ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தங்களின் பதின்ம வயதுகளை (டீன் ஏஜ்) கடந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜேஷ்குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் துப்பறியும் நாவல்களில் மனதை பறிகொடுத்திருப்பீர்கள் (அ) பறிகொடுத்திருக்கிறோம்.
விவேக், ரூபலா, நரேந்திரன், வைஜெயந்தி, பரத், சுசிலா இவர்களோடு வயது வித்தியாசம் இல்லாமல் விஷ்ணு, செல்வா, முருகேசன், ராமதாஸ் (அவரு இல்லீங்க), ஜான்சுந்தர், அனிதா என்று அனைவரும் நமக்கு நெடுநாள் நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.
இவர்கள் அனைவருக்கும் முன்னோடி அல்லது எழுத்துலகின் முதல் பிரபல துப்பறியும் ஹீரோ என்றால் அது ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்ட இந்த மனிதரைப் படைத்தவர் ஆர்தர் கோனன் டாயில்.
ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வெற்றியே வாசகர்கள் அவரை நிஜம் என்று நினைப்பதும், அவரை பின்பற்ற நினைப்பதுமே. உதாரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பல வசனங்களை நாம் நம்மை அறியாமலேயே நம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துகிறோம் என்பதே அவரின் வெற்றியாகக் கருத முடியும். அந்த வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வெளிவந்து வெற்றியடைந்த காலகட்டத்தில் கதைகளில் வரும் அவரது முகவரியான "221 பி, பேக்கர்ஸ் தெரு, லண்டன்" என்ற முகவரிக்கு கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவரை உண்மையான மனிதராக வாசகர்கள் நினைத்தார்கள் என்றால் அவரது வீச்சினைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழர்களிடையே அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவரது பெயரை எங்காவது எப்பொழுதாவது கேட்டிருக்கும் நமக்கு அவரது கதைகளைப் படிக்க அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது.
இந்த குறையைப் போக்க தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சியாகவே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!" வரிசையின் முதல் புத்தகமான "ஒரு மோதிரம் இரு கொலைகள்!" அமைந்திருக்கிறது. தமிழில் இதை மொழி பெயர்த்திருப்பவர் நம் பதிவர்களிடையே நன்கு அறிமுகமான "பத்ரி சேஷாத்ரி".
ஹோம்ஸை வைத்து ஆர்தர் எழுதிய முதல் கதையான A Study in Scarlet என்ற கதையையே முதல் கதையாக மொழிபெயர்த்திருப்பது ஹோம்ஸை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல உத்தியாக இருக்கிறது. ஹோம்ஸ் யார், அவரது தோற்றம், இயல்புகள், அவருக்குத் தெரிந்தது, தெரியாதது என்று அனைத்தையும் நம்மால் இந்த முதல் கதையிலேயே அறிந்து கொள்ள முடிவது இந்த புத்தகத்தின் சிறப்பு.
இலக்கியத்தனமாக இல்லாமல் நாம் ஏற்கனவே விரும்பி படிக்கும் தமிழ் துப்பறியும் நாவல்களின் மொழியிலேயே ஓரளவுக்கு இந்த புத்தகமும் வந்திருப்பது படிப்பதற்கு இதமாக இருக்கிறது. மேலும், எழுத்தாளர் ஆர்தர் டாயில் குறித்தும், ஹோம்ஸ் குறித்தும் பத்ரி கொடுத்திருக்கும் முன்னுரைகள் கதை படிக்கும் முன்பு நம்மை அழகாக தயார் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது என்றே சொல்வேன்.
இனி, கதைக்குச் செல்வோம். ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகள் எல்லாமே அவரது நண்பரான டாக்டர் வாட்சன் என்பவரது பார்வையிலேயே செல்லும். கதைகளை எழுதிய ஆர்தர் டாயில் ஒரு மருத்துவர் என்பதால் தன்னை வாட்சன் இடத்தில் வைத்து எழுத இந்த நடை அவருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான இந்த கதைகளின் களம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பும் டாக்டர் வாட்ஸன் தன் நண்பர் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸுடன் அறையில் தங்குகிறார். ஹோம்ஸின் வித்தியாசமான நடவடிக்கைகளால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாமல் சில நாட்கள் குழம்பும் வாட்ஸன், பின்னர் அவர் ஒரு துப்பறியும் நிபுணர் என்பதும், காவல்துறையினர் கண்டுபிடிக்கவே திணறும் சில வழக்குகளில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.
லண்டன் நகரில் கொல்லப்படும் அமெரிக்கப் பிரஜை ஒருவரது கொலைக்கான காரணத்தைத் தேடும் இரு ஸ்காட்லாண்ட் யார்டு அதிகாரிகளுக்கு உதவ ஹோம்ஸ் செல்ல அவருடன் தொடரும் வாட்ஸன், கொலை நடக்கும் இடத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களை வைத்து ஹோம்ஸ் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதை விவரிக்கிறார். கதையின் முதல் பாதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட, கொலைக்கான காரணம் கதையின் இரண்டாவது பாதியில் விரிகிறது.
இரண்டாவது பாதியில் விவரிக்கப்படும் அமெரிக்காவின் யுடா மாகாண குடியமர்தலும் அந்த மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் மூடப் பழக்க வழக்கங்களும், அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களும் என்று முதல் பாதி கதைக்கு முற்றிலும் வேறான தளத்தில் கதை பயணிப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.
கதையின் முடிவில், தான் கொலைகாரனை கண்டுபிடித்தது எப்படி என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் விவரிக்கும்போது அவரது துப்பறியும் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மை. ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வளவு பிரபலம் என்பதற்கு சரியான விளக்கமே அந்த கடைசி அத்தியாயம் என்பதே என் கருத்து.
துப்பறியும் நாவல் பிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகமான இது மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பனுபத்தைத் தரும் என்பதற்கு நான் உத்தரவாதம்.

பதிப்பாளர்கள்: கிழக்குப் பதிப்பகம்
புத்தகத் தொடர்: ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!
புத்தகம்: 1. ஒரு மோதிரம் இரு கொலைகள்!
எழுதியவர்: ஆர்தர் கோனன் டாயில்
தமிழில்: பத்ரி சேஷாத்ரி
மேலதிக தகவல்கள் மற்றும் ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.