இந்த பதிவின் தலைப்பு நிச்சயமாய் உங்களை கவர்ந்து இழுப்பதற்காக மட்டுமே வைக்கப்பட்ட தலைப்பு அல்ல. அதே போல் இந்த முகமூடிகள் பெயர்களில் எழுதுவது நான் அல்ல என்று அறிவிக்க எழுதப்பட்ட பதிவும் அல்ல இது.
சில நாட்களாக ஏன் சில வருடங்களாக இந்த பதிவுலகில் மறைக்கப்பட்டிருக்கும் ஒரு விசயம் குறித்து பேச மட்டுமே இந்த பதிவு.
இதை வேறொரு முகமூடி அணிந்து அனானி பெயரில் எழுத வேண்டிய அவசியம் எனக்கு என்றும் இருந்ததில்லை. என்னை நன்கறிந்தவர்களுக்கு தெரியும், சரியென்றால் உடனடியாக வெளிப்படையாக பாராட்டவும், தவறென்றால் முகத்திற்கு நேராக சொல்லவும் கூடிய ஆண்மை எனக்கு உண்டு. அதனாலாயே இந்த பதிவை என் பதிவிலேயே எழுதுகிறேன்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் பதிவெழுத ஆரம்பித்து இந்த பதிவுலகில் என் அலைவரிசையுடன் ஒத்துப்போன சிலருடன் நான் நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். பரிசல், அப்துல்லா, கார்க்கி, கேபிள், ஆதி (அப்போது தாமிரா) போன்றவர்களுடன் இயல்பாகவே நெருங்க முடிந்தது. இந்த குழுவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாக பேசிக் கொள்ள, உதவிகள் கேட்டுப் பெற முடிந்தது.
அந்த சூழ்நிலையில் எங்களுக்கு அறிமுகம் ஆனவர்தான் அந்த குறிப்பிட்ட பதிவர். "எதாச்சும் செய்யணும் பாஸ்" என்று இறங்கியவர் என்னுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்த அவரின் டவுன் டூ எர்த் மனப்பான்மை பிடிந்திருந்தது. அவரின் பின்புலம் குறித்து தெரியவந்தபோது "அட இவரெல்லாம் நம்ம கூட எல்லாம் எப்படி பழகுறாரே?" என்று ஆச்சர்யம் அடைந்தேன்.
ஐ ஐ எம் அகமதாபாத்தில் எம் பி ஏ.. ஒரு பெரிய அமெரிக்க கார் நிறுவனத்தில் வைஸ் பிரசிடன்ட்..
இரண்டுமே என் கனவு எனலாம். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து டிப்ளமோ படித்து சிறிய வேலைக்கு போய் மேல்படிப்பையே கரஸ்ஸில் செய்த என் போன்றவர்களுக்கு ஐ ஐ எம் என்பது எவ்வளவு பெரிய கனவு என்பது உங்களுக்கு புரியும். இப்போதும் எதாவது ஒரு சிறிய இடைவெளி (+ பணம் ) கிடைத்தால் அங்கே எக்சிக்யூடிவ் ப்ரோக்ராம் படிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதேபோல் ஒரு எம் என் சியில் வைஸ் பிரசிடன்ட் என்பதும் என் கேரியர் கனவு.
இரண்டையும் ஒருங்கே சாதித்த ஒருவரை நான் அண்ணாந்து பார்த்து பிரமித்ததில் வியப்பேதும் இல்லை.
பீரியட்...
அவரைப் பார்த்து பிரமித்த இன்னொரு விசயம் அவரது உதவி செய்யும் மனம்.
1. சென்னையைச் சேர்ந்த பதிவர் மிக அதிக பணத்தேவையில் இருந்த போது அவருக்காக இவர் சில லட்சங்களில் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார் (அதற்கு நானும் ஒரு சிறு அளவு பணம் கொடுத்திருக்கிறேன்). அந்த பதிவர் பிரச்சினையில் இருந்து மீண்டு வர இவரது பண உதவி முக்கியமானதாக இருந்ததாக இவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்
2. ஒரு வெளிநாட்டு பதிவரின் மருத்துவ உதவிக்காக பணம் திரட்டியதில் இவரது பங்கு முக்கியமானது. மிகப்பெரிய பணத்தை ஆளுக்கு கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம் என்ற ஐடியா நிறைய பேரை பங்கெடுக்க வைத்தது கண்கூடு. இவரே சிலரிடம் பணம் திரட்டி அனுப்பியதும் தெரிந்ததே.
3. மற்றொரு சென்னை பதிவரின் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது, இவர் தனது டெபிட் கார்டை கொடுத்துவிட்டு வந்ததாக என்னிடம் சொல்லியிருக்கிறார். என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத உதவி இது.
4. ஒரு சென்னை பதிவரின் தந்தையார் இறந்த போதும், இதே போல் தனது டெபிட் கார்டை கொடுத்ததாக சொல்லியிருக்கிறார்.
பீரியட்...
சென்ற வருடம் ஒரு பெண்பதிவருடன் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு நிகழ்வுகள் பதிவுலகில் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத விசயம். அந்த நிகழ்வில் நிச்சயம் நண்பர்களாக நாங்கள் அவர் பின் நின்றிருக்கிறோம். அவருக்கு ஆதரவாக எங்கும் நான் பேசவில்லை என்பதைப் போலவே அவரை எதிர்த்தும் எங்கும் பேசியதில்லை.
அவர் மீது எனக்கிருந்த பிரமிப்பு + மரியாதையே அதற்கு காரணம்
*****************
கடந்த செப்டம்பரில் ஒருநாள் அவர் என்னிடம் வந்தார். "எங்க கார் கம்பெனியே ஒரு கார் ரென்டல் கம்பெனி ஆரம்பிக்குது. நான் அங்கயே பெரிய வேலையில இருக்குறதால என்னால ஈஸியா ஃப்ரான்ச்சைஸ் வாங்க முடிஞ்சது. நீங்களும் கொஞ்சம் இன்வெஸ்ட் பண்ணுங்க" என்றார். இவர் மீதிருந்த நம்பிக்கையில் என் மனைவியின் பெயரிலிருந்த சில முதலீடுகளை எடுத்து இவரிடம் கொடுத்தேன்.
அதற்கான அக்ரீமென்ட் கொடுத்தார். படித்துக்கூட பார்க்காமல் கையெழுத்திட்டு அனுப்பினேன். பின்னர் அதன் காப்பி மெயிலில் வந்தபோதுதான் விபரீதம் புரிந்தது. அந்த அக்ரீமென்ட் முழுக்க முழுக்க அவரது கம்பெனிக்கு சாதகமாகவே என் தரப்பில் மிக மிக பலவீனமாக இருந்தது. அதிர்ச்சியில் கேட்டவுடன் "அது வென்டாருங்களுக்கானது, உங்களுக்கு தப்பா அனுப்பிட்டேன்" என்று மறுபடியும் வேறொரு அக்ரீமென்ட்டை கொடுத்தார். அதை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட்டு அனுப்பினேன்.
அதன் பின்னர்தான் எனக்கு சனி ஆரம்பித்தது. ஒவ்வொரு மாதமும் எனக்கு ஸ்டேட்மென்ட்டும் பணமும் முதல் இரண்டு வாரங்களில் வரும் என்று கூறியவர், இழுத்தடிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் முந்தைய மாத ஸ்டேட்மென்ட் வருவதே கடைசி வாரத்தில்தான் என்றானது.
இதற்கிடையில் அவரைப் பற்றின மற்ற உண்மைகள் தெரிய வந்தன. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
1. அவர் ஐ ஐ எம் ல் படித்தவர் அல்ல. தமிழ்நாட்டில் எதோ ஒரு அஆஇஈ கல்லூரியில் எதோ ஒரு டிகிரி படித்தவர்(இதுவும் உண்மையா என்று தெரியவில்லை)
2. அவர் சொன்ன கார் நிறுவனத்தில் வைஸ் பிரசிடன்ட் அல்ல. எதோ ஒரு கார் வாடகை நிறுவனத்தில் மேலாளர் மட்டுமே (இதுவும் உண்மையா என்று தெரியவில்லை)
3. பதிவர் மருத்துவ உதவிக்காக இவரால் திரட்டப்பட்ட பணம் அவருக்கு உடனடியாக அனுப்பப்படவே இல்லை
4. பதிவர்களின் இக்கட்டான சூழலில் அவர்களிடம் டெபிட் கார்டு கொடுத்ததாக இவர் சொன்னது பொய். இவர் மேலோட்டமாக கேட்க அவர்கள் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள்.
அவர் எங்கு படித்தால் என்ன, எங்கு வேலை செய்தால் உனக்கென்ன என்று எதிர்கேள்வி கேட்பவர்களுக்காக இந்த பத்தி. அவர் யார் என்ன என்று எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை. எங்கள் நட்பு வட்டத்திலேயே மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களும் இருக்கிறார்கள், வெற்றிக்கான வாசலைத் தேடி போராடிக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நட்பின் அடிப்படை நம்பிக்கை. அது பொய் சொல்வதால் வரப்போவதில்லை. இந்த பதிவு அவரை அம்பலப்படுத்த அல்ல, அவர் சொன்ன பொய்களால் அம்மணப்பட்டு நிற்கும் அவர் மீதான என் நட்பிற்கு ஒரு கோவணம் கட்டும் முயற்சி அவ்வளவே.
பதிவரின் மருத்துவ செலவிற்காக திரட்டப்பட்ட பணம் குறித்து ஏற்கனவே ஜோசப் விளக்கி விட்டார். அவர் அந்த பணத்தை அனுப்பியதற்குக் காரணமே உண்மைகள் சுடும் என்ற அனானி அவருக்கு அனுப்பிய மெயில்தான். யார் அந்த உண்மைகள் சுடும் என்று தெரியவில்லை, ஆனால் அந்த அனானி "பணம் ஏன் அனுப்பாம வெச்சிட்டு இருக்கீங்க" என்ற ரீதியில் அவருக்கு மெயில் அனுப்பியதும்தான் இவர் அதை அனுப்ப முயற்சி எடுத்தார் என்பதே உண்மை.
இந்த பிரச்சினை ஓடிக்கொண்டிருந்தபோது, எனக்கு இவரைப் பற்றிய உண்மைகள் தெரியாது. நான் இவரிடம் "நீங்கதான் ஏற்கனவே ஸ்டேட்மென்ட் பணம் எல்லாம் அனுப்பிட்டீங்களே?" என்று கேட்க "இல்ல ஜோசப்தான் பணம் என்கிட்டயே இருக்கட்டும், அப்புறம் அனுப்புங்கன்னு சொன்னாரு" என்றார். ஆனால் பின்னால் பிரச்சினை பெரிதாகி ஜோசப் விளக்கம் கொடுத்தது இவர் என்னிடம் சொன்னதற்கு எதிராக இருந்ததுதான் இவர்மீது எனக்கு விழுந்த முக்கிய சந்தேகப்புள்ளி.
இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு முறை "என்னோட ப்ளாக் பேரை வெச்சி என்னோட உண்மையான பேரு நரசிம்மன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க, என் பேர் அதில்லை, வேற" என்றார். அதிர்ந்தேன். மூன்று வருடம் நெருங்கிய நட்புடன் இருக்கும் ஒருவனிடம், பிரச்சினைகளின் போது தன் பின் நிற்கும் ஒருவனிடம், மற்றவருக்கு உதவ பணம் வாங்கும் ஒருவனிடம், தன் புதிய பிசினஸில் முதலீடு செய்யும் அளவுக்கு நம்பிக்கை இருக்கும் ஒருவனிடம் எப்படி தன் பெயரைக்கூட சொல்லாமல் மறைக்க முடியும்? எந்த அளவு அழுத்தம் வேண்டும்?
**********
இது எல்லாம் தெரிந்த பின், நான் அவரிடம் பிசினஸில் இருந்து வெளிவந்துவிடுவதாக சொல்ல, ஒப்புக் கொண்டார். நிச்சயம் என்னைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல முதலீடே, மிகச் சிறந்த ரிடன்ஸ் கொடுத்தது. ஆனால் என்னை நம்பி தன் பெயரைக் கூட சொல்லாத, தன் பெயரை பெரிதாக்கிக் காட்ட வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் ஒருவரால் எனக்கு கோடி ரூபாய் வருமென்றாலும் எனக்கு அது தேவை இல்லை.
ஒரு வாரம் டைம் கேட்டு, இப்போது மூன்று வாரங்கள் கழித்து எனக்கு பணம் கிடைத்துவிட்டது. இனி இவர் தொடர்பான மன உளைச்சல் குறையுமென்றாலும், நண்பர்களை தேர்வு செய்வதில் நான் மற்றொரு முறை தோற்று விட்டதின் வலி நான் சாகும் வரை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
**********
இந்த பதிவு வெளிவந்ததும் என்னைப் பற்றி மற்றவர்களிடம் அவர் என்ன சொல்வார் என்பதும் எனக்கு தெரியும். அவரிடம் அதைக் கேட்பவர்கள் எனக்கு தொலைபேசவும், அட்சரம் பிசகாமல் வரிக்கு வரி அவர் என்ன சொன்னார் என்பதை நான் சொல்கிறேன். என்னைப் பற்றி மற்றவர்களிடம் அவர் சொல்லப்போகும் பொய்கள் குறித்து எனக்கு கிஞ்சிந்தும் கவலை இல்லை.
இதற்கெல்லாம் அவர் சொல்லக்கூடிய எந்த விளக்கமும் எனக்குத் தேவை இல்லை. இங்கே நான் சொன்னவை அவர் என்னிடம் சொன்ன பொய்களில் ஒரு சிறு துளி அளவே. இன்னும் நான் எழுதாமல் விட்ட மலையளவு பொய்களை அவர் என்னிடம் கூறியிருக்கிறார் (அடிக்கடி அவர் சொல்லும் "மறைமலை நகர் ஃபேக்டரியில இருக்கேன்" என்பது. ரென்டல் கம்பெனி மேனேஜருக்கு கார் உற்பத்தி செய்யும் ஃபேக்டரியில் என்ன வேலை என்பது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை). என்னைப் போலவே அவருடன் நெருங்கி இருந்த பலரும் அவரால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது தெரிய வருகிறது. அதனால், நான் சொல்ல வரும் முன்னெச்சரிக்கை ஒன்றே ஒன்றுதான்.
பதிவுலகில் யார் ஒருவர் சொல்வதை வைத்தும், அவர்களைப் பற்றிய பிம்பத்தை கட்டமைத்துக் கொள்ளவேண்டாம். குறைந்தது அப்படி கட்டமைக்கப்படும் பிம்பத்தை நம்பி பணமாவது கொடுக்காமல் இருப்பது நலம்..
Thursday, April 7, 2011
Subscribe to:
Posts (Atom)