழக்கம்போல் ஐந்து ரூபாய். அதில் இருந்த பரிசுக் கூப்பனை கூட்டமாக நின்று எழுதிக் கொண்டிருந்தார்கள். என் அதிர்ஷ்டத்தின் மீது இருந்த அலாதி நம்பிக்கையால், அவர்கள் எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பரிசு பெறுபவர் எனக்கு நன்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்.

உள்ளே சென்றதும் ஏற்பட்ட மன உணர்வை விவரிக்க இயலவில்லை. ஒரு மிட்டாய் கடையுனுள் நுழையும் சிறுவனைப் போல எந்த பக்கம் போவது, எதை வாங்குவது என்று வழக்கம் போலவே குழம்பினேன். பிறகு முடிவெடுத்து வலது பக்க கடைசி வரிசைக்கு சென்று பார்க்க ஆரம்பித்தோம்.

ஜூனியருக்கான கதை, கலரிங், ட்ராயிங் புத்தகங்களை தங்கமணி தேடத் தொடங்கி இருந்தார். நான் நண்பர்களுக்கு அலைபேச ஆரம்பித்தேன். “வந்துட்டீங்களா சகா, இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்” என்றார் ஒருவர். “இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவேன். நான் நேத்தே பார்க்கிங் ரொம்ப கஷ்டப்பட்டேன், இடமே இருக்க மாட்டேங்குது, ஏதாச்சும் செய்யணும் பாஸ்” என்றார் அடுத்தவர்.

கடைசியில் அலுவலக நண்பர் ஒருவர் சிக்கினார். தங்கமணி மற்றும் அவர் தம்பியை விட்டுவிட்டு நண்பரும் நானும் ஜூனியரை இழுத்துக் கொண்டு பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களைத் தேடிப் போனோம்.

காலச்சுவடிற்கு சென்றேன். பதிப்பகத்தார் அந்த நேரத்திற்கு பில்லிங் டேபிள் மீது அமர்ந்திருந்த ஈக்களை துரத்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். புத்தக அடுக்குகளில் ஒரு பார்வையை ஓடவிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

உயிர்மையில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. மனுஷ்யபுத்திரன் வாசலிலேயே உட்கார்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த வாசகர்களுக்கு ஆட்டோக்ராஃபிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க ஆசையாய் இருந்தாலும் கவிதைக்கும் எனக்குமான தொலைவு பயமுறுத்தியதால் முயற்சியை கைவிட்டுவிட்டு நண்பர் நர்சிம்மின் ”தீக்கடல்” வாங்கினேன் (யாருப்பா அது, அந்த புக்கும் கவிதைதான்னு சொல்றது?). பலநாட்களாக வாங்க நினைத்த கிரா, காழியூரானின் “மறைவாய் சொன்ன கதைகள்” புத்தகத்தையும் வாங்கினேன்.

நண்பர் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுஜாதாவை மட்டுமே வாங்கினார். வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.

அடுத்த ஸ்டாப் எங்கே செல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை, கண்காட்சிக்கு வந்து விட்டு “வரலாற்றுச் சுவடுகள்” வாங்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்தி இருந்ததால் இரண்டாம் எண் ஸ்டாலுக்கு விரைந்தேன். தினந்தந்தியின் ஸ்டால், உள்ளே ஒரே ஒரு புத்தக விற்பனை மட்டுமே, ஆனாலும் அந்த கண்காட்சி ஆரம்ப நேரத்திலும் ஐந்து பேராவது நின்றிந்தார்கள். ஆறாவது மற்றும் ஏழாவதாய் நாங்கள் நின்றோம். முந்நூறு ரூபாயே குறைவு என்று எல்லாரும் கூவிவிட்ட இந்த புத்தகம் 10 சதவீத கழிவிற்கு பிறகு 270 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்ன ஒரே பிரச்சினை, சில்லறை இல்லை மற்றும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை. இருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பார்கையில் சந்தேகமே இல்லாமல் இந்த கண்காட்சியின் ”பெஸ்ட் செல்லர்” இதுதான் என்று சொல்ல முடியும்.

கிழக்கை அடைந்தோம். இந்த கண்காட்சியின் மிகப்பெரிய ஸ்டால் இவர்களுடையது. புத்தகங்களை இன்னும் சிறப்பாக அடுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த புத்தகம் எங்கே என்று தேட வேண்டி இருந்தது, அதுவும் அவ்வளவு பெரிய ஸ்டாலில். சொக்கனின் “காந்தி கொலை வழக்கு” வாங்கினேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மிஸ்ஸாகி இருந்ததால், நான் வாங்க உத்தேசித்து இருந்த பாராவின் புத்தகத்தின் பெயர் சட்டென்று நினைவில் வராமல் அங்கே இருந்தவரிடம் “பாராவோட புது புக்கு என்ன வந்திருக்கு” என்றேன். ”மாயவலை” என்றார். “அது போன வருசமே இருந்ததுங்க, வேற” என்றேன். “டாலர் தேசம்” என்றார். “ஸாரிங்க, நானெல்லாம் ரூபாய்ல சம்பாதிக்குறவன்” என்று கூறிவிட்டு நானே தேட முனைந்தேன்.

கிழக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் போல. ஒரு மாதிரி மிரட்சியுடனே நின்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவரும் பாராவின் இரண்டு புத்தகங்கள் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. பதிப்பகம் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்தால் என் தொப்பையைப் பார்த்த உடனே “உணவின் வரலாறு” என்று சரியாக சொல்லியிருப்பார். நானேதான் தேடி எடுத்துக் கொண்டேன். நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். இன்னொரு பெஸ்ட் செல்லரான ”ஆர் எஸ் எஸ்” அவரது பட்டியலில் இருந்ததால் அதையும் அள்ளினார்.

பத்ரி ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல பில்லிங் சிறப்பாக, விரைவாக முடிகிறது. நன்றி. பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். அன்றைய பெஸ்ட் செல்லர் எது என்பது குறித்தாக இருக்கலாம், அவர் முக பாவங்களைப் பார்த்தபோது அநேகமாக பால்கோவாவை லிச்சி ஜூஸ் ஓவர்டேக் செய்துவிட்டது என்று தோன்றியது :)

வெளியில் வந்தால் பதிவர் வெயிலான் வந்திருந்தார். அலுவலக வேலையாக சென்னை வந்தவர் இங்கு வருவதற்காகவே ஒருநாளை ஒதுக்கி இருப்பது தெரிந்தது. பை நிறைய புத்தகங்களுடன் இன்னும் வாங்கவிருப்பதாக சொன்னார். வாழ்க வாசிப்பின் மீதான அவரது ஈடுபாடு.

ஜூனியரை அவரது அம்மாவுடன் கோர்த்துவிட்டு விட்டு விகடன் பிரசுரத்தை தேடினோம். வழியில் புதிய தலைமுறை தென்பட்டது. ஸ்டால் முழுவதும் பெயருக்கேற்றார் போல் இளம் தலைமுறை. எந்த பெண்ணாவது என்னைப் பார்த்து புன்னகைப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதனால் நானும் புறக்கணித்து விகடனுக்கு சென்றேன்.

கட்டெறும்பு சைஸாகிவிட்ட விகடன் ஸ்டால் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சிறு ஸ்டால், அதிலும் ஒரே ஒரு வழி மட்டுமே. மறுவழி அடைக்கப்பட்டிருந்தது. மிகக்குறைவான அளவில் புத்தகங்கள். இந்த வார ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் கூட இருந்த மாதிரி தெரியவில்லை. என்ன ஆனது விகடனுக்கு என்று புரியவில்லை. நண்பருக்கு “வந்தார்கள் வென்றார்கள்” மற்றும் “லிங்கம்” வாங்க ஆலோசனை கூறினேன். இரண்டையும் வாங்கினார்.

விடிய‌ல் ஸ்டால் க‌ண்ணில் ப‌ட்ட‌து. சென்ற‌ முறை வாங்கிய‌ "ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம்" ந‌ன்றாக‌ இருந்த‌தால் இம்முறையும் எதாவ‌து தேறுமா என்று பார்க்க‌ அருகில் சென்றேன். ஆளுய‌ர‌த்திற்கு பெரிய‌ சைஸ் புத்த‌க‌ங்களை அடுக்கி புர‌ட்சி செய்திருந்த‌ன‌ர். வீட்டில் த‌லைய‌ணைக‌ள் தேவை இல்லாத‌தால் எதுவும் வாங்க‌வில்லை.

வெளியே வரும் வழியில் கண்ணதாசனில் “வனவாசம்”, “மனவாசம்” மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன். நண்பர் விடைபெற்றுக் கொண்டு சென்றதும், ஜூனியருக்கு ஃப்ரூட் சாலட் வாங்கி மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சாப்பிட்டோம். முடித்தவுடன் அந்த டப்பாவைப் போட குப்பைக் கூடைகள் எங்குமே இல்லை. ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைக்க ஆவன செய்யலாம்.

அவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போனால் சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று நல்ல எண்ணத்தில் சாப்பிடப்போனோம். வழக்கம்போலவே ஒரு சிறிய இடம். உணவின் சுவையும் தரமும் விலையும் ஓரளவிற்கு இருந்தாலும் அமர்ந்து சாப்பிட இடவசதி அவ்வளவு கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் இது. பரோட்டாவும் சாம்பார் சாதமும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம்.

சில ஆச்சர்யங்களும், ஏமாற்றங்களும்:
1. தங்கமணி ஜூனியருக்கான புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி இருந்தார். இந்த முறையாவது எட்டு புள்ளிக் கோலம், செட்டிநாட்டு அசைவ உணவுகள் செய்முறை இதை எல்லாம் வாங்குவாரா என்று எதிர்பார்த்திருந்தேன். வாங்கவில்லை. சிட்னி ஷெல்ட‌ன், அக‌த்தா கிறிஸ்டி என்று பேசிக் கொண்டிருந்தார். த‌மிழ் எழுத்தாள‌னை ம‌திக்காத‌ த‌மிழ் ச‌மூக‌ம் என்ப‌து புரிந்த‌து.
2. பெரும்பாலான‌ கடைகளில் கார்ட் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் கொண்டு செல்வது நல்லது.
3. சில்லறைத் தட்டுப்பாடு (அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள்) பார்க்கிங் முதற்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கிறது, தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லவும்
4. முதலிலேயே வாங்க வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டு செல்லவும், அதை பத்திரமாக வைத்திருப்பது அதை விட முக்கியம்.
5. கிழக்கு, உயிர்மை போன்ற வெகு சிலரே சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை பதிப்பாளர்கள் சுற்றுச்சூழலை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதால் ப்ளாஸ்டிக் பைகளே அதிகம் தென்படுகிறது. தவிர்க்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு செல்வது நல்லது.

நான் கிளம்பும்வரை பதிவுலக நண்பர்கள் வரவில்லை. இன்னும் ஒருமணிநேரத்துல வந்துடுவேன், அரை மணிநேரத்துல வந்துடுவேன் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த சகா இரண்டு மணிக்கு நான் கிளம்பும் வரை கண்ணில் தென்படவில்லை, தோழியுடன் அப்பாயிண்ட்மெண்ட் போல. :)

இந்த புத்தகக்கண்காட்சியில் கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபல பதிவரும் வரவில்லை. பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்திருப்பார் அல்லது பேனா வாங்க எங்காவது சென்றிருப்பாராய் இருக்கும். :)

13 comments:

said...

அருமையா விவரிச்சு எழுதியிருக்கீங்க. ஆனா கடைசிவரை அந்த திருவிழாவிலே நீங்க தொலைந்து போனதை பத்தி சொல்லவேயில்லையே?

said...

ஆமா கார்ப்பரேட் ப்ளம்பர்(நன்றி மணீஜி) மாத்திரம் வாங்கிட்டு டேபிள் பங்கர் வங்கலையா? என்ன கொடுமை இது? அது போல கரிசல்காரன் கூட ஸ்டால் நம்பர் எல்லாம் போட்டு இருந்தாரே, அதையும் விட்டுட்டீங்களா?

said...

பகிர்விற்கு நன்றி

said...

உள்ளே போனதுலேந்து வெளியே வர வரைக்கும் நடந்தத , பாத்தத, கேட்டத, உணர்ந்தத அப்படியே எழுதியாச்சு - பலே பலே ! பல விதமான டிப்ஸ் வேற இனிமே வரப்போறவங்களுக்கு .... ம்ம்ம்ம்ம் 0 ஜமாய்ங்க

said...

யோவ்.. அம்புட்டு தூரம் வந்திட்டு இரு இருக்குடி உனக்கு பார்சல்..

பாஸ்கர் said...

//. பில்லிங்கிற்கு அருகிலேயே சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். //

:)

பதிவுக்கு நன்றி.

பாஸ்கர் said...

//பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். //

:)

பதிவுக்கு நன்றி.

said...

//வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.//

//நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். //

//மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன்//

யோவ், சுஜாதா, ஜெமோ ....எனக்கு என்ன ஜ்யோவ் கிட்ட சரியா மாட்டப் போற!

கார் பார்க்கிங் இருபது ரூபாய் சரியென்று தான் தோன்றுகிறது. சகாவாவது பரவாயில்லை. கொடுத்த வாக்கை சில நேரம் காப்பாற்றி விடுவார். அந்த இன்னொருத்தர் ...ஸ்ஸ்ஸ் ப்பா

அனுஜன்யா

said...

:) வெண்பூ நான் வாங்க நினைச்ச நிறைய புத்தகம் வாங்கி இருக்கிங்க.. ஆட்டைய போட வேண்டியது தான்..

said...

திருவிழாவில் தொலைந்து போன குழந்தையாய் அழுது கொண்டிருக்காமல், சமத்தாய் பதிவிட்டதற்கு பாராட்டுக்கள் பாஸ்...

said...

வருஷா வருஷம் புத்தகக் கண்காட்சிப் பதிவுகள் வாசிக்கறதே வேலையாப் போச்சு. எப்போ போகப் போறேன்னு தெரியல.

said...

கவிஞர் வந்திருந்தார். கடலில் கையொப்பமும் இட்டுக் கொடுத்தார்.

said...

@அபி அப்பா,
@கோபி ராமமூர்த்தி,
@சீனா ஐயா,
@கேபிள்,
@பாஸ்கர்,
@அனுஜன்யா,
@சந்தோஷ்,
@ஸ்வர்ணரேக்கா,
@விக்னேஷ்வரி,
@வெயிலான்...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.