Saturday, June 21, 2008

வெறும்பயல் விமர்சனங்கள்

நிதியமைச்சர்: பணவீக்கம் 11.05% ஆனது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது


வெறும்பயல்: நாங்க அப்ப ஒரு வார்த்தை இப்ப ஒரு வார்த்தை சொல்லவே மாட்டோம். 8% ஆனப்ப என்ன சொன்னமோ அதேதான் இப்பவும் சொல்றோம், நாளைக்கு 15% ஆவுறப்பவும் சொல்வோம்


-----

ராமதாஸ் : தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களை கழட்டி விட்டது நியாயமற்றது


வெறும்பயல்: பின்ன என்ன? தேர்தல் கிட்ட வரும்போது நியாயமான முறையில அவரா எதிரணி கூட போய் சேருவதற்குள் தி.மு.க.விற்கு என்ன அவசரமுன்னு கேக்குறாரோ?


------


கருணாநிதி: குரு பேசியது 6 மாதங்களுக்கு முன்பே முடிந்து போன விசயம், அதை இப்போது ஏன் பேச வேண்டும் என்கிறார் ராமதாஸ். நான் கேட்கிறேன் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையை இப்போது விசாரித்து தீர்ப்பு கொடுக்கக்கூடாதா?


வெறும்பயல் : யாருப்பா அது, ஒரு வருசத்துக்கு முன்னால தினகரன் ஆபிஸ்ல நடந்த 3 கொலையவே இன்னும் விசாரிக்கலன்னு சொல்றது?


------


ஞாநி: மகளிர் மாநாட்டில் முதல் முறையாக கருணாநிதி இரு மனைவிகளுடனும் மேடையேறியுள்ளதன் மூலம், கணவன் என்ன செய்தாலும் மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான கருத்தை வலியுறுத்தி உள்ளார்.


வெறும்பயல் : இருக்கப்பட்ட மவராசன் அள்ளி முடியுறாரு. நம்ம எதுக்கு சார் வயிறெரியணும்? அது சரி இப்பல்லாம் அவரு எது பண்ணினாலும் உங்களுக்கு தப்பாவே தோணுதே, ஏன்னு யோசிச்சி பாத்தீங்களா சார்?


--------


செய்தி : ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டிலேயே 2 மாதங்களாக ஓய்வில் உள்ளார். இது அ.தி.மு.க வளர்ச்சியை பாதிக்கும் என விசுவாசிகள் கவலை.


வெறும்பயல் : அவங்களும் கார்த்திக் மாதிரி லேப்டாப்லயே எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்காங்களோ என்னவோ?


-----


குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி : சட்டமன்றத் தேர்தலையும் உடனே நடத்தி விட கருணாநிதி ஆலோசனை


வெறும்பயல் : அவர் ஒரு சாணக்யன் அப்படின்றதுக்கு இதுதான் நல்ல உதாரணம். பின்ன எல்லாரும் 2011ல் நாங்கதான் ஜெயிப்போம்ன்றாங்க, 2011ல எலக்சனே நடக்குலன்ன எப்படி ஜெயிப்பீங்க? எப்படி ஜெயிப்பீங்க? ஐ.. டனக்குனக்கா நக்கா,, டனக்குனக்கா நக்கா,,


-------


செய்தி : நடிகர் (டாக்டர்) விஜய் மன்றக் கொடியை அறிமுகப் படுத்துகிறார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முதல் படி என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி.



வெறும்பயல் : 2016ல் நாந்தான் முதலமைச்சர்னு சொல்வாரோ? குருவியோட பிரம்மாண்டமான(!) வெற்றியை பார்த்து இப்படி ஒரு ஆக்சனில் இறங்கிட்டாரோ?

Thursday, June 19, 2008

எதிர்காலத்தில் இருந்து ஒரு செய்தி (சற்றே பெரிய்ய்ய சிறுகதை)

விஞ்ஞானி நீலகண்டன் பரபரப்பாக தனது உதவியாளன் அசோக்கிற்கு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இன்று அவரது கனவு நனவாகப் போகிற சந்தோசத்தை அவரது முகத்தில் பார்க்க முடிந்தது.

"சார், இப்பவாவது எனக்கு இதை எப்படி சாதிச்சீங்கன்னு சொல்லக் கூடாதா சார்?" என்றான் அசோக் ஏக்கத்துடன்.

"அசோக், கண்டிப்பா சொல்றேன். ஒரு செகண்ட் அப்படின்றத எப்படி அளக்கறதுன்னு தெரியுமா?"


"நீங்க கேக்கறது புரியலயே சார். காலத்த வெச்சிதான் மத்த எல்லாத்தயும் அளக்குறோம், ஒலி மற்றும் ஒளியோட வேகம், உங்களுக்கும் எனக்கும் எத்தனை வயசு எல்லாமே?"

"அதுதான் தப்பு அசோக். ஒளியோட வேகத்த காலத்த வெச்சி அளக்குறதில்ல, காலத்ததான் ஒளியோட வேகத்த வச்சி அளக்குறோம், புரியற மாதிரி சொல்றேன், ஒரு செகண்ட் அப்படின்னா ஒளி 3 லட்சம் கி.மீ கடக்க ஆகற நேரம்"

"அதுதான் 8வது படிக்கிற பசங்களுக்குக் கூட தெரியுமே சார்"

"கரெக்ட். ஆனா, நீ ஒரு செகண்டுக்கு ஒன்றரை லட்சம் கி.மீ. வேகத்துல ட்ராவல் பண்றதா வச்சிக்குவோம், இப்ப உனக்கு ஒளியோட வேகம் எவ்வளவு?"

"நான் ஒன்றரை லட்சம் கி.மீ. வேகத்துல போறதுனால, என்னோட ராக்கெட் உள்ளாற ஒளி ஒன்றரை லட்சம் கி.மீ, வேகம்தான் இருக்கும், சரியா?"


"தப்பு.....என்ன பார்க்கிற...அப்பவும் ஒளியோட வேகம் கான்ஸ்டன்ட்தான். உன்னோட வேகத்துல, உன் ராக்கெட் உள்ளாற 3 லட்சம் கீ.மீ கடக்க ஒளிக்கு 2 செகண்ட் தேவைப்படும், ஏன்னா நீ ஏற்கனவே ஒன்றரை லட்சம் கி.மீ வேகத்துல போயிட்டு இருக்குற. சரியா? "

"சரி மாதிரிதான் தோணுது"

"இப்போ ராக்கெட் வெளியில இருக்குறவங்களுக்கு 2 செகண்ட் ஆகியிருக்கும், ஆனா உனக்கு ஒரு செகண்ட்தான் ஆகியிருக்கும், அதுதான் தியரி, அதாவது, நீ அந்த ராக்கெட்ல 5 வருசம் சுத்திட்டு கீழ இருங்குனா உனக்கு 5 வயசுதான் கூடி இருக்கும் ஆனா எனக்கு 10 வயசு கூடியிருக்கும் - அதாவது நீ எதிர்காலத்துல நுழைஞ்சு இருப்ப, யு வுட் ஏவ் ட்ராவல்டு இன் டு த ஃபியூச்சர்"

"ஆச்சரியமா இருக்கு சார், அப்ப ஒளி வேகத்துல ட்ராவல் பண்ணா எனக்கு வயசே ஆகாது இல்லயா?"

"யு காட் த பாயிண்ட். ஆனா இயற்கை எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வெச்சிருக்கறதால நம்மால அதையெல்லாம் கற்பனை பண்ண மட்டும்தான் முடியும். ஒரு மணி நேரத்துக்கு 30,000 கி.மீ அப்படின்ற அளவுக்குத்தான் மனுசனால இப்ப ராக்கெட்லாம் செய்ய முடியுது"

"ஆனா நீங்க எப்படி சார் சாதிச்சீங்க?"

"சொல்றேன். நான் பண்ணியிருக்கிறது எதிர்காலத்துக்கு போற மெஷின் இல்ல, இறந்த காலத்துக்கு போறது"

"வாவ்....எப்படி சார்?"

"இன்னும் கொஞ்சம் தியரி இருக்கு பரவாயில்லயா? 2 அல்லது 3 வழிமுறைகள் இருக்கு, முதல் வழி ஒளியை விட வேகமா ட்ராவல் பண்றது, இதுக்கு வாய்ப்பே இல்ல, இன்னொன்னுதான் லேசர் உபயோகப்படுத்துறது, அதுலதான் எனக்கு வெற்றி கிடச்சிருக்கு"


"அதுக்குதான் லேசர்ல பி.எச்டி. வாங்கின என்ன புடிச்சி போட்டுடீங்களா சார்?"

"கரெக்ட். லேசர் நேர்க்கோட்ல பயணிக்கும் அப்படின்றது எல்லார்க்கும் தெரியும். ஆனா லேசர் கதிர்கள் வளைக்கப்பட்டா அது இறந்த காலத்துக்கு போகும்ன்றது தியரி. எலக்ட்ரோ மேக்னடிக் சக்திய வச்சி நான் அதை சாதிச்சிட்டேன்"

"ப்ரில்லியண்ட் சார்"


"இதன் மூலமா நாம இறந்த காலத்துக்கு ட்ராவல் பண்ண முடியாது, ஆனா செய்தி அனுப்ப முடியும், ஆப்டிகல் ஃபைபர் மூலமா டேட்டா ட்ரான்ஸ்பர் பண்ற மாதிரி"

"அட்டகாசம் சார்"

"அப்படின்னா ஜெயிக்கப் போற லாட்டரி நெம்பர், எந்த ஷேர் விலை ஏறும் இதெல்லாம் நாமே ஃபியூச்சர்ல இருந்து அனுப்பி நெறய பணம் சம்பாதிச்சிரலாம், இல்லாயா சார்?"

"ஒருவேளை நானும் 30 வயசுக்காரனா இருந்தா இப்படித்தான் யோசிப்பேனோ என்னமோ? என்னோட கனவெல்லாம் இந்த மெஷின் ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் உபயோகப்படணும். இயற்கை சீற்றங்கள், தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மருந்து இதெல்லாம் எதிர்காலத்தில் இருந்து வந்தா எவ்வளவு நல்லது நடக்கும்"

"கரெக்ட் சார்"

"என்னோட இந்த 10 வருஷ ஆராய்ச்சியில் உன்னோட கடந்த 2 வருஷ உதவிய என்னால மறக்கவே முடியாது. நீதான் என்கூட இருந்து இதை உபயோகிக்க உதவி பண்ணனும்."


"கண்டிப்பா சார்"


"என்னோட ஆராய்ச்சியோட எல்லா விவரமும் இந்த கம்ப்யூட்டர்ல இருக்கு. உனக்குத்தான் ஏற்கனவே பாஸ்வேர்டு தெரியுமே. சரி பேசுனது போதும், எனக்கு பின்னால இருக்குற ஏ21 போர்ட்ல 24 ஆம்ப்ஸ் கரண்ட் செட் பண்ணு"

செய்தான்...

"இப்ப நான் இதை ஆன் செய்யப் போறேன், பார்க்கலாம் எதிர்காலத்தில இருந்து நானோ, நீயோ என்ன மெஸெஜ் அனுப்புறோம்னு" - நீலகண்டன் உற்சாகமாக கத்திக்கொண்டிருந்தார்.

கம்ப்யூட்டர் செய்திகளை வரி வரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.


-எதிர்காலத்தில் இருந்து ஒரு செய்தி

-தேதி 18 ஜூன் 2018-அனுப்புனர் - அசோக்

"இன்னயில இருந்து சரியா 10 வருஷம் கழிச்சி நீ மெசேஜ் அனுப்பிட்டு இருக்க அசோக்"


- இன்றைய டைரிக் குறிப்பு

- இன்று எனக்கு நியூயார்க் லாட்டரியில் 360 மில்லியன் டாலர் பரிசு அடித்துள்ளது.


அதிர்ந்தார் நீலகண்டன், அவரது கண்களில் ஆத்திரம் மின்னியது. கம்ப்யூட்டர் தொடர்ந்து செய்தியை கொடுத்துக் கொண்டே இருந்தது.


- அது தவிர ஒரு முக்கியமான கூட்டம் வேறு.

- 10 வருசத்துக்கு முன்னால் தனது ஆராய்ச்சிக்கூடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட எனது புரபசர் நீலகண்டனின் 10வது நினைவு நாள் கூட்டத்தில் வேறு கலந்து கொள்ளவேண்டி இருந்தது.

திடுக்கிட்டு திரும்பினார் நீலகண்டன். கையில் துப்பாக்கியுடனும் வாய் நிறைய புன்னகையுடனும் நின்றிருந்தான் அசோக்,

"மன்னிச்சிடுங்க புரபசர், இப்படிப்பட்ட அரிய கண்டுபிடிப்ப கோட்டை விடாம இருக்க எனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியல" என்று கூறிக்கொண்டே ட்ரிக்கரை அழுத்தினான்.

சென்னையில் ஒரு மழைநாளில்.... (சிறுகதை)

இன்று எனக்கு திருமண நாள். வழக்கம்போல காலையில் எழுந்து, தலைக்கு குளித்து, வேட்டி சட்டை உடுத்தி, மனைவியை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்து, காலை டிபன் முடித்து, புது சட்டை, பேன்ட் மற்றும் மனைவி வற்புறுத்தி வாங்கிக் கொடுத்த குளிர் கண்ணாடி அணிந்து, மனைவியை முத்தமிட்டு வீட்டை விட்டு கிளம்பும் வரை எல்லாமே நன்றாகத்தான் நடந்தது.

வண்டியை கிளப்பும்போதுதான் முதல் சோதனை. டயர் பங்ச்சர்.
"போறப்ப மெக்கானிக் கிட்ட சொல்லிட்டு போறேன். வந்து கழட்டிடு போய் சரி பண்ணி கொண்டாந்து மாட்டிடுவான். காசு கொடுத்துடு" என்று சொல்லிவிட்டு ஓட்டமும், நடையுமாக கிளம்பினேன். கடந்த 2 நாள் மழைக்குப் பிறகு லேசாக தூறிக் கொண்டிருந்தது.

மெக்கானிக் ஒரு டி.வி.எஸ் 50ன் பின் டயரை சீரியஸாக கழட்டிக்கொண்டிருந்தான். எப்போதும் தூரமாக பார்த்தாலே எல்லா பல்லும் தெரிய சிரிப்பவன், இன்று அருகிலேயே நின்று கொண்டிருப்பது தெரிந்தும், தலையை தூக்கமலேயே "சொல்லுங்க சார்" என்றான். "எல்லாம் வளர்ந்துட்டானுங்க" என்று மனதிலேயே நினைத்துக் கொண்டு, வண்டியை சரி செய்ய சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.

எதிரில் நடராஜன் சார் வந்து கொண்டிருந்தார். ரிடயரட் அரசு அலுவலர். அவரது மகனும் நானும், சிறு வயது நண்பர்கள் என்பதால், எங்கே பார்த்தாலும் விசாரிப்பார். பார்த்தவுடன் புன்னகைத்தேன். அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தவர், "ஒரு முக்கியமான வேலை, அப்புறம் பேசறேனே" என்று வேகமாக விலகி நடந்தார். பேருந்தில் ஏறி உட்கார்ந்தால், கண்டக்டரும், முறைப்பது போலவே தெரிந்தது. "எல்லாரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க" என்று நினைத்துக் கொண்டேன்.

அலுவலகம் சென்றால், வாட்ச்மேனும் வணக்கம் வைக்காமல் திரும்பிக் கொள்வதாகவே பட்டது. பியூன் ராமசாமியும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றான். பக்கத்து டெஸ்க் பார்த்தசாரதியும் வணக்கம் கூட சொல்லாமல் உர் என்று பார்த்தான். ஏதோ புரிவது போல் இருந்தது - ப்ரோமசன் ரிசல்ட் வந்திருக்கும். ரெகமண்டேசன் லிஸ்டில் நானும் எனக்கு சீனியரான முருகேசன் சார் பேரும் இருந்தது, அனேகமாக எனக்கு மட்டும் வந்திருக்கும், அதனால எல்லாம் கடுப்புல இருக்கானுங்க!

கண்ணாடியை கழற்றிவிட்டு முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு யோசித்தேன். ம்ம்ம் எப்படி இதையெல்லாம் சமாளிப்பது? ஏற்கனவே எனக்கு நண்பர்கள் கம்மி, இதுல ஆபிஸ்ல வேற எல்லாம் எதிரி மாதிரி ஆனா என்ன செய்வது?

ஒன்றுமே தோணாமல், மேஜை மேலிருந்த ஃபைல்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தேன். ராமசாமி மெல்ல அருகில் வந்தான் "சார், நீங்க நல்லா இருக்கீங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?" என்றான். "ஏன் ராமசாமி அப்படி கேக்குறீங்க?" என்றேன். அவன் சொன்ன பதிலில் எல்லாம் புரிந்தது - " இல்ல கூலிங் கிளாஸ் போட்டிருந்தீங்க, 'மெட்ராஸ் ஐ'ன்னு நெனச்சேன்"

Tuesday, June 17, 2008

நான் ஏன் எழுதுகிறேன்?

எல்லாருக்கும் வணக்கமுங்க.

ஏறத்தாழ 6 மாசமா தமிழ் வலைப்பூக்களை படிச்சிட்டு இருந்தாலும், இதுவரைக்கும் நான் எந்த பதிவுமே போடாம இருக்கிறதுக்கு ரொம்ப முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கு, அதை நான் கடைசியா சொல்றேன்.

முதல்ல என்னை எது இந்த பக்கம் இழுத்ததுன்னு சொல்லியே ஆகணும். வார வாரம் எது நடந்தாலும், எனக்கு விகனட படிச்சிடனும். அந்த விகடன்ல அப்பிடி என்ன இருக்குன்னு எப்ப பாத்தாலும் அதை தொறந்து வச்சிக்கிட்டு உக்காந்துகிட்டு இருக்கீங்கன்னு தங்கமணி கத்துனாலும், நம்ம அதை கண்டுகிறது இல்ல.

ஏற்கனவே ப்ளாக் பத்தி தெரிஞ்சிருந்தாலும், அதுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லன்னு, கூட்டணிய பத்தி கவலப்படாத குரு கணக்காத்தான் இருந்தேன். ஒரு தடவ விகடன்ல இட்லிவடைய பத்தி போட்ருந்தாங்க. சாப்பாட்டு மேல இயல்பாவே இருக்குற ஒரு ஈர்ப்பு என்ன இந்த ப்ளாக் பக்கம் இழுத்திச்சி. படிச்சி பாத்தா நக்கல், நையாண்டி எல்லாமே இருக்க, அதை தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.

அப்படியே பின்னூட்டம் வழியா மத்த வலைஞர்கள் (ஐ... இந்த வார்த்தை நல்லா இருக்கே) அறிமுகம் கெடச்சது. லக்கிலுக், ச்சின்னப்பையன், டோண்டு சார், பரிசல்காரன், லதானந்த் இப்படி.... நாம ஒண்ணும் பெரிய இலக்கியவாதி இல்லன்றதாலும் (அது புரியாததாலும்) நெறய முக்கியமான பேர்லாம் நம்ம லிஸ்ட்ல விட்டு போயிருக்கும். திட்டாதீங்க...

இது வரைக்கும் படிச்சதுலயே என்ன ரொம்ப கவர்ந்தது...

இட்லிவடை - நக்கலும், நையாண்டியும் (முக்கியமா மஞ்ச கலர்ல பட்டையடிச்சு குடுக்கிற எல்லாமே 'டவுட் தனபாலு' ரேஞ்சுக்கு இருக்கும்)

லக்கிலுக் - நகைச்சுவை கலந்த எழுத்து நடை (மறக்கமுடியாத பதிவு - 'கிளிஞ்சது போ')

ச்சின்னப்பையன் - சின்ன சின்ன ஐடியாக்கள் (சென்னையை சிங்காரச் சென்னையா ஆக்கறது எப்படின்ற மாதிரி)

டோண்டு ராகவன் - நான் இப்படித்தான் அப்படின்னு டோன் செட் செய்றது - இது இந்த காலத்துல ரொம்ப முக்கியம். அப்புறம் ரசிக்கிற மாதிரி உலக விசயங்கள சொல்றது..

பரிசல்காரன் - நல்ல புரியுறமாதிரி அதே சமயம் சீரியஸான கதை, கவிதை..

லதானந்த் - குறுகிய காலத்தில தனக்குன்னு ஒரு இடம் புடிச்சது. ஆச்சரியமா இருக்கு, எப்படித்தான் இவ்ளோ எழுதுறாருன்னு, கவர்மென்ட் ஆபிஸ்ல வேலைன்றதால நெறய டைம் கிடைக்குதா அங்கிள்? கோச்சுகாதிங்க :) என்னோட அப்பாவும் உங்க டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சு ரிடயர் ஆனவர்தான்

இனிமே நானும் ரெகுலரா எழுதலாம்னு இருக்கிறேன் (வாரத்துக்கு ஒரு பதிவாவது), பாக்கலாம் முடியுதான்னு. படிச்சிட்டு நல்லா இருக்கா, மொக்கயான்னு பின்னூட்டம் போடுங்க, இம்ப்ரூவ் பண்ணிக்கிறேன்.

முடிக்கிறதுக்கு முன்னால, இத்தனை நாளா எழுதாம இருக்கிறதுக்கு காரணம் சொல்றதா சொல்லியிருந்தேனே, சொல்றேன்..... வேறென்ன..... சோம்பேறித்தனம்தான்...