இந்த இடுகையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் தலைப்பில் இருக்கும் கேள்விக்கான பதில் "ஆமாம்" என்பதாகவே 99 சதவீதம் இருக்கும். "இல்லை" என்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம். :)
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தங்களின் பதின்ம வயதுகளை (டீன் ஏஜ்) கடந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜேஷ்குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் துப்பறியும் நாவல்களில் மனதை பறிகொடுத்திருப்பீர்கள் (அ) பறிகொடுத்திருக்கிறோம்.
விவேக், ரூபலா, நரேந்திரன், வைஜெயந்தி, பரத், சுசிலா இவர்களோடு வயது வித்தியாசம் இல்லாமல் விஷ்ணு, செல்வா, முருகேசன், ராமதாஸ் (அவரு இல்லீங்க), ஜான்சுந்தர், அனிதா என்று அனைவரும் நமக்கு நெடுநாள் நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.
இவர்கள் அனைவருக்கும் முன்னோடி அல்லது எழுத்துலகின் முதல் பிரபல துப்பறியும் ஹீரோ என்றால் அது ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்ட இந்த மனிதரைப் படைத்தவர் ஆர்தர் கோனன் டாயில்.
ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வெற்றியே வாசகர்கள் அவரை நிஜம் என்று நினைப்பதும், அவரை பின்பற்ற நினைப்பதுமே. உதாரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பல வசனங்களை நாம் நம்மை அறியாமலேயே நம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துகிறோம் என்பதே அவரின் வெற்றியாகக் கருத முடியும். அந்த வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வெளிவந்து வெற்றியடைந்த காலகட்டத்தில் கதைகளில் வரும் அவரது முகவரியான "221 பி, பேக்கர்ஸ் தெரு, லண்டன்" என்ற முகவரிக்கு கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவரை உண்மையான மனிதராக வாசகர்கள் நினைத்தார்கள் என்றால் அவரது வீச்சினைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழர்களிடையே அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவரது பெயரை எங்காவது எப்பொழுதாவது கேட்டிருக்கும் நமக்கு அவரது கதைகளைப் படிக்க அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது.
இந்த குறையைப் போக்க தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சியாகவே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!" வரிசையின் முதல் புத்தகமான "ஒரு மோதிரம் இரு கொலைகள்!" அமைந்திருக்கிறது. தமிழில் இதை மொழி பெயர்த்திருப்பவர் நம் பதிவர்களிடையே நன்கு அறிமுகமான "பத்ரி சேஷாத்ரி".
ஹோம்ஸை வைத்து ஆர்தர் எழுதிய முதல் கதையான A Study in Scarlet என்ற கதையையே முதல் கதையாக மொழிபெயர்த்திருப்பது ஹோம்ஸை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல உத்தியாக இருக்கிறது. ஹோம்ஸ் யார், அவரது தோற்றம், இயல்புகள், அவருக்குத் தெரிந்தது, தெரியாதது என்று அனைத்தையும் நம்மால் இந்த முதல் கதையிலேயே அறிந்து கொள்ள முடிவது இந்த புத்தகத்தின் சிறப்பு.
இலக்கியத்தனமாக இல்லாமல் நாம் ஏற்கனவே விரும்பி படிக்கும் தமிழ் துப்பறியும் நாவல்களின் மொழியிலேயே ஓரளவுக்கு இந்த புத்தகமும் வந்திருப்பது படிப்பதற்கு இதமாக இருக்கிறது. மேலும், எழுத்தாளர் ஆர்தர் டாயில் குறித்தும், ஹோம்ஸ் குறித்தும் பத்ரி கொடுத்திருக்கும் முன்னுரைகள் கதை படிக்கும் முன்பு நம்மை அழகாக தயார் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது என்றே சொல்வேன்.
இனி, கதைக்குச் செல்வோம். ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகள் எல்லாமே அவரது நண்பரான டாக்டர் வாட்சன் என்பவரது பார்வையிலேயே செல்லும். கதைகளை எழுதிய ஆர்தர் டாயில் ஒரு மருத்துவர் என்பதால் தன்னை வாட்சன் இடத்தில் வைத்து எழுத இந்த நடை அவருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான இந்த கதைகளின் களம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பும் டாக்டர் வாட்ஸன் தன் நண்பர் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸுடன் அறையில் தங்குகிறார். ஹோம்ஸின் வித்தியாசமான நடவடிக்கைகளால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாமல் சில நாட்கள் குழம்பும் வாட்ஸன், பின்னர் அவர் ஒரு துப்பறியும் நிபுணர் என்பதும், காவல்துறையினர் கண்டுபிடிக்கவே திணறும் சில வழக்குகளில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.
லண்டன் நகரில் கொல்லப்படும் அமெரிக்கப் பிரஜை ஒருவரது கொலைக்கான காரணத்தைத் தேடும் இரு ஸ்காட்லாண்ட் யார்டு அதிகாரிகளுக்கு உதவ ஹோம்ஸ் செல்ல அவருடன் தொடரும் வாட்ஸன், கொலை நடக்கும் இடத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களை வைத்து ஹோம்ஸ் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதை விவரிக்கிறார். கதையின் முதல் பாதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட, கொலைக்கான காரணம் கதையின் இரண்டாவது பாதியில் விரிகிறது.
இரண்டாவது பாதியில் விவரிக்கப்படும் அமெரிக்காவின் யுடா மாகாண குடியமர்தலும் அந்த மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் மூடப் பழக்க வழக்கங்களும், அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களும் என்று முதல் பாதி கதைக்கு முற்றிலும் வேறான தளத்தில் கதை பயணிப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.
கதையின் முடிவில், தான் கொலைகாரனை கண்டுபிடித்தது எப்படி என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் விவரிக்கும்போது அவரது துப்பறியும் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மை. ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வளவு பிரபலம் என்பதற்கு சரியான விளக்கமே அந்த கடைசி அத்தியாயம் என்பதே என் கருத்து.
துப்பறியும் நாவல் பிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகமான இது மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பனுபத்தைத் தரும் என்பதற்கு நான் உத்தரவாதம்.
பதிப்பாளர்கள்: கிழக்குப் பதிப்பகம்
புத்தகத் தொடர்: ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!
புத்தகம்: 1. ஒரு மோதிரம் இரு கொலைகள்!
எழுதியவர்: ஆர்தர் கோனன் டாயில்
தமிழில்: பத்ரி சேஷாத்ரி
மேலதிக தகவல்கள் மற்றும் ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.
Thursday, October 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
ஆஹா! விமரிசனம் என்ற பேரில் விளம்பரம் தேடும் கிழக்கு உத்தி கொஞ்சம் slow but steady தான் போல இருக்கிறதே!
டாக்டர் வாட்சனின் பாத்திரப் படைப்பு, காணன் டாயில் மருத்துவராக இருந்தார் என்பதால் அல்ல, ரொம்பவே மூளையுள்ள ஹோம்ஸ் பட படவென தடையங்களைப் பார்த்து முடிவுகளை எடுத்து விடுகிறார்! அதைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே! அதற்கு உதவியாகத் தான், கொஞ்சம் மந்தமான அல்லது சராசரி நிலையில் இருந்து எழும் கேள்விகளை வாட்சன் கதாபாத்திரத்தின் வழியாகக் கேள்விகளை எழுப்பி விடை சொல்கிற உத்தியாகக் கதாசிரியர் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.
Elementary my dear Watson என்று தன்னுடைய நண்பருக்கு, தான் எப்படி சில முடிவுகளுக்கு வந்தேன் என்று சொல்கிற வார்த்தை, மூலக் கதை எதிலுமே காணன் டாயில் பயன்படுத்தவில்லை என்றாலுமே, திரைப்படங்களாக எடுக்கப் பட்டபோது மிகவும் பிரபலமான வார்த்தை! ஷெர்லக் ஹோம்ஸ் பாத்திரத்துக்கு ஈடான புகழ் பெற்ற வார்த்தையும் கூட!
இந்த வாக்கியத்தை முதன்முதலில் உபயோகித்தும் இன்னொரு பிரபல எழுத்தாளர் தான்! P G ஒட்ஹவுஸ்!
உபயோகித்த வருடம் 1915!
ஷெர்லக் ஹோம்ஸ் ரசிகர்களுக்காக, இந்த உபரித் தகவல் சமர்ப்பணம்!
அறிமுகத்திற்கு நன்றி வெண்பூ..
நீங்கள் எழுதிய விதம் அருமை.
அடிக்கடி எழுதங்கப்பூ
:))
எழுதிய விதம் அருமை அண்ணா.. :)))
ஆவலைத்தூண்டும் பதிவு. என்னை மாதிரி ஆங்கில நாவல்கள் படிக்காத (தெரிஞ்சாதானே?) ஆட்களுக்குதான் மகிழ்ச்சி.! நீங்கதான் இங்கிலீஷிலேயே படிச்சிருப்பீங்களே தொரை.!
அப்புறம் என்னால்லாமோ கேள்விப்பட்டிருக்கோம். ஷெர்லாக் பாத்திரத்தை வைத்து திரைப்படங்கள் வந்திருக்கின்றனவா?? என்னே அறிவீனம்? லிஸ்ட் தரமுடியுமா கிருஷ்ணமூர்த்தி ஸார்..
அப்புறம் வெண்பூ அண்ணே.. இந்த மாத பதிவு கோட்டாவைத் தாண்டிவிட்டீர்களென நினைக்கிறேன். 5 பதிவு எழுதிவிட்டீர்கள் பாருங்கள்.!
வாங்க கிருஷ்ணமூர்த்தி.. நல்ல தகவல்கள். நீங்கள் சொல்வது சரியே, பெரும்பாலான ஹோம்ஸின் நடவடிக்கைகளை விளக்க நமக்கு வாட்சன் மாதிரியான கதாபாத்திரம் தேவையே. நான் சொல்ல வந்தது அவரை ஏன் மருத்துவராக சித்தரித்திருக்கிறார் என்பதே. மற்ற தொழில் செய்பவர் என்றால் அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெட வேண்டும். மருத்துவர் என்றால் தானே அந்த இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்வது சுலபமாக இருக்கும் அல்லவா? ஷெர்லாக் ஹோம்ஸ் படம் வந்திருக்கு என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. தகவலுக்கு நன்றி.
வாங்க நர்சிம்.. பாராடுக்கு நன்றி.. எழுத முயற்சிக்கிறேன் :)
கார்க்கி, ஸ்மைலிக்கு என்ன அர்த்தம்... :)))
வாங்க ஸ்ரீமதி.. பாராட்டுக்கு நன்றி..
வாங்க ஆதி.. உங்க ஆவலைத் தூண்டி இருந்தா சந்தோசமே. போன மாசம்தான் முதல் முறையா ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை ஆங்கிலத்துல படிச்சேன். பெரிய நாவல்களை சுருக்கி சிறுகதைகளா போட்டிருந்தாங்க, ஓரளவு இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது. ஆனா இந்த புக் ஒரு நாவல் முழுசும் இருக்கு, இதோட முழு ஆங்கில வெர்ஷனை இன்னும் படிச்சதில்லை.
//
ஆதிமூலகிருஷ்ணன் said...
அப்புறம் வெண்பூ அண்ணே.. இந்த மாத பதிவு கோட்டாவைத் தாண்டிவிட்டீர்களென நினைக்கிறேன். 5 பதிவு எழுதிவிட்டீர்கள் பாருங்கள்.!
//
ஹி..ஹி..நானும் இன்னிக்குக் காலையிலதான் பார்த்தேன். ஒரு சின்ன சுவாரசியமான தகவல், வலைப்பூல எழுத ஆரம்பிச்ச முதல் இரண்டு மாதம் தவிர அடுத்து வந்த மாதங்கள்ல நான் அதிகமா பதிவு போட்டிருக்குறது இரண்டு தடவை. இரண்டு தடவையுமே ஐந்து பதிவுகள். ஒன்று இந்த அக்டோபர் மாதம். இதுக்கு முன்னால் போன வருடம் அக்டோபர் மாதம்.. :))
ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப் படைப்பு கொண்ட படம் ஹாலிவுட்டில் அடுத்த வருடம் வெளிவருகிறது.
கய் ரிட்சியின் இயக்கத்தில், ராபர்ட் ப்ரவ்னி ஜூனியர் நடிப்பில் இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கொண்டு விட்டிருக்கிறது.
தமிழில் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்பை எழுத்து வடிவில் கொண்டது சங்கர்லாலின் பாத்திரப்படைப்பு :)
வாங்க சென்ஷி.. சங்கர்லால்? இருக்கலாம். ஹோம்ஸ், சங்கர்லால் இருவரையும் அதிகம் படித்ததில்லை, ஓரிரண்டு கதைகள் மட்டுமே. புதிய படம் குறித்த தகவலுக்கு நன்றி.. டிசம்பர் 25 ரிலீஸ் போல் தெரிகிறது. இந்தியாவில் வெளியாகுமா எனத் தெரியவில்லை :(
@ஆதிமூல கிருஷ்ணன்
http://en.wikipedia.org/wiki/Category:Sherlock_Holmes_films
@சென்ஷி,
துப்பறியும் நாவல் எழுத ஆரம்பித்தவர்களுக்கு ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் வேண்டுமானால் ஆதர்சமாக இருந்திருக்கலாம். மற்றபடி, தமிழ்வாணன் உருவாக்கிய சங்கர்லால், மாது, கத்தரிக்காய், இந்திரா இந்த நான்கு பிரதான பாத்திரங்களைக் கொண்ட நாவல் எதிலும் கானன் டாயிலிடம் இருந்த குற்றவியல் மருத்துவ அறிவு,குற்றவியல் சட்ட அறிவு, மற்றும் தடைய இயல் நுணுக்கங்கள் எதுவுமே இருந்ததில்லை.
ஆலையில்லா ஊரில் இலுப்பப் பூ சக்கரை என்ற மாதிரி, ஆரம்ப காலத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் மாதிரி கதாசிரியர்கள் லோகலைஸ் செய்து உல்டா பண்ணிய மர்ம நாவல்களை கொஞ்சம் தனித் தமிழில் தமிழ்வாணன் பண்ணினார். அவ்வளவுதான்!
நான் வாங்க துடித்து கொண்டிருக்கும் புத்தகம்!
நல்ல அறிமுகம்.
இதைப் போலவே அகதா கிறிஸ்டியின் பல நாவல்கள், தமிழில் மொழி பெயர்ப்பு செய்து, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
வாங்க வால்பையன்.. உங்க போன பதிவுல சொல்லியிருந்த சின்ன சின்ன விசயங்களை வெச்சி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதான் ஹோம்ஸோட ஸ்பெஷாலிட்டியே.. புத்தகத்தைப் படிச்சிப் பாருங்க, உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.
வாங்க பின்னோக்கி.. சமீபத்தில்தான் அகதா கிறிஸ்டியின் நாவலை ஆங்கிலத்தில் படிச்சேன். இந்த முறை புத்தக விழாவுல தமிழ்ல வாங்கிட வேண்டியதுதான். :)
@ கிருஷ்ணமூர்த்தி...
உண்மைதான். அதனால்தான் எழுத்து வடிவிலான சங்கர்லால் பாத்திரப்படைப்பு என்று மாத்திரம் நான் குறிப்பிட்டு இருந்தேன். அந்த நாட்களில் தமிழ்வாணனின் நாவல்கள் துப்பறியும் சாகசக்கதை என்ற அளவில் மாத்திரமே இருந்து வந்துள்ளது.
இன்றைக்கும் இங்கிலாந்தில் பல வாசகர்கள் ஷெர்லொக் ஹோல்ம்ஸ் என்று நிஜமாகவே ஒருவர் இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பதுதான் சேர். டொய்லின் வெற்றி. இவரது Hound of the Baskervilles என்கிற நாவலின் சுருங்கிய வடிவம் 2001ல் இலங்கையில் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது வாசிக்கவேண்டிய நாவல்களில் ஒன்றாக இருந்தது மறக்க முடியாது.
Sherlock Holmes படங்களை இங்கே தரவிறக்க முயலலாம்... (கவனிக்க: அந்தப் பக்கத்தின் அடியிலும் சில படங்கள்/தொலைக்காட்சித் தொடர்களுக்கான இணைப்புகள் இருக்கின்றன)
http://www.lazydesis.com/english-all-one/16348-sherlock-holmes-mega-thread.html
தலைவரே அருமையான விமர்சனம்.. அப்புறம் எப்படி கணேஷ்- வசந்தை மிஸ் பண்ணீங்க.. நீங்க லிஸ்டுல சொன்னவங்க எல்லாமே இதிலேர்ந்துதானே வந்தாங்க:(
வாங்க கிருத்திகன் குமாரசாமி.. அந்த கதையை நானும் படிச்சிருக்கேன். அற்புதம் மற்றும் எதிர்பாராத முடிவு. அதன் முழு நாவலும் கிடைத்தால் படிக்க வேண்டும்.
வாங்க கேபிள்.. எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியல. ஆனால் என்னோட 10 லிருந்து 20 வயசுல நான் அதிகம் சுஜாதாவோட நாவல்களைப் படிச்சதில்லை. என்னோட உலகமே க்ரைம் நாவல், உங்கள் ஜீனியர், பாக்கெட் நாவல் இப்படிதான் இருந்தது. அதுகூட காரணமா இருக்கலாம்.
பதின்ம வயதின் மனநிலையில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. ஆகவே எனக்கு ராஜேஸ்குமார்,சுபா,ப.பி ஆகியோரே போதும் :)
வாங்க அப்துல்லா.. நீங்க பதின்ம வயசை தொட்டுட்டீங்கன்றதே எனக்கு ஆச்சர்யமா இருக்கு, இதுல நீங்க பதின்ம வயசைத் தாண்டுறதைப் பற்றி பேசுறீங்க.. ஹி..ஹி.. :)))
நல்ல அறிமுகம் வெண்பூ.
அப்படியே காமிக்ஸுக்கும் கிழக்கு ஆதரவு தந்தாங்கன்னா நல்லா இருக்கும்...!!!
எனக்கு துப்பறியும் கதைகள் மிகவும் பிடிக்கும் ,ஒரு கொலையை சுற்றி கதையைப் பின்னி அந்த முடிச்சை எப்படி அவிழ்த்து சரியான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் பல கதைகளை நான் ரசித்து படித்திருக்கிறேன் ,ஆங்கிலத்தில் புகழ் பெற்ற பல கதாசியர்களின் துப்பறியும் நாவல்கள் மிகவும் சுவை மிக்கவை ,அதே சமயம் தமிழில் பட்டுக்கோட்டை பிரபாகர் ராஜேஷ்குமார் சுஜாதா போன்றோரின் கதைகளையும் ரசித்துபடிக்கலாம் ,உள்ளூர் சூழலை வைத்து எழுதுவதால் அவற்றிலும் ஒரு சுவாரஸ்யம் உள்ளதுதான் .
ஆங்கிலத்தில் அமரிக்க எழுத்தாளர்களின் கதைகளை விட இங்கிலாந்து எழுத்தாளர்களின் கதைகள்தான் எனக்கு கூடுதலாகப் பிடிக்கும் .
அதுவும் Arthur Doyle,Agatha Christie,Ruth Rendall,PD James,Dorothy Sayers ஆகியோரை மிகவும் பிடிக்கும் ,அவர்கள் உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள் interesting ஆனவை அமரிக்க எழுத்தாளர் James Hardley Chase உம் பிடிக்கும்
இந்தக்கதைகள் பல தொலைக்காட்சி நாடகங்களாக வந்துள்ளன மக்களிடம் மிக பிரபலமாகியுள்ளன.Eg Agatha Christie's Miss.Marple,Poirot.Sir Arthur Doyle's Sherlock Holmes,Inspector Morse etc
--வானதி
வரும்போது ஒரு ஷெர்லாக் வாங்கிட்டு வாங்கனு வீட்டுல சொன்னாங்க. வாங்கிரவேண்டியதான் :-)
புத்தகத்தைப் பற்றி அருமையா சொல்லியிருந்தீங்க.
Post a Comment